ஊரடங்கு உண்டு! கடனுக்கு மட்டும் அவகாசம் இல்லை!


மதியம் 1.30 மணி. அருகே உள்ள அந்த உணவகத்திற்குள்ளே சாப்பிட அமர்ந்தேன். எப்பொழுதும் உடனே என்ன வேண்டும் என கேட்பவர்கள், இப்பொழுது சில நிமிடங்கள் ஆகியும் யாரும் வந்து கேட்கவில்லை.


கல்லாப்பெட்டி இடத்தில் அமர்ந்திருந்த அம்மாவே, ”என்ன வேண்டும் சார்?” என கேட்டார்.

“சாப்பாடு” என்றேன்.

உள்ளே உரத்த குரலில் சொன்னார். ”சாருக்கு சாப்பாடு கொடுங்க!”

சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது, ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த ஏலச்சீட்டுக்காரர் வந்தார். அவர் கட்டவேண்டிய தொகையை கேட்கிறார். அந்த அம்மா “ஏற்கனவே நான் சொல்லிட்டேன்! ஒரு மாசமா ஊரடங்கு. வியாபாரம் இல்லை! இரண்டு மாஸ்டரில் ஒருவரையும், வேலையாட்கள் நான்கு பேரில் இருவரை நிப்பாட்டிட்டேன். நிலைமை சரியானதும் தர்றேன்!” என்றார்.

அதற்கு அந்த ஏலச்சீட்டுக்காரர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு அம்மா “இதுதான் முடியும்! உங்களால் என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள்” என கோவத்துடன் சொன்னார்.

“அப்படி சொல்லிட்டு போங்கோ! நான் கம்பெனியில் சொல்லிட்டு போறேன்!” என வேகமாக கிளம்பினார்.

வாடிக்கையாளர்கள் தவறாக எண்ணக்கூடாது என்பதற்காகவா, ஆற்றாமையை சொல்வதற்காகாவோ என்னைப் பார்த்து சொன்னார்.

“மூணு சீட்டு போட்டிருக்கேன் சார். ஒரு சீட்டு 500. மூணு சீட்டுக்கு ரூ. 1500 தரவேண்டும். இப்ப ஒண்ணு தர்றேன். மத்த இரண்டு சீட்டு நிலைமைக்கு சரியானபிறகு தருகிறேன் என சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்கள். இதில் ஒரு சீட்டு முடிஞ்சிருச்சி! அந்த பணத்தை கொடுங்கன்னு! கேட்டா, அதில் சிலர் என்னைப் போல கட்டாமல் இருக்கிறார்களாம். ஆகையால் அவர்கள் கட்டிய பிறகு தான் பணம் தருவார்களாம்” என்றார்.

எந்த நிறுவனத்தில் போய் நின்றாலும் வேறு வேறு வார்த்தைகளில் இது தான் நிலைமை. பேரரசர் தன்னுடைய பிரியத்திற்குரிய நண்பர்களான தரகு முதலாளிகளின் நலனை மட்டுமே சிந்திக்கிறார். தீவிரமாய் செயல்படுகிறார். மக்கள் படும் நிலைமையை பற்றி அவர் சிந்திப்பதே இல்லை. தெரிந்தால் தானே சிந்திப்பதற்கு!

வேறு வழியின்றி உச்சநீதி மன்றத்தின் கதவைத் தட்டினால், இதைப் பற்றி ”முதல் அலையின் பொழுதே தெளிவாக தீர்ப்பு வழங்கிவிட்டோம்” என்கிறார்கள். அப்படி என்ன தெளிவான முடிவு எனக் கேட்டால்...

“இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. நாங்கள் தலையிடமாட்டோம்”.
இனி மக்கள் தான் இவர்களைப் பற்றி சிந்திக்கவேண்டும்!

- சாக்ரடீஸ்

Comments

Popular posts from this blog

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.