வானவில் நாவல் – நூல் அறிமுகம்


சிவந்த கண்களோடு உங்களை நான் எச்சரிக்கிறேன், பழைய புத்தககடையில் இப்புத்தகத்தை நீங்கள் பார்க்க நேரிட்டாலோ, தனித்து விடப்பட்டு அனாதையாக அது கிடந்தாலும், உங்களை வெறுக்கும் உங்கள் நண்பர் தவிர்க்க முடியாதபடி இப்புத்தகத்தை உங்களிடம் ஒப்படைத்துவிட்டாலோ,
வேறு எவ்வாறு இவ்வுலகில் அப்புத்தகத்தை நீங்கள் கடக்க நேரிட்டாலும் ஒருபோதும் படிக்க துணியாதீர்.


நான் இப்பொழுது உங்களுக்கு தரும் எச்சரிக்கையை எனக்கு யாரும் தரவில்லை, அதனால் அறியாமையில் அப்புத்தகத்தை திறந்து ஒருபக்கம் படிக்கலாமென வாசிக்கத் தொடங்கினேன்.

அது ஒரு அகோர போதை, என் ஐந்து நாள் தூக்கத்தை காவுவாங்கி விட்டது, இன்னும் ஒரு பக்கம் படிக்கலாம், இன்னும் ஒன்று, மேலும் சில, மற்ற அத்தியாயங்கள், எது 300 பக்கம்வந்துவிட்டதா, 321 பக்கம் ,புத்தகம் முடிந்துவிட்டதா, இன்னொரு முறை படிக்கலாமே எனதோன்றும் அளவுக்கு அந்த சிறந்த யுத்தகால நூல் என்மீது போர் தொடுத்துவிட்டது.

நானும் எவ்வளவோ தப்பிக்க முயன்றேன். ஆனால் அதன் பலத்துக்கு முன்னால் என் பராக்கிரமங்களெல்லாம் நொறுங்கிப்போயின, வேறுவழியின்றி அதனிடம் நான் சரணடைந்தேன்.

அதன் பின்தான் நான் அறிந்தேன், அது என்மீது தாக்குதல் தொடுத்தது பாதகமாய் இல்லை, என்னை காப்பாற்றவே என்மீது தாக்குதல் தொடுத்ததென உணர்ந்துகொண்டேன்.

பக்கத்துக்கு பக்கம் அப்படியே மனதில் பதிகிறது, புகைப்படம் எடுத்தார் போல, அப்புத்தகம் கண்முன் நிகழ்கிறது. படிக்கும்போதே அச்சம்பவங்கள் என்கண்முன் நிகழ்ந்து முடிந்ததை கண்டேன்.

அங்கே பனிவிழும்போழுது எனக்கு குளிர்ந்தது.
அவர்கள் வெறுத்தபொழுது, நானும் வெறுத்தேன்.
அவர்கள் அழுதபோது, நானும் அழுதேன்.
அவர்கள் மகிழ்ந்தபோது, நானும் மகிழ்ந்தேன்.

தன்மகனின் உறைந்து கிடக்கும் பிணத்தை தினமும் பார்க்க நேரிட்ட பொழுதும், செம்படை வீரனான அவன் பாசிச ஜெர்மானியப் படையால் கொல்லப்பட்டான் என்று அறிந்திருந்தும், தன் மகனை கொன்ற வெறியர்களின் கேப்டன் தன் வைப்பாட்டியுடன் இருக்க தன்வீட்டை தேர்ந்தெடுத்து தனக்கு கட்டளையிட்டபொழுது , அழுது புலம்பாமல் செம்படை தற்காலிகமாய்தான் பின்வாங்கியிருக்கிறது, அவர்கள் வருவார்கள் ,நிச்சயமாக வருவார்கள் என்று மனஉறுதியுடனிருக்கும் பெடோஸ்யாகிராவ்சக்கின் மனஉறுதி சோசலிசத்ததின் மீது நமக்கும் நம்பிக்கையூட்டுகிறது.

கொரிலாக்களோடு இருந்தவள் என்பதற்காக ,அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதையும், பிரசவகாலம் நெருங்கிவிட்டது என்பதையும் அறிந்தே கணக்கில் கொள்ளாமல் நிர்வாணமாக மைனஸ் டிகிரி உறைபனியில் துப்பாக்கியால் முதுகில் அடித்து அங்கும் இங்கும் இதேபோன்று அலையவைத்து விளையாட்டாய் ரசித்து இரக்கமற்ற ஜெர்மானிய மிருகங்கள் களைத்ததால், வெறும் கட்டாந்தரைகொண்ட களஞ்சியத்தில் அடைத்து ,கொரில்லாக்கள் பற்றிய விவரத்தை சொல்லும் வரையில் உணவும், ஒருசொட்டு நீரும் கிடையாது, சிறையும், சித்திரவதையும் மட்டுமே என பணிக்கப்பட்டிருந்தவளுக்கு, தன் பத்து வயது மகனான மிஷ்கா–வை ஒரு ரொட்டித் துண்டை ஒலினா கோஸ்ட்யுக் என்ற அந்த பெண்ணிடம் ஒப்படைக்க அனுப்புகிறாள், அதுவே அவள் வீட்டில் இருந்த கடைசி ரொட்டி , பாசிச ஜெர்மானிய மிருகங்களுக்கு உணவு கிடைக்கக்கூடாது என்பதற்காக உணவு மொத்தமும் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததால் அதைப்பற்றி அவள் கவலைப்படவில்லை. இருப்பினும் மிஷ்கா அதில் வெற்றிபெறாமல் சுடப்பட்டு சாக்கடையில் எறியப்படுகிறான்.

அதைப்பார்த்து அவனது தங்கை ஸீனா “மிஷ்கா-வை ,நாம் வீணில் இழந்தோம் என்று அழும்போது, இல்லை மகளே ,அவன் சென்றாக வேண்டிய தேவையிருந்தது, ஒலினா நமக்காக போராடியவர்” என்று நிதானத்தோடு அந்த தாய் மல்யுச்சிகா கூறுவது சோசலிசத்தில் அனைவரையும் தங்கள் பிள்ளையாய் கருதுவார்கள் என்ற வார்த்தைகள் வெறும் வார்த்தைகளல்ல , அது சோசலிச வாழ்க்கைமுறை என்று உணர்த்திவிடுகிறது.

இப்போதும் உங்களை எச்சரிக்கிறேன்,
மனிதநேயத்தில் மாற்றுக்கருத்து உள்ளவரா நீங்கள்,
சோசலிச எதிர்ப்பாளரா நீங்கள்,
இப்புத்தகத்தைப் படித்துவிடாதீர்,
இது உங்களையும் மாற்றிவிடும்.

- பாரதி

நாவல் ஆசிரியர் : வாண்டாவாஸிலெவ்ஸ்கா
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066

Comments

Popular posts from this blog

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.