ஐக்கிய முன்னணி தந்திரம் பாகம் -1

தலைப்பு_2, பாசிசத்திற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கத்தின்                  ஐக்கிய முன்னணி;   



முதலாளித்துவ நாடுகளில் பாசிசத்தை அதிகாரத்திற்கு வர விடாமல் தடுப்பது எப்படி? பாசிசம் வெற்றிப் பெற்று விட்டால் அதைத் தூக்கி எறிவது எப்படி?

முதலாவதாகக் கட்டாயம் செய்ய வேண்டியது ஓர் ஐக்கிய முன்னணியை அமைக்க வேண்டும்.

 ஒவ்வொரு தொழிற்சாலையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பிரதேசத்திலும், ஒவ்வொரு நாட்டிலும், உலகம் முழுவதிலும் தொழிலாளர்களின் செயல் ஒற்றுமையை உருவாக்குவதாகும். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பாட்டாளி வர்க்கத்தின் செயல் ஒற்றுமையானது அவர்கள் கையில் உள்ள ஒரு வலுமிக்கப் பேராயுதம் ஆகும். இப்பேராயுதம், பாசிசத்திற்கு எதிராகவும், வர்க்க விரோதிகளுக்கு எதிராகவும் வெற்றிகரமாகத் தற்காத்துக் கொள்வதற்காக மட்டுமல்ல, வெற்றிகரமான எதிர்த் தாக்குதலுக்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் சக்தியை அளிக்கிறது.


I)ஐக்கியமுன்னணியின் முக்கியத்துவம்


* பாட்டாளி வர்க்கத்தின் ஒரு வலுவான ஐக்கிய முன்னணி, உழைக்கும் மக்களின் இதரப் பகுதிகளிலும், விவசாயிகள், நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவ வர்க்கம், படிப்பாளிகள் முதலிய பகுதிகளிலும் தன்னுடைய மிகப்பெரிய ஆற்றல் மிக்கச் செல்வாக்கைச் செலுத்தும். ஒர் ஐக்கிய முன்னணி ஊசலாடும் பகுதிக்குக்கூடப் புத்துணர்ச்சியூட்டித் தொழிலாளி வர்க்கத்தின் பலத்தின்மீது ஒரு நம்பிக்கை உண்டாக்கும்.


* ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு தங்கள் சொந்த நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் தவிரக் காலனிகள், அரைக்காலனிகளாக உள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள மக்களுக்கும் நேசச் சக்திகளாக வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பாட்டாளி வர்க்கம் பிளவுபட்டுள்ளக் காரணத்தினால், அதன் ஒரு பகுதி முதலாளித்துவ வர்க்கத்துடன் சமரசக்கூட்டு வைத்துக் கொள்ளும் கொள்கையை அதிகரிக்கின்ற காரணத்தினால், அதிலும் குறிப்பாக காலனிகளிலும், அரைக் காலனிகளிலும் ஒடுக்கும் முறை அமைப்பை நிலைநாட்டிக் கொண்டுள்ள கொள்கையை ஆதரித்து நிற்கின்ற காரணத்தினால், காலனி, அரைக்காலனி நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் வேறுபடுத்தித் தனிமைப்படுத்தி விடுகிறது. 


* ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கம் காலனி நாட்டு மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் திசைகளில் எடுக்கப்படும் செயல் ஒற்றுமைக்காண நடவடிக்கை ஒவ்வொன்றும் காலனி, அரைக்காலனிகள் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கியமான ரிசர்வ் படையாக மாற்றம் கொள்வதைக் குறிக்கிறது. மேலும் தேசிய சர்வ தேசிய அளவிலான பாட்டாளி வர்க்கத்தின் சார்பில் ஒன்றுபட்ட செயல்பாட்டைக் கொண்டு வந்து விட்டோமானால் நமக்கு மிகப்பெரிய எதிர்கால வாய்ப்புகள் இருப்பதை வெளிப்படுத்துகிறது. 

தனித்தனி நாடுகளிலும், உலகம் அனைத்திலும் பாட்டாளி வர்க்கத்தின் செயல் ஒற்றுமையைக் கொண்டு வருவது சாத்தியமா? 

ஆம் சாத்தியமே. கம்யூனிஸ்ட் அகிலம் செயல் ஒற்றுமைக்கு எந்தவித நிபந்தனைகளையும் வைக்க விரும்பவில்லை. ஆனால் ஒன்றே ஒன்றுதான். அதுவும் ஒரு சாதாரண நிபந்தனைதான். அதைத் தொழிலாளர்கள் அனைவரும் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். அதாவது, நமது செயல் ஒற்றுமை பாசிசத்திற்கு எதிராகத் திருப்பப்பட்டிருக்க வேண்டும். முதலாளித்துவத்தின் தாக்குதலுக்கு எதிராக, யுத்த பயமுறுத்தளுக்கு எதிராக, நமது வர்க்கவிரோதிக்கு எதிராகத் திருப்பட்டிருக்க வேண்டும். இதுதான் நமது நிபந்தனை.


ஐக்கிய முன்னணியை எதிர்ப்பவர்களின் பிரதான வாதங்கள்;


1.கம்யூனிஸ்டுகளுக்கு ஐக்கிய முன்னணிக் கோஷம் என்பது வெறும் சூழ்ச்சித் திட்டம்தான் என்றுச் சிலர் கூறுகிறார்கள். 

அப்படியானால் நீங்கள் நேர்மையான முறையில் ஐக்கிய முன்னியில் பங்கு கொண்டு, கம்யூனிஸ்ட்களின் சூழ்ச்சித் திட்டங்களை ஏன் அம்பலப்படுத்தக் கூடாது. நாங்கள் தொழிலாளி வர்க்கத்தின் செயல் ஒற்றுமையை விரும்புகிறோம். அதன் மூலம் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக அதனுடைய போராட்டத்தின் பலமாக வளரலாம். அதன்மூலம் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தின் தாக்குதலுக்கு எதிராக, பாசிசத்திற்கு எதிராகத் தனது தற்கால நலவுரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டே நாளைக்கு எதிர்காலத்தில் அதனுடைய முழு விடுதலைக்கான ஆரம்ப சூழ்நிலைமைகளை உருவாக்குவதற்கான நிலையில் இருக்கக்கூடும்.


2.கம்யூனிஸ்டுகள் எங்களைத் தாக்குகிறார்கள் என்று பிறர் கூறுகிறார்கள். 

வர்க்க விரோதிக்கு எதிராகத் தொழிலாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணிக்காக நிற்கக்கூடிய யாரையும், எந்த நபர்களையும், எந்த அமைப்புகளையும் அல்லது எந்தக் கட்சிகளையும் நாங்கள் தாக்குவதில்லை. ஆனால், பாட்டாளி வர்க்கத்திற்காகவும், அதனுடைய லட்சியங்களின் நிறுத்தமும், தொழிலாளிகளின் செயல் ஒற்றுமைக்கும் முட்டுக்கட்டையாக உள்ள நபர்களையும், அமைப்புகளையும், கட்சிகளையும் விமர்சனம் செய்வது எங்களுடைய கடமையாகும்.


3.கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்து நாங்கள் ஐக்கிய முன்னணி அமைக்க முடியாது. காரணம், அவர்கள் வேறுபட்ட வேலைத் திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று ஒரு கூட்டத்தார் கூறுகிறார்கள். 

நீங்களே கூறுகீறிர்கள் முதலாளித்துவக் கட்சிகளின் வேலைத் திட்டத்திலிருந்து வேறுபட்ட ஒரு திட்டத்தை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று, இருப்பினும் நீங்கள் அந்த முதலாளித்துவக் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டு அரசாங்கத்தை அமைப்பதில் அந்தத் திட்ட வேறுபாடு உங்களைத் தடை செய்யவில்லையே. 


4.பாசிசத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகளைக் காட்டிலும் முதலாளித்துவ ஜனநாயகக் கட்சிகள் நல்லபடியான நேச சக்திகள் என்று ஐக்கிய முன்னணியை எதிர்ப்பவர்களும் முதலாளித்துவ வர்க்கத்துடன் கூட்டு அரசாங்கம் அமைக்க வக்காலத்து வாங்குபவர்களும் கூறுகிறார்கள். 

ஆனால் ஜெர்மனியில் அனுபவம் எதைக் காட்டுக்கிறது? இந்த நல்ல நேசச் சக்திகளுடன் சமூக ஜனநாயகவாதிகள் கூட்டு சேரவில்லையா? அதனுடைய விளைவுகள் என்ன? 


5.கம்யூனிஸ்ட்களுடன் ஐக்கிய முன்னணி அமைத்துதோம் என்றால், குட்டி முதலாளித்துவ வர்க்கப் பகுதிகள் சிவப்பு அபாயம் கண்டு பயந்து நம்மை விட்டு ஓடிப்போய் பாசிஸ்டுகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வார்கள் என்று அடிக்கடி சிலர் கூறக் கேட்டிருக்கிறோம். 

ஆனால் ஐக்கிய முன்னணி விவசாயிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும், கைத் தொழிலாளர்களுக்கும், உழைக்கும் படிப்பாளிகளுக்கும் எதிரான அவர்களை அச்சுறுத்தும் அணியா? இல்லை. ஐக்கிய முன்னணி பெரும் முதலாளித்துவ வர்க்கத்தையும், நிதி குவியல் கூட்டத்தினரையும், நிலப் பிரபுக்களையும், இதர சுரண்டல் கூட்டத்தாரையும், குட்டி முதலாளித்துவ வர்க்கங்களை எல்லாம் முழுதும் நாசம் செய்யக்கூடிய ஆட்சியையும் அச்சுறுத்துவதாகும். அவர்களுக்கு ஆபத்து விளைவிப்பதாகும்.


6.சமூக ஜனநாயகம் ஜனநாயகத்திற்காக நிற்கிறது. கம்யூனிஸ்டுகள் சர்வாதிகாரத்திற்காக நிற்கிறார்கள். எனவே, கம்யூனிஸ்ட்களுடன் நாம் ஐக்கிய முன்னணி அமைக்க முடியாது. என்று சில சமூக ஜனநாயகத் தலைவர்கள் கூறுகிறார்கள். 

இப்போது நாங்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்னும் காரியத்திற்காகவா உங்களுடன் ஐக்கிய முன்னணி என்னும் ஆலோசனையை முன் வைக்கிறோம்? நாங்கள் இப்போது அதை உடனடிக் கோஷமாக வைக்கவில்லை.


7.கம்யூனிஸ்டுகள் ஜனநாயகத்தை அங்கீகரிக்கட்டும். அதைப் பாதுகாக்க நாங்கள் தயார் என்று அவர்கள் முன் வரட்டும். நாங்கள் அவர்களுடன் ஐக்கிய முன்னணிக்குத் தயார் என்று சிலர் கூறுகிறார்கள். 

நாங்கள் சோவியத் ஜனநாயகத்தை அனுசரிக்க கூடியவர்கள். அது உழைக்கும் மக்களுடைய ஜனநாயகமாகும். ஆனால் முதலாளித்துவ நாடுகளில் பாசிசமும் முதலாளித்துவ பிற்போக்குச் சக்திகளும் தாக்குகின்ற முதலாளித்துவ ஜனநாயகச் சுதந்திரங்களை ஒவ்வொரு அங்குலமும் பாதுகாக்க நாங்கள் போராடுகிறோம். தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். ஏனென்றால், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் நலவுரிமைகள் இதை வலியுறுத்துகின்றனர். 


8.இந்தச் சின்னஞ்சிறிய கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்குகொண்டு லேபர் கட்சி போன்ற பெரியக் கட்சிகள் உருவாக்கும் ஐக்கிய முன்னணியில் என்ன செய்துவிட முடியும் என்று ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்களும், கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த லேபர் கட்சித் தலைவர்களும் கூறுகிறார்கள். 

சின்னஞ்சிறிய ஆஸ்திரியக் கம்யூனிஸ்ட் கட்சிதான் ஆஸ்திரியாவில் ஏற்பட்ட பாசிஸ்டு அபாயத்தைச் சரியானத் தருணத்தில் எச்சரித்துக் காட்டித் தொழிலாளர்களைப் போராட்டத்திற்கு அறைகூவல் விட்டது. கம்யூனிஸ்டுகள் எண்ணிக்கையில் பல இடங்களில் மற்றவர்களை ஒப்பிடும்போது சுருக்கமாக இருந்தபோதிலும், பாட்டாளி வர்க்கத்தின் தீவிரமான செயல்பாட்டில் அவர்கள்தான் உந்துசக்தியாக இருக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் சில பத்தாயிரமாக இருந்தாலும், உலகக் கம்யூனிச இயக்கத்தின், அகிலத்தின் பகுதியாக இருக்கின்றனர்.


9.ஐக்கிய முன்னணி ஏற்பட்டும் சார்பகுதியில் பாஸிஸம் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியவில்லையே என்று மற்றொரு ஆட்சேபனையை முன் வைக்கிறார்கள்.

இவர்கள் பாசிசம் வெற்றி பெறுவதற்கு எல்லாவிதமான உதவிகளையும், வேலைகளையும் செய்து விடுகிறார்கள். பிறகு தாங்கள் உருவாக்கிய ஐக்கிய முன்னணி, அதுவும் கடைசி நேரத்தில் உருவாக்கியது, தொழிலாளர்களின் வெற்றிக்கு இட்டுச் செல்லவில்லை என்று கெடுநோக்கான எக்காளத்தில் கும்மாளம் அடிக்கிறார்கள்.


10.நாம் கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்து ஐக்கிய முன்னணி அமைப்பதனால், நாம் கூட்டு சர்க்காரில் இருந்து விலக வேண்டி இருக்கும். அப்படி நாம் விலகி விட்டால், அந்த இடத்தில் பிற்போக்கானக் கட்சிகள், பாசிஸ்ட் கட்சிகள் வந்து புகுந்து கொள்வார்கள். என்று பல்வேறு நாடுகளில் காபினேட் மந்திரிகளாக உள்ள சமூக ஜனநாயகத் தலைவர்கள் கூறுகிறார்கள். 

ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி கூட்டு சர்க்காரில் அங்கம் வகிக்கவில்லையா? அங்கம் வகித்தது. ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி கூட்டு சர்க்காரில் அங்கம் வகிக்கவில்லையா? அங்கம் வகித்தது. ஸ்பெயின் சோசலிஸ்டுகள் முதலாளித்துவ வர்க்கத்தோடு சேர்ந்து ஒரே அரசாங்கத்தில் இருக்கவில்லையா? அவர்களும் இருந்தார்கள். இந்த முதலாளித்துவ சர்க்கார்களில் சமூக ஜனநாயகக் கட்சிகள் பங்கு கொண்டதனால் பாசிசம் பாட்டாளி வர்க்கத்தைத் தாக்குவதைத் தடுக்க முடிந்ததா? எனவே முதலாளித்துவ அரசுகளில் சமூக ஜனநாயகக் கட்சி மந்திரிகள் இருப்பதன் மூலம் மட்டும் பாசிசத்திற்கு அவர்கள் தடையாக இருந்து விட முடியாது என்பது பகல் வெளிச்சம் போல் தெள்ளத் தெளிவானதாகும்.


11.கம்யூனிஸ்டுகள் சர்வாதிகாரிகள் போல் செயல்படுகிறார்கள். அவர்கள் முடிவு செய்துகொண்டு அம் முடிவுகளை நம் மீது திணிக்கிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.

 நாங்கள் எதையும் முடிவு செய்து அம்முடிவுகளை யார் மீதும் திணிக்க வில்லை, எங்களுக்கு எது சரியென்றுப்படுகிறதோ அதை நிறைவேற்றப்பட்டால், உழைக்கும் மக்களுடைய நலஉரிமைகளுக்கு அது உகந்ததாக இருக்கும் என்று நாங்கள் கருதினால் அவற்றை அறிக்கைகளாக முன் வைக்கிறோம். இது மிகவும் சரியானது என்பது மட்டுமல்ல. தொழிலாளர்களின் பெயரில் செயல்படும் சகலப் பேருடைய கடமையுமாகும். நீங்கள் கம்யூனிஸ்டுகளின் சர்வாதிகாரத்தைக் கண்டு பயப்படுகிறீர்களா? நாம் கூட்டாகவே எங்களுடைய அறிக்கைகளையும், உங்களுடைய அறிக்கைகளையும் தொழிலாளர்கள் முன்பாக வைப்போம். அவற்றைக் கூட்டாகவே விவாதிப்போம். அந்தத் தொழிலாளர்கள் அனைவருடன் சேர்ந்துத் தொழிலாளி வர்க்கத்தினுடைய லட்சியத்திற்கு எவை மிக அதிகமாக பயனுள்ளவையாக இருக்கின்றனவோ அவற்றை எடுத்துக் கொள்வோம்.

-இவ்வாறு ஐக்கிய முன்னணிக்கு எதிரான இந்த வாதங்கள் அனைத்தும் சமூக ஜனநாயகப் பிற்போக்குத் தலைவர்களின் சாரம் இல்லாத சாக்குப்போக்காகும். அவர்கள் பாட்டாளி வர்க்கத்துடனுள்ள ஐக்கிய முன்னணியைக் காட்டிலும் முதலாளித்துவ வர்க்கத்துடன் உள்ள ஐக்கிய முன்னணியைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். எனவே ஐக்கிய முன்னணி ஒரு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலுமான பாட்டாளி வர்க்கத்தின் செயலொற்றுமை அவசியமுமாகும். அவை மிகவும் சாத்தியமாகும் என்பதை மேலும் மேலும் அதிகமாக உறுதிப்பாட்டுடன் சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் நம்பிக்கைக் கொள்கிறது.

தொடரும்...

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.