பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்


பாட்டாளி வர்க்க கட்சியின் செயல்பாட்டிற்கு போர்த்தந்திரங்களும் செயல் தந்திரங்களும் முக்கியமானது.

புரட்சிக்கு தலைமை தாங்கும் அறிவியல் பூர்வமான கலை போர்த் தந்திரம் மற்றும் செயல் தந்திரம் பற்றிய செயல்பாடுதான் என்கிறது மார்க்சியம்.

வர்க்கப்போராட்டம் என்பது வெறும் பொருளாதார வகைப்பட்ட போராட்டங்கள் மட்டுமல்ல.

இந்தியாவில் கம்யூனிசத்தின் பெயரால் செயல்படும் பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்கள் வர்க்கப் போராட்டம் என்று ஆசான்கள் சொல்வதை வெறும் பொருளாதாரவாத போராட்டமாக சுருக்கி புரிந்து கொள்வதும், பரந்துபட்ட மக்களை அரசியல்படுத்தும் செயல்தந்திர கடமையை புறக்கணிப்பதும் பொதுபோக்காவே உள்ளது. 

அராஜகவாதிகள், நவீன அராஜகவாதிகள் முன்வைக்கும்இவற்றை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டிய நிலையில்தான் இந்தியாவில் மார்க்சிய லெனினிய இயக்கம் உள்ளது.

அதற்கு மார்க்ஸ் எங்கல்ஸ் உள்ளிட்ட ஆசான்களின் நூல்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது மாரிஸ்கன் போர்த்தின் இந்த நூல்.

பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

மார்க்சு: சர்வதேச தொழிலாளிகள் கழகத்திற்காற்றிய தொடக்க உரை

இப்பேச்சு மார்க்சு 1864-ல் முதலாம் அகிலத்தை உறுதிப்படுத்த தெரிவு செய்த பொதுத்திட்டத்தை விளக்குவது ஆகும். முதலாளி வர்க்கத்தின் அதிகரிக்கும் செல்வச் செழிப்பின் பொருள் பாட்டாளி வர்க்கத்தின் அதிகரித்த துயரம் என்பதை மார்க்சு வலியுறுத்துகிறார்.

முதலாளித்துவத்தை முழுமையாகத் தோற்கடிக்க அரசியல் போராட்டத்தால் மட்டுமே முடியும். தொழிலாளிகள் “வெற்றியின் ஒரு கூறான பெருந்திரளான எண்ணிக்கையைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை ஒன்றுபட்டதாக அறிவால் தலைமை தாங்கப்படுவதாக இருந்தால் மட்டும் வெற்றியடைய முடியும்” என்று மார்க்சு கூறுகிறார்.ஒவ்வொரு தேசத்திலும், ஒட்டுமொத்த உலகிலும் பாட்டாளி ஒன்றுபட வேண்டும், அப்பொழுதுதான் உழைப்பின் விடுதலை சாத்தியம். அவர்களின் வலிமை முழுதும் முதலாளித்துவ அரசுகளின் கொள்ளையிடுகிற அந்நியக் கொள்கைகளுக்கும் போர்வெறிக்கும் எதிராகச் செலுத்தப்பட வேண்டும்.

சர்வதேச உழைப்பாளிகள் கழகத்திற்காக மார்க்சு வகுத்த பொது விதிகளில் தொழிலாளி வர்க்கக் கட்சி விதிகள் உள்ளடக்கி உள்ளன.

(i) தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலை அதன் வேலையாகவே இருக்க வேண்டும்.

(ii) முதலாளித்துவத்திடமிருந்து பாட்டாளிகளை விடுவிப்பதை மட்டுமே அனைத்து அரசியல் இயக்கங்களும் தங்களது இறுதி முடிவாகக் கொள்ள வேண்டும்.

இதைச் சாதிக்க உலகப் பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட வேண்டும்.

பாட்டாளி வர்க்கம் தானொரு வர்க்கமாகச் செயல்பட பழைய கட்சிகளுக்கெதிராக ஒரு தனித்தன்மையுடைய அரசியல் கட்சியைக் கட்டியமைத்தால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட கட்சி சோசலிச புரட்சிக்கும், அனைத்து வர்க்கங்களையும் ஒழிக்கவும் இன்றியமையாத தேவையான கருவி.

பொருளாதாரப் போராட்டங்கள் வாயிலாகச் சாதித்த தொழிலாளி வர்க்க ஒற்றுமையை நெம்புகோலாகப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை எதிர்த்துப் போராடவும் அரசியல் அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றவும் வேண்டும்.

மார்க்சின் தொடக்க உரையும் சர்வதேச உழைப்பாளர் கழகத்தின் பொதுவிதிகளும் பல்வேறு பாட்டாளி வர்க்க இயக்கங்களின் ஒன்றிணைப்புகளின் அடிப்படைகளாய் விளங்கின. இக்கழகத்தின் தொடக்கம் பல அமைப்புகளால், சட்டவிரோதப் புரட்சிகரக் குழுக்கள் தொடக்கம் ஏற்கனவே “மதிப்புக்குரியனவாய்” இருந்த பிரிட்டன் தொழிற்சங்கங்கள் வரை ஆதரிக்கப்பட்டது. இக்கழகத்தில் அடைந்த ஒற்றுமையையும் பொதுத் திட்டத்தையும் பயன்படுத்தி முழுப் பாட்டாளி வர்க்கத்தையும் ஒரு அரசியல் படையாக ஒன்றிணைக்கும் அடிப்படைகளை மார்க்சு அமைக்க முயன்றார்.

எங்கெல்சு – அதிகாரத்துவம் பற்றி

இச்சிறு பிரசுரம் அராஜகவாதிகளுக்கெதிராக 1874-இல் இத்தாலியப் பத்திரிகை ஒன்றில் வந்தது. இது மத்தியப்படுத்தப்பட்ட ஒழுங்கான தொழிலாளி வர்க்க அரசுக்கு இட்டுச் செல்லும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் அவசியத்தை உணர்த்தியது.

இக்கட்டுரையோடு அராஜகவாதிகளுக்கெதிரான போராட்டம் பற்றி, மார்க்சு – எங்கெல்சு எழுதிய கடிதங்களைப் படிக்கலாம். இவை மார்க்சு – எங்கெல்சு தேர்வு நூல்களின் இரண்டாம் தொகுதி மாஸ்கோ பதிப்பில் (Vol. II) உள்ளன. இக்கடிதங்கள் மார்க்சு – போல்டேவுக்கு 1871-ல் எழுதியது. எங்கெல்சு குனோவுக்கு 1872-இல் எழுதியது.

எங்கெல்சு: மார்க்சும் நியுரெனிஷ் கெஸட்டும்

இந்தப் பிரசுரம் 1884-இல் எழுதப்பட்டது. எவ்வாறு தொழிலாளி வர்க்கப் பத்திரிகை புரட்சிகர காலகட்டத்தில் நடத்தப்பட வேண்டும் என்று விளக்குகிறது. மார்க்சு 1848-49-இல் ஆசிரியராக இருந்து வந்த “நியூ ரெனீஷ் கெஸட்” நாளிதழ் அனுபவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்தப் பத்திரிகை, மார்க்சு ஒரு பத்திரிகையின் அவசியத்தை உணர்ந்ததால் தொடங்கப்பட்டது. அதன் பதாகை ஜனநாயகத்தினுடையது. அது சமகாலத்திய ஜனநாயகத்துக்கான புரட்சிகரப் போராட்ட இயக்கத்துக்கான தலைமை இயக்கத்தைச் சாதகமான உயர்ந்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும், அதற்கு மேல் நகர்த்திச் செல்லவும் விழைந்தது. இந்தக் கொள்ளைக்கு மாற்று என்ன இருக்க முடியும்? எங்கெல்சு சொன்னார் – அது “செயலில் இறங்கியுள்ள” மிகப்பெரிய கட்சியின் மிகப் பெரிய பத்திரிகையாக இருக்காது; “குறுங்குழு ஒன்றின் சிறிய பிராந்திய பத்திரிகையாகவே” அமையும்.

மார்க்சு – எங்கெல்சு சுற்றறிக்கைக் கடிதம்

இக்கடிதம் 1879-இல் மார்க்சு – எங்கெல்சால் ஜெர்மன் சமூக ஜனநாயகவாதக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களுக்கு எழுதப்பட்டது; பாட்டாளி வர்க்கத்தை வர்க்க சமரசத்திற்கு இட்டுச் செல்லும் குட்டி முதலாளித்துவப் பிரிவுகளுக்கெதிரான கண்டனமாக எழுதப்பட்டது.கட்சியின் மூன்று முக்கியத் தலைவர்கள் (மார்க்சு – எங்கெல்சு இவர்களை “ஜூரிச்சின் மூன்று சோதகர்கள்” (Three Censors of Zurich) என்று அழைத்தனர்) ஒருதலைப்பட்சமான ”பாட்டாளிகளின் கட்சிக்கு”ப் பதிலாக “அனைத்துத் தரப்புக் கட்சியாக” மாற்றப்பட வேண்டுமென்றும், “உடைமை வர்க்கத்தின் கற்றறிந்த பிரதிநிதிகள் கட்சித் தலைமையில் பங்கேற்க வேண்டுமென்றும், பார்லிமெண்ட் பிரதிநிதிகளாக விளங்க வேண்டும்” என்றும் கூறி வந்தனர். மேலும் முதலாளிகளைப் பயமுறுத்துவதோ எதிரிடையாகக் கொண்டு மிகைப்படுத்தப்பட்ட தாக்குதலோ கூடாது என்றும், அவர்களைப் போராடாது “வென்றெடுக்க வேண்டும்” என்றும் கூறினர்.

மார்க்சும் எங்கெல்சும் இத்திட்டத்தை மொத்தமாக, குட்டி முதலாளித்துவ பிரதிநிதிகள் பாட்டாளி வர்க்க இயக்கத்தினுள் புகுந்து கொண்டு முன் வைப்பதாகக் கூறி நிராகரித்தனர். வர்க்கப் போராட்டத்தை நிராகரிக்கும் எவரோடும் ஒரே கட்சியில் இணைந்து செயல்பட முடியாது என்று உறுதியோடு உரைத்தனர். முதலாம் அகிலத்தின் பழைய போர் முழக்கத்தைச் சார்ந்தே இயங்க வேண்டுமென்றனர். “தொழிலாளி வர்க்க விடுதலையே அதன் வேலையாகவும் இருக்க வேண்டும்” என்ற முழக்கமே சரியானது என்றனர். மனம் மாறி வருகின்ற முதலாளித்துவவாதிகளைக் கட்சி வரவேற்கிறது என்றபோதும் அது அவர்கள் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தை முழு மனதோடு ஏற்க வேண்டும்; தங்கள் குட்டி முதலாளித்துவக் கருத்துக்களை உள்ளே கொண்டு வரக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் மட்டுமே.

எங்கெல்சு: “லேபர் ஸ்டாண்டர்ட்” இதழ் கட்டுரைகள்

1881-இல் எங்கெல்சு, லண்டன் வர்த்தகக் கவுன்சிலின் ‘லேபர் ஸ்டாண்டர்ட்’ இதழுக்கு எழுதிய 10 சிறு கட்டுரைகள் பின்னால் “பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கம்” என்ற பெயரில் வெளிவந்தன.

இக்கட்டுரையில் அவர் தொழிலாளி வர்க்கத்தின் கடமை தனது நிலைமையைத் தக்க வைத்துக் கொள்வதோ முதலாளித்துவத்தின் கீழ் சீர்திருத்தங்கள் கோருவதோ அல்ல; மாறாக, அதிகாரத்துக்குப் போராடுவதும், முதலாளித்துவத்தை முடிவுக்கு கொண்டு வருவதும் ஆகும் என்றார். மேலும் அவர் பிரிட்டனின் தனித்த சுதந்திரமான பாட்டாளி வர்க்கக் கட்சி ஒன்றை இங்கிலாந்தில் தொடங்க வேண்டியதின் அவசியத்தையும் அதற்கு தொழிற்சங்கங்கள் தங்களது அமைப்புச் சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

எங்கெல்சு: “ஜெர்மனியில் விவசாயப் போர்” என்ற நூலின் முன்னுரைக் குறிப்பு

இந்த குறிப்பு 1874-இல் எழுதப்பட்டதும் மிக முக்கியமானதும் ஆகும். ஏனெனில்,

(i) இது தொழிலாளி வர்க்கம் பிற வர்க்கங்களால் நகர்ப்புற குட்டிமுதலாளிகள், லும்பன் பாட்டாளிகள் (உதிரிப் பாட்டாளிகள்) சிறு விவசாயிகள், கூலி விவசாயிகள் மீது கடைப்பிடிக்க வேண்டிய போக்கை, நடைமுறையை விவாதிக்கிறது.

(ii) ஜெர்மன் தொழிலாளி வர்க்கத்திற்கு வழங்கிய அறிவுரையில் எங்கெல்சு தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசக் கடமைகளை வரையறுக்கிறார். அதில் அவசியமானவைகளாக

அ. பழைய உலகப் பார்வையிலிருந்து விடுபட்ட தெளிவான தத்துவப் பார்வை, சோசலிசம் ஒரு விஞ்ஞானமாகி விட்டதால் அது பயிலப்பட வேண்டும்.

ஆ. அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளை உறுதிப்படுத்த வேண்டும்.

இ. நாடாளுமன்றத்தின் உள்ளும் வெளியிலும் போராட்டத்தை நடத்த வேண்டும்.

ஈ. சர்வதேச எழுச்சியுணர்வைப் பாதுகாக்க வேண்டும்.

எங்கெல்சு: “பிரான்சிலும் ஜெர்மனியிலும் விவசாயப் பிரச்சினை”

1894-இல் எழுதப்பட்ட இக்கட்டுரை விரிவாக தொழிலாளி வர்க்கத்திற்கும் விவசாய வர்க்கத்திற்கும் இடையிலான உறவையும் இரண்டிற்குமிடையிலான கூட்டணியின் அவசியத்தையும் விளக்கி நிரூபிக்கிறார்.எங்கெல்சு முதலாளித்துவத்தின் வளர்ச்சி சிறு விவசாய உற்பத்தியின் அழிவை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாதது என்று நிரூபிக்கிறார். இருந்தபோதும் இந்த விவசாய வர்க்கம் மீதான வெறுப்பு எதிர் புரட்சிக்கே துணை செய்யும். அரசியல் அதிகாரத்தை வெல்ல பாட்டாளி வர்க்கம் “முதலில் கிராமப் புறத்துக்குச் சென்று அங்கே ஒரு சக்தியாக கட்டாயம் மாற வேண்டும்”. பரிதாபத்துக்குரிய விவசாயிகளை, பொய்யான பாதுகாவலர்கள் கையில் விட்டுக் கொடுத்து, ஆலைத் தொழிலாளர்களின் எதிரிகளாய் அவர்கள் மாறிப் போகும்படி தொழிலாளி வர்க்கம் விட்டுவிட முடியாது என்கிறார் எங்கெல்சு.எங்கெல்சு பாட்டாளி வர்க்கம் தான் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தருவதன் மூலம் விவசாயிகளை வென்றெடுக்க முயலவே கூடாது என்று வலியுறுத்துகிறார். சிறு விவசாயிகளின் உடைமைகளைப் பாதுகாக்கிறோம் என்று வாக்குறுதி அளித்த பிரெஞ்சுக் கட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார் எங்கெல்சு. அத்தகைய வாக்குறுதி சோசலிச லட்சியங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, நிறைவேற்ற முடியாததுமாகும். அழிந்துபோகும் சிறு உடைமையைப் பாதுகாப்பது முடியாத செயல் என்கிறார்.

இதில் முக்கியமான விசயம் விவசாயிகளுக்கு தங்கள் வீடுகளை நிலங்களைப் பாதுகாப்பது அவற்றை கூட்டுடமைகளாய், கூட்டாக இயக்கப்படுவனவாய் மாற்றினால் மட்டுமே சாத்தியம் என்பதை விளக்குவதுதான். அதே சமயம் பாட்டாளி வர்க்கம் இதை வலுக்கட்டாயமாக செய்ய முயலவே கூடாது என்கிறார்.

விவசாய வர்க்கத்தை பல்வேறு பிரிவுகளாகப் பகுப்பதை எங்கெல்சு மிக முக்கியமானது என்கிறார். சிறு விவசாயிகள் பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கிய நண்பர்கள்; அதே வேளையில் நடுத்தர பெரிய விவசாயிகளை வென்றெடுக்க அல்லது சமப்படுத்த முடியும். பெரும் பண்ணைகளைப் பொறுத்தவரை பாட்டாளி வர்க்கத்தின் கொள்கை நிலப்பிரபுக்களை உடமை நீக்கம் செய்வது (அவசியமானால் விலைக்கு வாங்குவது) நிலத்தை கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு கூட்டு உழைப்புக்குப் பகிர்ந்தளிப்பதுதான் என்கிறார்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.