புதிய ஜனநாயகம். (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) வெளிவந்துவிட்டது.

அன்பார்ந்த வாசகர்களே புரட்சிகர, ஜனநாயக சக்திகளே!

பிப்ரவரி 2020 உடன் நின்றுபோன எமது புதிய ஜனநாயகம் இதழ் மே மாதம் 2022 முதல் முறையாக வெளிவருகிறது என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதன்படி தற்போது அச்சு இதழாக புதிய ஜனநாயகம் மே மாத இதழ் வெளிவந்துள்ளது.

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் மார்க்சிய-லெனினிய அரசியலை கொண்டு சென்று தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி செயல்பட்ட எமது அரசியல் வெகுசன பத்திரிக்கை, அதல் அரசியல் தலைமை குழுவின் தவறுகளினால் தடைபட்டு நின்று இருந்தது.

தற்போதைய அரசியல் சூழலில் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியலை கொண்டு செல்வதற்கும் அதன் அடிப்படையில் பரந்துபட்ட மக்களை புரட்சிகர அமைப்பின் கீழ் அணி திரட்டுவதற்கும் புதிய ஜனநாயகம் இதழ் தொடர்ந்து பணியாற்றும் என்பதை உறுதி அளிக்கிறோம்.

கார்ப்பரேட்-காவி பாசிசம் ஏறித் தாக்கி வரும் இன்றைய சூழலில் ஒட்டு மொத்தமாக நாட்டின் பிரதான எதிரியாக ஆர் எஸ் எஸ்-பாஜக செயல்படுகிறது என்பதை முன் வைக்கிறோம்.

90-களில் நமது நாட்டின் மீது திணிக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி நாட்டை மறுகாலனியாக்கும் திசையில் 100 கால் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டிருக்கிறது ஆர் எஸ் எஸ்-பாஜக.

'வளர்ச்சி', 'வல்லரசு' என்ற கவர்ச்சிவாத முழக்கங்களுடன், 'தேசபக்தி' என்ற பெயரில் தேசிய வெறியூட்டும் முழக்கங்களையும் முன்வைத்து தனது கார்ப்பரேட் சேவைக்கு பொருத்தமான காவி பாசிசத்தை மக்களின் மீது தாக்குதலாக தொடுத்து வருகிறது.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆர்எஸ்எஸ் ஆதரவு பிரிவான அம்பானி, அதானி, அனில் அகர்வால் உள்ளிட்ட குஜராத்தை மையமாக கொண்டு இயங்கும் பார்ப்பன, பனியா கும்பலின் ஆதிக்கத்திற்கு எதிராக மற்றொரு பிரிவு தரகு முதலாளிகள் ஒன்றிணைவது தவிர்க்க முடியாது. ஆளும் வர்க்கங்களின் இடையில் ஏற்பட்டுள்ள இந்த முரணை சரியாக அவதானிப்பதும், அதற்கு எதிராக போராடுவதும்தான் சரியான அரசியல் நிலையாகும்.

இத்தகைய சூழலில் கார்ப்பரேட் முதலாளிகளை ஆதரிக்கின்ற திமுக உள்ளிட்ட கட்சிகளை விமர்சனத்துடன் கூடிய ஐக்கியம் என்ற முறையில் அணுக வேண்டியுள்ளது. பார்ப்பன எதிர்ப்பு மரபில் நின்று போராடுகின்ற திராவிட இயக்கத்தை ஒழித்துக் கட்டுவது என்ற நோக்கத்தில் செயல்படும் ஆர் எஸ் எஸ் தொடர்ந்து தமிழகத்தை குறிவைத்து பல்வேறு அரசியல், பொருளாதார, பண்பாட்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது. தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் கட்சிகளில் தனக்கு எதிர்ப்பாளரான திமுகவின் மீது பாரதிய ஜனதா கட்சி முன்வைக்கும் விமர்சனங்களும், எமது புதிய ஜனநாயகம் இதழ் முன்வைக்கும் விமர்சனங்களும் ஒன்றாக இருக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஆனால் கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக எமது இதழின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் திமுகவை பாஜக அண்ணாமலை பாணியில் விமர்சித்து புரட்சிகர அமைப்பின் தொலைநோக்குத் திட்டங்களை நாசமாக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய 'அதி தீவிரவாதிகளை' இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும் என்று அன்புடன் கோருகிறோம்.

கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்தி விட்டு ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதை இடைக்கால திட்டமாகவும், புதிய ஜனநாயகப் புரட்சி மற்றும் சோசலிசத்தை நோக்கிய பாதையில் முன்னேறுவதற்கும் தொடர்ந்து முன்னணி செயல் வீரராக புதிய ஜனநாயகம் இதழ் பாடுபடும் என்பதையும் உறுதி அளிக்கிறோம்.

தங்கள் பகுதியில் உள்ள முகவர்கள் மூலமாகவும் ஜிமெயில் மற்றும் தபால் மூலமாகவும் எமது இதழை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் அன்றாட நிகழ்ச்சிகள் குறித்து புதிய ஜனநாயகம் இதழின் அரசியலை வினை செய் வலைபக்கத்தில்(blogspot) பார்க்கும்படி தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்,                                  ஆசிரியர் குழு,                                            புதிய ஜனநாயகம்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.