ஆபிரகாம் பண்டிதரும் விபுலானந்தரும் - ஆசிரியர் வீ. அரசு


இலங்கையின் மட்டகளப்பில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக் கழகத்தின் விபுலானந்தர் நுண்கலை ஆய்வு மையத்தில் செப்.2017  ல் ஆசிரியர் ஆற்றிய உரையை நூல் வடிவில் கொண்டு வந்துள்ளனர்.

 

பல நூற்றாண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழ் இசை மரபின் மகத்துவத்தை மீட்டுருவாக்கம் செய்த இரு பெரும் ஆளுமைகள் குறித்து இச்சிறு நூல் விளக்குகிறது.

 

ஒடுக்கப்பட்ட சாதி இழிவிலிருந்து மீள கிறித்தவத்தில் சேர்ந்த பெற்றோருக்கு மகனாய் பிறந்த ஆபிரகாம் பண்டிதர், ஆசிரியப் பணிக்கு திண்டுக்கல் வருகிறார்.

 

சித்த மருத்துவ பரம்பரை என்பதால் அதில் ஈடுபாடு ஏற்பட்டு மூலிகைகள் தேடி மலைகளில் பயணிக்கையில், கருணாமிருத ரிஷியை சந்திக்கிறார். அவரை தனது குருவாக ஏற்கிறார். பிறகு அங்கிருந்து தஞ்சை பகுதிக்கு குடி பெயர்ந்து, மூலிகைப் பண்ணை ஒன்றை அமைக்கிறார். புதுப்புது மருந்துகள் தயாரித்து விற்றதில் பெரும் செல்வந்தராகிறார். இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த பாக்கியம் என்பவரின் வீணை, பியானோ வாசிப்பில் இனம் புரியா ஈர்ப்பு ஏற்பட்டு அவரை இரண்டாவதாக இந்து முறைப்படி மணந்ததால், கிறித்தவத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

 

இசையின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால், மருத்துவத் தொழிலில் ஈட்டிய பணத்தை எல்லாம் இசைத்துறை வளர்ச்சிக்காக செலவிடுகிறார். 1906 முதல் 1916 வரையிலான காலகட்டத்தில் 13 மாநாடுகளை நடத்தினார். இசைத்துறையில் முக்கிய நபர்களை எல்லாம் அழைத்து வந்து பேச வைத்தார். அவரும் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து தமிழ் சுரங்கள், தாள இசை மரபுகள் குறித்தெல்லாம் விரிவாக பேசினார். இறுதியாக இம்மண்ணின் பூர்வ இசை மரபென்பது பண்டைத் தமிழ் இலக்கியங்களில் உள்ள தமிழ்ப் பண் இசை மரபுதான் என கண்டறிந்தார். மேலும் தெலுங்கு, கன்னட, சமஸ்கிருத மரபுகளில் இருந்த 12, 22 சுரங்கள் என்பதை மறுத்து தமிழிசையில் 24 சுரங்கள் இருந்ததையும் நிறுவினார்.

 

அவரது ஆய்வுகள் அனைத்தையும்   தனது குருவின் பெயரில் "கருணாமிருத சாகரம்" என்ற 1200 பக்கங்கள் கொண்ட நூலாக அச்சிட்டு 1917 ம் ஆண்டு வெளியிட்டு அடுத்த ஆண்டே இயற்கை எய்தினார். இந்த நூலை அச்சிடும் வசதி இங்கு இல்லாததால், லண்டனில் இருந்து அச்சு எந்திரத்தை வாங்கினார். இந்நூல் மூலம் தமிழ் இசையின் வரலாற்றை மீட்டெடுத்த பெருமை பெற்றார். இயற்கையோடு இயைந்ததாய் இருந்த தமிழ் இசை மரபை பொது மக்களுக்கானதாக இல்லாமல், கோயில் இசை மரபாக - ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கானதாக - மாற்றி அமைத்த மோசடியை நவீனத்துவ ஆய்வு முறையின் மூலம் தோலுரித்துக் காட்டினார்.இப்படியாக அவரது கடும் உழைப்பில், பெரும் பொருட் செலவில் உருவாக்கிய அவரது நூலுக்கு தமிழ் உலகம் இன்று வரை உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என தனது ஆதங்கத்தை பதிவு செய்கிறார் ஆசிரியர்.

 

நூலில் பேசப்படும் அடுத்த ஆளுமை விபுலானந்தர்.  19 ஆம் நூற்றாண்டில் இங்கு அறிமுகமான கிறித்தவத்தின் நவீனத்துவம், ( பெண்களுக்கு மரியாதை, உரிமை)  இங்கு உடன்கட்டை ஏறுதலை நியாயப்படுத்திய, கணவன் இறந்தால் மொட்டை போட்டு வீட்டுக்குள் முடங்கச் சொன்ன பிற்போக்கு இந்து சமய மரபை அச்சுறுத்தியது. அதை எதிர்கொள்ள ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தனர். மேலும் நவீனத்துவத்தோடு பாரம்பரியத்தையும் காக்கும் வகையில் உருவானதே இராம கிருஷ்ணர் இயக்கம். அதில் தன்னை இணைத்துக் கொண்ட விபுலானந்தர், மற்ற சாமியார்கள் போல இல்லாமல், ஐரோப்பிய அறிவியல் சார் மரபுகளை தமிழுக்கு கொண்டு வர முனைப்பு காட்டினார்.

 

1901 ல் உருவான மதுரை தமிழ்ச் சங்கம்தான் சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற அரிய பொக்கிஷங்களை கண்டுபிடித்து வழங்கியது. இதை முன்மாதிரியாக வைத்துதான் யாழ்பாணத்தில் தமிழ் பாஷா அபிவிருத்தி சங்கத்தை உருவாக்கினார். சென்னையில் 1857 ல் உருவான பல்கலைக் கழகத்தில் 1927 வரை தமிழ் மொழி இல்லை. இதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.  1921 ல் மதுரை தமிழ்ச் சங்கத்தில் ஷேக்ஸ்பியரை தமிழிசை, தமிழ் நாடக மரபுக்குள் எப்படி கொண்டு வருவது என தீவிரமாக ஆராய்ந்து அவர் நிகழ்த்திய உரையே மதங்க சூளாமணி எனும் நூலாக வெளியிடப்பட்டது. ஷேக்ஸ்பியரின் 9 நாடகங்களை நவீன வடிவில் தமிழுக்கு தந்த பெருமை அவரையே சாரும்.

 

தமிழ் சமூகத்துக்கு அவரது இன்னொரு முக்கிய பங்களிப்பு யாழ் நூல். 1932 முதல் 47 வரையான 15 ஆண்டு கால ஆய்வின் விளைவே இந்நூல். பண்டை காலத்தில் இருந்த யாழ் எனும் இசைக்கருவி சார்ந்த தமிழ் இசை மரபை மீட்டுருவாக்கம் செய்தது யாழ் நூல். ஆக, கர்நாடக சங்கீதம் என சொல்லப்படும் மூலத்தின் முன்வடிவம் தமிழ்ப்பண் மரபுதான் என இவரும் நிறுவுகின்றார்.

 

1929 ஆம் ஆண்டில் தெலுங்கர்களால் மெட்ராஸ் மியூசிக் அகாடமி தொடங்கப் படுகிறது. அங்கு துக்கடா பாட்டென்று இறுதியில் ஓரிரு தமிழ் பாடல் பாடப்படும் அவலத்தை எதிர்த்து நீதிக்கட்சி, திராவிடர் கழகம் போன்றவை தமிழறிஞர்களோடு சேர்ந்து தமிழிசை இயக்கத்தை தொடங்கி  போராட்டம் நடத்தின. அதற்கு அண்ணாமலை அரசரின் ஆதரவும் இருந்தது. அப்போது அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவராக இருந்தவர் விபுலானந்தா. தமிழிசை இயக்கத்தில் இராஜாஜி, கல்கி போன்றோரும் இருந்தனர். ஆனால் தமிழ்ப் பாட்டு பாட வேண்டும். தமிழிசை மரபு ( தமிழில் ராகமோ, இசையோ ) என்றெல்லாம் ஒன்று இல்லை என்பதே அவர்களது கருத்தாக, அதாவது தமிழ்நாட்டு பார்ப்பனர்களின் வாதமாக இருந்தது. ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரம் வெளிவந்து 10 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நிலைதான் நீடித்தது. இப்போது நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நிலைதான் நீடிக்கிறது.

 

ஆக, இரு பெரும் அறிஞர்களும் நவீனத்துவ ஆய்வு முறையில் கர்நாடக இசை மரபென்பது உண்மையில் தமிழ் இசை மரபுதான் என நிரூபித்துள்ளனர். ஏழாம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழ்ப் பண் இசை மரபின் வரலாறு மறைக்கப் பட்டு, இடையில் 14 ஆம் நூற்றாண்டில் அதற்கு கர்நாடக இசை என பெயர் சூட்டப்படுகிறது. தெலுங்கு, கன்னட அரசர்களின் மொழியாக சமஸ்கிருதம் இருந்ததால் இசை, கட்டடக் கலை உட்பட அனைத்தும் அந்த மொழியில் எழுதப்பட்டன. தமிழ் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அவற்றை தமிழில் கொண்டு வந்த இரு பெரும் அறிஞர்களின் அரிய முயற்சிக்கு தமிழ் சமூகத்தில் உரிய அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை. அந்த நவீனத்துவ சிந்தனை மரபின் தொடர்ச்சி ஏன் இல்லை என்ற கேள்விக்கு விடை தேடுவோம் என ஒட்டுமொத்த தமிழ் ஆர்வலர்களையும் அழைக்கிறார் நூல் ஆசிரியர். பேச்சு நடையில் நூல் இருப்பதால் எளிமையாக, அதே சமயம் ஆழ்ந்த வரலாற்றுத் தகவல்களுடன்  உள்ளது. தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டியது அவசியம். வீ.அரசு அவர்களின் எழுத்து மற்றும் பேச்சுப் பணிகள் மேலும் தொடர வாழ்த்துகள்!

 

-          குரு

 


Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.