சிங்கார வேலர் நினைவு நாள்

சிங்கார வேலரின் நினைவு நாளான இன்று பேரறிஞர் அண்ணா திராவிட நாடு 26/2/1946 இதழில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையை நான்கு பாகங்களாக பிரித்துத் தருகிறேன். நான்கும் இன்றே பதிவேறும். தவற விடாமல் வாசித்து விடுங்கள் 👇👇👇👇


சிந்தனைச் சிற்பி தோழர் மா. சிங்காரவேலர் இறந்துவிட்டார்; இலட்சியமே மூச்சாகக் கொண்டிருந்த சீரர் இந்தியா உப கண்டத்தின் முதல் பொது உடைமை வாதி காலமானார்.


 மூன்றாவது சர்வதேச அபேதவாத அங்கத்தினர் மூவர்; இந்தியாவில், அவர்களில் ஒருவர் இவர். அப்படி ஒருவர் இருந்தாரா? என்றும் கேட்கும், நான்கு கதர் ஜிப்பாக்களும்,'' 'காரல் மார்க்ஸ் படிப்போரும்?” ஏராளம். சோவியத்திலே பொது உடைமை ஆட்சி ஸ்திரமாவதற்கு முன்னாலேயே, இங்கு சென்னையிலே, கடலோரத்திஸ், மயிலையில் ஒரு புரட்சி வீரர் உலவிக்கொண்டிருந்தார். உலகிலே காணப்படும் கொடுமைகளைக் கண்டு, மனதிலே கோபம் அலை அலையாகக் கிளம்ப, அதனால் தூண்டப்பட்டு, யாரும் அதுவரையில் கேட்டறியாத கொள்கையை, பொது உடைமைத் தத்துவத்தைப் புரட்சிக் கனலுடன் கலந்து அளித்து வந்தவரே, தோழர் மா.சிங்காரவேலர் என்பதை, அவர்கள் அறியார்கள். தேசியத் தொழிலாளர் இயக்கங்களிலே அவர், பிரபலமாக இருந்த சில பல வருஷங்களிலே கூட, உரிய ஸ்தானம் அவருக்கு அளிக்கப்படவில்லை ; அவருடைய அறிவும் ஆற்றலும் அளவிடப்படவில்லை. வெட்டுக்கிளிகளும், பச்சோந்திகளும் புகழப்பட்ட நேரத்தில், புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்-மறக்கும்படிச் செய்யப்பட்டனர்.

அவருடைய திறமை, அறிவு, ஆற்றல், தியாக புத்தி ஆகியவைகளை அளவாகக்கொண்டு, மதிப்பிட வேண்டுமானால், தோழர் மா. சிங்காரவேலருக்கு லெனின், டிராட்ஸ்கி, சக்லத்வாலா போன்றவர்களின் வரிசையிலே இடந்தர வேண்டும். ஆனால் கந்த புராணம், காந்தி புராணம் படிக்கும் இருவகையினரையும் போற்றிப் புகழ்ந்த மக்கள், இந்த ஒப்பற்ற புரட்சி வீரளை, சாமான்யமாகக் கருதினர். நாளா வட்டத்திலே, சில இலட்சியவாதிகளுக்குத் தவிர, மற்றவர்களுக்கு அவருடைய பெயரும் மறந்து விட்டது என்று கூறிவிடலாம். 


தோழர் மா. சிங்காரவேலரே, ஏகாதிபத்தியத்தால் தாக்கப்பட்ட முதல் வீரர்—ஆனால் முப்புரி இல்லாத காரணத்தால் மங்கினார். அவருடைய பெருமைப் பாக்கள், படத் திறப்பு விழாக்கள், இல்லை. இராது!, அவர், மா. சிங்காரவேலுச் செட்டியார், பரதவர் குலம், (மீன் பிடிப்போர்) நெய்தல் நில நாயகன். சிங்காரவேல் சர்மாவாக இருந்திருந்தால், அவருடைய சிலையை மாஸ்கோவிலே நிறுவவேண்டும் என்று மயிலை கூறும்.


மா. சிங்காரவேலர் மறைந்தார் என்ற போதிலும் எதிர்பாராத திடுக்கிடக்கூடிய விதத்திலே நேரிட்ட மரணமல்ல. மரணத்தின்போது அவர் தம்முடைய உழைப்பு, வீண் போயிற்றோ என்ற சந்தேகம் கொண்டு சஞ்சலமடைந்திருக்கவும் மாட்டார். ஏனெனில் 11-2-46-ல் அவர் இறக்கும் பொழுது, அவருக்கு வயது 84. அவருடைய இரண்டு அடிப்படை இலட்சியங்களாகிய சுயமரியாதை, சமதர்மம் என்பவை, ஓங்கி வளர்ந்திருப்பதைக் கண்டபிறகே, அவரின் கண்கள் மூடின. 


சுயமரியாதையும் சமதர்மமும் வேறு வேறு கட்சிகளாக இருப்பானேன்? அது முறையல்லவே! படை பலமே சிதறுமோ என்ற கவலை மட்டும் அவருக்கு இருந்தது என்று கூறலாம். அதுவன்றி, அவருடைய பெயர் மங்கியது பற்றி நாம் மனம் வருந்துகிறோமேயன்றி, அவர் அது பற்றி எண்ணியிருப்பார் என்றோ, ஏங்கி இருப்பார் என்றோ எண்ணவில்லை. அந்த அஞ்சா நெஞ்சனுக்கு ‘பூர்ஷுவா உலகில் மதிப்புக் கிடைக்காது ; கிடைக்கவில்லை-கிடைக்காததே - அவருடைய மாத்துக் குறையவே இல்லை என்பதற்குச் சிறந்த அடையாளமுங்கூட.


இந்திய உபகண்டம், ஏகாதிபத்திய இரும்புப் பிடியிலே சிக்கியது கண்டு, எழுச்சி பெற்று எதிர்த்த முன்னணி வீரர்களில், மா. சிங்காரவேலர், முதல் வீரர்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.