தனிச்சொத்துடைமை எனும் வைரஸ்!


இன்றைக்கு ஏறக்குறைய பனிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பனியுகம் நிலவியது என அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

6,50,000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அந்தப் பனியுகக் காலத்தில் பூமிக்கு அடியில் புதைந்து போன வைரஸ்களைப் பற்றி பிரான்ஸ் - ஜெர்மன் - ரஷ்ய ஆய்வாளர்கள் குழு ஒன்று தொடர்ந்து ஆய்வு செய்து ரஷ்யாவில் உள்ள சைபீரிய நிரந்தரப் பனிப்பகுதியின் அடியில் நாம் இதுவரை கண்டிராத 13 வைரஸ் கிருமிகளை அந்தக் குழு இனம் கண்டது.

அந்தக் கிருமிகளை ஆய்வகத்தில் வைத்து தொடர்ந்து ஆய்வு செய்ததன் விளைவாக அது குறிப்பிட்ட சூழலில் மீண்டும் உயிர் பெற்று எழுவதாக நவம்பர், 2022 ஆம் ஆண்டு அந்த ஆய்வுக்குழு அறிவித்தது.

மனித இனம் இதுவரைக் கண்டிராத புதுப்புது வகையான நோய்களுக்கும் இத்தகைய உறைப் பனி அடியில் புதைந்துக் கிடக்கும் கிருமிகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதே அறிவியல் உண்மை. 

பல்லாயிரம் ஆண்டுகளாக உறைந்துக் கிடக்கும் அத்தகையக் கிருமிகளை, தனது இலாபவெறி கொண்ட உற்பத்தி முறைகளுக்காக புவியை வெப்பமாக்கி, பூமிப்பந்தைப் பாதுகாத்து வரும் பனிப்பாறைகளை உருகச் செய்வதன் மூலம் வெளிக்கொண்டு வருகிறது ஏகாதிபத்திய முதலாளித்துவம். அதைப் பிரிதொரு சந்தர்ப்பத்தில் விவாதிப்போம். 

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் காரணமாகத் தோன்றிய நவீன மனித இனத்தின் அழிவிற்குக் காரணமாக இருக்கும் தனிச்சொத்துடமை எனும் வைரஸ் கிருமி இந்தப் புவிப்பரப்பைப் பல நூற்றாண்டுகளாக ஆட்டிப்படைத்து வருகிறது.

மனிதர்களின் மூளை உள்ளிட்டப் பருப்பொருட்களால் ஆன இயக்கம் என்பது காலத்தினாலும், களத்தினாலும் தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான் இயற்கைப் பற்றியப் பொருள் முதல்வாத அறிவியல் போதிக்கின்றது.

தனிச்சொத்துடமைக்கு எதிராக முதலாளித்துவத்திற்கு முந்தையச் சமூக அமைப்புகளில் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் அத்தகையச் சமுதாயங்களில் ஆதிக்கம் செலுத்திய ஆதிக்கச் சக்திகள் ஆட்சி வடிவங்கள் பல மாறினாலும் எடுத்துக்காட்டாக ஆண்டை எஜமானர்களின் ஆட்சி, மன்னராட்சி, நிலப் பிரபுத்துவ ஆட்சி, மதகுருமார்களின் ஆட்சி, இறுதியாக முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி என்றெல்லாம் மாறிக்கொண்டே இருந்தாலும் தனிச்சொத்துடைமை ஒழிக்கப்படவில்லை. 

இன்னும் சொல்லப்போனால் தனிச்சொத்துடமையை பாதுகாக்கின்ற வகையிலேயேப் பல நூற்றாண்டுகளாகச் சமுதாய அமைப்புகள் மாறி வந்துள்ளன.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றியக் கம்யூனிசத் தத்துவம்தான் தனிச்சொத்துடமைக்கு எதிராகத் தீர்மானகரமான முடிவை முன் வைத்தது.

கம்யூனிசத்தின் கொள்கைகளை ஒரு வரியில் சொல்ல முடியுமா என்ற கேள்விக்குத் தனிச்சொத்துடமையை ஒழிப்பதுதான் என்று கூறினார் காரல் மார்க்ஸ்.

தனிச்சொத்துடைமை சமுதாயத்தில் செய்கின்ற மாய வித்தைகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தனிச்சொத்துடமைக்கு எதிராகப் போராட்டக் களம் கண்ட கம்யூனிஸ்ட்களின் சிந்தனைகளில் இத்தகைய தனிச்சொத்துடமைப் பல்வேறு வடிவங்களில் ஆதிக்கம் செலுத்துவதைச் சரியாக இனம் கண்டு கொள்ள முடிவதில்லை. ஆனால் அப்படி இருந்துவிட முடியாது. 

தனிச்சொத்துடமை எந்த வடிவத்தில் தோன்றினாலும் அதை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டியுள்ளது.

இப்படி அதனை அடையாளப்படுத்தினால் ஓரளவிற்குப் புரிந்துகொள்ள முடியும் எனக் கருதுகிறோம். கம்யூனிச அமைப்புகளில் தனிச்சொத்துடைமை சிந்தனை உள்ளே போகும்போது, அது தனக்கு உத்தரவாதமான வீடு, நிலம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கின்றது அல்லது பதவி, அதிகாரம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக மாறுகிறது அல்லது பிறரை இழிவு படுத்துவது, அவதூறு செய்வது எனும் பண்புகளில் வெளிப்படுகிறது அல்லது முறையான வழிமுறைகளைக் கையாளாமல் குறுக்கு வழிகளில் தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதில் வெளிப்படுகிறது அல்லது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்வதில் முடிகிறது.

ஒரு வகையில் மதம் குறித்த ஆன்மீகம் முன்வைப்பதை போல நான், எனது என்ற அகந்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தனிச்சொத்துடமை சிந்தனையைக் கடை பரப்புகிறது.

கட்சிக்குள் இத்தகையச் சிந்தனை உள்ளவர்கள் அனைவரும் ஒரு அலை வரிசையில் ஒன்றிணைகிறார்கள். பிறகு கட்சியில் பெரும்பான்மைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறார்கள். இறுதியில் தனிச்சொத்துடமை முறையைப் பாதுகாக்கின்ற சமூக அமைப்பிற்கு எதிராகப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இத்தகையச் சிந்தனையாளர்கள் ஆதிக்கம் புரிகிறார்கள்.

இதனால் ஒரு கொள்கையை பேசிக் கொண்டிருந்தாலும், நேர்மையான சரியானத் திசையில் கம்யூனிச அமைப்பு முன்னேறுவதற்கு பதிலாகத் திருத்தல்வாதம் அல்லது சந்தர்ப்பவாதம் உள்ளே நுழைகிறது.

காலத்தாலும், களத்தாலும் தீர்மானிக்கப்படுகின்ற தனது வாழ்க்கை நிலைமைக்கு அதாவது வர்க்க வாழ்க்கைக்கு உகந்த வகையில் கொள்கைகளில் மாறுதல்களைக் கொண்டு வருவதற்கு இத்தகையச் சிந்தனையாளர்கள் சந்தர்ப்பவாதத்தை முன் வைக்கிறார்கள்.

தனிச்சொத்துடமை அமைப்பிற்கு எதிராகப் போராடிய ரஷ்யாவில் இத்தகையச் சந்தர்ப்பவாத வைரஸ் விஷக்கிருமிகள் உள்ளே நுழைந்ததால்தான் அக்டோபர் புரட்சிக்கு பிறகு 50 ஆண்டுகளுக்குள் தனிச்சொத்துடமை என்ற கிருமி உயிர் பெற்று எழுந்து புதியச் சமூக அமைப்பை, இளம் குழந்தையான கம்யூனிசச் சோசியலிச அமைப்பை பின்னடைவிற்கு உள்ளாக்கியது.

அதன் பிறகான சீனா, அல்பேனிய, வியட்நாம், புரட்சியில் துவங்கி சமீபத்தில் நேபாள் புரட்சி வரை அனைத்திலும் இத்தகையச் சந்தர்ப்பவாதப் போக்குகள் கடும் பின்னடைவிற்குச் சமூக அமைப்பைத் தள்ளியது.

மனித குலத்தை அழிப்பதற்கு உறைபனிக்கு அடியில் புதைந்து கிடக்கும் வைரஸ்கள் மீண்டும் உயிர் பெற்று எழுந்தால் ஜாம்பி திரும்ப வருவது போன்று ஏதாவது ஒரு பெரும் அழிவிற்கு சமூகத்தைக் கொண்டு சென்று விடும் என அச்சப்படுகிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் உண்மையிலேயே மனித குலத்தை அழிப்பதற்கு சதா சர்வ காலமும் உயிர் பெற்று எழுந்து கொண்டிருக்கும் தனிச் சொத்துடமை எனும் வைரஸ் கிருமியை முற்றாக அழிப்பதன் மூலம்தான் புதைந்து போனவைகள் மீண்டும் உயிர்த்தெழாமல் பாதுகாக்க முடியும். 

அவ்வாறு தனிச்சொத்துடமைக் கொண்ட சமூக அமைப்பை முற்றாக அழிப்பதற்கு உரிய போராட்டத்தைத் துவக்குவதன் மூலமே மனித குலத்தையும் பாதுகாக்க முடியும், மனித குலத்தை பாதுகாக்க போராடுகின்ற முன்னணிப்படையான கம்யூனிஸ்ட் கட்சியையும் பாதுகாக்க முடியும்.

அத்தகைய மகத்தான போராட்டத்தில் நம்மை பிணைத்துக் கொள்வோம்.

ஆசிரியர் குழு,

வினை செய்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.