உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு; பாகம் - 2

தொழிற்சங்க இயக்கத்தின் அதிவேக வளர்ச்சியால் 1850-களில் இக்கோரிக்கை புதிய உத்வேகத்தை அடைந்தது. 1857-ல் ஏற்பட்ட நெருக்கடி இந்த உத்வேகத்திற்கு ஒரு தடையானது. இருந்தபோதிலும் நன்கு வளர்ச்சி பெற்ற தொழிற்சங்கங்கள் அதற்கு முன்பே இக்கோரிக்கையை அடைந்தன. இவ்வாறு குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக வெகு தூரத்தில் இருந்த ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன் வைத்து 1858-ல் அதை அடைவதில் வெற்றியும் பெற்றனர்.

எட்டு மணி நேர இயக்கம் அமெரிக்காவில் துவங்கியது.



1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன. ஆனாலும் இதற்கு ஒரு தலைமுறை முன்பே ‘தேசிய தொழிற்சங்கம்’ குறைந்த வேலை நேரத்துக்கான கோரிக்கையை முன்வைத்து பரந்த இயக்கத்தையே நடத்தியது. ‘தேசிய தொழிற் சங்கம்’ அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க ஸ்தாபனமாக அப்போது விளங்கியது.

1861-62-ல் உள்நாட்டுப் போர் துவங்கியது. இதற்கு சற்று முன்பே துவங்கப்பட்ட வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கம், இயந்திர தொழிலாளர்கள் சங்கம், கொல்லர்கள் சங்கம் போன்ற தேசிய தொழிற்சங்கங்கள் அப்போது மறையத் துவங்கின. ஆனபோதிலும் அதற்கடுத்த சில ஆண்டுகளில் பல உள்ளூர் தேசிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் எழுச்சியும் உருவானது. இவ்வாறு பல தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து 1866, ஆகஸ்டு 20-ஆம் நாள் பால்டிமோர் என்னுமிடத்தில் தேசிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இதன் தலைவராக வில்லியம் எச. சில்விஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாற்றியமைக்கப்பட்ட வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கத்தின் தலைவராவார். தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியமானவராய் கருதப்பட்ட இவர் ஒரு இளைஞர். இவர் லண்டனில் இருந்த முதலாவது இனடர் நேஷனல் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். இதன் காரணமாக தேசிய தொழிற்சங்கத்துக்கும் இன்டர்நேஷனலின் பொதுக்குழுவுக்கும் இடையே உறவை ஏற்படுத்த அவரால் முடிந்தது.தேசிய தொழிற்சங்கத்தின் முதல் மாநாடு 1866-ல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து இந்நாட்டின் உழைப்பை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனையடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்ட தீர்மானிக்கிறோம்”.

மேலும் இம்மாநாட்டில் 8 மணி நேர வேலை நாளை சட்டபூர்வமாக்க சுயேச்சையான அரசியல் நடவடிக்கை வேண்டும் மற்றும் தொழிலாளர் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. தேசிய தொழிற்சங்க போராட்டங்களினால் எட்டு மணி நேர குழுக்கள் ஏற்பட்டன. மேலும் இச்சங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் பல மாநில அரசுகள் அரசு வேலைகளில் எட்டு மணி நேர வேலை நாளை அமுல்படுத்தின. 1868-ல் அமெரிக்க காங்கிரசும் இதே போன்ற ஒரு சட்டத்தை இயற்றியது. போஸ்டனைச் சேர்ந்த இயந்திர தொழிலாளியான ‘ஐராஸ் டூவர்டு’ என்பவர்தான் இந்த எட்டு மணி நேர இயக்கத்தின் எழுச்சியூட்டும் தலைவராக விளங்கினார். ஆரம்பத்தில் தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் பழமையானதாக இருந்தன. இவை எல்லா நேரங்களிலும் சரியாக இருந்தன என்றும் சொல்ல முடியாது. ஆனாலும் அடிப்படியில் இந்த இயக்கம் பாட்டாளி வர்க்கத்தின் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருந்தது. மேலும் திருத்தல்வாத தலைவர்கள், முதலாளித்துவ அரசியல்வாதிகள் இந்த இயக்கத்தில் ஊடுருவாமல் இருந்திருப்பார்களேயானால் இந்த இயக்கம் போர்க்குணமிக்க தொழிலாளர் இயக்கத்தின் ஆரம்ப கட்டமாக இருந்திருக்கும். இவ்வாறு நான்கு தலைமுறைகளுக்குப் பின் தேசிய தோழிற்சங்கமானது முதலாளித்துவ அடிமைத்தனத்திற்கெதிராகவும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்காகவும் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டது.

சில்விஸ் தொடர்ந்து லண்டனிலுள்ள இன்டர்நேஷனலோடு தொடர்பு கொண்டிருந்தார். இவரைத் தலைவராகக் கொண்ட 1967-ல் நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாடு சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என முடிவு செய்தது. 1869-ல் இன்டர்நேஷனலின் பொதுக்குழுவின் அழைப்பிற்கிணங்க பேஸிலில் நடைபெற்ற இண்டர்நேஷனல் காங்கிரசுக்கு ஒரு பிரதிநிதியை அனுப்ப முடிவு செயதது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாநாட்டிற்குச் சற்று முன்பு சில்விஸ் மரணமடைந்தார். எனவே சிக்காகோவிலிருந்து வெளிவந்த ‘வொர்க்கிங்மென்ஸ் அட்வகேட்’ பத்திரிகையின் ஆசிரியரான ஏ.சி.காமெரான் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார்.

மாநாட்டில் பொதுக்குழு அந்த நம்பிக்கையூட்டும் இளம் அமெரிக்க தொழிலாளர் தலைவனுக்கு ஒரு விஷேச தீர்மானத்தில் அஞ்சலி செலுத்தியது. ”பாட்டாளி வர்க்க ராணுவத்தின் தளபதியாக பத்தாண்டு காலம் மாபெரும் திறமையோடு பணியாற்றிய சில்விஸ், எல்லோருடைய கவனமும் திரும்பும் வகையில் செயல்பட்டவர். ஆம் அந்த சில்விஸ்தான் இறந்து விட்டான்” என்றது அஞ்சலி தீர்மானம். சில்விஸின் மறைவு தேசிய தொழிற்சங்கத்தின் அழிவுக்கு ஒரு காரணமாகி பின்னால் அது மறையவும் காரணமாயிற்று.

தொடரும்.....

Comments

Post a Comment

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.