அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின். பாகம் 2

 


அறிவாளிகளின் விஷயமோ முற்றிலும் வேறானது. தனது சக்தியை வைத்துப் போரிடாமல் வாதங்களை வைத்துப் போரிடுகிறார். அவரது ஆயுதங்களோ அவரது சொந்த அறிவு, சொந்ததிறமை, சொந்த நம்பிக்கைகள் மட்டுமே; எந்த ஒரு பதவியையும் கூட அவர் தனது சொந்தப் பண்புகளால் மட்டுமே அடையமுடியும். எந்த ஒரு வெற்றிகரமான நடவடிக்கைக்கும் தனது தனித்துவத்தைக் கட்டவிழ்த்து விடுவதே அவருக்கு முக்கிய நிபந்தனையாகப்படுகிறது. முழுமைக்குத் தம்மைக் கீழ்ப்படுத்தி ஒரு பகுதியாக விளங்குவதற்கு அவர் மிகுந்த சிரமத்தின் பேரில்தான் ஒப்புக் கொள்கிறார். அதுவும் கூட அவசியத்தினால் ஏற்றுக் கொள்கிறாரே தவிர, ஆர்வத்தினால் அல்ல. ஒழுங்கு கட்டுப்பாடு மக்கள் திரளுக்கு மட்டுமே அவசியம் என்று அவர் அங்கீகரிக்கிறார்; ஆனால் தேர்ந்த உள்ளங்களுக்கல்ல. தம்மை பின்னதாகச் சொல்லப்பட்டவர்களோடு சேர்த்துக் கொள்கிறார்.

”நீட்சேயின் தத்துவமே அறிவாளியின் உண்மைத் தத்துவமாகும். அதி மனிதன் கோட்பாட்டையும் சேர்த்து அத்தத்துவத்தில் தனிமனித ஆளுமையை நிறைவு செய்வதே எல்லாம்; இப்படிப்பட்ட தனித்துவத்தை பெரியதொரு சமூக நோக்கத்திற்குக் கீழ்ப்படுத்துவது இழிவானது, கேவலமானது. இத்தத்துவமே அறிவாளியை பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்க முடியாதபடி ஆக்கி விடுகிறது.

”நீட்சேவுக்கு அடுத்து, அறிவுத் துறையினரின் உணர்வுகளுக்கு விடையளிக்கத்தக்க ஓர் தத்துவத்தை எடுத்து விளக்கியவர் அநேகமாக இப்சனாகத்தான் இருக்க வேண்டும். அவரது ‘மக்களின் எதிரி’ என்ற நாடகத்தில் வரும் டாக்டர் ஸ்டாக்மான், பலர் சொல்வது போல, சோசலிஸ்டு அல்ல; பாட்டாளி வர்க்கத்தோடு நிச்சயம் மோதலுக்கு வரப்போகும் அறிவாளி வகையைச் சேர்ந்தவரே. பாட்டாளி வர்க்க இயக்கத்தோடு மட்டுமல்ல, பொதுவில் வேறு எந்த வகையான மக்கள் இயக்கமாக இருந்தாலும் அதற்குள் அவர் வேலை செய்ய ஆரம்பித்ததுமே அதற்கெதிராக மோதத் தொடங்கி விடுவார்.

பாட்டாளி வர்க்க இயக்கம், ஏன் ஒவ்வொரு ஜனநாயக இயக்கத்தின் அடித்தளமாக விளங்குவது, ஒருவர் தனது சக தோழர்களின் பெரும்பான்மைக்கு மதிப்புக் கொடுப்பதாகும். ஆனால் ஸ்டாக்மன் வகையைச் சேர்ந்த அறிவாளியோ ‘திட்டவட்டமான பெரும்பான்மை’யை தூக்கி எறியப்பட வேண்டிய ஓர் அரக்கனாகவே கருதுகிறார்….

”பாட்டாளி வர்க்க உணர்வுகளோடு ஊறிப்போன ஓர் அறிவாளிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஜெர்மானிய லீப்னெக்ட் ஆவார். இவர் சிறந்த எழுத்தாளராக இருந்தும் அறிவாளியின் குறிப்பான தனிப்பட்ட குணாம்சத்தை இழந்துவிட்டார்; அவர் பாட்டாளிகளின் படை அணிகளோடு மகிழ்ச்சியோடு நடை போட்டவர்; தான் நியமிக்கப்பட்ட எந்த ஒரு பதவியிலும் அவர் பணிபுரிந்தார். நமது மாபெரும் லட்சியத்திற்கு முழுமனத்தோடு தன்னைக் கீழ்ப்படுத்தினார். இப்சனிலும் நீட்சேவிலும் பயிற்சி பெற்ற அறிவாளிகள் தமது தனித்தன்மை ஒடுக்கப்படுகிறது என்று தீனமான குரல் ஊளையிட்டதை அவர் வெறுத்து ஒதுக்கினார்.

சிறுபான்மையில் தங்களைக் காண நேர்ந்த அறிவாளிகள் இப்படிப்பட்ட பண்புகளை வெளியிடக்கூடும். லீப்னெக்ட், சோசலிச இயக்கத்திற்குத் தேவையான அறிவாளி வகையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். காரல் மார்க்சையும் கூட இங்கே நான் குறிப்பிடலாம். அவர் தன்னை முன்னுக்குத் தள்ளிக் கொண்டதேயில்லை; சர்வதேச அகிலத்தில் பலமுறை சிறுபான்மையாக இருந்த போதும் அவர் கட்சிக் கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டது மிக மிக அசாதாரணமானது.

(மூலம்: ஆங்கிலம். ஓரடி முன்னே ஈரடி பின்னே – லெனின்: தொகுப்பு நூல்கள்  தொகுதி 7, பக்கம் 322 – 4)

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.