சாவர்க்கர்: முகத்திரைக்குபின்னால் !


நன்றி மார்க்சிஸ்ட் ரீடர்

பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள, முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர் என்ற நூலின் அறிமுக உரை இங்கே தரப்படுகிறது )

“வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாகத் தூக்கி நிறுத்தப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் அவருடைய படத்திற்கு எதிரே வைக்கப்பட்டிருக்கிறார். காந்தியைக் கொலை செய்ததில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு குறித்து, அன்றைய தினம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கூறியவற்றை அறிந்துகொள்வது இப்போது பொருத்தமாக இருக்கும்.

அவர், 1948 பிப்ரவரி 27 அன்று நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்து மகா சபாவின்; சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய வெறித்தனமான பிரிவு, சதித்திட்டம் தீட்டி, இக்கொடுஞ்செயல் நடைபெறுவதைப் பார்த்தது.”

சாவர்க்கரின் உருவப்படம் காந்தியின் படத்திற்கு அருகே வைக்கப்பட்டிருப்பது இந்துத்துவாவை இன்றையதினம் பின்பற்றுவோரால் சாவர்க்கரைத் துதிபாடும் வெறித்தனமான கூட்டத்தாரின் பிரச்சாரத்தின் விளைவேயாகும். சாவர்க்கரைப் போற்றிப் புகழ்தல் சமீபத்திய நடவடிக்கைகளேயாகும். 1990களின் பிற்பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்/ தொண்டர்கள் தலைமையின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே தொடங்கப்பட்டதாகும்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவரை மாற்றியிருப்பது இந்து தேசத்தின் கொள்கையாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை சட்டபூர்வமாக்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியேயாகும். 2002 மே 4 அன்று, வீ.டி.சாவர்க்கரின் பெயரை அந்தமான போர்ட் பிளேர் விமான நிலையத்திற்கு வைத்த அதே சமயத்தில், அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி “சாவர்க்கரால் முன்மொழியப்பட்ட இந்துத்துவா, நாட்டின் பாரம்பர்யத்தில் அதன் வேருடன் அனைத்தையும் உள்ளடக்கிய சித்தாந்தமாக இருந்தது,” என்று ஆர்.எஸ்.எஸ். கருத்தோட்டத்தை எதிரொலித்தார். இந்துத்துவாவைக் கொண்டுவந்த நபரைப் புகழ்வது இத்துடன் நின்றுவிடவில்லை. 2003 பிப்ரவரி 26 அன்று, சாவர்க்கரின் உருவப்படம் ஒன்று நாடாளுமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது. இவ்வாறு நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காந்தி மற்றும் முக்கிய தலைவர்களின் படங்களுடன் சாவர்க்கரின் படமும் அவர்களுக்கு இணையாக பங்கேற்றது.

நாட்டை இரண்டாகத் துண்டாட வேண்டும் என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்த, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வேண்டுமென்றே ஒதுங்கியிருந்த ஒரு நபரை ‘இந்திய தேசியவாதி என்றும், ‘நாட்டுப்பற்று மிகுந்தவர் என்றும் கொண்டாடலாம் என்றால், பின் ஏன் அதேபோன்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த முகமது அலி ஜின்னாவையும் அவ்வாறு போற்றிப் பாராட்டுவதைத் தடுத்திட முடியுமா என்று எழும் கேள்விக்கு திருப்தியடையக்கூடிய விதத்தில் பதிலை நாம் பெற வேண்டியிருக்கிறது.

சாவர்க்கர் 1966இல் இறந்தபோது பெரிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படவில்லை என்பது பலருக்குத் தெரியாது. 83 வயதாகி முதுமையில் அவர் இறந்த சமயத்தில் மிகக் குறைந்த அளவிற்குத்தான் அவர் அறியப்பட்டிருந்தார். அவருடைய வாழ்நாள் காலத்தில் மகாத்மாவின் உயிரைப் பறித்த சதித் திட்டத்தில் அவரும் ஓர் அங்கமாக இருந்தார் என்கிற வடுவை அவரால் அழிக்கவே முடியவில்லை.

வீர் சங்வி என்னும் குறிப்பிடத்தக்க கட்டுரையாளர், ‘‘1990 வரையிலும் அநேகமாக எவரும் அவரை அறிந்திருக்கவில்லை என்று சரியாகவே குறிப்பிட்டார் . 1990களில்தான் “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம்” என்னும் இயக்கம்(‘Rehabilitate Savarkar’ movement), பாரதிய ஜனதா கட்சியால் அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்ட பின்புதான், ‘இந்துத்துவா என்னும் சொற்றொடரை உருவாக்கிய நபர் என நமக்கு சொல்லப்பட்ட நபர், இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய நபர்களில் வீரமுதல்வனாக இருந்தார் என்றும் கூறப்பட்டார். அதன்பின்புதான் சாவர்க்கர் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

இது முற்றிலும் உண்மை. 1998 க்கு முன்பு, இந்துத்துவா படையணியினர் சாவர்க்கரை தேசிய அளவில் ஒரு சின்னமாக மாற்றுவதற்கான விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. 1998 க்கு முன்பு பல ஆண்ட காலம் ஆட்சியிலிருந்த மகாராஷ்ட்ராவில் இருந்து வந்த பா.ஜ.க.-சிவசேனைக் கூட்டணி அரசாங்கம், மும்பையில் உள்ள சட்டமன்றப் பேரவையின் சுவர்களில் சாவர்க்கரின் உருவப்படத்தை வைத்திட சிந்திக்கவே இல்லை. 2003க்குப் பின்னர்தான், நாடாளுமன்ற அவையில் அவருடைய படம் வைக்கப்பட்ட பின்னர்தான், மும்பையில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமும் அவருடைய படத்தையும் தொங்க விட்டது. 

பின்னர் காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரிவும்கூட , “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம் இயக்கத்தில்” தன்னையும் சேர்த்துக்கொண்டது. 2004 ஆகஸ்ட் 4 அன்று புதுதில்லியில் மன்மோகன் சிங் பிரதமரானவுடன் நடத்திய முதல் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது, விநாயக் தாமோதர் சாவர்க்கரை, “தேச பக்தர்” என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்” என்றும் வர்ணித்தார். சாவர்க்கரின் “தேச பக்தர்” என்பதற்கான ஆதாரச் சான்றுகள் குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சராகவுமிருந்த மணி சங்கர் ஐயர் எழுப்பியபோது, பிரதமர் கூறியதாவது: “சாவர்க்கர் குறித்த சர்ச்சையைப் பொறுத்தவரை, இது ஐயரின் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து அல்ல. அது ஒரு தேவையற்ற சர்ச்சை.” 

சாவர்க்கருக்கு ஆதரவாகத் தன்னால் முடிந்த அளவிற்கு மன்மோகன் சிங் முயற்சித்திருக்கிறார். “வரலாறு பல வழிகளில் நடந்துள்ள நிகழ்வுகளை நமக்கு வியாக்கியானம் செய்திருந்தபோதிலும், இறந்தவரின் மோசமான விஷயங்கள் குறித்துப் பேசுவதால் எவ்விதமான நன்மையையும் பெற்றிட முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து சாவர்க்கருக்கு ஆதரவாக ஒரு பிரதமர் இவ்வாறு முதன்முறையாக முன்வந்திருக்கிறார். இதேபோன்றே முன்னதாக மன்மோகன் சிங் அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், ஐயரின் விமர்சனங்களை வெளிப்படையாக மறுதலித்து, சாவர்க்கர் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அரசாங்கம் “அவருடன் ஒத்துப்போகவில்லை” என்றும் அறிவித்தார்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.