தடுப்பூசி : மக்களின் உயிரில் விளையாடுகிறது ஒன்றிய அரசு!
தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான பேராயுதம். ஆனால், தமிழ்நாட்டில் இன்று தடுப்பூசி இல்லை. ஒன்றிய அரசு தரவேண்டிய தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை.
ஆனால், பாஜகவின் வானதி சீனிவாசன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறைவான தடுப்பூசிகளை ஒதுக்கி கோவையை வஞ்சிக்கிறார் என அவதூறு பரப்புகிறார். உண்மையில், தடுப்பூசி விசயத்தில் அராஜகமாக செயல்படுவது யார்?
மக்களைப் படுகொலை செய்யும் ஒன்றிய அரசு:
கொரோனா இரண்டாவது அலை வரும் என மருத்துவ வல்லுநர்களின் எச்சரிக்கையை புறந்தள்ளியது மத்திய அரசு. முதல் அலையை வென்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டது. நாடு முழுக்க கோவிட் கேர் சென்டர்களை கலைத்தது.
உச்சபட்சமாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் பெரும்பாலானவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. சொந்த நாட்டு மக்களைக் கைவிட்டது. சீரம், பாரத் பயோடெக் தவிர மற்ற கம்பெனிகளை தடுப்பூசி தயாரிக்க அனுமதிக்கவில்லை. ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் முயற்சிக்கவில்லை. அதற்கான ஜி.எஸ்.டி.யையும் குறைக்கவில்லை.
மாறாக, மாட்டுச் சாணியைப் பூசிக் கொள்ளுங்கள், கோமியத்தைக் குடியுங்கள் என அறிவியலுக்குப் புறம்பாக அறிவுறுத்தினர் சங்கிகள். அதை எதிர்த்து கருத்துக் கூறிய இரண்டு பத்திரிக்கையாளர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
உண்மையில், கொரோனா இரண்டாவது அலையில் மக்கள் சாகவில்லை. ஒன்றிய அரசால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், மோடி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
இவ்வளவு அயோக்கியத் தனங்களையும் செய்த மோடியை விமர்சிக்கவில்லை. மக்கள் ஆயிரக்கணக்கில் செத்துக் கொண்டிருக்கும்போது, மாளிகை கட்டுவது முக்கியமா என கேட்கவில்லை. ஆனால், மாநில அரசுகளை தூற்றுகிறார்கள் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிஸ்டுகள்.
தடுப்பூசி பற்றாக்குறையை மறைக்க திருட்டுத்தனம்:
முன்பு தடுப்பூசியின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வியெழுப்பியபோது அதை சற்றும் மதிக்கவில்லை. மக்களுக்கு விளக்கம் அளித்து தெளிவுபடுத்தவில்லை.
இப்போது தடுப்பூசி கேட்டால், ”நான் தடுப்பூசி எடுத்துக் கொள்ளமாட்டேன். அது மோடியின் தடுப்பூசி, பாஜகவின் தடுப்பூசி என்றீர்கள். இப்போது தடுப்பூசி வேண்டும் என்கிறீர்கள். ஒருநிலையில் இருங்கள். உங்களுக்கு தடுப்பூசி வேண்டுமா? அல்லது வேண்டாமா? உங்கள் மனதை தயார்ப்படுத்துங்கள்” என திமிராக பதிலளிக்கிறார் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இப்போதும் இராஜஸ்தான், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ஒதுக்கும் தடுப்பூசியின் அளவைவிட குறைந்த அளவே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியுள்ளனர்.
கொரோனா அலை பரவி கொத்துக்கொத்தாக மக்கள் சாகும்போதுதான் தடுப்பூசி போடுகிறார்கள். அதுவும் நத்தை வேகத்தில். இதுவும் காடு எரியும்போது மரம் நடுவதுபோலத்தான் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். ஏனெனில், உருமாறிய கொரோனா வைரஸின் தாக்குதலை தடுக்க 2 டோஸ்கூட போதாது. அதையும் அதிகப்படுத்த நேரலாம் என்கிறார்கள்.
இப்போதும் ஒன்றிய அரசு திருந்தவில்லை. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முயலவில்லை. தமிழக அரசு செங்கல்பட்டிலுள்ள HBL நிறுவனத்தை குத்தகைக்கு கேட்டதற்கும் பதிலளிக்கவில்லை. மாறாக, பற்றாக்குறையை மறைக்க குறுக்கு வழிகளைக் கையாள்கிறது. பல்வேறு திருட்டுத்தனங்களை செய்கிறது.
இரண்டு டோஸ்களுக்கு இடையிலான கால இடைவெளியை அதிகரிக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது. அடுத்தகட்டமாக ஒரு டோஸ் தடுப்பூசி போதுமானது என பரிந்துரைக்கப் போவதாக தி வயர் இணையதளம் கூறுகிறது.
அதேசமயம் ஆகஸ்ட் மாதத்திற்குள் தினமும் 1 கோடி தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்கப்படும் என வாயிலேயே வடை சுடுகிறது. ஆனால், அதற்கேற்ற அளவு தடுப்பூசிகள் எங்கிருக்கிறது?
அறிவியலுக்குப் புறம்பாக மக்கள் உயிருடன் விளையாடுகிறது. இந்த பாசிஸ்டுகளுக்கு தக்க பதிலடி தரவேண்டும். நாடளுமன்றம் அதிரும் அளவு அவர்களுக்கு எதிரான மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்!
-ஆதிரா.
#வினைசெய்



தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தின் அடிமை. வரிமட்டும் கட்டவேண்டும். தமிழ்நாடு இந்த அடிமை சங்கிலியை உடைத்தால் மட்டுமே விடிவுகாலம்
ReplyDelete