சிறை என்ன செய்யும்?
பாசிஸ்டுகள் அவரை சிறையில் தள்ளினார்கள். மக்கள் அவரை சட்டமன்றத்திற்கு அனுப்புகிறார்கள். காவிகள் அவரை தனிமைக் கொட்டடியில் அடைத்தார்கள். மக்கள் அவரை தங்கள் நெஞ்சுக் கூட்டில் அணைத்தார்கள்.
அவர் தான் அகில் கோகாய். காவிகள் அசாமில் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரியும். அகில் சிறையில் இருந்தபடியே பாஜக வேட்பாளரை 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பலருக்கு தெரியாது. சிறையில் இருந்தபடியே சிப்சாகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இவர் பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டும். வேறு வழி இல்லாமல், என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் பதவி ஏற்க மட்டும் ஒரு நாள் பெயில் அனுமதித்துள்ளது. எம்.எல்.ஏ என பதவி ஏற்றதும் மீண்டும் சிறையில் அடைப்பார்கள்.
அகில் கோகாய் யார்? விவசாயிகளின் நில உரிமைப் போராளி. மனித உரிமைப் போராளி. பாசிச எதிர்ப்புப் போராளி. மக்கள் முன்னணி என்ற புதிய, சிறிய கட்சியின் தலைவர். இவர் 2019-ல் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார். இதற்காக தேச துரோக வழக்கில் சிறையில் அடைத்தது என்.ஐ.ஏ.
அகிலை கொரோனா கடுமையாக தாக்கியது. அவரது உடல் உருக்குலைந்தது. ஆனால் உள்ளம் உடையவில்லை. போராளிகளை சிறையில் அடைக்கலாம். அவர்களின் கருத்துக்களை?
அகிலின் கருத்துக்கள் சிறைக் கம்பிகளைத் தாண்டின. உயர்ந்த மதில்களைத் தாண்டின. மக்களிடம் சேர்ந்தன.
மக்களின் மனதைத் தொட்ட விட்டவர்களை பாசிஸ்டுகளால் என்ன செய்ய முடியும்? அகிலுக்காக இளைஞர்கள் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களுக்கு முன்னால் நின்றது அகிலின் 84 வயதான தாய்.
அகிலை தோற்கடிக்க பாஜக வெறியுடன் வேலை செய்தது. பணம் விளையாடியது. அதிகாரம் மிரட்டியது. அசரவில்லை மக்கள். காவிகளின் முகத்தில் காறித் துப்பி விட்டார்கள்.
இதோ சிறையில் இருந்து அகில் நமக்கு பாடம் நடத்துகிறார். எந்த நிலையிலும் பாசிஸ்டுகளுக்கு பணியாதே! அஞ்சாதே போராடு!
- சார்லி


நம்பிக்கையூட்டும் பதிவு. சிறப்பு...
ReplyDelete