மருத்துவ கல்லூரி மாணவர்களின் தொடரும் எஃகுறுதிமிக்க போராட்டம்!


50 நாட்களையும் கடந்திருக்கிறது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டம். இந்த போராட்டம் பலரின் கவனத்துக்கு வரவில்லை. ஆனால், பல சிக்கல்களுக்கு மத்தியிலும் இரவும், பகலும் உறுதியுடன் போராடுகிறார்கள் வருங்கால மருத்துவர்கள்.


எதற்காக இந்தப் போராட்டம்??

இந்தக் கல்லூரி அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனாலும் தனியார் நிறுவனமாக இருக்கும்போது வசூலித்த அதிக கட்டணத்தையே தற்போதும் கட்டச் சொல்கிறது நிர்வாகம்.

இதை எதிர்த்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இல்லை. அதனால்தான் மாணவர்கள் கல்லூரிக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கல்லூரி நிர்வாகம், மின்சாரம், குடிநீர்போன்ற அடிப்படை வசதிகளை நிறுத்தி வைத்து வக்கிரமாக நடந்து கொண்டது.

மேலும், மாணவர்கள் விடுதியையும் இழுத்து மூடிவிட்டது. அதுமட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் பசியில் மயங்கி விழுந்த பதற்றமான சூழ்நிலை. அப்போதுகூட, வெளியில் இருந்து உணவு டெலிவரி செய்ய வந்தவரை உள்ளேவிடாமல் அட்டூழியம் செய்தது நிர்வாகம். ஆனால், அரசுக் கல்லூரியாக மாற்றிய தமிழக அரசோ, இப்போராட்டத்தை ஏற்படுத்தும் பார்க்கவில்லை.

ஆனால் மருத்துவ மாணவர்கள் மனம் தளர்ந்துவிடவில்லை. நெஞ்சுறுதியோடு போராடுகிறார்கள். அக்கல்லூரி வளாகம் குட்டி டெல்லி போலிருக்கிறது. போராடும் விவசாயிகளுக்கு நிகரான உறுதியோடும் துணிச்சலோடும் மாணவர்கள் போராடுகிறார்கள்.

இப்போது, போராட்டத்தை மடைமாற்றுவதற்காக முயற்சிக்கிறது தமிழக அரசு.
உயர்கல்வித் துறையின்கீழ் இருந்த இக்கல்லூரியை சுகாதாரத் துறையின்கீழ் கொண்டு வந்திருக்கிறது. இதை மிகப்பெரிய சாதனை போல, முதலமைச்சருக்கு நன்றி அறிக்கை விட்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதில் தாம் பயின்ற கல்லூரி என பெருமையாக சொல்லியிருக்கிறார்.

ஆனால், அதே கல்லூரியில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் பற்றி ஒருவரிகூட கிடையாது. இதைப் புரிந்து கொண்ட மாணவர்கள் அரசின் பசப்பு வார்த்தைகளுக்கு மசியவில்லை.

மாறாக, "தற்போது படிக்கும் 2293 மாணவர்களின் கல்விக் கட்டணம் பற்றியும், அடுத்த கல்வியாண்டில் சேரப்போகும் மாணவர்களின் கல்விக் கட்டணம் பற்றியும் தெளிவான விளக்கம் அரசாங்கம் தெரிவிக்காததால் மாணவர்களாகிய நாங்கள் மிகவும் ஏமாற்றத்தில் இருக்கிறோம்"என கூறியுள்ளனர். கொக்குக்கு ஒன்றே மதி என்பதுபோல தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

மக்களே, இது மாணவர்கள் போராட்டம் மட்டுமல்ல. நமக்கான போராட்டமும்தான். அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் இருப்பதால்தான், நம் வீட்டுப் பிள்ளைகள் மருத்துவம் படிக்க முடிகிறது. இலவச மருத்துவமும் கிடைக்கிறது. எனவே, போராடும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

வெல்லட்டும் மாணவர்கள் போராட்டம்!

- ஆதிரா.

முகநூலில்....29/01/2021

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.