ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை நெஞ்சிலேந்துவோம்!
மே 22. கருப்பு நாள். தமிழ் மக்களின் இதயங்களில் நீங்காத வடுவாய் நிலைத்திருக்கும் நாள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை வெறியாட்டம் போட்ட நாள். 13 போராளிகளை துள்ளத் துடிக்க சுட்டுக் கொன்ற நாள்! உயிருக்கு உத்திரவாதமில்லா நிலை. கருப்பையில் இருக்கும் பிஞ்சையும் கொல்லும் நஞ்சு. உயிர்க்காற்றை, நீரை, நிலத்தை விசமாக்கிய எமன். அது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை. குமரரெட்டியாபுரத்தில் ஆரம்பித்தது ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் கடும் உழைப்பால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செழித்து வளர்ந்தது. யாரும் கண்டு கொள்ளாதபோதும் தினம்தினம் பெருந்திரள் மக்களின் போராட்டம். மக்கள், திரைப் பிரபலங்களை வேடிக்கைப் பார்க்கும் நிலை அங்கில்லை. கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் போராட்டக்காரர்களை, சின்னஞ்சிறு போராளிகளை கண்டு வியந்த சூழல். மக்கள் போராட்டம் பெரும் காட்டுத்தீயாய் பரவியது. தூத்துக்குடி மாவட்டமே ஸ்டெர்லைட் எதிர்ப்பு முழக்கங்களால் அதிர்ந்தது. ஆனால், அரசோ கண்ணிருந்தும் குருடாக, காதிருந்தும் செவிடாக, வாயிருந்தும் ஊமையாக வாள...