தமிழக முப்பெரும் கவிஞர் மரபில் ‘தமிழ் ஒளி’ தமிழ் மரபுக்கவிதை வரலாறு - பேரா. வீ. அரசு


கவிஞர் தமிழ் ஒளியை அவர் கவிஞராக மலர்ந்த காலம் முதல் சுமார் 15 ஆண்டு காலம் இச்சமூகத்துக்குள்ளேயே வீரியமுள்ள கவிஞராக முதிர்ச்சி பெற்றது வரை அப்பயணத்தை சமூகத்தில் எழுந்த கொந்தளிப்புகளோடு சித்தரித்திருக்கிறார் பேரா. வீ. அரசு.

 

சாதாரணமாக கவிதை, அழகியல் என்று வந்தால் இலக்கிய வரலாற்றைத் தனியே துண்டித்து ரசனை அடிப்படையில் புகழ்பாடி ஓய்வதே ஒரு தனிபோக்கு; அல்லது அதற்குச் சாரமாக உள்ளீடாக உள்ள அரசியலை எடுத்து விளக்கி வாழ்த்திவிட்டுச் செல்வது மற்றொரு போக்கு.  இரண்டையும் ஊடாடிப் பாராட்டுவது சிறப்பான வழிமுறை.

 

தமிழ்ஒளி பாரதிதாசனின் வழிகாட்டுதலில் வளர்க்கப்பட்ட ஆலமரம்.   ‘போய் கரந்தையில் தமிழ்படி’ என்றார் தாசன்.  அங்கே பாடம் சொல்லிய வழிமுறையை ஏற்கமுடியாமல் வெளியேறுகிறார் தமிழ்ஒளி. சமூகத்தின் உண்மை வரலாற்றை, பண்பாட்டின் உண்மை வரலாற்றை ஆழ்ந்து தேடிய அந்தப் பாவலன் அச்சிறுவயதிலிருந்தே சாதியத்தின் கடுமை/கொடுமையையும் நேருக்கு நேர் அனுபவித்தான்.   பின்னாளில் ‘தமிழர் சமுதாயம்’ என்ற நூலில் அத்தனையையும் திரைகிழித்தான்.

 

(1945 வாக்கில் ஜீவாவைப் பார்த்து கட்சியில் சேருவதோடு பத்திரிக்கைகளில் எழுதவும் தொடங்குகிறார். 1948-52ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட கட்டத்தில் இயக்கதோடு இணைத்துக்கொள்கிறார் தமிழ் ஒளி.)

 

1931-32ல் பெரியார் ஈவெரா சோவியத் சென்று வந்ததும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்து வெளியிட்டதும், 40-களில் 50-களில் மொழிஉணர்வு – வர்க்க உணர்வு இரண்டும் ஊடாடி வளர்ந்த கட்டங்களில் தமிழ் ஒளி தன்னை தி.க பெரியார் மூலம் வார்த்துக்கொண்டதும் தமிழகத்தில் இரண்டு இயக்கங்களின் பரப்புரையாளர்கள் கவிதைகள் ஒருவருக்கொருவர் ஏடுகளில் வெளியிட்டதும் போராடி வாழ்ந்ததும் கவனிக்கின்ற பொழுது இவ்வியக்கங்களிலிருந்து நாட்டின் விடுதலைக்கான பாதை அமைக்கப்பட்டதில் செங்கொடி இயக்கத்தில் என்ன சிக்கல் என்று ஊன்றி ஆராயவேண்டியுள்ளது; அதே போல் உலகின் ஆழ அகலங்களை ஆய்ந்தறிவும் பொதுஉடைமைக் கொள்கையை விலக்கிவிட்டு தேசிய இன விடுதலைப்பாதை தொடங்கி,  அதுவும் நிறுவனமயமாக்கப்பட்ட வக்கிரத்திற்குள் சென்று திராவிட இயக்கம் விலகியதையும் ஆராயவேண்டியுள்ளது.

 

தொடர்ந்து கட்சிக்குள் கருத்து வேறுபாடால் பிரிந்தாலும், தான் கற்ற விசயங்களை எழுத்தில் வடிக்கத் தவறவில்லை.   கதை, கவிதை, கட்டுரைகள், குழந்தை இலக்கியம் என்று வளர்ந்தவர் கவிதை மரபில் தழைத்திருந்த காவிய ஆக்கங்களைத் தொடர்ந்து முயல்வதையும் பார்க்கிறோம்.

 

பாரதிதாசனின் மொழியைப் போலவே வலிமையான இன்னொரு மொழியில் பதினைந்து ஆண்டுகள் படைப்பில் ஈடுபட்ட தமிழ் ஒளியை வீ. அரசு இடையிடையே அடையாளம் காட்டுகிறார்.  தவிர, காவிய மரபை விட்டுவிடாமல், அதன் உள்ளடக்கம் மாற்றி, வளர்த்து எழுதிய முற்போக்குக் கவிஞராக இயங்கியதையும் பேராசிரியர் விளக்குகிறார்.

 

1940ல் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்புக்கு தமிழ்ஒளி செயலாளராக இயங்கியிருக்கிறார்.   மிகப்பெரிய எழுத்தாளர் கூட்டமும், திரு.வி.க உள்ளிட்டோர் இணைந்து தலைவராக இயங்கிய ‘சோவியத் நண்பர்கள் கழகமும்’ அக்கட்டத்தில் இயங்கியதையும் குறிப்பிடுகிறார் அரசு.

 

தமிழ் ஒளியின் ஆய்வு ஆழமானதென்பதை ஓரிடத்தில் குறிப்பிடும்பொழுது “சிலப்பதிகாரம்  என்பதை ஆடிப்பாடக்கூடிய இசை நாடகம் என்று அவர் உறுதியாகப் பேசுகிறார்” என்றே குறிப்பிடுகிறார்.  பாரதிதாசன் மனிதர்களை, அவர்களது உள்ளக்கிடக்கைகளை, முரண்களைப் பாடுபொருளாக்கி 12 காப்பியங்கள், தமிழ்ஒளி ‘விதியோ வீணையோ’, மாதவிக் காப்பியம்’ ‘நிலைபெற்ற சிலை’ போன்ற காப்பியங்களை எழுதியதோடு, தென் ஆப்பிரிக்காவிற்கு அடிகைகளாய்ச் சென்று திரும்பிய குடும்பம் எப்படி சாதிக்கொடுமைகளை இங்கே அனுபவிக்கிறது போன்ற காவியக்கதையை எழுதுகிறார்; சோவியத்தின் வெற்றியையும், மே தினத்தை நாம் எப்படி பார்க்கவேண்டும் என்று எழுதும் தமிழ் ஒளி ‘சேரி முழுக்க செங்கொடி ஏற்றும் மரபை’ எழுச்சியோடு அறிமுகப்படுத்துகிறார்.  இக்காப்பியம் ‘மேதின ரோஜா’ என்று அழைக்கப்பட்டது. காவிய மரபை தற்காலத்திலே உள்ளடக்கத்தோடு வரைந்தவர் தமிழ் ஒளி.

 

அவரது ‘மேதினமே வருக’ என்ர கவிதையிலிருந்து சிலவரிகள்:

 

கோழிக்கு முன்னெழுந்து

கொத்தடிமை போல் உழைத்து

பாடுபட்ட ஏழைமுகம்

பார்த்துப் பதைபதைத்து

கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக”

 

 

அன்று தமிழர் சமுதாயத்திற்குள் நுழைந்த சமஸ்கிருத படை எடுப்பை, பார்ப்பனீயத்தை எதிர்த்த தமிழ் ஒளி இன்று தேவைப்படுகிறார். அன்று தமிழகத்தில் மொழிஉணர்வும் வர்க்க உணர்வும் ஊடாடி நின்றது போல் இன்று மோடிக்கும்பலுக்கு எதிராக பகுத்தறிவும் பாடடாளி வர்க்க உணர்வும் ஒன்றாய் எழுச்சி கொண்டு போராட வேண்டியுள்ளது.

 

-    - பீட்டர்

தமிழ் ஒளி – தமிழ் மரபுக் கவிதை வரலாறு

ஆசிரியர் : பேரா. வீ. அரசு

வெளியீடு : தடாகம், சென்னை  044-431004421, 98400 70870

விலை ரூ. 50  

#வினைசெய்

#நூல்அறிமுகம்


Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.