இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!





நாற்புறமும் அலைகள் ஆர்ப்பரிக்கும் அழகிய கடல். வெண்மேகங்கள் மிதக்கும் நீல வானம். வளைந்து உயர்ந்த தென்னைகள். காற்றில் வீசும் கடலின் மணம். இப்படி இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் குட்டிக் குட்டித் தீவுகள். அதுதான் இலட்சத் தீவு. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்று.

 

மக்களின் வாழ்நிலை:

 

சென்னையின் 10-இல் ஒரு பகுதியைவிடக் குறைவான நிலப்பரப்பு. அதில் 36 தீவுகள் இருந்தாலும், மக்கள் வசிப்பது 11 தீவுகளில்தான். இயற்கை வனப்பு மட்டுமல்ல. இங்குள்ள மக்களின் வாழ்வும் எளிமையானது.

 

மக்கள்தொகை (2011 கணக்கெடுப்புப்படி) 64,473 தான். 96% மக்கள், இசுலாமியர்கள். பேசும் மொழி மலையாளம். இதில் 99.9% பேர் எழுத்தறிவு மிக்கவர்கள். மிகமுக்கியமாக

, மக்கள் வசிக்காத பங்காரம் என்ற ஒரே ஒரு தீவில் மட்டும்தான் சாராயம் இருக்கிறது. வேறெங்கும் இல்லை. அதனால் சீரழிவுகளும், குற்றங்களின் எண்ணிக்கையும் மிகமிகக் குறைவு.

 

விவசாயம் கிடையாது. தென்னை மட்டுமே வளரும். மீன்பிடிப்பதுதான் முக்கிய தொழில். அதனால், கடல் உணவுகளும், ஆடு, கோழி இறைச்சிகள் மிக முக்கியமாக மாட்டிறைச்சிதான் உணவு. மற்ற பொருட்களுக்கு கேரளத்தை சார்ந்து வாழ்கின்றனர்.

 

கடந்த ஆண்டு துவக்கத்திலிருந்து, இந்தியாவே கொரோனா முதல் அலையில் சிக்கித் தவித்தது. ஆனால், இங்கு ஒரு நபருக்குக்கூட கோவிட் தொற்று இல்லை. அந்தளவு பாதுகாப்பாக இருந்தது.

 

இங்கு அரசியல் நிர்வாகமும் எளிமையாக இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பஞ்சாயத்து தலைவர்கள், மாவட்ட அதிகாரிகள் அவர்களுக்கு மேலே நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பதற்கான எம்.பி, அதற்கடுத்து உச்சபட்ச அதிகாரத்தில் நிர்வாக அதிகாரி. இவர் இந்திய ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவார்.

 

கரையான் புற்றெடுக்க கருநாகம்

குடிபுகுந்தது:

 

இப்படி இயற்கையோடு இயைந்த எளிய வாழ்வு வாழ்ந்தனர் அம்மக்கள். ஆனால், அந்த அழகிய புற்றுக்குள் கருநாகம்போல் நுழைந்திருக்கிறது பாசிச பாஜக.

 

2020 டிசம்பரில், ப்ரஃபுல் கோடா படேல் நிர்வாக அதிகாரியாக மோடி அரசால் அனுப்பப்பட்டார். குஜராத் எம்.எல். வாக இருந்தவர் இவர். தனது சங்கப்பரிவார வழக்கப்படி காவி- கார்ப்பரேட்டு கொள்ளைக்கு ஏற்ப இப்பிரதேசத்தை மாற்றி வருகிறார்.

 

இவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே, கொரோனா தொற்றே இல்லாத தீவுகளில் தொற்றுப்பரவல். காரணம், அதுவரை இருந்த பாதுகாப்பு நடைமுறைகளை தளர்த்தியது. மோடி பல்லாயிரக்கணக்கான மக்களை கொல்வதுபோல, இவர் 6000 பேருக்குமேல் பாதிப்பை ஏற்படுத்தி 25 பேரை சாகடித்துள்ளார்.

 

படகுகளையும், மீன்பிடித் தளவாடங்களையும் வைக்கும் கூடாரங்களை ஆக்கிரமிப்பு என்று சொல்லி இடித்திருக்கிறார். அதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளார்.   3கிமீ நீளம் மட்டுமே உடைய அத்தீவுகளில் தேவையே இல்லாமல், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வீடுகளை இடித்திருக்கிறார்.

 

காவிமயமாக்கம்:

தென்னைக்கு காவி சாயம் பூசியவர், இன்று அத்தீவுகளை மினி குஜராத்தாக மாற்ற முயற்சிக்கிறார். அதற்காக இலட்சத்தீவை மாலத்தீவுபோல் பெரிய சுற்றுலாத்தலமாக ஆக்கப் போவதாகக் கூறி LDAR 2021 (Lakshadweep Development Authority Regulations 2021) வரைவை கொண்டுவந்திருக்கிறார்.

 

இதன்படி, இனி மாடு உள்ளிட்ட விலங்குகளைக் கொல்ல உரிமம் (License) வாங்க வேண்டும். இதன்மூலம் குஜராத், உபி உள்ளிட்ட வடமாநிலங்களில் உரிமம் இல்லை, இரசீது இல்லை என்று முசுலீம்களை, தலித்துகளை அடித்துக் கொன்றதுபோல் இங்கேயும் வெறியாட்டம் போட நினைக்கிறது பாஜக. படிப்படியாக மாட்டிறைச்சியை தடை செய்ய திட்டமிடுகிறது. அதிலும், பள்ளிகளில் தரப்படும் மதிய சத்துணவில் இறைச்சியை தடை செய்கிறது.

 

அடுத்ததாக, இரண்டுக்கும் அதிகமான குழந்தைகளை பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடக்கூடாது என்கிறது இவ்வரைவு. ஏற்கனவே பதவியில் இருந்தால் பதவி விலக வேண்டும். இது அநாகரிகமானது மட்டுமல்ல, அரசியல் ரீதியான சூழ்ச்சி என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

மோடி அரசு 2020-இல் கொண்டுவந்த சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய இசுலாமிய விரோத சட்டங்களுக்கு எதிராக இம்மக்கள் வீரியமாக போராடியுள்ளனர். தற்போதைய பஞ்சாயத்துத் தலைவர்கள்தான் அப்போராட்டங்களில் முன்னணியாக இருந்தனர். இவர்களின் போராட்டங்களை, உரிமைக்குரல்களை நசுக்கவே இப்படியொரு அயோக்கியத்தனமான சட்டத்தைப் போட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

 

மேலும், மாவட்ட அதிகாரிகளின் அதிகாரமும் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் ஒற்றை சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவரத் துடிக்கிறது.

 

கார்ப்பரேட்டுகளுக்கு விருந்து:

 

மேலும் இவ்வரைவின்படி, இனிமேல் இத்தீவுகளில் வெளிமாநிலத்தவர்கள்கூட நிலம் வாங்கலாம். சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சாராயமே இல்லாத தீவுகளிலும் சாராயக்கடைகளை திறக்கலாம். இதன்மூலம் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் இவ்வழகிய தீவுகளை கபளீகரம் செய்ய அனுமதிக்கிறது.

 

ஏற்கனவே, குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் காட்டி பள்ளிகளை மூடியுள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் கூறி ஊழியர்களை வேலைநீக்கம் செய்துள்ளது. குறிப்பாக கடலோரப்படையில் போலீசாராக இருந்த 300பேரை அதிரடியாக நீக்கியுள்ளது.

 

மேலும், முதலுதவி செய்வதற்கான வசதி மட்டும்தான் அங்கிருக்கிறது. மற்ற சிகிச்சைகளுக்கு மூன்று ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு செல்வார்கள். இப்போது ஏர் ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தவும் கட்டுப்பாடு. நோயாளி மெடிக்கல் டைரக்டருக்கு மெசேஜ் அனுப்பினால், அவர் நால்வர் கொண்ட மருத்துவ குழுவை அனுப்பி, நோயாளியை பரிசோதித்த பிறகே ஆம்புலன்சில் அனுமதிப்பார்களாம். இவ்வளவு குரூரமாக சிறைக்கைதிகளைப் போல நடத்துவதா?

 

ஆனால், இதைப்பயன்படுத்தி பள்ளிகள், மருத்துவமனைகளைத் தொடங்கி கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கலாம். வேலையிழந்தவர்களை அத்துக்கூலிகளாக்கி அவர்களின் உழைப்பை சுரண்டலாம். தீவுகளை அழகுபடுத்துவதாகக்கூறி பூர்வகுடிகளை துரத்தியடிக்கலாம். கார்ப்பரேட்டு நலன்தானே இந்தக் காவிகளுக்கு முக்கியம்.

 

கேரளாவிடமிருந்து துண்டிப்பு:-

 

கம்யூனிஸ்டுகள் ஆளும், முற்போக்கு மாநிலமான கேரளாவுடன் இம்மக்களுக்கு உள்ள தொடர்பையும் துண்டிக்க நிர்ப்பந்தப்படுத்துகிறது. அவர்களுக்கு மொழி ரீதியாக ஒத்துப்போகும் கேரளாவின் பேப்பூர் துறைமுகத்துக்கு பதிலாக கர்நாடகாவின் மங்களூர் துறைமுகத்தை பயன்படுத்தச் சொல்லி வற்புறுத்துகிறது.

 

அதன்மூலம் கேரள அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, பாஜக ஆளும் கர்நாடகாவை முழுக்க சார்ந்திருக்க வைக்க நினைக்கிறது. அரசின் துணையின்றி ஏதும் செய்யமுடியாதென்ற இக்கட்டான நிலைக்குத் தள்ள நினைக்கிறது.

 

உரிமையைக் கேட்டால் குண்டாஸ்:-

 

இவ்வாறு அம்மக்களின் உணவு, நிலம் வாழ்நிலை, வாழ்வாதாரம், எதிர்காலம் என அனைத்தையும் சிதைக்கத் தொடங்கியுள்ளது பாசிச பாஜக அரசு. ஆனால், இந்த சட்ட வரைவை எதிர்த்தும், நிர்வாக அதிகாரியை திரும்பப் பெறக்கோரியும் அம்மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

 

அவர்களின் குரல்களை ஒடுக்க PASA 2021 (Prevention of Anti-Social Activities Act 2021) சட்டத்தை இயற்றுகிறது. இது குண்டர் சட்டம் மாதிரி. இதன்மூலம் பொய்க்குற்றம் சாட்டி யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். பயமுறுத்தலாம். உரிமைக்காக போராடவிடாமல் தடுக்கலாம்.

 

குரங்கு கையில் சிக்கிய பூமாலை:

 

அழகான தீவு, இன்று குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக இருக்கிறது. தெளிவான திட்டங்களோடு இலட்சத்தீவை சிதைக்கத் தொடங்கியிருக்கிறது பாஜக. கார்ப்பரேட்-காவி பாசிசத்தை படிப்படியாக அமல்படுத்துகிறது.

 

இந்த நாசகர சக்தியான ப்ரஃபுல் படேலை திரும்பப்பெறக்கோரி லட்சத்தீவு மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தோழர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, அனைத்துக்கட்சி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. தமிழக முதல்வர் மு..ஸ்டாலினும் நவீன நீரோ, மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

 

ஆனாலும் இதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என திமிராக சொல்கிறார் ப்ரஃபுல். மோடி அரசும், மக்களின் குரலுக்கு செவிசாய்க்கும் என கனவிலும் நினைக்க முடியாது. இன்று இவர்களை அனுமதித்தால் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக சின்னாபின்னமாகிவிடும்.

இன்று பாசிச பாஜக கும்பலின் வாலை ஒட்ட நறுக்க வேண்டிய கடமை இலட்சத்தீவு மக்களின் முன் நிற்கிறது. நாமும் போராடும் அம்மக்களுக்கு உறுதுணையாக நிற்போம். காவிக்கூட்டத்தை தெறிக்க விடுவோம்!


#SaveLakshadweep

#GoBackPrafulPatel

 

-ஆதிரா

#வினைசெய்

 


Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.