“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தப் போராடிவரும் கம்யூனிச புரட்சியாளர்கள் இரண்டு வழிமுறைகளை முன் வைத்துப் போராடுவதாக நாங்கள் வரையறுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 

முதலாவதாக மாவோயிஸ்டுகள் முன்வைக்கின்ற ஆயுதப் போராட்டப் பாதை. அரசியல் போராட்டத்திற்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் இடையில் உள்ள உறவை புறக்கணித்துவிட்டு ஆயுதங்களை முன்னிறுத்தி புரட்சியை நடத்தி முடித்து விட முடியும் என்ற அகநிலைவாதக் கண்ணோட்டத்தில் செயல்படுகின்ற வழிமுறை. புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றே நாட்டு மக்களுக்கு விடிவை தரும் என்பதில் இவர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்ற போதிலும், அவர்களின் நடைமுறை அதனை நோக்கி முன்னேறுவதற்கான கூறுகளைக் கொண்டதாக இல்லை என்பதை அவர்களது அரசியல் மற்றும் இராணுவ பாதை தெளிவாக முன்வைக்கின்றது.

இரண்டாவதாக எமது அமைப்பு முன் வைக்கின்ற போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் ஆகிய இரண்டுக்கும் உள்ள உறவை அறிவியல் பூர்வமாக இணைத்து, மக்கள் திரள்வழியுடன் கொண்டு செல்கின்ற புரட்சிப் பாதை. அரசியல் போராட்டத்தின் நீட்சியாக ஆயுதப் போராட்டம் என்பதை முன்வைக்கின்ற அரசியல் மற்றும் இராணுவ பாதையை உள்ளடக்கிய புரட்சிகர நடைமுறை.

”ஒரு நாட்டிலுள்ள பாட்டாளி வர்க்க கட்சி எவ்வளவு சிறியதாக இருந்த போதிலும், பல்வேறு குழுக்களாக சிதறியிருந்த போதிலும், மிகவும் பலவீனமான நிலையிலிருந்தாலும், அது ஒரு அரசியல் போர்த்தந்திரத்தை ஆரம்பம் முதல் வகுத்து செயல்பட வேண்டும். அதன் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைக்கும் வழிகாட்டுவதே அரசியல் போர்த்தந்திரமும், அதனை நிறைவேற்றும் திசையில் - அதன் ஒளியில் வகுக்கப்பட்ட செயல்தந்திரங்களும்தான். அப்படிப்பட்ட சரியான ஒரு அரசியல் போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் இல்லையானால், அது பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையாகச் செயலாற்ற முடியாது. தவிர்க்க முடியாமல் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்வதில்தான், அதன் அத்தனை நடவடிக்கைகளும் இறுதியில் சென்று முடியும்.”

(இந்திய புரட்சியில் அரசியல் பாதையும் இராணுவ பாதையும்- மா.அ.க- பக்கம்:97) 

இதுதான் எமது சுருக்கமான நிலைப்பாடாகும்.

இதற்கு மாறாக எமது அமைப்புகளில் இருந்து பிளவுபட்டு அல்லது எங்களை வெளியேற்றி விட்டதாக மார்தட்டிக் கொண்டுள்ள வினவு மற்றும் செங்கனல் தலைமை, மேற்கண்ட இரண்டாவது வழிமுறையில் ஊன்றி நிற்கவில்லை என்பதைத்தான் எமது விமர்சனமாக முன் வைக்கின்றோம்.

”சோசலிசப் புரட்சியா? புதிய ஜனநாயகப் புரட்சியா? எதை நோக்கிப் போவது என்பது இரண்டாவது விவகாரம். அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதுதான் முதல் விவகாரம். உள்ளூர் அளவில் மக்கள் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும். அரசியல் அதிகாரம் வென்றெடுக்கப்பட வேண்டும். அரசியல் அதிகாரம் வென்றெடுக்கப்பட வேண்டிய தருணத்தை தீர்மானிப்பது பற்றியதுதான் செயல்தந்திரம். அதுதான் நாடு தழுவிய பிரச்சாரம், மாநிலம் தழுவிய பிரச்சாரம். இது இல்லையென்றால் (அதாவது உள்ளூர் அளவிலான அதிகாரம்) அதெல்லாம் (செயல்தந்திரம்) வெங்காயம். ஒன்றுக்கும் உதவாத காற்றில் பேசும் வார்த்தைகள்”. என்கிறது வினவு தலைமை. (மா.அ.க. IX-இடம் இருந்து கட்சியை காப்பாற்றுவது குறித்து  செங்கனல் வெளியிட்ட 55 பக்க அறிக்கை)


அரசியல் அதிகாரம் வென்றெடுக்கப்பட வேண்டிய தருணத்தை தீர்மானிப்பது பற்றியதுதான் செயல்தந்திரம் என்ற ’அரிய கண்டுபிடிப்பை’ முன் வைத்துள்ள வினவு தலைமை எமது அரசியல் கோட்பாட்டு முடிவுகளுக்கு எதிராக செயல்படுகிறது. குட்டி முதலாளித்துவ சாகசவாதமும், அரசியல் செயல்தந்திர வழியில் நம்பிக்கையற்ற டிராஸ்கியவாதமும் இணைந்த கலவையாக மாறியுள்ளனர்.  அவ்வப்போது தோன்றுகின்ற அரசியல் நிகழ்வுகளுக்கு எதிராக திடீர், திடீரென்று வீடியோ போடுவது; அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில போராட்டங்களை நடத்துவது என்று செயல்படுவதையே ’புரட்சிகர நடவடிக்கை’ என்று நம்பிக் கொண்டுள்ளனர். தத்துவார்த்த அரசியல்  தலைமை தங்களிடம் இருப்பதாக தமது கையில் சிக்கியவர்களிடம் பிதற்றிக் கொண்டுள்ளனர்.


மற்றொருபுறம், ”அதாவது இந்திய விவசாய உற்பத்தி என்பது நிலப்பிரபுத்துவ தலைகள் பெரும்பாலும் இல்லாத, முதலாளித்துவ சந்தையுடன் இணைக்கப்பட்ட சுதந்திர விவசாயிகளின் உற்பத்தியை மையமாகக் கொண்டது எனும் வகையில் முதலாளித்துவ உற்பத்தி முறை வகைப்பட்டதாக மாறியுள்ளது என்று கருதுகிறோம். ஆக 1970களில் இருந்த நிலப்பிரபுகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடும் மறைந்து, இன்றைய இந்திய விவசாயத்தில் வர்க்க முரண்பாடு என்பது பல தரப்பட்ட விவசாய வர்க்கங்களுக்கும் (சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கும்) தரகு முதலாளிகள், ஏகாதிபத்திய முதலாளிகளுக்குமான முரண்பாடு பிரதானமானதாக மாறிவிட்டது என்று கருதுகிறோம்.” என்கிறது செங்கனல் தலைமை.


(-பக்கம் 23,25.இந்திய விவசாயத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றிய குறிப்புகள். செங்கனல் வெளியீடு)


விவசாயிகளின் விவசாயப் புரட்சியே புதிய ஜனநாயகப் புரட்சி என்ற திட்டத்தை கைவிட்ட நிலையில், அதாவது இந்திய விவசாயம் முதலாளித்துவமயமாகிவிட்டது என்று வரையறுத்ததன் மூலம் புதிய ஜனநாயக புரட்சி திட்டத்தை கைவிட்டு விட்டு, ஆனால் அதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு திராணியின்றி, புதிய ஜனநாயகப் புரட்சிதான் என்கின்றனர். அதனை அடைய போர்தந்திர இலக்கை நேரடியாக முன்வைத்து மறுகாலனியாக்கம்; அதை முறியடிக்க புதிய ஜனநாயக புரட்சி என்ற அரைவேக்காட்டுத்தனமான முடிவை முன்வைத்து செயல்பட்டுக் கொண்டுள்ளது செங்கனல் தலைமை.


இவர்கள் எமது அமைப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட அல்லது தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறி ஓடிய சிலரை அங்கும் இங்கும் வென்றெடுப்பதையே புரட்சிகர அரசியல் என்று நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். தனது அரசியலைப் பேசி வென்றெடுப்பதற்கு பதிலாக மருதையனிஸ்டுகள், மருதைய பாக்டீரியாக்கள் என்று அவதூறு செய்வதையே தனது அரசியலாக கொண்டுள்ளனர்.


 ”போர்த்தந்திர கட்டம் முழுவதற்கும் சக்திகளின் இந்த பொது ஒதுக்கீடு பொருந்தும் எனினும், புரட்சியின் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சக்திகளைப் பருண்மையாக ஒதுக்குவது போர்த்தந்திரம், செயல்தந்திரம் - இரண்டாலும் தீர்மானிக்கப்படுகிறது. ஜனநாயகப் புரட்சிக் கட்டத்திலேயே பாசிச ஆட்சி வந்தால், பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி என்ற அமைப்பைக் கட்டி செயல்தந்திர ரீதியில் போரிடுவோம். அப்போது பாசிச எதிர்ப்பில் நிற்கும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரோடும் கூட சேர்ந்து போராடுவோம். அதாவது, சக்திகளை பொதுவாக ஒதுக்கீடு செய்யும் திட்டம் போர்த்தந்திர ரீதியிலான ஐக்கிய முன்னணிக்கான சக்திகளின் சேர்க்கையைக் குறிக்கிறது. குறிப்பிட்ட சமயத்தில் அமைக்கப்படும் ஐக்கிய முன்னணியின் சேர்க்கை, போர்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் இரண்டாலும் தீர்மானிக்கப்படுகிறது”.


(இந்திய புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவ பாதையும்- மா.அ.க பக்கம்: 169)


கார்ப்பரேட் காவி பாசிசம் ஏறித்தாக்கி வரும் நிலையில், அதனை வீழ்த்துவதற்கு பொருத்தமாக இந்த செயல்தந்திர காலகட்டத்தில் நாங்கள் உருவாக்க முயற்சிக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஏற்கனவே எமது அரசியல் கோட்பாட்டு ஆவணங்கள் மேற்கண்டவாறு வழிகாட்டுகிறது.


ஏற்கனவே நாங்கள் வலியுறுத்துவதைப் போல போர்த்தந்திர ரீதியிலான ஐக்கிய முன்னணியையும், செயல்தந்திர ரீதியிலான ஐக்கிய முன்னணி மற்றும் கூட்டு நடவடிக்கைகளையும் குழப்பிக் கொள்பவர்களுக்கு இது புரியவில்லை. ஆனால் திமுக காங்கிரசின் சொம்புகள் என்று எமது அமைப்புகளை அவதூறு செய்வதற்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மையாகும்.


மேற்கண்ட வகைகளில் எமது அமைப்பின் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி பற்றிய நிலைப்பாடுகளில் இருந்து விலகிச் சென்றவர்களை வெளிப்படையாக விமர்சிப்பதால் அவர்கள் பதில் சொல்வதை காட்டிலும், புரட்சிகர அமைப்பில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிப் போனவர்கள், வாட்ஸ் அப் மற்றும் முகநூல் பல்கலைக்கழகத்தில் தனது ’சித்தாந்த அறிவை வெளிப்படுத்தி’ அணிசேர்க்கும் குட்டி முதலாளித்துவ அற்பவாதிகள் தமக்கு புரிந்த வகையில் வாயாடுகின்றனர். 


பாசிசம் தோன்றுவதற்கு முந்தையக் கட்டத்தில் உருவான முரண்பாட்டின் அடிப்படையில் பேசப்பட்ட பேச்சுக்களையும், எழுதப்பட்ட எழுத்துக்களையும் அப்படியே ’கற்போடு’ பாதுகாக்க வேண்டும் (கவரிமானின் உடலில் உள்ள ஒரு மயிர் கொட்டினாலும் அது செத்துவிடும்) என கருத்துமுதல்வாதத் தூய்மைவாதத்திற்குப்   பலியாகியுள்ளனர். மேலும் இவர்களுக்கு பாசிசத்தினால் எந்த வகையான சொந்த பாதிப்பும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமின்றி இவர்கள் அனைவரும் எமது அமைப்பில் ஏற்பட்ட பிளவை மிகவும் மகிழ்ச்சிகரமாகவும், அப்பாடா இவர்களும் பிளவுப்பட்டு விட்டார்கள், இனி நம்மை யாரும் கேள்வி கேட்க ஆளில்லை என்ற துணிச்சலுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 


CPI(ML) பெயரில் செயல்படும் பல குழுக்கள் வெவ்வேறு முடிவுகளில், வெவ்வேறு பெயர்களில் முன்வைப்பது இந்தியாவில் ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டும் என்பதுதான். இதில் வினவிற்கும் செங்கனலுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வினவு மற்றும் செங்கனல் தலைமை புதிய ஜனநாயகப் புரட்சியை முதலாளித்துவத்தில் ஒரு பிரிவினரான (முதலாளித்துவ கட்சிகளை) அதாவது ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் பிரிவினரை இணைத்துக் கொண்டு நடத்தும் புரட்சி என வரையறுத்துள்ளனர். 


ஆனால்  முதலாளித்துவம் என்றாலே சுரண்டல் தன்மைக் கொண்டதுதான். முதலாளித்துவ கட்சிகள் என்றாலே கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்பவைத்தான். சாமியார்கள் என்றாலே இந்துத்துவா அரசியலுக்கு சேவை செய்யும் பிற்போக்குவாதிகள்தான் என வகைப்படுத்திக் கொண்டு தங்களின் அகநிலை கருத்திற்கு பலியாகியுள்ளனர். நாள்தோறும் புரட்சிகர அரட்டையடித்து புதிய ஜனநாயக புரட்சிக்குத் துரோகம் செய்கின்றனர். பாசிசம் மீண்டும் அதிகாரத்திற்கு வர செப்பனிட்டப் பாதையை அமைத்தும் தருகின்றனர்.


ரஷ்யாவில் இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கும், சீனாவில் கூட்டரசாங்கம் அமைப்பதற்கும் முதலாளிகளில் ஒரு பிரிவினரை இணைத்துக் கொண்ட போது. அவர்களிடம், நீங்கள் மக்களை சுரண்டக் கூடாது. அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற சிந்தனையே உங்கள் மனதில் இருக்கக் கூடாது என ’சத்தியம் வாங்கிக் கொண்டு’ லெனினும், மாவோவும் புரட்சி நடத்தவில்லை என்பதை புரிந்துக் கொள்ள முடியாத அரசியல் தற்குறிகளாக உள்ளனர். 


பாசிச எதிர்ப்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, புதிய ஜனநாயக புரட்சிக்கான திட்டமாக இருந்தாலும் சரி. சமூகத்தின் அடித்தளத்திலிருந்தும், மேலிருந்தும் செயலாற்ற வேண்டும் எனும் மார்க்சிய-லெனினிய- மாவோ சிந்தனையை புறக்கணித்துவிட்டு. ஆரம்பக் கட்டத்தில் பிரஞ்சுப் புரட்சியின் வழிகாட்டுதலான அடித்தளத்தில் மட்டும் செயலாற்றுவது என்ற ஆக்கம்கெட்டப் பாதையில் வினவும், செங்கனலும் பயணித்துக் கொண்டுள்ளனர். தங்களை நம்பி வரும் அணிகளை பலிகொடுக்கவும், மக்களுக்கு துரோகம் செய்யவும் துணிந்திருக்கிறார்கள்.


இவ்வாறு அவர்களை நம்பி ஏமாந்து நிற்கும் அணிகளுக்கு கீழ்க்கண்ட எமது ஆவணத்தின் பகுதிகளை அறியத்தருகிறோம்.


”இங்கே இரண்டு பிரச்சினைகளை வேறுபடுத்தி அறிய வேண்டும். அதாவது வரலாற்றுக் கட்டங்களில், வரலாற்றுத் திருப்பங்களில் புறவயமான நிலைமைகளில் ஏற்படும் மாறுதல் காரணமாக போர்த்தந்திரமே மாறும் போது அத்துடன் போர்த்தந்திர முழக்கங்களும் மாறுகின்றன; புதிய முழக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட போர்த்தந்திர கட்டத்தில், புரட்சியின் அடிப்படையான, சாராம்சமான தன்மைகள் மாறாமலிருக்கும் போதே போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த, போர்த்தந்திரத்தில் சில மாறுதல்களைக் கொண்டுவருகிற அளவு புரட்சிகர மற்றும் எதிர்ப்புரட்சிகர வர்க்கங்களின் - சக்திகளின் - சேர்க்கையில் மாறுதல் ஏற்படும் போது, அல்லது இம்மாறுதலைக் கொண்டுவருமாறு பிரதான முரண்பாடு மாறும் போது, புரட்சியின் இடைக்கட்டமே மாறும் போது முழக்கங்கள் மாறுகின்றன. புதிய முழக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு இடைக்கட்டத்திலேயே குறிப்பிட்ட தருணத்தின் பருண்மையான நிலைமைகளுக்கேற்ப புரட்சிகர இயக்கத்தின் வெள்ளம் பெருகுவது அல்லது வடிவதற்கேற்ப முழக்கங்கள் மாறுகின்றன. புதிய முழக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. இம்மூன்று நிலைகளிலும் அவற்றின் நோக்கங்களுக்கேற்ப அமைகின்றன. இம்மாறுதல்களை வேறு வகையான மாறுதல்களுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அதாவது இயக்கத்தின் வளர்ச்சிக்கேற்ப, புறவயமான நிலைமைகளுக்கேற்ப பிரச்சார முழக்கம், கிளர்ச்சி முழக்கம், செயல் முழக்கம் ஆகிய மூன்று கட்டங்களில் மாறுவதையும், முழக்கங்களே இறுதியில் கட்டளையாக- ஆணையாக - மாறிவிடுவதையும் முன்சொன்ன போர்த்தந்திர, இடைக்கட்ட மற்றும் செயல்தந்திர ரீதியான முழக்கங்களோடு குழப்பக்கூடாது.


புறவயமான நிலைமைகளுக்கேற்பவும், அகவயமான நிலைமைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டும் போர்த்தந்திர ரீதியிலான மற்றும் செயல்தந்திர ரீதியிலான பொருத்தமான முழக்கங்களை முன்வைப்பதும், அவற்றின் மாறுதல்களுக்கேற்ப பழையவற்றை விலக்கிக் கொண்டு புதியவற்றை முன்வைப்பதும், இயக்கத்தின் வளர்ச்சிக்கேற்பவும் புறவயமான நிலைமைக்கேற்பவும் அவற்றை பருண்மையான கட்டங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றி அமலாக்குவதிலும்தான் மிக முக்கியமாக தலைமையின் முன்னணிப் பாத்திரமே தங்கியிருக்கிறது. ரஷ்யப் புரட்சியின் முதற்கட்டத்தில் - ஜனநாயகப் புரட்சியில் “எதேச்சதிகாரம் ஒழிக!'' என்றும், “தொழிலாளர்கள் விவசாயிகளது சர்வாதிகாரம்” என்றும் மிகச்சரியான போர்த்தந்திர முழக்கத்தையும், அந்த போர்த்தந்திர கட்டத்திலேயே 'ரஷ்ய-ஜப்பானியப் போர் எதிர்ப்பு', 'டூமாவைப் புறக்கணியுங்கள்' இன்னும் பிற செயல்தந்திர முழக்கங்களும் முன்வைக்கப்பட்டு வெவ்வேறு கட்டங்களில் பருண்மையாக அமலாக்கப்பட்டன. சோசலிசப் புரட்சியின் கட்டத்தில் - இரண்டாவது கட்டத்தில் “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே!'' என்றும் “தொழிலாளர்கள் - ஏழைவிவசாயிகளது சர்வாதிகாரம்'' என்றும் போர்த்தந்திர ரீதியிலான முழக்கங்களும், "ஏகாதிபத்திய யுத்த எதிர்ப்பு” இன்னும் பிற செயல்தந்திர முழக்கங்களும் முன்வைக்கப்பட்டு வெவ்வேறு கட்டங்களில் பருண்மையாக அமலாக்கப்பட்டன.


சீனத்தின் புதிய ஜனநாயகப் புரட்சியில் “ஏகாதிபத்தியம் ஒழிக'', "நிலப்பிரபுத்துவம் ஒழிக'', "ஒரு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்', “மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்'' -ஆகியன போர்த்தந்திர முழக்கங்களாக இருந்தன. அதேசமயம், புரட்சியின் வெவ்வேறு இடைக்கட்டங்களில் வெவ்வேறு முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. சான்றாக, 1924-27 முதல் மாபெரும் புரட்சி இடைக்கட்டத்தில் "ஊழல் மிக்க அதிகாரிகள் ஒழிக", உள்ளூர்க் கொடுங்கோலர்களும் தீய பிரபுக்களும் ஒழிக', 'பிரபுத்துவ யுத்த பிரபுக்கள் ஒழிக, என்ற முழக்கங்களும், 1927-37 விவசாயிகளது புரட்சி என்ற இடைக்கட்டத்தில் “அனைத்து அதிகாரங்களும் விவசாயிகள் சங்கத்துக்கே" "தொழிலாளர்-விவசாயி குடியரசு'' என்ற முழக்கங்களும், 1937-45 தேசியப்புரட்சி ஜப்பானிய எதிர்ப்பு இடைக்கட்டத்தில் ''ஜப்பானிய ஏகாதிபத்தியம் ஒழிக!', "ஜப்பானிய-எதிர்ப்பு தேசிய ஐக்கிய முன்னணி'', "ஒரு ஜப்பானிய எதிர்ப்பு மக்கள் குடியரசு'' என்ற முழக்கங்களும், 1945-49 மூன்றாவது உள்நாட்டு யுத்த இடைக்கட்டத்தின் முதற்பாதியில் “உள்நாட்டு யுத்த எதிர்ப்பு, சமாதானம், ஜனநாயகம், ஐக்கியம்” மற்றும் “ஒருகட்சி பாசிச சர்வாதிகாரம் ஒழிக!'', “ஒரு ஜனநாயகக் குடியரசு'' என்ற முழக்கங்களும் பிற்பாதியில் ''சியாங் கே-ஷேக் கும்பல் ஒழிக!'', “நாடு முழுவதும் விடுதலை செய்!'' என்ற முழக்கங்களும் முன்வைக்கப்பட்டன; இத்துடன் ஒவ்வொரு இடைக்கட்டத்திலும் தேவையான செயல்தந்திர முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. சான்றாக, ஜப்பானிய எதிர்ப்பு தேசியப் புரட்சி இடைக்கட்டத்தில் “உள்நாட்டுப் போரை நிறுத்து”, 'ஒரு கட்சி பாசிச ஆட்சி ஒழிக'', “ஒரு ஜனநாயகக் குடியரசு'' மற்றும் “சரணடைவை எதிர்த்து நில், ஐக்கிய முன்னணியில் ஊன்றிநில்" போன்றவையும் இன்னும் பிறவும் முன்வைக்கப்பட்டன. ஏற்றத்தாழ்வான சமுதாய, பொருளாதார, அரசியல் வளர்ச்சியும், புரட்சியின் சமனற்ற வளர்ச்சிப்போக்கும் காரணமாக, பொருத்தமான வளர்ச்சி நிலைமைகளுக்கேற்ப இம்முழக்கங்களைப் பருண்மையாக வகுத்து அமலாக்குவது காலனிய, அரைக்காலனிய அல்லது நவீன காலனிய மற்றும் அரை நிலப்பிரபுத்துவ நாடுகளில் சிக்கலானவையாக இருக்கின்றன. 


இவ்வாறு போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திர ரீதியிலும் கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததும் பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கத்தின் தலைமை முறை பற்றிய விஞ்ஞான வகைப்பட்டதுமான முழக்கங்கள் பற்றிய விதிகளையும் வழிகாட்டும் நெறிமுறைகளையும் முற்றாகப் புறக்கணித்து, ஒரு புறம் சாருவும் பிற இடது சந்தர்ப்பவாதிகளும் “எழுபதை விடுதலைக்கான பத்தாண்டுகளாக்குவோம்'', "சீனத்தின் பாதையே நமது பாதை, சீனத்தின் தலைவரே நமது தலைவர்'', “வர்க்க எதிரியை அழித்தொழிக்கும் இயக்கத்தை நாடு முழுவதும் நடத்துக" போன்ற மார்க்சிய-லெனினிய விரோத முழக்கங்களையே முன்வைத்தனர். மற்றொருபுறம், திரிபுவாதிகளும் நவீன திரிபுவாதிகளும் தமது நாடாளுமன்ற சமரச சரணடைவுப் பாதைக்கேற்பவும், பொருளாதாரவாத நிகழ்ச்சிப் போக்கின் வகைப்பட்ட செயல்தந்திரத்திற் கேற்பவும் “எதேச்சதிகார-வகுப்புவாத எதிர்ப்பு", "இடதுசாரி ஜனநாயக முன்னணி'', "மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்” போன்ற முழக்கங்களை முன்வைக்கின்றனர். 


பிற மார்க்சிய-லெனினியக் குழுக்களோ போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் பற்றிய மார்க்சிய - லெனினிய போதனைகளைப் பிரயோகிக்காது, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என்பதை உள்ளடக்கிய பொதுத்திட்டத்தையே திரும்பத் திரும்ப வறட்டுச் சூத்திரங்களாக ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். பருண்மையான நிலைமைகளுக்கேற்ப போர்த்தந்திர, இடைக்கட்ட மற்றும் செயல்தந்திர முழக்கங்களை வடிப்பதன் அவசியத்தையோ, இயக்கத்தின் வளர்ச்சிக்கேற்ப, புறவயமான நிலைமைகளுக்குப் பொருத்தமாக வெவ்வேறு கட்டங்களில் பிரயோகித்து அமலாக்குவதன் அவசியத்தையோ முற்றும் உணராத நிலையிலிருக்கின்றனர். இவையெல்லாம் இந்தியப் புரட்சிக்குப் பொருந்தாதவை என்பது இவர்களது முடிவு. ஆனால், இதனாலெல்லாம் இவர்களது ஓட்டாண்டித்தனமே அம்பலப்பட்டுப் போகிறது.

(இந்திய புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவ பாதையும்- மா.அ.க பக்கம்: 303- 305) 

 அடுத்த பகுதியுடன் நிறைவுறும்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.