உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

எட்டு மணி நேர இயக்கம் குறித்து மார்க்ஸ்.

1866-ம் ஆண்டு எட்டு மணி நேர வேலை நாள் என்ற முடிவை தேசிய தொழிற்சங்கம் எடுத்தது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் கூடிய இன்டர்நேஷனலின் காங்கிரசும் இதே கோரிக்கையைப் பின்வருமாறு முழங்கியது.

வேலை நாளுக்கு சட்டபூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது…. வேலை நாளுக்கான சட்டபூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும் என்று இம்மாநாடு முன் மொழிகிறது.”  தேசிய தொழிற்சங்கத்தின் இந்த எட்டுமணி நேர இயக்கத்தைக் குறித்து மார்க்ஸ் 1867-ல் வெளியான மூலதனம் புத்தகத்தில் ‘வேலை நாள் குறித்து’ எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார். கறுப்பு மற்றும் வெள்ளை தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையைப் பற்றிய அந்த புகழ்பெற்ற பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார். ”அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக் கொள்ள முடியாது. ஆனால் அடிமைத்தனத்தின் அழிவிலிருந்துதான் புதிய உத்வேகமுள்ள வாழ்க்கை பிறந்தது. உள்நாட்டுப் போரின் முதல் பலனே 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டமாகும். இது ஒரு இயக்கமாக அதிவேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலும், நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது.”

இருவார வித்தியாசத்தில் நடைபெற்ற பால்டிமோர் தொழிலாளர் மாநாடும், ஜெனிவா இன்டர்நேஷ்னல் காங்கிரசும் ஒரே சமயத்தில் எட்டு மணி நேர வேலை நாளை முன் மொழிந்தன என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு அட்லாண்டிக்கின் இருபுறமும் உற்பத்தி முறை நிலைமையால் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இயல்பாக ஏற்பட்ட வளர்ச்சி ஒரே விதமான இயக்கத்தை அதாவது எட்டு மணி நேர வேலை நாளுக்கான இயக்கத்தை உருவாக்கியது.

ஜெனிவா காங்கிரஸ் முடிவு எவ்வாறு அமெரிக்க முடிவோடு ஒத்துப் போகிறது என்பதை தீர்மானத்தின் பின்வரும் பகுதி காட்டுகிறது. ”வட அமெரிக்க ஐக்கிய நாட்டு தொழிலாளர்களின் பொதுவான கோரிக்கையாக இந்த அளவு இருப்பதால், இந்த காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை உலகத்தின் அனைத்து தொழிலாளர்களுக்குமான பொது மேடையில் முன் வைக்கிறது.”

அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தின் இந்த செல்வாக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு இதே போன்ற காரணங்களுக்காக இன்னும் வேகமாக சர்வதேச காங்கிரசில் செலுத்தப்பட்டது.

அமெரிக்காவில் மே தினம் பிறந்தது

முதல் இன்டர்நேஷனல் 1872-ல் தன் தலைமையகத்தை லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு மாற்றியது. அது அப்போது சர்வதேச ஸ்தாபனமாக விளங்கவில்லை. பின் 1876-ல் இது அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது. பின் இது மாற்றியமைக்கப்பட்டு இரண்டாவது இன்டர்நேஷனல் என்று அழைக்கப்பட்டது. இதன் முதல் மாநாடு 1889-ல் பாரிஸில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் மே முதல் நாள் என்பது உலகத் தொழிலாளர்கள் தங்கள் அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் கீழ் மிக முக்கிய அரசியல் கோரிக்கையாக 8 மணி நேர வேலைநாளுக்கு போர்க்குரல் கொடுக்க வேண்டிய தினம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1884, அக்டோபர் 7-ம் நாள் சிக்காகோவில் அமெரிக்க தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பின் மாநாடு முடிவுக்கு அடிகோலாக விளங்கியது. அம்மாநாட்டில் அமெரிக்கா மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்கள் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

1886 மே முதல் நாள் முதல் சட்டபூர்வமான வேலைநாள் என்பது எட்டு மணி நேரம்தான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானிக்கிறது. எனவே எல்லா தொழிலாளர் அமைப்புகளும் தங்கள் அதிகார வரம்பிற்குரிய இடத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத்தீர்மானத்திற்கு ஏற்ப தங்கள் சங்க விதிகளை அமைத்துக் கொள்ளுமாறு இம்மாநாடு பரிந்துரைக்கிறது.”

எட்டு மணி நேர வேலை நேரத்தை எப்படி கொண்டு வருவது என்பது பற்றி கூட்டமைப்பு தீர்மானத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50,000-க்கு உட்பட்டது. தங்கள் உறுப்பினர்கள் வேலை செய்யும் கடை, ஆலை, சுரங்கங்களில் போராடி இன்னும் அதிகமான தொழிலாளர்களைத் திரட்ட வேண்டும் என்பதை அது அறிந்திருந்தது. அப்போதுதான் எட்டு மணி நேர வேலை நாளை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பதை அறிவிக்க முடியும் என்பதையும் உணர்ந்திருந்தது. 1886, மே முதல் நாள் 8 மணி நேர வேலைக்காக போராடும் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டே “தீர்மானத்திற்கேற்ப சங்க விதிகள் அமைய வேண்டும்” என அறிவித்திருந்தது. வேலை நிறுத்தத்தின் போது வெகு நாட்கள் வெளியே தங்க நேரிடலாம்.

அப்போது சங்கத்தின் உதவி தேவைப்படும். மேலும் இவ்வேலை நிறுத்தம் தேசிய அளவில் நடைபெறுவதாலும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் கலந்து கொள்வதாலும் அவர்கள் விதிப்படி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு தங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகிறது. இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த கூட்டமைப்பானது தற்போது உள்ள அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பை போலவே சுயேச்சையாக கூட்டமைப்பு முறையில் ஏற்பட்டது. எனவே கூட்டமைப்பில் இணைந்த தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்தால்தான் தேசிய மாநாட்டின் முடிவுகள் அவைகளைக் கட்டுப்படுத்தும்.

தொடரும்...

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.