நாதக = பாஜக..


இன்று அரசியல் சூழ்நிலையில் தமிழக இளைஞர்களுக்கு மாற்றாகவும் எழுச்சி நாயகனாகவும் தன்னை காட்டிக்கொள்பவர் அண்ணன் சீமான் அவர்கள். முன்னொரு காலத்தில் எனக்கும். அதனால்தான் அவரை நம்பும் தம்பி, தங்கைகளை நினைத்து மனம் கலங்குகிறது. சீமான்தான் மாற்று, வளர்ச்சிக்கான கீற்று என கருதுகிறோம். அவர் மாற்று அல்ல. மற்றொரு பாஜக.


புரியவில்லையா? பாஜக எப்படி ஒரு பாசிச கட்சியோ, அதுபோல் அண்ணன் சீமானும் ஒரு பாசிஸ்ட். நாட்டை சீனா-பாகிஸ்தானிடம் இருந்து காக்க ஒரு தலைவன் (மோடி), அவருக்கான கட்சி (பாஜக). அந்த கட்சிக்காக மக்கள். பாஜக வை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள், ஆண்டி-இந்தியன், சீன கைக்கூலி என்பதெல்லாம் இந்த சர்வாதிகாரத்தின் வெளிப்பாடுதான். இதேதான் சீமானுக்கும் பொருந்தும்.

தன்னை முன்னிறுத்துவது. தான்தான் தமிழினத்தைக் காக்க வந்தவராக பீலா விடுவது. மோடி தேசிய வெறியைத் தூண்டி விடுவதுபோல தமிழின வெறியை தூண்டிவிடுவது. தமிழ்மானம் காப்பதற்கு சீமான் தேவை. அதற்காக ஒரு கட்சி. அதை ஆதரிப்பதற்காக மக்கள். 56 இஞ்ச் மார்பு என மோடி சீன் போட்டதற்கும், யாரா இருந்தாலும், அடிப்பேன், வெட்டுவேன், நான் அதை செஞ்சிடுவேன், இதை செஞ்சிடுவேன்னு பீலா விடுறதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. பிஜேபி சர்வாதிகாரம். சீமான் அன்பான சர்வாதிகாரம். மொத்தத்தில் இரண்டும் ஒன்று.

முசுலீம்களையும் கிறித்தவர்களையும் வந்தேறிகள் என்று சொல்லும் பாஜகவிற்கும், மற்ற மொழி பேசும் தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்களை வந்தேறிகள் என்று சீமான் சொல்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? சாதியத்தை, மதத்தை வைத்து அரசியல் செய்பவர் மோடி- பாஜக கும்பல் என்றால், மொழியை வைத்து அரசியம் செய்பவர் அண்ணன் சீமான். மோடியைப்போல் அவரும் ஹிட்லர், முசோலினி வார்ப்புதான்.

புலிகளின் தளபதியை ஹோட்டல் சர்வர் ரேஞ்சுக்கு தரம் தாழ்த்தியவர், இன்று அவரை மயிறு என்று சொல்கிறார். இதுதான் தமிழீழ பாசமா? பாஜக கும்பல் செய்யும் தரம்தாழ்ந்த தனிநபர் தக்குதலுக்கு நிகரானதுதானே இதுவும்.

அண்ணன் 10 வருடத்தில் 6000 மணித்துளிகள் பேசியதாக சொல்லியிருக்கிறார். ஆனால் பேசியது எல்லாமே பொய்தானே. பாஜக இந்திய வரலாற்றை, மக்களின் வரலாற்றை திரித்துப் புரட்டி பொய் சொல்கிறது. அண்ணன் சீமான் தமிழக வரலாற்றை, மரபை, புலிகளின் வரலாற்றை திரித்துப் புரட்டுகிறார். சங்கிகளின் அயோக்கியத்தனத்துக்கு அண்ணனின் அயோக்கியத்தனங்கள் ஈடாகிறது அல்லவா? பொய்யிலேயே வாழும் பாஜகவுக்கு இணையான நபர் என்றால் அது அண்ணன்தானே?

இப்போ மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் விரோதி பாஜகனு சொல்கிற சீமான் மோடி கொண்டு வந்த நாசகர திட்டங்களை எதிர்த்து எத்தனை போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்? விவசாயி சின்னத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்பவர், வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக என்ன செய்திருக்கிறார்? உங்க பிள்ளைகளுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்றவர், இங்குள்ள விவசாய பெற்றோர்கள் எட்டுவழிச் சாலைக்கெதிராக போராடும்போது எங்கே பதுங்கி இருந்தார்?

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராடும்போதும், செத்துக் கொண்டிருக்கும்போதும், அடக்குமுறைகளை எதிர்கொண்ட போதும் களத்திற்கு வராதவர். ஆனால் அதில் கலந்து கொண்டு 600 வழக்குகளை சந்தித்திருப்பதாக பொய்பேசுகிறார். மக்கள் அதிகாரம் தோழர்களின் உழைப்பையும் தியாகத்தையும் தனதாகக் காட்டுவது எவ்வளவு கேவலம்!

இப்படி கொள்கைக்கும், மக்களுக்கும் நேர்மையில்லாமல் இருப்பவர் வாக்குறுதிகளில் மட்டும் நேர்மையாக இருப்பாரா என்ன? தான் தமிழக முதலமைச்சரானால் முந்தைய ஆட்சியில் வாங்கிய கடனைக் கட்ட முடியாதென்று கூறி மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பேன்னு சொல்கிறார். இது சாத்தியம்னா அதிமுக, திமுக வே செய்திருப்பார்களே. கடந்த பட்ஜெட் நேரத்தில் நிர்மலா சீதாராமன் என்ன சொன்னார்? மின்சார சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொண்டால்தான், இனிமேல் தமிழக அரசு கடன் வாங்குவதற்கு அனுமதி கொடுப்போம் என. இதுபடி பார்த்தால் கடன் வாங்குவதற்கே மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டிய நிலையில், எப்படி கடனை கட்ட முடியாதென்று சொல்ல முடியும்?

மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பது இருக்கட்டும். ஊழல் செய்யும் அரசு பியூன் ஒருவரை சஸ்பெண்ட் செய்யவோ அல்லது ட்ரான்ஸ்பர் செய்யவோ முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறதா? ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கிறது, முதலமைச்சருக்கான அதிகார வரம்புகள் என்ன என எதுவும் தெரியாமல் பேசுகிறார். மோடி மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா, 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, கருப்புப் பண ஒழிப்புன்னு வாயிலேயே வடை சுட்டார்.

இப்போது சீமானும் அதையேதான் சொல்கிறார். இலவச கல்வி, இலவச மருத்துவம், வேலைவாய்ப்பு, இயற்கை வேளாண்மை, பெண்களுக்கு சம உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அடுக்கிக் கொண்டே போகிறார். இதையெல்லாம் நிறைவேற்ற என்ன சாத்தியக்கூறுகள் இருக்கின்றன?

ஏற்கனவே காமராசர் ஆட்சிக் காலத்திலேயே இலவச கல்வி கொண்டு வரப்பட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் சீமான் புதிதாக செய்ய என்ன இருக்கிறது? ஒருவேளை எல்லோருக்கும் இலவசமான, ஒரே மாதிரியான கல்வி என்றால் தனியார் கல்வி நிறுவனங்களை ஒழித்துக் கட்டிவிடுவாரா சீமான்? இதேபோல்தானே மருத்துவமும்.
விவசாயம் செய்ய வழியில்லாமல் நிலத்தை தரிசாகவோ அல்லது மனைகளாகவோ போட்டுக் கொண்டிருக்கிறார்கள் தமிழக விவசாயிகள். அவர்களை வைத்து எப்படி இயற்கை விவசாயம் செய்ய முடியும்? மேலும், உரம் , பூச்சிக்கொல்லித் தயாரிக்கும் பேயர், மான்சண்டோ போன்ற கம்பெனிகளுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தகளை மீறி சீமான் செயல்பட முடியுமா?

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இருந்த சட்டத்தை மோடி அரசு திருத்துகிறது. EIA 2020 யை சீமானால் இரத்து செய்ய முடியுமா? நீராதாரத்தைக் காக்க, தாமிரபரணியை சூறையாடும் கோக், பெப்சி கம்பெனிகளை மூடிவிடுவாரா? இதையே செய்ய முடியாதபோது, நெய்தல் படையைக் கட்டி மீனவர்களை காக்க முடியுமா?

இதையெல்லாம் செய்ய முடியாதென சீமானுக்கும் தெரியும். ஆனால், வாய்ப்பந்தல் போட்டு, இனவெறியூட்டுவதுதான் பாசிஸ்டுகளின் இயல்பு. நோக்கம். இதில் மோடிக்கும், சீமானுக்கும் இல்லை வேறுபாடு. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-பிஜேபிக்கு பொருத்தமான கொள்கை சித்தாந்தம் என்றால் அது சீமானுடையதுதான்.

அதனால்தான் சீமான் ஜெயித்தால் மோடி/பாஜக ஆர்.எஸ்.எஸ் ஜெயித்ததாக அர்த்தம். இதை அனுமதிப்போமா? தம்பிகளே, தங்கைகளே அண்ணனை கண்மூடித்தனமாக நம்பாமல் அவரது வார்த்தைகளை சீர்தூக்கிப் பாருங்கள். விமர்சனங்களை காதில் வாங்குங்கள்.

243 லும் அதிமுக-பாஜக- நாதக-மநீம கும்பலை வாஷ் அவுட் செய்வோம்.. பாஜகவின் பாசிச வேட்டைக்கு முட்டுக்கட்டை போடுவோம்! தமிழகத்தின் சுயமரியாதை, ஆரிய பார்ப்பன மரபை பாதுகாப்போம்!

- ஆதிரா.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.