உளவுத் துறையாலும், உட்கட்சி பூசல்களாலும் சிதைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சி. பாகம் - 2


 காலனிய நாடுகளிலும், முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவம் போன்ற எந்த நாடுகளாக இருந்தாலும் அந்த நாட்டில் ஆட்சி புரிகின்ற அரசு கட்டமைப்பு பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என பிரச்சாரம் செய்து மக்களை புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குகின்ற செயல்திட்டத்தை முன்வைத்து போராடுவது கம்யூனிச இயக்கங்கள் மட்டுமே.

எனவே, கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் அந்த நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசின் கூலிப்படைகளான போலீஸ், உளவுத்துறை மற்றும் இராணுவத்தினரால் எப்போதும் வேட்டையாடப்படுகின்ற கட்சியாகவே உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஐந்தாம் படைகளை உருவாக்கி முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களை ஆள்காட்டி வேலை செய்கின்ற 'திருப்பணிக்கு' பொருத்தமானவர்களை பிடிப்பதற்கு உளவுத்துறை எப்போதும் முன்னுரிமை கொடுக்கிறது.

அது சாத்தியம் இல்லாத இடங்களில் தானே நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களை போல உள்ளே நுழைந்து படிப்படியாக கட்சியின் செயல்திட்டங்களை கண்டுபிடிப்பது மட்டுமின்றி, குறிப்பாக அதை முன்வைக்கின்ற நபர்கள், அவர்களின் பொறுப்புகள், அவர்கள் வாழும் இடங்கள் ஆகியவற்றை உளவறிந்து ரகசிய கொலைக் குழுக்களிடம் ஒப்படைக்கின்றனர்.

இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி நரவேட்டையாடப்படுகிறது.

“ஆரிய ரத்தமே ஆள பிறந்தது மற்ற இனங்கள் அனைத்தும் அடிமைகளாக வாழ பணிக்கப்பட்டனர்” என்ற இனவெறி கோட்பாட்டை முன்வைத்து உலகை ஒரு குடையின் கீழ் ஆள்வதற்கு எத்தனித்த ஹிட்லர் நடத்திய கொடூரமான ஆக்கிரமிப்புப் போர் மற்றும் இன அழிப்பு யுத்தங்களில் ஏறக்குறைய 5 கோடி மக்கள் பலியாகினர்.

அந்த பாசிச சர்வாதிகாரி ஆட்சியை வீழ்த்துவதற்கும் உலகை பாசிச அபாயத்திலிருந்து பாதுகாப்பதற்கும் 2 கோடி ரஷ்யர்கள் தனது இன்னுயிரை தியாகம் செய்ததன் விளைவாகத்தான் உலகம் அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் ஜனநாயக சுதந்திரக்காற்றை ஓரளவிற்கு சுவாசித்தது.

இத்தகைய பாசிஸ்டுகள் மற்றும் பாசிசக் கட்சி ஏகாதிபத்தியத்தின் தோல்வியிலிருந்து பிறக்கிறது. சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகம், அரைகுறை இறையாண்மை போன்றவை அனைத்தும் பாசிசத்தின் எதிரிகள்.

எனவே, பாசிசத்திற்கு எதிராக போராடுகின்ற கட்சிகளில் முன்னணிப் படையாக நின்று செயல்படுகின்ற கம்யூனிஸ்ட் கட்சி பாசிச கொலை குழுக்களின் தாக்குதல்களுக்கும் அடக்குமுறைகளும் இலக்காகிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் உள்ள ஐந்தாம் படைகள் தனது வர்க்க வாழ்க்கை மற்றும் எதிரிகளுடன் சமரசமாக செல்கின்ற சித்தாந்த அடிப்படைகள் ஆகியவற்றை மறைத்துக்கொண்டு இத்தகைய பாசிச கொடுங்கோலர்களுக்கு சாதகமாக கட்சிகளை பிளவு படுத்துவது, அதில் உள்ள முன்னணி தோழர்களை ஆள்காட்டி வேலை செய்து காட்டி கொடுப்பது போன்ற சதித் தனங்களிலும், துரோகங்களிலும் ஈடுபடுகின்றனர்.

ஒரு காலத்தில் தியாகத்தால் வளர்ந்த தோழர்கள் துரோகத்தால் வீழ்ந்து சொந்த அணிகளால் வசைபாடப் பாடுவதும் அல்லது எதிரிகளின் கொலைக்கரங்களில் சிக்கி அழித்து ஒழிக்கப்படுவதும் உலக வரலாற்றில் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது.

செக் நாட்டில் மத்திய கமிட்டியின் ரகசியங்கள் அனைத்தையும் அறிந்திருந்த மூன்று பேரில் இருவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட போது, அவர்களைப் பற்றிய உண்மைகளை உளவுத் துறையின் தலைவர் நேரடியாக விசாரித்தபோது, இந்த உண்மைகளை வெளியில் சொன்ன காரேக் ஒரு துரோகி என்று சக கமிட்டி தோழரை அடையாளப்படுத்தினார் ஜூலியஸ் பூசிக்.

அதுபோல தன்னுடன் பணியாற்றிய தோழர்களை சித்தாந்த ரீதியில் சில வேறுபாடு ஏற்பட்டாலும் அல்லது அமைப்பு முறைகளில் சில தவறுகள் செய்தாலும் அவர்களைக் காட்டிக் கொடுக்க துணிந்து போலீஸ் ஏஜெண்டுகளாக செயல்படும் ஐந்தாம் படைகள் காலம்தோறும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியும் இத்தகைய துரோகிகளை எதிர்கொண்டு முறியடித்துத்தான் மக்கள் மத்தியில் தொடர்ந்து வேலை செய்து வருகிறது.

• சீராளன்

தொடரும்...


Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.