கம்யூனிசத்தின் கோட்பாடுகள்

 மாற்றுத் திட்டம் ஒன்றே காலத்தின் கட்டாயம்!

ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை முற்றாக வீழ்த்துகின்ற அரசியல், பொருளாதாரக் கொள்கை கம்யூனிஸ்டுகளிடம் மட்டுமே உள்ளது.

கம்யூனிஸ்டுகள் முன்வைக்கின்ற சோசலிசப் பொருளாதாரக் கொள்கைக்கும், ஏகாதிபத்திய முதலாளித்துவம் முன்வைக்கின்ற பொருளாதாரக் கொள்கைகளுக்கும் இடையில் ஏதோ ஒன்று இருப்பதைப் போல பம்மாத்து காட்டுகின்ற பல்வேறு அரசியல், பொருளாதார பித்தலாட்டப் பேர்வழிகளுக்கு பதில் அளிக்கின்ற வகையில் தோழர் ஏங்கல்ஸ் எழுதியுள்ள கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற நூலில் இருந்து இப்பகுதியை வெளியிடுகிறோம்.

உலகம் முழுவதும் கம்யூனிசக் கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படும் கம்யூனிஸ்டுகள் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளானாலும் சரி, முதலாளித்துவ நாடுகளானாலும் சரி, காலனிய, அரைக் காலனிய மறுகாலனிய நாடுகளாக இருந்தாலும் சரி தங்களின் அரசியல், பொருளாதார மாற்றுத் திட்டம் ஒன்று சோசலிசத்தை நோக்கி ஒருபடியேனும் முன்னேறுகின்ற வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் பாசிச ஆட்சி, நேரடியான காலனி ஆக்கிரமிப்புப் போர் காலகட்டங்கள் ஆகியவற்றினால் பாதிக்கப்படுகின்ற நாடுகளில் இத்தகைய மாற்றுத் திட்டம் கட்டாயமாகிறது. இதனைத் தவிர்த்து நிலவுகின்ற சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை அப்படியே பயன்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

அப்படிப்பட்ட ஒரு மாற்றுப் பொருளாதாரக் கொள்கையைத்தான் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்திய பிறகு நாம் முன் வைக்க முடியும். நிலவுகின்ற அரசு கட்டமைப்பை அதில் உள்ள ஆட்சியாளர்களை அதாவது பாசிசத்தை முன்வைத்து மக்களை ஏறி தாக்குகின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவை மட்டும் மாற்றுவது, இந்த கட்டமைப்பை அப்படியே தக்க வைத்துக்கொள்வது என சிந்திப்பதும் அதன்படி கொள்கை வகுத்துக் கொண்டு செயல்படுவதும் மக்கள் விரோத, மார்க்சியத்திற்கு எதிரான நிலைப்பாடு ஆகும்.

தோழர் ஏங்கல்ஸ் எழுதி முன் வைத்துள்ள கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற நூல் ஏற்கனவே ஆடியோ வடிவில் வினை செய் வெளியிட்டுள்ளது மீண்டும் அதனை மறுவாசிப்பு செய்யுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கம்யூனிசத்தின் கோட்பாடுகள்;

பிரெடெரிக் எங்கெல்ஸ்

நன்றி - மார்க்சிஸ்ட் ரீடர்

தனியார் சொத்துடைமை முடிவாக மறைந்துபோவதால் ஏற்படும் பின்விளைவுகள் எவை?



அனைத்து உற்பத்தி சக்திகளையும், வணிக சாதனங்களையும், உற்பத்திப் பொருட்களின் பரிவர்த்தனை மற்றும் விநியோகத்தையும்கூட, தனியார் முதலாளிகளின் கைகளிலிருந்து சமுதாயமே எடுத்துக் கொள்ளும். இருக்கின்ற வள ஆதாரங்கள், சமுதாயம் முழுவதன் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி, சமுதாயம் அவற்றை மேலாண்மை செய்யும். இந்த வகையில், எல்லாவற்றுக்கும் அதிமுக்கியமாய், தற்போது பெருவீதத் தொழில்துறையையோடு தொடர்புடையதாய் இருக்கும் கேடான விளைவுகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டுவிடும்.

இனிமேல் வணிக நெருக்கடிகள் இல்லாமல் போகும். விரிவாக்கப்பட்ட உற்பத்தி, இப்போதைய சமூக அமைப்புமுறையில் மிதமிஞ்சியதாய் ஆகி, துன்பங்களுக்கெல்லாம் முதன்மையான காரணமாய் விளங்குகிறது. அதுவே பின்னால் பற்றாக்குறையாய் ஆகி, மேலும் விரிவாக்க வேண்டிய தேவைக்கு உள்ளாகிறது. [புதிய சமூக அமைப்புமுறையில்] மிதமிஞ்சிய உற்பத்தி, துன்பங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, சமுதாயத்தின் அடிப்படைத் தேவைப்பாடுகளுக்கும் அப்பால், மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தேவைகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்யும். புதிய தேவைகளை உருவாக்கும். அதே வேளையில் அவற்றை நிறைவேற்றுவதற்கான சாதனங்களையும் உருவாக்கும். புதிய முன்னேற்றத்துக்கான நிபந்தனையாகவும் தூண்டுகோலாகவும் ஆகிப்போகும்.

முன்னேற்றமானது கடந்த காலத்தில் எப்போதும் செய்ததுபோல, சமூக அமைப்புமுறை முழுவதையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடாது. பெருவீதத் தொழில்துறை, தனியார் சொத்துடைமையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, மாபெரும் விரிவாக்கத்துக்கு உள்ளாகும். எந்த அளவுக்கு எனில், நம் காலத்தின் பெருவீதத் தொழில்துறையுடன் ஒப்பிடுகையில், பட்டறைத் தொழில் அற்பமாகத் தோன்றியதைப்போல், இப்போது நாம் காணும் பெருவீதத் தொழில்துறை, ஒப்பீட்டளவில் அற்பமாகத் தோன்றும் அளவுக்கு விரிவடையும். தொழில்துறையின் இந்த வளர்ச்சி, மக்கள் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவுசெய்யப் போதுமான அளவுக்கு எராளமான உற்பத்திப் பொருட்கள் சமுதாயத்துக்குக் கிடைக்குமாறு செய்யும்.

விவசாயத் துறைக்கும் இந்த உண்மை பொருந்தும். விவசாயமும் தனியார் சொத்துடைமையின் தாக்கத்துக்கு ஆளாகிப் பாதிப்புக்கு உள்ளானது. தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டதால் பின்னடைவைச் சந்தித்தது. புதிய சமூக அமைப்பில் தற்போதைய முன்னேற்றங்களும் விஞ்ஞானச் செயல்முறைகளும் நடைமுறைப்படுத்தப்படும். அதன் விளைவாக [விவசாய வளர்ச்சியில்] ஏற்படும் முன்னோக்கிய பாய்ச்சலினால் சமுதாயத்துக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் [குறைவின்றிக் கிடைக்க] உறுதி செய்யப்படும்.

இவ்வாறாக, [புதிய சமூக அமைப்பில் உற்பத்தி செய்யப்படும்] அபரிதமான பண்டங்களினால் சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்ய முடியும்.

பரஸ்பரம் பகைமை பாராட்டும் பல்வேறு வர்க்கங்களாகச் சமுதாயம் பிளவுறுவது இதனால் தேவையற்றதாகிவிடும். மேலும், புதிய சமூக அமைப்பில் இது தேவையற்றது மட்டுமல்ல, ஏற்கவொண்ணாததாகவும் ஆகிவிடும். உழைப்புப் பிரிவினையிலிருந்தே வர்க்கங்கள் தோன்றின. இன்றைய நாள்வரை அறியப்பட்டு வந்த இந்த உழைப்புப் பிரிவினை, புதிய சமூக அமைப்பில் முற்றாக மறைந்துவிடும். நாம் விளக்கிக் கூறிய அளவுக்குத் தொழில்துறை மற்றும் விவசாயத்தின் உற்பத்தியை அதிகரிக்க தற்போதுள்ள எந்திரவியல், வேதியியல் செயல்முறைகள் போதுமானதாக இல்லை. எனவே அத்தகைய செயல்முறைகளைப் பயன்படுத்தும் மனிதர்களின் திறப்பாடுகள் அதற்கேற்றவாறு வளர்ச்சி காண வேண்டும்.

கடந்த [18-வது] நூற்றாண்டின் விவசாயிகளும் பட்டறைத் தொழிலாளர்களும் பெருவீதத் தொழில்துறைக்குள் ஈர்க்கப்பட்டபோது, தமது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முற்றிலும் வேறுபட்ட மக்களாய் மாறிப் போயினர். அதுபோலவே, உற்பத்தி மீதான ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் கூட்டு நிர்வாகம், அதன் விளைவாக ஏற்படும் புதிய வளர்ச்சி ஆகிய இரண்டுக்கும் முற்றிலும் வேறு வகைப்பட்ட புதிய மக்கள் சக்தி தேவைப்படுகின்றது.

மக்கள், உற்பத்தியின் தனியொரு பிரிவுக்கென ஒதுக்கப்பட்டு, அதிலேயே பிணைக்கப்பட்டு, அதனால் சுரண்டப்பட்டு, இன்று இருப்பதைப் போல இனிமேலும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் மற்ற எல்லோரின் செலவில் தங்கள் ஆற்றல்களுள் ஒன்றை மட்டுமே வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையின் ஒரேயொரு பிரிவை அல்லது ஒரேயொரு பிரிவின் ஒரு கிளையை மட்டுமே தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். தொழில்துறையானது இன்றைய நிலையில்கூட அத்தகைய மக்களை மிகமிகக் குறைந்த பயனுள்ளவர்களாகவே கருதுகிறது.

ஒட்டுமொத்த சமுதாயத்தால் நிர்வகிக்கப்படுகின்ற, மேலும், ஒரு திட்டத்தின்படி இயக்கப்படும் தொழில்துறையானது, சகல துறைகளிலும் தேர்ச்சிபெற்ற, தமது ஆற்றல்களைச் சமமான முறையில் வளர்த்துக் கொண்ட, உற்பத்தி அமைப்புமுறையை அதன் முழுப் பரிமாணத்தோடு நோக்கும் திறன்வாய்ந்த மனிதர்களை எதிர்நோக்குகிறது.

ஒருமனிதனை விவசாயியாகவும், இன்னொருவனை காலணி தைப்பவனாகவும், மூன்றாமவனை ஆலைத் தொழிலாளியாகவும், நான்காமவனை பங்குச் சந்தை முகவராகவும் ஆக்கிடும் இந்த உழைப்புப் பிரிவினையின் வடிவம், எந்திரத் தொழிலால் ஏற்கெனவே தகர்க்கப்பட்டுள்ளது. இனி அது முழுவதுமாய் மறைந்து போகும். கல்வியானது, இளைஞர்கள் ஒட்டுமொத்த உற்பத்தி அமைப்புமுறையை வெகுவிரைவில் கற்றுக் கொள்வதைச் சாத்தியமாக்கும். சமுதாயத்தின் தேவைகளை அல்லது தனது சொந்த நாட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு, உற்பத்தியின் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்கு அவர்கள் மாறிச் செல்வதையும் சாத்தியமாக்கும். ஆக, இன்றைய உழைப்புப் பிரிவினை ஒவ்வொரு தனிநபர்மீதும் சுமத்தியுள்ள ஒருசார்புப் பண்பிலிருந்து இளைஞர்களை விடுவிக்கும். கம்யூனிச சமுதாயம் இந்த வகையில், அதன் உறுப்பினர்கள், பரந்த அளவில் வளர்ச்சிபெற்ற தமது ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கும். ஆனால், இது நிகழும்போது, வர்க்கங்கள் நிச்சயமாக மறைந்து போகும். கம்யூனிச அடித்தளத்தின்மீது அமைக்கப்படுகின்ற சமுதாயம் ஒருபுறம் வர்க்கங்கள் நிலவுவதோடு ஒத்துப் போகாது என்பதும், மறுபுறம் அத்தகைய ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்கும் செயலே வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக்கட்டும் சாதனங்களை வழங்குகிறது என்பதும் இதன்மூலம் பெறப்படுகிறது.

இந்நிகழ்வினைத் தொடரும் பின்விளைவு, நகரத்துக்கும் நாட்டுப்புறத்துக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துபோக விதிக்கப்பட்டுள்ளதாகும். விவசாயத்தையும் தொழில்துறையையும் இரண்டு வெவ்வேறு வர்க்கங்களைக் கொண்டு மேலாண்மை செய்வதைக் காட்டிலும், ஒரே மக்களைக் கொண்டு மேலாண்மை செய்வது, முற்றிலும் பொருளாயதக் காரணங்களுக்காக மட்டுமே என்றாலுங்கூட, கம்யூனிசக் கூட்டுறவின் ஓர் அவசிய நிபந்தனையும் ஆகும். ஒருபுறம் பெரும் நகரங்களில் தொழில்துறை சார்ந்த மக்கள் நெருக்கமாய்க் குவிந்து கிடக்க, மறுபுறம் விவசாயம் சார்ந்த மக்கள் நாடு முழுதும் சிதறிக் கிடப்பது, விவசாயம், தொழில்துறை ஆகிய இரண்டின் வளர்ச்சி குன்றிய கட்டத்தோடு தொடர்புடைய ஒரு நிலைமையாகும். அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு முட்டுக்கட்டையாகும் என்பதையும் ஏற்கெனவே உணர முடிந்துள்ளது.

உற்பத்தி சக்திகளை திட்டமிட்ட முறையில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துக்காக சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இடையே பொது ஒத்துழைப்பு உருவாக்குதல்; எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றி வைக்கும் நிலையை எட்டும் அளவுக்கு உற்பத்தியை விரிவுபடுத்தல்; பிறருடைய தேவைகளைப் புறக்கணித்துச் சிலரது தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் நிலைக்கு முடிவு கட்டுதல்; வர்க்கங்களையும் அவற்றின் முரண்பாடுகளையும் முற்றாக ஒழித்துக் கட்டுதல்; இன்றைய உழைப்புப் பிரிவினையை ஒழித்துக் கட்டுவதன் மூலமும், தொழில்துறைக் கல்வி மூலமும், பல்வேறுபட்ட செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலமும், எல்லோராலும் படைத்தளிக்கப்படும் மனமகிழ் நிகழ்வுகளில் அனைவரும் பங்கெடுப்பதன் மூலமும், நகரத்தையும் நாட்டுப்புறத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலமும், சமுதாய உறுப்பினர்கள் அனைவரின் ஆற்றல்களையும் சர்வாம்ச ரீதியில் மேம்படுத்துதல்; – இவையே தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படுவதால் ஏற்படும் முதன்மையான விளைவுகளாகும்.


நன்றி: BBC

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.