புனையப்படும் பொய் ‘வரலாறு’! 

பாகம் -1

பேரா. ஆதித்ய முகர்ஜி

நன்றி: மார்க்சிஸ்ட் ரீடர்

பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய அரசியலுக்கு வசதியாக இந்திய வரலாற்றை சிதைத்து பொய்களை வரலாறாக புனையும் முயற்சியினை அம்பலப்படுத்தும் கட்டுரை)

‘வரலாறு‘ என்பதையே முழுவதுமாகத் திரித்து, அதை மக்களிடையே ‘வெறுப்பு மனப்பான்மை‘யை வளர்த்தெடுக்கும் ஒரு கருவியாகச் சிலர் பயன்படுத்தி வருவதை, இந்தியா, பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.  நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த விடுதலை இயக்கம் இந்திய தேசம் குறித்து கொண்டிருந்த ஒளிமிகுந்த கனவுகளைச் சிதைத்துச் சீரழிப்பதற்கும், 1947இல் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, நம் நாடு ஒரு ‘ஜனநாயகக் குடியரசாக‘ மலர்ந்ததன் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்வதற்கும், மிகவும் இழிவான முறையில் ‘வரலாறு‘ பயன்படுத்தப்படுகிறது.  இத்தகைய போக்குகளின் காரணமாக, இந்திய நாட்டின் பெருமைக்குரிய பண்புநலன்களும், இந்தியாவின் எதிர்காலமுமே கேள்விக்குறியாய் மாறி நிற்கிறது.

காலனி ஆதிக்க கண்ணோட்டம்

காலனியாட்சி முடிவுக்கு வந்த 20ஆம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை, வரலாற்றியல் கல்வியில் அதன் ஆதிக்கமும், ஆளுமையும் நீடித்தது.இந்தப் பின்னணியிலேயே, காலனியாதிக்கத்தின் கண்ணோட்டத்திலிருந்து இந்திய வரலாறு எழுதப்பட்டது என்பதையும், இந்திய சமூகத்தில் பிளவையும், பிரிவினையையும் உருவாக்கி வளர்த்திடும் விதத்திலும், காலனியாட்சியை ஆதரித்து நியாயப்படுத்தும் தன்மையிலும் வரலாற்றியல் வடிக்கப்பட்டது என்பதையும் இத்தருணத்தில் நாம் உணர வேண்டியது அவசியம்.

இந்தியாவில் இன்று தங்களுக்குத் தாங்களே ‘உண்மையான தேசியவாதிகள்‘ என்று வேடமிட்டுக் கொண்டு, மக்களிடையே மத அடிப்படையில் வெறுப்புணர்வைத் தூவி, பிரிவினையைத் தூண்டும் பாசிச சக்திகள், மேற்சொன்ன ‘காலனித்துவ விளக்கத்தைத்‘ தான், தங்களுக்குச் சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்கின்றன.  இந்தியாவில் வாழும் பல கோடிக்கணக்கான சிறுபான்மை மக்களின் நலன்களைப் புறக்கணிப்பதற்கும், ஜனநாயக பூர்வமான  உரிமைகளை நசுக்குவதற்கும் பாசிச ஆட்சியாளர்கள் மேற்கூறிய காலனித்துவ விளக்கத்தைக் கையிலெடுத்துக் கொள்கின்றன.  இந்தச் சூழலில், இந்திய வரலாற்றின் காலனித்துவ விளக்கம் என்ன என்பதைச் சுருக்கமான முறையில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

தொழிற்புரட்சியின் பயனாக 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், உலகின் முதலாவது தொழில்வள நாடாக பிரிட்டன் உருவானது.  அதன் நீட்சியாக, காலனியாதிக்கத்தின் இரண்டாவது நிலையான, ‘தொழில் மூலதன காலகட்டமும்‘ (1813 – 1858) துவங்கியது.  அத்தருணத்தில், இந்தியாவின் பொருள் உற்பத்தி முறைகள், மிகவும் பழமையானதாக, காட்டுமிராண்டித் தனமாக இருப்பதாகவும், அது உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும் ஒரு வாதம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்டது.  மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிட்டன் பொருளாதாரத்திற்கு அனுகூலமாக இருந்து உதவிடும் வகையில், இந்தியா தன்னுடன் இணைக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் முடிவுசெய்தது…

இந்தக் காலகட்டத்தில்தான், இந்தியாவின் சரித்திரத்தை எழுத முற்பட்ட பிரிட்டிஷ் வரலாற்றியலாளர்கள், வகுப்புவாத அடிப்படையில், இந்தியாவில் முதலில் ‘இந்து ஆட்சி‘யும், தொடர்ந்து ‘முஸ்லிம் ஆட்சி‘யும் நடைபெற்றதாக முழுவதும் பிழையாக வரையறுத்த விபரீதம் நிகழ்ந்தது.  பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் ஒருபடி மேலே போய், “இடைக்காலத்தில் இந்தியாவில் நடைபெற்ற முஸ்லிம் ‘கொடுங்கோலாட்சி‘யை அகற்றி, இந்தியாவுக்குப் பல நன்மைகளை பிரிட்டிஷ் ஆட்சி செய்து வருவதாகவும்” விளக்கம் கூறத் தலைப்பட்டனர்.  (அவர்கள் இவ்விடத்தில் ‘கிறிஸ்தவ ஆட்சி‘ என்று குறிப்பிடாமல் ‘பிரிட்டிஷ் ஆட்சி‘ என்று குறிப்பிட்டதும் கூர்ந்து கவனிக்கத் தக்கது). கிட்டத்தட்ட 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலும் மேற்சொன்ன கருத்தோட்டமே மேலாதிக்கம் செலுத்தி வந்தது.

நிதி மூலதன காலகட்டம்

காலனியாதிக்கத்தின் மூன்றாம் நிலையான ‘நிதி மூலதன’ காலகட்டத்திற்குள் 19ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் பிரிட்டன் அடியெடுத்து வைத்த போது, உலகின் பல நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள், விரைவான தொழில்மயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.  இதையடுத்து, காலனியாதிக்கத்தை விரிவுபடுத்துவது, ஏற்கனவே தங்கள் ஆளுகையில் உள்ள காலனிய நாடுகளில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது ஆகிய அம்சங்களில் பிரிட்டன் உள்ளிட்ட ஆதிக்க நாடுகள் அக்கறை செலுத்த ஆரம்பித்தன.  புதுப்புது நாடுகளைத் தங்களது காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதில் இந்த நாடுகளிடையே கடுமையான போராட்டமும், போட்டியும் நிலவியது.  தமது நாடுகளில் புதிதாக நிறுவப்பெற்ற தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருள்கள் கிடைக்கச் செய்வதற்கும், ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கான சந்தையை விரிவுபடுத்துவதற்கும் இந்த நாடுகளுக்கு, காலனி விரிவாக்கம் என்பது அவசியமான ஒன்றாக ஆகியிருந்தது. 

காலனியாதிக்கம் இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குச் சென்ற சூழலில் நிகழ்ந்த அணுகுமுறை மாற்றத்தைத் தோழர் வி.ஐ. லெனின் மிக எளிதாக விளக்கியுள்ளார். “அந்நிய மூலதனம் என்கிற புதிய அம்சம் வர்த்தக பரிமாற்றத்திற்குள் புகுந்துள்ள நிலையில், இதுகாறும் விற்பனையாளர், வாங்குபவர் என்றிருக்கும் உறவைவிட, இனி கடன் கொடுப்பவர், கடன் பெறுபவர் என்கிற உறவு நிலைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிட்ட வாய்ப்புள்ளது” என்பது அவரது கூற்று.

நிதி மூலதன நுழைவின் இன்னொரு முகமாக, ‘காலனிய நாட்டினர் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்வது’ என்கிற வாதம் மறைந்துபோய், ‘காலனி தேசத்து மக்கள் சுய ஆட்சி என்பதற்கு எந்தக் காலத்திலும் தகுதியற்றவர்கள்‘ என்ற கூக்குரல் வேகமாகக் கேட்க ஆரம்பித்தது. ‘என்றேனும் ஒரு நாள், ஆட்சி நிர்வாகத்தை இந்தியர்களிடம் ஒப்படைத்துவிட்டு பிரிட்டிஷார் வெளியேறுவார்கள்‘ என்கிற நம்பிக்கைக்கும் பேச்சுக்கும் எள்ளளவும் இடமில்லை என்பதாக ஆட்சியாளர்களின் எண்ணப்போக்கு அழுத்தம் திருத்தமாக வெளிப்பட்டது.  அப்போது பம்பாய் மாகாணத்தின் ஆளுநராக இருந்த சர் ரிச்சர்டு டெம்பிள், “இங்கிலாந்து, இந்தியாவைத் தனது முழு ஆளுகைக்குள்ளாகவே எப்போதும் வைத்திருக்க வேண்டும்.  ஏனெனில், ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிரந்தரமாக நீடித்து நிலைத்திருக்கும்‘ என்கிற உறுதிமொழியுடன் கணிசமான அளவு மூலதனம் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது,” என்று 1880ஆம் ஆண்டில் எழுதிய குறிப்பு ஒன்றில் கூறியுள்ளார். 

தொடரும்....

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.