தோழர்களே,

இந்தியாவில் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரான கார்ப்பரேட் காவி பாசிச அடக்குமுறைகளும், அதன் அரசியல், பொருளாதார, பண்பாட்டு செயல்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த பாசிச மயமாக்கும் சூழலில் அதை எதிர்த்துப் போராடுகின்ற சித்தாந்தமானது உலக அளவிலும், இந்திய அளவிலும் வெல்லற்கரிய கம்யூனிச சித்தாந்தம் மட்டுமே ஆகும். 

1930- களில் இத்தாலியின் முசோலினியும், ஜெர்மனியின் ஹிட்லரும் கொண்டு வந்த பாசிசத்திற்கு எதிராக ஐக்கிய முன்னணி அமைத்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை டிமிட்ரோவ் முன் வைத்தது உலக அளவில் கம்யூனிஸ்டுகள் தங்களின் வழிகாட்டும் கோட்பாடாக செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் அது முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கத்திற்கும், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கும் கொடுத்த வழிகாட்டுதல் ஆகும். அதை அப்படியே பெயர்த்து நமது நாட்டிற்கு பொருத்துவது அறிவியல் ஆய்வுமுறை ஆகாது.

பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் போது இந்தியாவை ஒன்றுபடுத்தி ஆள்வதற்கு பொருத்தமான ஆட்சி வடிவமாக பாராளுமன்ற ஜனநாயக முறை உருவாக்கப்பட்டது.

கீழிருந்து மக்களின் எழுச்சியின் மூலம் காலனி ஆதிக்கத்தை தூக்கி எறிந்து உருவாக்கப்பட்டது அல்ல இந்திய பாராளுமன்றம். முதலாளித்துவ வடிவத்திலான இந்தப் பாராளுமன்றத்தின் மீது தேவைக்கதிகமான மாயை கொண்டு ஐக்கிய முன்னணி அமைக்கும்போது அதை அப்படியே பயன்படுத்த முடியும் என்பது பாமரத்தனமான வாதமாகும்.

அதுபோலவே பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைக்கும்போது கட்சிக்குள் தாராளவாத, சீர்திருத்தவாத போக்குகளும், சந்தர்ப்பவாதமும், சீரழியும் அபாயமும் தோன்றும் என்பதை டிமிட்ரோவ் முன்வைத்துத் உள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் ஐக்கிய முன்னணி தந்திரம் நூலில் கம்யூனிஸ்டுகளின் கடமையைப் பற்றி தோழர் டிமிட்ரோவ் முன்வைத்துள்ளதை வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.

ஆசான்களின் நூல்களை மேற்கோள் காட்டும்போது வரிக்குவரி அப்படியே எழுதி அதற்கு பொழிப்புரை எழுதுவது  அல்லது மேற்கோள்களை தனது வசதிக்கேற்ப வெட்டி சுருக்கி எழுதுவது போன்ற இரண்டுமே பயனற்றது.

கோட்பாடுகளை பருண்மையான சூழலில் பருண்மையாக பயன்படுத்தும் ஆற்றல் பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டுமே உண்டு என்பதையும் பெருமிதத்துடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.


தோழர் ஸ்டாலின் முன்வைத்த வழிகாட்டுதலுடன் இந்த அறிமுக உரையை முடிக்கிறோம்.

" சில பேர் ஒரு சரியான கொள்கை வழியை வகுத்து விட்டால் போதும், எல்லோருடைய கவனத்தையும் கவரும்படி பிரகடனம் செய்து விட்டால் போதும், பொதுவான கருத்துரைகளையும் தீர்மானங்களையும் வரையறுத்து அவற்றை ஏகமனதாக நிறைவேற்றி விட்டால் போதும், வெற்றி தானாகவே வந்து விடும், கிடைத்துவிடும் என்று கருதுகிறார்கள். நிச்சயமாக இது தவறானதாகும். இது ஒரு பெரிய பிரமையாகும். திருத்த முடியாத அதிகாரவர்க்க தோரணை கொண்டவர்கள் தான் அத்தகைய நிலை கொள்வார்கள். கட்சியின் பொதுக் கொள்கையை பற்றிய அருமையான தீர்மானங்களும் பிரகடனங்களும் வெறும் ஆரம்பம் மட்டும் தான் காரணம் அவை வெற்றிக்கான விருப்பத்தை தான் தெரிவிக்கின்றன வெற்றியை தருவதில்லை சரியான கொள்கை உருவாக்கப்பட்ட பிறகு வெற்றிக்கான சரியான வழிகள் சுட்டிக்காட்டப்பட்ட பிறகு வெற்றி கிடைப்பது என்பது அமைப்பு வேலையை பொறுத்தும், கட்சியின் கொள்கை வழியை அமுலாக்குவதற்கான போராட்டத்தை உருவாக்கி அமைப்பதை பொறுத்தும், சரியான ஊழியர்களை தேர்ந்தெடுப்பதை பொறுத்தும், தலைமை அமைப்புகள் முடிவுகள் நிறைவேற்றுவதைச் சரியாக கண்காணிப்பதை பொறுத்துமே இருக்கிறது. இவற்றில் குறைபாடுகள் இருந்தால், சரியாக இல்லாமல் இருந்தால் சரியான கொள்கை வழியில் தீர்மானங்களும், முடிவுகளும், பழுதடையும் அபாயத்தை தாங்கி நிற்கும். இன்னும் அதிகமாக சொல்லப்போனால் சரியான கொள்கை வகுக்கப்பட்ட பிறகு எல்லாமே அமைப்பு வேலையைப் பொறுத்தே இருக்கிறது. அரசியல் கொள்கை உட்பட அது அமுலாக்க படுவதும் அதன் வெற்றியும், தோல்வியும் அமைப்பு வேலையைப் பொறுத்தே இருக்கிறது" தோழர். ஸ்டாலின்.


தோழமையுடன்


ஆசிரியர் குழு


வினை செய்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.