ஐக்கிய முன்னணி தந்திரம் பாகம்-4

பிரிட்டனில் பாசிசத்திற்கு எதிராக

பிரிட்டிஷ் தொழிலாளர்களின் நடவடிக்கையின் பலனாக மோஸ்லியின் பாசிஸ்ட் கட்சி தற்காலிகமாகப் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால், தேசிய அரசாங்கம் தொழிலாளி வர்க்கத்திற்கு விரோதமாகப் பல பிற்போக்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் விளைவாக முதலாளித்துவ வர்க்கம் ஒரு பாசிஸ்ட் ஆட்சிக்கு மாறுவதற்கானச் சூழ்நிலைகள் உண்டாக்கப்படுகின்றன.

இன்றையக் கட்டத்தில் பாசிஸ்டு அபாயத்தை எதிர்த்துப் போராடுவதென்பது முதலாவதாக தேசிய அரசாங்கத்தையும் அதன் பிற்போக்கான நடவடிக்கைகளையும் எதிர்த்துப் போராடுவதாகும். வேலையில்லாதோரின் கோரிக்கைகளுக்காக, கூலி வெட்டுகளுக்கு எதிராக மக்களின் வாழ்க்கைத் தரம் கீழிறக்குவதற்கு எதிராக மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு உதவிகரமாக உள்ள சட்டங்களை மாற்றுவதற்காகப் போராட வேண்டும். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு புதிய தொழிலாளர் அரசாங்கம் அமைய வேண்டும் எனும் முழக்கத்தின் கீழ அதிகமான அளவில் உழைக்கும் மக்களின் ஒற்றுமை அதிகரித்து வருகிறது. மக்களிடம் உள்ள இந்த கோரிக்கையை கம்யூனிஸ்டுகள் புறக்கணிக்க முடியுமா? கூடாது தோழர்களே! 

அவர்களிடம் நாம் வெளிப்படையாக ஒன்றைக் கூறவேண்டும். சோவியத் அரசு அமைப்பதுதான் முதலாளித்துவ நுகத்தடியிலிருந்து தொழிலாளர்களை முழுமையாக விடுவிக்கும் ஆற்றல் படைத்ததாகும். ஆனால் நீங்கள் தொழிலாளர் கட்சி அரசு வேண்டும் என்கிறீர்கள்.  தேசிய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக உங்களோடு நாங்கள் போராடியிருக்கிறோம். இதற்கு முன்னர் இருதடவைகளிலும் தொழிலாளர் கட்சி அரசு தொழிலாளி வர்க்கத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை  நிறைவேற்றத் தவறியிருக்கிறது. இருந்த போதிலும் ஒரு புதிய தொழிலாளர் அரசை கொண்டுவருவதற்காக நீங்கள் நடத்தும் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.  இந்த அரசு சோஷலிச நடவடிக்களை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.  

உழைக்கும் மக்களுடைய அத்தியாவசியமான பொருளாதார, அரசியல் நலவுரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு பொது வேலைத்திட்டத்தைக் கூட்டாக சேர்ந்து விவாதித்து அதன் மூலம் செயலொற்றுமையை உருவாக்குவோம். இதன் மூலம் முதலாளித்துவம் மற்றும் பாசிசதினுடையத் தாக்குதலைத் முறியடிக்க முடியும். கம்யூனிஸ்டுகள்,  தங்களுடைய உடனடியான அரசியல் குறிக்கோள்களை வகுத்துக் கூறுவதில், மக்கள் இயக்கத்தின் தேவையான  படிப்படியான கட்டங்களை விட்டு, பல படிகளை ஒரே தடவையில் திடீர்ப் பாய்ச்சலில் தாண்டுவதற்கு முயலக்கூடாது. தொழிலாளி வர்க்கம் தனது சொந்த அனுபவத்தில் தனது பிரமைகளை எல்லாம் விட்டொழித்து கம்யூனிசத்தின்பால் வர வேண்டும்.

பிரான்சில் பாசிசத்திற்கு எதிராக

1935 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி பாரிஸ் நகரத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு பாசிஸ்ட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல பிரெஞ்ச் நகரங்களிலும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இது வெறும் தொழிலாளர்களின் ஐக்கிய முன்னணி இயக்கம் மட்டுமல்ல, இது பாசிசத்திற்கு எதிரான விரிவான பொதுவான மக்கள் கூட்டு முன்னணியின் தொடக்கமாகும். இந்த ஐக்கிய முன்னணி இயக்கம் தொழிலாளி வர்க்கத்தின் நம்பிக்கையை அதனுடைய சொந்த சக்திகலுக்கிடையே அதிகப்படுத்துகிறது.

விவசாயிகள், நகர்ப்புற குட்டி முதலாளித்துவ வர்க்கம், படிப்பாளி வர்க்கம் ஆகியவற்றை இணைத்து பாட்டாளி வர்க்கம் செலுத்த வேண்டிய தலைமைப் பாத்திரத்தை செலுத்தி செயல்பட வேண்டிய உணர்வு நிலையை அது பலப்படுத்துகிறது. வெமக்கள் பகுதிகள் இடையே கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கை அது விரிவு படுத்துகிறது. இதன் மூலம் பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தை உறுதிப்படுத்துகிறது. பாசிசத்தின் அபாயத்தைப் பற்றி சரியான நேரத்தில் மக்களிடத்தில் உஷார்த் தன்மையை ஏற்படுத்துவதற்கு எழுச்சியை உணர்ச்சியை ஊட்டிக் கொண்டிருக்கிறது.

பிரஞ்சுமக்களில் மிகப் பெரும்பான்மையோர் சந்தேகத்திற்கு இடமின்றி பாசிசத்திற்கு எதிர்ப்பாகவே இருக்கிறார்கள். ஆனால், முதலாளித்துவ வர்க்கம் தனது ஆயுதப் படை ராணுவ பலத்தின் மூலம் மக்களுடைய விருப்பத்தை மீறுகிறது. பாசிஸ்ட் இயக்கம், ஏகபோக முதலாளித்துவம், முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாங்க எந்திரம், பிரெஞ்சு இராணுவத்தின் தளபதிகள், கத்தோலிக்கச் சர்ச்சின் பிற்போக்கு தலைவர்கள் முதலிய சகல பிற்போக்கு சக்திகளின் ஆதிக்கக் கூட்டம் அனைத்தின் பெயர் ஆதரவின் மூலம் எந்தவிதமான தடங்கலுமின்றி சுதந்திரமாகவே,  தாராளமாகவே தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது பாசிசம்.

மிக வலுவான பாசிஸ்ட் அமைப்பான கிரோயிஷ் டிக்யு என்பதில் 3 லட்சம் ஆயுதப்பானியான தொண்டர்கள் இருக்கிறார்கள். அதற்கு முதுகெலும்பாக 60 ஆயிரம் பேர் ரிசர்வில் எப்போதும் தயாராக இருந்து கொண்டிருக்கிறார்கள். போலீஸ், ராணுவம் விமானப்படை, அரசாங்க  அலுவலகங்கள் அனைத்திலும் மிகவும் பலமானப் பிடிப்பை கொண்டிருக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற முனிசிபல் தேர்தல் பிரான்சில் புரட்சிகரமானச் சக்திகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பது மட்டுமல்லாமல் பாசிஸ்ட் சக்திகளும் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் காட்டுகின்றன. பாசிசம் விவசாயிகள் மத்தியில் விரிவாக ஊடுருவுவதில் வெற்றி பெறுமானால் ராணுவத்தில் ஒரு பகுதி நடுநிலைமை வகித்தது மற்றொரு பகுதியைத் தங்கள் பக்கம் ஆதரவாகக் கொண்டு வருவதிலும், வெற்றி பெற்று விடுமானால் பாசிஸ்டுகளை அதிகாரத்திற்கு வருவதிலிருந்து பிரெஞ்ச் உழைக்கும் மக்களால் தடுத்து விட முடியாது. சகல பாசிஸ்ட் எதிர்ப்பு சக்திகளும் இதுவரை அடைந்துள்ள சாதனைகளில் மட்டும் திருப்தியடைந்து சும்மா இருந்துவிட முடியாது. 

பிரெஞ்சு தொழிலாளி வர்க்கத்தின் கடமைகள்:

1. அரசியல்துறையில் மட்டுமல்லாமல், பொருளாதாரத் துறையிலும் ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும். ஐக்கிய முன்னணியின் வலுவின் மூலம் சீர்திருத்தவாத லேபர் கான்பெடரேஷன் தலைவர்கள் ஐக்கிய முன்னணி அமைப்பதற்கு காட்டும் எதிர்ப்பை முறியடிக்க வேண்டும்.

2. தொழிற்சங்க ஒற்றுமையைச் சாதிப்பதற்கு வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டத் தொழிற்சங்கங்களை உருவாக்குவது.

3. விரிவான விவசாய மக்கள், குட்டி முதலாளித்துவ மக்கள் பகுதிகளையும் பாசிஸ்டு எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ப்பது. பாசிஸ்ட் எதிர்ப்பு மக்கள் கூட்டணியின் வேலைத்திட்டத்தில் அவர்களுடைய அவசர அவசியமான கோரிக்கைகளை சேர்த்து அவற்றில் விசேஷ கவனம் செலுத்த வேண்டும்.

4. பாசிஸ்ட் எதிர்ப்பு இயக்கம் ஏற்கனவே பலமடைந்து இருப்பதை மேலும் பலப்படுத்த, விரிவுபடுத்த வேண்டும். பாசிஸ்டு எதிர்ப்பு கூட்டணியில் ஒரு சார்பில் மட்டுமல்லாது, சகல சார்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளைப் பரந்த அளவில் உருவாக்க வேண்டும்.

5. பிரான்சில் குடியரசுக்கு எதிரானச் சதிகாரர்கள், ஹிட்லரின் ஏஜென்ட்கள் ஆகியோர்களின்  பாசிஸ்டு நிறுவனங்களைக் கலைக்கவும், நிராயுதபாணிகளாக நிர்ப்பந்திக்க வேண்டும்.

6. அரசாங்க எந்திரம், இராணுவம், போலீசு ஆகியவற்றில் பாசிஸ்ட் திடீர் ஆதிக்க கழகத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் சதிகாரர்களை வெளியேற்ற வேண்டும்.

7. பாசிசத்தின் முக்கியமான பலமான தலங்களில் ஒன்றான கத்தோலிக்க சர்ச்சின் பிற்போக்குக் கூட்டத் தலைவர்களை எதிர்த்துள்ள போராட்டத்தை வளர்க்க வேண்டும்.

8. பாசிஸ்ட் எதிர்ப்பு இயக்கத்துடன் ராணுவத்தை இணைக்க வேண்டும். குடியரசையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாத்து நிற்கும் கமிட்டிகளை ராணுவ அணிகளில் உருவாக்க வேண்டும். அரசியல் சாசனத்திற்கு எதிராகத் திடீர் கலகம் செய்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்குச் சாதகமாக ராணுவத்தை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு எதிராக ராணுவத்தைத் தயார் செய்ய வேண்டும். ஜெர்மன் பாசிசத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான சமாதான லட்சியத்தைப் பாதுகாக்கும் பிரஞ்ச் சோவியத் - ஒப்பந்தத்தை உடைத்து நாசப்படுத்த பிரான்சிலுள்ள பிற்போக்குச் சக்திகள் செய்யும் வேலைகளைத் தடுக்க வேண்டும்.

பாசிஸ்டு எதிர்ப்பு இயக்கம் ஒரு சர்க்கார் அமைப்பதை நோக்கி இட்டுச் சென்று அது பாசிசத்தை எதிர்த்து சொல்லளவில் அல்லாமல் செயலளவிலும் உண்மையான ஒரு போராட்டத்தை நடத்துமானால் பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டணியின் கோரிக்கைகள் அடங்கிய வேலைத் திட்டத்தைச் சரியாக நிறைவேற்றுமானால் கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு முதலாளித்துவ அரசுக்கும் பரம விரோதியாக இருக்கும், அதே சமயத்தில் ஒரு சோவியத் அரசை ஆதரிக்கும், அதே சமையத்தில் பாசிஸ்ட் அபாயம் அதிகரித்து வரும் நேரத்தில் அத்தகைய ஒரு கூட்டணி அரசை ஆதரிக்க நிச்சையம் தயாராக இருக்கிறது. 

தொடரும்……..


Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.