”வசந்தத்தின் இடிமுழக்கம்” நூல் வெளியீடு






ரசிய சோசலிசப் புரட்சியின் 103ம் ஆண்டு சென்னை விழாவின் பொழுது வெளியிடப்பட்டது.  நூலை வெளியிட்டு பேராசிரியர் வீ. அரசு நிகழ்த்திய உரையிலிருந்து….

 

சுமந்தா என தோழர்களால் அன்போடு, தோழமையோடு அழைக்கப்படும் தோழர் சுமந்தா பானர்ஜி அவர்களால், “நக்சல்பாரி கவிதைகள்” என ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்ட புரட்சிக் கவிதைகளை தோழர் வீராச்சாமி ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ என்று தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

 

மொழியாக்கம் போல் இல்லாமல் மூல மொழியில் உள்ளதைப் போல் கவிதைகளும், பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன  (இவை இசைக்கோர்வை இல்லாமல் இலக்கியப் பெயர்ப்பாக மட்டும் கொடுக்கப்பட்டுள்ளா.  இவற்றை இசையமைத்து பாடமுடியும்.) இந்த தொகுப்பைப் பற்றி சில குறிப்புகளை இங்கு தருகிறேன்

 

இந்நூல் கவிதைகள் மட்டுமல்ல, இந்திய வரலாற்றை பேசும் நூல்.

 

“எனக்கு நிச்சயமாகத் தெரியும்

நான்கு எழுத்து கொண்ட எளிய அப்பெயர்

ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல

மொத்த நாட்டின் பெயரே

அது தான்

நக்-சல்-பா-ரி!”  (பக். 69) 

 

என்ற குமார் விகாலின் கவிதை வரிகள் இந்த நாட்டில் உருவான புதிய வரலாற்றைச் செய்த காலங்களைப் பதிவு செய்கிறது. உழவர்கள் முன்னெடுத்த புதிய ஜனநாயகப் புரட்சியின் வரலாறு இது.

 

மார்க்சியம் புதிய முகத்தோடு இந்தியாவில் செயல்படத் தொடங்கிய வரலாற்றை இந்தக் கவிதைகள் பேசுகின்றன; பாடல்கள் இசைக்கின்றன.

 

“கஷ்டஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்டுகள்

துணிந்து நாங்கள் சொல்கிறோம்

மார்க்சிஸ்டுகள் – நாங்கள் லெனினிஸ்டுகள்!” பக். 66

 

இந்தப் பாடல் ’ஒரு கையில் பேனா, ஒரு கையில் துப்பாக்கி’ என்று போராளியாக வாழ்ந்து தியாகியான சுப்பாராவ் பாணிக்கிரகியின் எழுச்சிக் கொண்ட வரிகள்.  இப்பாடல் இந்தியாவின் பல்தேசிய இன மொழிகளிலும் பாடிவருகிறார்கள் புரட்சி அணிகள். இந்த வரிகள் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான போர் தொடங்கிவிட்டதையும் கட்டியமாகக் கூறுவதை பார்க்கிறோம்.

 

புதிய ஜனநாயகப் புரட்சியில் தொழிலாளர்களோடு விவசாயிகள் கைகோர்த்தார்கள். இதன் அவசியத்தை இந்தக் கவிதைகள் சொல்கின்றன. மாவோ வழியில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்த  வரலாற்றை இதன் மூலம் சொல்கின்றன.

 

“விவசாயச் சகோதரனே!

எதற்காக அழுகிறாய்!

அழுதால் விடுதலை வருமா சொல்” பக். 45

 

-இவ்வரிகளை எழுதியவர் எழுபதுகளில் நக்சல்பாரி இயக்க விவசாயப் போராளியன் நித்யாசென் (வங்காளம்)

 

இவ்வியக்கத்தில் ஈடுபட்ட தோழர்களின் ஈக வாழ்க்கை குறித்த பல பதிவுகள் இத்தொகுப்பில் உள்ளன. போராட்டமே வாழ்க்கையாக கொண்ட வரலாற்றை இக்கவிதைகள் சொல்கின்றன.

 

“ஆவியாகிக்

கருமேகமாகி, மழையாகிறது

நிலமெங்கும்

அவன் குருதி படர்கிறது

யார் கொன்றது? ஏன்?  விடை… பக். 84

 

போராளிகளின் இந்த ஈகத்தின் மூலம் தான் புரட்சியை முன்நகர்த்த முடியும். அதற்காகக் குருதியை நீராகப் பாய்ச்சுகிறார்கள்.

 

செரபண்ட ராஜுவின் வரிகள் தீயாகப் படருகின்றன.

 

“காடுகளை வெட்டினோம்

நிலங்களையே உழுதிட்டோம்

வேர்வை சிந்தி நீர் இறைத்து

பயிர்களையே வளர்த்திட்டோம்

விளைச்சல் யாருக்கு, அலைச்சல் யாருக்கு…. ஏய்!

 

-     ”மலைகளையே பிளந்திட்டோம்” பாடல் பக்.                                32

என்ற வீர முழக்கப்பாடல் உழைப்பாளிகளின் குரலாக முழங்குகிறது.

 

இந்த தொகுப்பு இந்தியாவில் உருவான புதிய வரலாற்றையும், அதன் மூலம் அணிதிரண்ட மக்களையும் அப்போரில் உயிர்நீத்த தோழர்களையும் நம்முன்  கொண்டுவந்து நிறுத்துகிறது.

 

தற்போதுள்ள பேரிடர்ச் சூழலில், இதனைத் தமிழுக்குக் கொண்டு வந்த வீராச்சாமியையும், மக்கள் கலை இலக்கிய கழகத்தையும் பாராட்டுகிறேன்.  இந்த பாடல்கள்/கவிதைகள் முழங்கட்டும்.  இத் தொகுப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். புரட்சி வெல்லும்! வாழ்க புதிய ஜனநாயக புரட்சி!!

 

****

 

ஓவியர் மருது, தோழர் அமர்ந்தா, இலக்கிய மொழிபெயர்ப்பாளர், நாடகவியலாளர் கருணா பிரசாத், எழுத்தாளர் பாக்கியம் சங்கர் கலந்துகொண்டார்கள்.  தோழர் கருணாபிரசாத்  நூலை சிறப்பாக வடிவமைத்து அச்சாக்கம் செய்து தந்தார். தோழர் வீராச்சாமி தோழர்களுடன் இணைந்து “மலைகளையே பிளந்திட்டோம்” பாடலை மேடையில் எழுச்சிகரமாக பாடினார்.  அரங்கு நிறைந்த தோழர்களுடனும், மக்களுடனும் உற்சாகமாக புத்தக வெளியீட்டு விழா நிகழ்ந்தேறியது.  பாசிசத்தை எதிர்கொள்வதில் இந்த புத்தகம் ஒரு ஆயுதமாக தோழர்களுக்கு பயன்படட்டும்.

 

பக்கங்கள் : 120

நூல் வெளியீடு : மக்கள் கலை இலக்கிய கழகம் தமிழ்நாடு.

விலை ரூ. 100


நூல் கிடைக்குமிடம் :


கீழைக்காற்று வெளியீட்டகம்,

16, அருமலைச் சாவடி,

கண்டோண்மென்ட் பல்லாவரம்,

சென்னை – 600043

தொலைபேசி : 9444881066


சென்னையில் நடைபெற இருக்கிற புத்தக கண்காட்சியில் கீழைக்காற்று கடையில் புத்தகம் கிடைக்கும்.

 

 

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.