மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்!

கிளாரா ஜெட்கின் (1857-1933)



ரஷ்யப் புரட்சியின் தலைவர் லெனின் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ரஷ்யப் புரட்சி அவரது அறைகூவலால் நடக்கவில்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்த அறைகூவலை விடுத்தவர் தோழர்.கிளாரா ஜெட்கின். ஆனால் அவரும் கூட புரட்சி செய்யக் கோரி அறைகூவல் விடுக்கவில்லை. 1917 மார்ச் 8 ஐ (பழைய காலண்டரின்படி 1917 ஃபிப்ரவரி 26) உழைக்கும் பெண்கள் தினமாக அனுஸ்டிக்கக் கோரிதான் அறைகூவல் விடுத்தார். மக்கள் புரட்சிக்குத் தயாராக இருக்கும் தருணத்தில் சிறுபொறியும் காட்டுத் தீயை உருவாக்கும். எனவே பெண்கள் தினம் கொண்டாடத் திரண்ட உழைக்கும் பெண்கள் 400 ஆண்டுகளாக ரஷ்யப் பெருநிலத்தை ஆண்ட ஜார் பரம்பரை ஆட்சியைத் தூக்கி எறிந்தனர். 

அந்த வகையில் ரசியப் புரட்சியின் பெருவெடிப்பிற்குத் திரியில் தீ வைத்த பெருமை கிளாரா ஜெட்கிணைச் சாரும்.

ஜெர்மனியின் சாக்ஸ்ஸானி பகுதியில் ஒரு பள்ளி ஆசிரியர் மகளாகப் பிறந்த கிளாரா எய்ஸ்னர் தனது தாயாரிடமிருந்து சிறு வயதிலேயே ஆழமான வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றார். தந்தை ஜெர்மானியர். தாய் ஒரு ஃபிரெஞ்சுப் பெண்மணி. அவர் பல மொழிகள் அறிந்த இலக்கியம், கலை, அரசியல் புரிதல் உள்ளவர் என்பதால் கிளாராவைச் சுடர்விடச் செய்த முதல் தீப்பொறியை அவரிடமிருந்தே பெற்றுள்ளார். 

1872 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதிலேயே, பள்ளி மாணவியாக ஜெர்மனியின் சோசலிசக் கட்சியாக வளர்ந்து வந்த ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் பணியாற்ற ஆரம்பித்துவிட்டார். ஆனால் அன்று ஜெர்மனியில் பெண்கள் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக முடியாது. பெண்கள் அரசியலில் ஈடுபடுவது என்பதே சட்டவிரோதம் எனும் நிலையில் அவர் புதுப் பாதை சமைப்பவராக தெரிந்த திசையில் நடப்பவராக அல்ல, புதிய திசையை உற்றுவாக்குபவராக தனது பணியை ஆரம்பித்தார். 

1877 ஆம் ஆண்டு அவர் ஆசிரியராக லீப்ஸிக் நகரில் பலகலைக் கழகக் கல்வியை முடித்தபோது கட்சி அணிகளில் நன்கு அறியப்பட்ட தலைவராக ஆகியிருந்தார். 

மார்க்சியத்தின் சகல அம்சங்களிலும் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றிருந்தாலும் மார்க்சியப் பெண்ணியம்’ அவர் தொடங்கிவைத்ததுதான். ரோசா லக்ஸம்பர்க், அலெக்ஸாண்ட்ரா கொலந்தாய், குருப்ஸ்கயா போன்ற பின்னால் வந்த புகழ் பெற்ற பெண்ணியவாதிகள், மார்க்சிஸ்ட்டுகள் எல்லாம் அவர் அடிதொட்டு வந்தவர்கள்தான். 

1879 ஆம் ஆண்டு பிஸ்மார்க் சமுக ஜனநாயகக் கட்சியை தடைசெய்தார். கட்சியே ரகசியக் கட்சியாக மாறியது. இந்தக் காலகட்டத்தில் கிளாரா காதல் வயப்பட்டு போலந்து நாட்டைச் சேர்ந்த ரஷ்யரான ஓசிப் ஜெட்கின் அவர்களோடு இணைந்து வாழ்ந்தார். ஜெர்மானியரல்லாத ஒருவரை மணந்தால் அவர் தனது ஜெர்மன குடியுரிமையை இழக்க வேண்டியிருக்கும்.

1881 ஆம் ஆண்டு கிளாராவும் அவரது இணையரான ஓசிப் ஜெட்கினும் நாடுகடத்தப் பட்டனர். அப்போது இருந்து ‘கிளாரா ஜெட்கின்’ என அவர் அறியப்படுகின்றார்.

சுவிடசர்லாந்து, இத்தாலி, ஃபிரான்ஸ் என அவரது செயல் பரப்பு கண்டம் தழுவியதாக மாறியது. 1889 ஆம் ஆண்டு ஓசிப் நோய்வாய்ப்பட்டு இறந்தார். கிளாரா தனது அரசியல் பணிகளோடு அவரையும் குழந்தைகள் இருவரையும் பராமரிக்கும் பொறுப்பையும் கவனிக்க வேண்டியிருந்தது. 1890 ஆம் ஆண்டு ஜெர்மனி திரும்பி வந்த கிளாரா, கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் இருந்து பணியாற்றினார். 

சர்வதேசியமும் பெண்ணீயமும் அவரது சிறப்புக் கவனமாக எப்போதும் இருந்து வந்துள்ளது. 1899 ஆம் ஆண்டு அவர் தன்னைக் காட்டிலும் 20 வயது குறைந்த ஜார்ஜ் ஜுண்டலைத் த்ருமணம் செய்தார். ஆனாலும் கிளாரா ஜெட்கின் என்ற பெயரே தொடர்ந்தது. 1914 இல் முதல் உலகப் போர் வெடித்தபோது கட்சியின் பெரிய தலைவர்களும் பெரும்பான்மையும் ஜெர்மன ‘தேசிய வாதிகளாக’ மாறியபோதும் கிளாரா, ரோசா லக்ஸ்ஸம்பர், லீப்னெக்ட் போன்றோரோடு சர்வதேசியவாதிகப் பணி தொடர்ந்தார். ரோஸாவின் படுகொளைக்குப் பின் அவரது செயல்பாடுகள் இன்னும் கடுமையானது. பின் ஹிட்லர் ஆட்சி உருவானபோது மீண்டும் அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. 

இம்முறை அவர் சோவியத் யூனியனுக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து தொடர்ந்து பணியாற்றிய கிளாரா ஜெட்கின் 1933 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். சர்வதேச லெனின் பரிசு உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெற்ற கிளாரா ஜெட்கின் 2 ஆம் உலகப் போருக்கும்பின் அவரது பிறந்த ஊரும் அடங்கிய ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் ஒரு வீரங்கனையாகக் கொண்டாடப்பட்டார்.

நன்றி:

P.K. ராஜன்.

முகநூல் பகிர்வு.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.