சிங்கார வேலர் நினைவு நாள் பாகம்-4

 சுயமரியாதை இயக்கம். சமதர்மம், இந்நாட்டு மக்களுக்குத் தக்கபடி எடுத்துச் சொல்லி, 'மார்க்சியம்' என்பதன் பொருளாதாரத் தத்துவத்தைச் சாதாரணமானவரும் உணரும்படி செய்த பெருமை இந்நாட்டில் இருவரையே சாரும்.

மற்ற மாகாண மக்கள் பொது உடைமைத் தத்துவத்தை உணர்த்திருப்பதற்கும், இம்மாகாண மக்கள் அதிலும் தொழிலாளர் இயக்கம் பொது உடைமையை உணர்ந்திருப்பதற்கும் இன்னும் ஏராளமான வித்தியாசம் உண்டு. மார்க்சிசத்தைக் கரைத்துக் குடித்து, எவரும் எளிதில் உணரும்படி எழுதியும் பேசியும் வந்தவர்கள் பெரியார் இராமசாமி அவர்களும், தோழர் சிங்காரவேலருமே யாகும். தோழர் சிங்காரவேலர் சயமரியாதை இயக்கம் வளருவதற்குப் பெரிதும் பாடுபட்டார். அவரின் உழைப்பை எந்தச் சுயமரியாதைக் காரனும் மறக்க மாட்டான்.

எல்லா மக்களும் இன்ப வாழ்வு பெற வேண்டுமென்ற சிறந்த இலட்சியமே அவருக்கு. இது கிடைக்க விடாமல் தடுப்பது எதுவாக இருப்பினும், அதனைத் தவிடு பொடியாக்க வேண்டுமென்று அவர் துடித்தார்.

ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய் தான்-சமுதாயத்துக்கு என்பதை அவர் எவருக்கும் அஞ்சாது கூறினார். அவருடைய தீவிர வாதத்தைக் கண்டு திகில் கொண்டவர்கள் அவரை நாத்திகர் என்று கூறினர்; அவர் அதனை ஏற்றுக்கொண்டார்; சென்னையில் நாத்திகர் மாநாட்டையே நடத்தினார்; இந்தியாவிலேயே யாரும் செய்யாத காரியம் அது. மதத்தின் மீதும் கடவுளின் மீதும் பாரத்தைப் போட்டுவிட்டுப் பழி பாவத்திற்கு அஞ்சாமல், பாமர மக்கனைக் கசக்கிப் பிழியும் வர்க்கத்தை நோக்கி, அந்த மாவீரர் கேட்டார்.

உலகில் உயிர்கள் படுந்துயரத்திற்கு யார் ஜவாப்தாரி? பசுவைப் புலி பிடித்துத் தின்னவும், தேரையைப் பாம்பு பிடித்துத் தின்னவும் யார் கட்டளையிட்டார்? இந்தக் கொடூரக் காட்சியை விடவா வேறு உளது? நோய் வறுமை, பஞ்சம், புயல் வெள்ளம் முதலிய இயற்கைச் சம்பவங்களால் மாந்தருக்கு எவ்வளவு இம்சை?

கடவுளை தயாபரன், சர்வ ரட்சகன், ஆபத்பாந்தவன் என்ற மாத்திரத்தில் இந்தக் கொடுமைகளை மறக்க முடியுமா? சமணர்களைக் கழுவில் ஏற்றினது கடவுள் பெயரால் அன்றோ ? கோடான கோடி பிசாசு பிடித்தவர்களென்று பெண் மக்களை அடித்துக் கொன்றது கடவுள் பெயரால் அன்றோ? கிருஸ்தவரும் முஸ்லீம்களும் கோடி கோடியாக 500 வருட காலம் கொடும் போரில் மாண்டது சாமி பெயரால் அன்றோ? சாமி பெயரால் எத்தனைக் கோயில்கள் கட்டடங்கள் இடிந்தன. எத்தனை நாடுகள் நகரங்கள் நாசமாயின."

இவ்விதமாக, எதிரி திணறும்படியான கேள்விகளைப் பச்சைப் பச்சையாகக் கேட்பார் மா. சிங்காரவேலர். அவரும் மனப்பண்பிலும், மதியூகத்திலும் அவருக்கு இணையாக இருந்த பெரியாரும் ஒன்று கூடி, சுயமரியாதை இயக்கத்தை நடத்தியபோது நாடே அதிர்ந்தது; சர்க் காரும் நடுங்கிற்று என்று கூறலாம். காசியில் சிக்கிக்கிடந்த மக்களை, அவர்கள் கைப்பிடித்து இழுத்து மாஸ்கோவுக்கு அழைத்தனர்.

நான் கடைசியாக அவரைக் கண்டது, நான் மேலே குறிப்பிட்ட அவருடைய அருங்குணத்தை விளக்கக்கூடிய ஒரு சம்பவமாகவே இருந்தது. இரண்டு முதியவர்களும், பெரியார் இராமசாமியும், தோழர் சிங்காரவேலரும் ஒரே மேடையிலே உட்கார்ந்திருந்தார்கள் 20-6-43-ல் சென்னை செயிண்ட்மேரி மண்டபத்தில் 

அன்று அங்கு தீண்டாமை ஒழிப்பு நாள்! தளர்ந்த உடல், தள்ளாடும் நடை, நரைத்த தலை, இக்கோலத்திலே. இருந்தார் மா. சிங்காரவேலு. தீண்டாமை ஒழிப்புத் தினம் என்று கேள்விப்பட்டதும், அவர், "தள்ளாமையையும் மறந்து, அங்கு வந்திருந்தார். பாட்டாளி மக்களின் சுயமரியாதைக்காகவும், சுகவாழ்வுக் காகவும் போராடிய அந்தப் புரட்சி வீரரை, அன்று நான் கடைசி முறையாகக் கண்டேன். 

அவர் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டேன், திடுக்கிடவில்லை; ஆனால் திகைத்தேன். இனி அத்தகையதொரு மாவீரன் கிடைப்பாரா, என்று,

 மறைந்த மாவீரருக்கு நமது மரியாதையைச் செலுத்துவோமாக. அவர் வகுத்த மார்க்கம் பழுது படாதபடி பாதுகாத்து, அவருடைய இலட்சியமாகிய மக்கள் ஆட்சி மலருவதற்காக, நாமும் உழைப்போமாக என்று மாவீரரை மதிப்போரெல்லாரும் உறுதி கொள்வார்களாக.

- (அறிஞர் அண்ணா எழுதிய

சிங்கார வேலரின் நினைவுக் கட்டுரை நான்கு பாகங்களும் நிறைவு)

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.