மனிதநேயமற்ற நீதி என்பது அநீதியே!


இந்திய குடிமக்களும், சிறைத் துறையினரும், காவல்துறையினரும், நீதிபதிகளும், ஆட்சியாளர்களும், மருத்துவர்களும், தாம் உண்மையில் மனிதர்கள்தானா என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது!


ஸ்டான் சாமி - பழங்குடியின மக்களின் பிரச்சினைகளுக்காக பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக போராடிய இவர், 2020ம் ஆண்டு அக்டோபரில் ஊபா எனும் கொடிய சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பார்க்கின்சன் எனும் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட உறிஞ்சு குழாய் டம்ளர்( சிப்பர்) சிறையில் அவருக்கு தரப்படவில்லை. அவரது உறவினர்களும், நண்பர்களும் அனுப்பிய டம்ளர்களையும் சிறைத்துறை அதிகாரிகள் அவரிடம் அளிக்கவில்லை.

தன்னிடம் கைப்பற்றப்பட்ட டம்ளரை தனக்கு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார் ஸ்டான் சுவாமி. அவரது கோரிக்கையை பரிசீலிக்க 20 நாட்கள் அவகாசம் கோரியது என்ஐஏ. அதன் பிறகும் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறப்பு நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. கைதின் போது அவர்களால் டம்ளர் கைப்பற்றப் படவில்லை என்ற கூற்றின் உண்மையை நிரூபிக்க கூறாததோடு சிப்பருக்கான கோரிக்கைக்கு ஆம், இல்லை என பதில் சொல்ல எதற்கு 20 நாட்கள் என்றும் அந்த நீதிபதி என்ஐஏ - விடம் கேள்வி எழுப்பவில்லை. ஒரு நடுக்குவாத நோயாளியின் கைகளில் உறிஞ்சு குழாய் டம்ளர் இருப்பது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது போலும்!

அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவப் பிணை வழங்க கோரியபோது, அதற்கான விதிகள் ஊபா சட்டத்தில் இல்லை என என்ஐஏ வாதிட்டது. நீதிமன்றமும் அதை ஏற்று பிணை மறுத்த விந்தையும் நடந்தது.

இந்தியாவின் இறையாண்மையும், ஒருமைப்பாடும் காப்பாற்றப்படும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இந்த கடுமையான உத்தரவுக்காக இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள நீதித்துறையும் வெட்கித் தலை குனிய வேண்டும். மனித ஆரோக்கியத்துக்கான அடிப்படை தேவையை மறுதலிக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு எந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வழங்குகிறது? அல்லது நீதித்துறை உட்பட ஒவ்வொரு மட்டத்திலும் மனிதநேயத்தின் அனைத்து மதிப்புகளையும் இழந்து நிற்கிறோமா?

இந்த அடிப்படை சந்தேகமானது, அரசியல் அமைப்பு சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் செயல்படுத்த முடியாத அடிப்படைக் கடமைகள் என்பதை விட வலுவானது. எத்தகைய விரிவான விளக்கமும் இந்த சந்தேகத்தை தீர்க்க முடியாது. மிகவும் அவசியமான, தேவையான செயலானது, தேவையற்ற ஆளுமைகளால் பாதிப்புக்குள்ளாகிறது என்பதே உண்மை.

சிறைக்கைதிகளுக்கு அடிப்படை உரிமைகள் வழங்க வேண்டும் என பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டமும் (RPWD - 2016) நடைமுறையில் உள்ளது. ஆனாலும் அவை மீறப்படுகின்றன. விளைவாக ஸ்டான் சுவாமியின் மரணம் நிகழ்ந்துள்ளது. அதையொட்டி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட பத்து எதிர்கட்சிகள் குடியரசு தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஸ்டான் சுவாமியின் மரணத்துக்கு காரணமானவர்களை பொறுப்பேற்க வைப்பதில் அவரது தலையீடு தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க கோரியும், காவலில் இருந்தபோது உரிய சிகிச்சை அளிக்காத அரசை குற்றம் சுமத்தியும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

- Dr. Madabhushi Sridhar

தமிழாக்கம் : குரு

வினைசெய்

செய்தி ஆதாரம் : The Hans India

https://www.thehansindia.com/hans/opinion/news-analysis/justice-minus-humanity-is-injustice-695515

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.