கடும் குளிரில் இளம் தளிர்கள்: விவசாயிகள் போராட்டத்தில் பள்ளி சிறுவர்கள்




பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள மங்காட் கிராமத்தில் வசிக்கும் பதினொரு வயது குர்சிம்ரத் கவுர், 6 ஆம் வகுப்பு மாணவி, இந்த மாத இறுதியில் தனது தேர்வுகளை எழுத வேண்டும். எனவே, டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு செல்ல தேவையான பொருட்களை தயார் செய்யும் போது, தனது அனைத்து புத்தகங்களையும் எடுத்துக் கொண்டார். ”எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் படிக்கிறேன்” என்கிறார். இப்போது சிங்கு பார்டரில் தனது பெற்றோருடன் முகாமிட்டு ஒரு பேருந்தில் வசித்து வருகிறார். "நாங்கள் பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுகிறோம். ஆனால் இதன் பொருள் நாங்கள் எங்கள் படிப்பை இழக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. எப்போதும் போலவே, நான் இந்த முறையும் A+ மதிப்பெண் பெறுவேன். ” உற்சாகமாக கூறுகிறார்.


தனது தாய் சுக்பீருடன் வயல்களில் வேலை செய்யும் கவுர், தன்னை ஒரு விவசாயி என்று சந்தோசமாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார். போராட்டத்திற்கு வருவதற்கு முன்பு பஞ்சாபியில் உள்ள மூன்று வேளாண் சட்டங்கள் குறித்த மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பைப் படித்து பாதிப்பை உணர்ந்துள்ளார், "நாங்கள் அனைவரும் விவசாயிகள், எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க விரும்புகிறோம், அதனால்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்," என்கிறார். அவர் வாட்ஸ்அப்பில் பாடங்களைப் படித்து தேர்வு எழுதுகிறார்.

”போராட்டங்களில் கலந்து கொள்ளுமாறு பெற்றோர்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தவில்லை, ஆனால் இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மூலமாக தங்கள் போராட்டங்களைத் திட்டமிட்டுக் கொள்கிறார்கள் என கவுர் கூறுகிறார். "என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும், மேலும் அவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்புகிறார்கள். எங்கள் கிராமத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறோம், எங்கள் மகளும் எங்களுடன் போராட்டத்தில் இணைந்துள்ளார்.” எனகிறார் சுக்பீர் கவுர்.

பஞ்சாபின் பல்வேறு பகுதிகளிலிருந்து டெல்லியின் எல்லைகளில் பெற்றோருடன் இணைந்து பல குழந்தைகள் போராடுகின்றனர். அவர்கள் நெடுஞ்சாலைகளிலும், கூடாரங்களிலும், டிராக்டர் தள்ளுவண்டிகளிலும் தங்கள் இரவுகளைக் கழிக்கிறார்கள்,

ஒரு பக்கம் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே, மறுபக்கம் தங்கள் ஆன்லைன் வகுப்புகளிலும் கற்கின்றனர். வாட்ஸப் மூலம் தங்கள் ஆசிரியர்கள் கூறும் பாடத்திட்டங்களைப் படிக்கின்றனர்.

கவுரைப் போலவே, ஹர்மன் சிங்கும் சிங்கு பார்டரில் இருக்கிறார். அவரது நாள் காலை 7 மணிக்கு விவசாயிகளுடன் முழக்கமிடுவதோடு தொடங்கி, இரவில் தனது ஸ்மார்ட்போனில் பாடங்களைப் படிப்பதோடு முடிவடைகிறது, "எங்கள் படிப்பைத் தொடர்ந்து கொண்டே நாங்கள் போராட்டத்திலும் பங்கெடுக்கிறோம். அதிகாலையில் எழுந்திருக்கிறேன், பகலில் போராட்டங்களில் பங்கேற்கிறேன், என்கிறார் ஸ்மார்ட்போனில் இரவில் இரண்டு மணி நேரம் படிக்கிறேன் ”என்று பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள சங்கா கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவர்.

“இது பெரியவர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல. எங்கள் குடும்பங்கள் இச்சட்டங்களால் பாதிக்கப்படும். எனவே கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில் நாங்கள் போராட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டும்”, என்று கூறிய சிங் கடந்த ஐந்து நாட்களில் தனது 9 ஆம் வகுப்பு பஞ்சாபி பாடப்புத்தகத்திலிருந்து இரண்டு அத்தியாயங்களையும், அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து ஒரு அத்தியாயத்தையும் படித்து முடித்துள்ளார்.

அவரது பெற்றோர் ஹிசாரில் இருக்கும்போது தனது உறவினர்களுடன் சிங்குவில் இருக்கும் சிங், ”இந்த ஆண்டு தொடக்கத்தில் கோவிட் -19 தொற்றுநோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், ஆன்லைனில் வகுப்புகள் நடக்கின்றன. எங்கள் கற்றல் பெரும்பாலும் ஆன்லைனில் நடப்பதால், நாங்கள் எங்கிருந்தாலும் எங்கள் படிப்பைத் தொடரலாம். எங்கள் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்”, என்றார்.

நேரடியாக பள்ளி செல்ல வேண்டிய நிபந்தனைகள் எதுவும் இல்லாததால் தாங்கள் போராட்டங்களில் கலந்து கொள்ள முடிகிறது என போராட்டக்களத்தில் இருந்த மற்ற மாணவர்களும் கூறினர்.

கடந்த மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பஞ்சாப் அரசுப் பள்ளிகளைத் திறந்தது, அதுவும் ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் மட்டும் பள்ளி சென்றால் போதும்.

பஞ்சாபின் எஸ்.பி.எஸ்.நகர் மாவட்டத்தில் உள்ள மங்கோவால் கிராமத்தைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி மெஹேக் ப்ரீத் கட்கர் கூறுகையில், ”கோரோனா பரவலுக்குப் பின் எங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்தன. ஆனால் ஆன்லைன் வகுப்புகளால் எந்த பயனும் இல்லை. மேலும் எங்கள் வாழ்வாதாரத்தையே இழக்கும் போது மதிப்பெண் தாளால் என்ன பயன்? ”

போராட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும், பாரதிய கிசான் யூனியனின் உறுப்பினருமான சுச்சா சிங், போராட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள் தங்கள் சூழ்நிலையை அறிந்திருக்கிறார்கள். அவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை அவர்கள் பார்த்திருக்கிறார்கள், வேளாண் சட்டங்களால் வரக்கூடிய பாதிப்புகளைப் புரிந்துகொள்கின்றனர். இப்போது போராடாவிட்டால் தங்கள் எதிர்காலமே பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை அவர்கள் அறிந்திருப்பதால் குழந்தைகள் போராட விரும்புகிறார்கள், என்றார்.

- நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ்

மொழிபெயர்ப்பு : நதியா

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.