புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த உண்மையான விவரங்களோ, நலனுக்கான கொள்கையோ இதுவரை வகுக்கப்படவில்லை!



இந்தியாவில் கொரோனாவுக்காக நாடடங்கு ( லாக்டவுன் ) அறிவித்து ஓராண்டு கடந்த நிலையிலும், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த உண்மையான விவரங்களோ, அவர்களின் நலனுக்கேற்ற கொள்கையோ இதுவரை வகுக்கப் படவில்லை.

****

அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாத பல கோடி மக்கள் வாழும் நம் ஊரில் திடீரென ஒருநாளில் நாடடங்கை அறிவித்தார் பேரரசர் மோடி.  வீட்டுக்குள் சிறை வைத்தவர் சோற்றுக்கு வழிவகுக்கவேண்டும் அல்லவா! அடிக்கடி கை கழுவவேண்டும் என அரசு அறிவித்துக்கொண்டே இருந்தது. பேரரசர் முதலில் புலம்பெயர் தொழிலாளர்களைத்தான் கைகழுவினார்.

 

தொழில் இல்லை. வருமானம் இல்லை. பிள்ளைகள் படும் பாட்டை தாங்க முடியாமல் தற்கொலை செய்தார்கள் தகப்பன்கள். எந்த வாகனமும் இல்லை. தூரமும் அதிகம்.  பட்டினியால் சாவது என்றாலும், சொந்த ஊரில் சாகலாம் என முடிவெடுத்தார்கள். 

 

குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் என குடும்பம் குடும்பமாய் கால்நடையாய் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தார்கள். பசியில் செத்தார்கள். வெயில் கொன்றது. ரயில் ஏறியது. எஞ்சிய காசில் ஒரு பழைய சைக்கிளை வாங்கி தன் நடக்க முடியாத அப்பாவை சொந்த ஊருக்கு கொண்டு சேர்த்தாள் அந்த சிறுமி. ’தைரிய லட்சுமி’ என பட்டம் கொடுத்தன பத்திரிக்கைகள்.

 

பேரரசர்களும், அவர்களின் சகாக்களும் முகத்தை திருப்பிக்கொண்டார்கள். உலகமே காறித்துப்பிய பிறகு ரயில் விட்டு, கூடுதல் காசு வாங்கி கல்லா கட்டினார்கள்.  போகிறவர்களை தடுக்கவா முடியும் என எகத்தாளம் பேசினார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள். சிற்றரசர்களும் தங்கள் பங்குக்கு ஆயிரம் கொடுத்ததோடு கமுக்கமாய் இருந்துகொண்டார்கள்.

 

ஒரு வருடம் கடந்துவிட்டது.  இந்த ஒரு வருடத்தில் அரசு எடுத்த முயற்சிகள் எத்தனை என்பதை கீழே உள்ள Scroll  இணைய இதழில் வந்த கட்டுரை விவரிக்கிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

 

வினைசெய்

******

இந்தியாவில் கொரோனாவுக்காக நாடடங்கு ( லாக்டவுன் ) அறிவித்து ஓராண்டு கடந்த நிலையிலும், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த உண்மையான விவரங்களோ, அவர்களின் நலனுக்கேற்ற கொள்கையோ இதுவரை வகுக்கப் படவில்லை.

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க எத்தனையோ சட்டங்களும், விதிமுறைகளும் இருப்பினும் லாக்டவுன் அறிவிப்பானது, அவர்கள் எவ்வளவு பாதுகாப்பற்ற வேலை நிலைமையில் உள்ளனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

 

சென்ற ஆண்டு மார்ச் - 24 ல் திடீரென அறிவிக்கப்பட்ட லாக்டவுனைத் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் முன்னெப்போதும் கண்டிராத பல பிரச்சினைகளை சந்தித்தனர். மார்ச் 25- க்கும், மே - 1 க்கும் இடைப்பட்ட அந்த 68 நாட்களில் வேலையிழப்பு, தங்குமிடப் பிரச்சினை, உணவு மற்றும் போக்குவரத்தின்றி கைவிடப்பட்ட ஆதரவற்ற நிலையில் தங்கள் குடும்பங்களுடன், அவர்களது அற்ப உடைமைகளோடு கூட்டம், கூட்டமாக தங்கள் சொந்த ஊர் நோக்கி நடக்கத் தொடங்கினர். இந்தியா முழுவதும் இந்த அவலம் அரங்கேறியது.

 

உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள் தொகையைவிட கூடுதலாக, 1.14 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகள் போல நகர்ந்தனர். இதில் 971 பேர் வழியில் இறந்து போயினர்.  இவ்வாறு தாங்கள் வேலைசெய்த நகரங்களில் இருந்து வெளியேறி மீண்டும் அடுத்த 5 மாதங்களில் அதே நகரங்களுக்கு திரும்பினர். காரணம் அவர்களது கிராமங்களில் எந்த வேலை வாய்ப்பும் இல்லை.

 

இந்த லாக்டவுன், பெரும் பொருளாதார சுணக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாளைக்கு ரூ.150 க்கும் குறைவான வருமானத்துடன் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையில்  மேலும் 7.5 கோடி பேரைச் சேர்த்தது. ஏப்ரல் 2020 ல் மட்டும் 12.2 கோடி பேர் வேலையிழந்தனர்.

 

1979 ல் உருவாக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

 

(வேலைவாய்ப்பு மற்றும் சேவை ஒழுங்குபடுத்தல்) சட்டம், சரியான முறையில் நடைமுறைபடுத்தப் படவில்லை. 2013 ல் வெளியான யுனெஸ்கோ மற்றும் யுனிசெப் அறிக்கையானது, "இந்தியாவில் இடப்பெயர்வுக்கு ஆதரவளித்தல் மற்றும் புலம்பெயர்ந்தோரை பாதுகாக்கும் நடைமுறைகளை உள்ளடக்கிய நிர்வாக முறையை உருவாக்க வேண்டும்" என வலியுறுத்தியது. ஆனால் 2019, 2020 ல் நிறைவேற்றப்பட்ட சட்டங்களும் அவர்களுக்கு பயனளிக்காது என இடம்பெயர்வு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 

புலம்பெயர் தொழிலாளர்கள் விசயத்தில் அரசின் நடவடிக்கை தாமதமாகவும், அதேவேளை போதுமானதாகவும் இல்லை. இடம்பெயர்வு மற்றும் உள்ளடக்கிய பேம்பாட்டு மையத்தின் இயக்குனர் பெனாய் பெட், " பெரும்பாலும் கொள்கைகள் காகிதத்தில் மாறுகின்றன. கணிசமான தொகை ஒதுக்கீடு, வலுவான அரசியல் விருப்பம் மற்றும் முழுமையான கண்காணிப்பு போன்றவை இல்லாவிட்டால் அடிமட்ட யதார்த்தங்கள் மாறாது" என்கிறார்.

 

லாக்டவுனின் ஆரம்ப மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றது தொடர்பான எந்த தகலையும் பராமரிக்கவில்லை என  2020 செப் - ல் மத்திய அரசு பாராளுமன்றத்தில் அறிவித்தது. வேலையிழப்புகள் குறித்த தரவுகளும் இல்லை என கூறியது.

 

டிசம்பர் 2020 ல் வெளியான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை, "புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளூர்,பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் கணக்கிடப் படாமலும், அங்கீகரிக்கப் படாமலும் இருக்கிறார்கள்" என தெரிவித்தது.

மத்திய தொழிலாளர் அமைச்சகம் தற்போது சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை வழங்குவதற்காக அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசியத் தரவு தளத்தை உருவாக்கி வருவதாக மார்ச் 2021 ல் பாராளுமன்றத்தில் அறிவித்தது. இருப்பினும் தொழிலாளர்களின் இடப்பெயர்வு குறித்த சரியான தரவுகளை உருவாக்குவது பெரிய சவால் என மனிதவள மேம்பாட்டு மையத்தின் ஸ்ரீவத்சவா கூறுகிறார். ஏனெனில் அத்தொழிலாளிகளுக்கு வேலை வழங்கும் முதலாளிகள் அனைவரையும் பதிவு செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் முறைசாரா வேலைகளில் ஈடுபடுவதால் அது சாத்தியமல்ல என்கிறார்.

 

தாராளமயமாக்கல் அமலாக்கப் பட்ட 1991 க்குப் பிறகு 22 ஆண்டுகளில் சுமார் 6.1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டதில் 92 % முறைசாரா வேலைகள்தான். இந்தியாஸ்பெண்ட் சார்பாக நேர்காணல் செய்த இடம்பெயர்வு குறித்த துறைசார் வல்லுனர்கள் வலுவான புலம்பெயர்வுக்கான கொள்கையை உறுதிப்படுத்த சில பரிந்துரைகளை முன்வைக்கின்றனர்.

 

1. முறைசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வழங்க வேண்டும்.

2. முதலாளிகள், அவர்கள் வழங்கும் வேலை நிலைமைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

3. தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக இல்லாமல் அதே சமயம் கண்டிப்பாக பின்பற்றப் பட வேண்டும்.

4. புலம்பெயர் தொழிலாளர்கள் நீதித்துறையை எளிதில் அணுகி நிவாரணம் பெற வசதி வேண்டும்

5. மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளில் மனிதவள மேம்பாட்டை உள்ளடக்கிய போதுமான உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கொள்கை சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

6. நகர்ப்புற ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் நகர்ப்புற வேலை வாய்ப்புகள் புலம்பெயர் தொழிலாளர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

7. பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் புலம்பெயர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.

(இந்தியாஸ்பெண்ட் எனும் இணையத்தில் முதலில் வெளியாகி scroll.in ல் மீள் பதிப்பாக வந்துள்ள கட்டுரையின் சுருக்கமான தொகுப்பு)

கட்டுரையாளர் : ஸ்ரீஹரி பலியாத்

 

https://scroll.in/article/990527/a-year-after-covid-19-lockdown-india-still-doesnt-have-reliable-data-or-policy-on-migrant-workers

 

மொழிபெயர்ப்பாளர் : குரு

 

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.