ஐக்கிய முன்னணி, மக்கள் முன்னணி தடுமாறும் கம்யூனிஸ்டுகள்!


முதலாளித்துவ நாடுகள் ஆனாலும் சரி!, காலனி, அரைக்காலனி நாடுகள் ஆனாலும் சரி! பாசிசம் என்பது கொடூரமான ஆட்சி வடிவமாக, மக்களுக்கு எதிரான அடக்குமுறை கொண்டதாக நிலவுகிறது.

இந்தியா போன்ற மறுகாலனிய நாடுகளில் ஏறித் தாக்கி வரும் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை முறியடிப்பதற்கு மேலிருந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியும், கீழிருந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியும் ஒரே சமயத்தில் கட்டப்பட வேண்டும்.

இத்தகைய நடைமுறை திட்டம் ஏதும் இல்லாமல் பாசிச சூழலில் கூட, தோழர் லெனின் முன்வைத்த மாறுகின்ற இடைநிலை வடிவங்களை கையாள்வதற்கு திராணியற்ற கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை மக்களுக்கு தீங்கிழைக்கிறது என்பது மட்டுமின்றி ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கிறது என்பதுதான் சர்வதேச ரீதியில் உள்ள அனுபவமாகும்.

கார்ப்பரேட்-காவி பாசிசத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினருடன், அதாவது பாசிசத்தை எதிர்த்துப் போராட முன் வருகின்ற ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினருடன் இணைந்து அமைக்கப்படும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒரு ஜனநாயகக் கூட்டரசு அமைப்பதை நோக்கி மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்யும். அதற்கான வேலைகளை படிப்படியாக முன்னெடுத்துச் செல்லும். 

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவில் உள்ள உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒரு அணியின் கீழ் திரட்டுவதற்கு பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி தொடர்ந்து பாடுபடும். ஒவ்வொரு வர்க்கத்திலும் உள்ள பல்வேறு தரப்பினரை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு படிப்படியாக வேலைகளை முன்னெடுத்துச் செல்லும்.

பாசிச ஆட்சி அதிகாரம் என்பதை வெறும் மேல் கட்டுமானத்தில் உள்ள ஆட்சி வடிவங்களில் ஒன்றாக புரிந்து கொள்வதன் மூலம் அதன் அரசியல், பொருளாதார அடித்தளத்தை முறியடிப்பதற்கு பொருத்தமான மாற்று திட்டம் ஒன்றை முன் வைக்காமல் பாசிச எதிர்ப்பு என்று பேசுவது பித்தலாட்டமானது.

இந்தியாவைப் பொறுத்தவரை பாசிச அபாயத்தை இன்னும் சரியாக வரையறுத்து புரிந்து கொள்ளாத வலது சந்தர்ப்பவாத இடதுசாரி இயக்கங்கள் நாடாளுமன்றத்தில் பாசிச பாரதிய ஜனதாவிற்கு மாற்றாக வேறொரு கட்சியை கொண்டு வருவதன் மூலமாகவே பாசிசத்தை வீழ்த்தி விட முடியும் என்று கருதிக் கொண்டுள்ளனர்.

மற்றொருபுறம் பாசிசத்தை புரிந்து கொண்டு விட்டதாக கருதிக் கொண்டுள்ள இடது சந்தர்ப்பவாத இடதுசாரிகள் மாறுகின்ற சூழலில் இடைநிலை வடிவங்களை பற்றி பரிசீலனை செய்யாமல், எல்லா காலத்திலும் ஒரே மாதிரியான முழக்கம் ஒன்றை முன்வைத்து, அதாவது புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் அனைத்தையும் மாற்றிவிட முடியும் என்ற கண்ணோட்டத்தில் தீர்வை முன்வைத்து சொந்த அணிகளை மட்டுமின்றி மக்களையும் ஏய்த்து குழப்புகின்றனர்.  இவர்களைப் பொறுத்தவரை பாசிசம் வந்தாலும், வராவிட்டாலும் எல்லா காலகட்டத்திற்கும் புதிய ஜனநாயக புரட்சி ஒன்றே தீர்வு என்ற கண்ணோட்டத்தில் இருப்பதால் மாறுகின்ற இடைநிலை வடிவங்களை அலட்சியப்படுத்தி புறந் தள்ளுகின்றனர்.

இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று இடது சந்தர்ப்பவாதிகள் நிலப்பிரபுத்துவம் என்பதை சுருக்கி நிலப்பிரபு என்று அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது போல, கார்ப்பரேட் பாசிசம் என்பதை சுருக்கி அம்பானி, அதானி பாசிசம் என்று தனி நபர் பாசிசமாக புரிந்து கொண்டு பிரச்சாரம் செய்கின்றனர்.

இத்தகைய பல்வேறு விதமான போக்குகளை அம்பலப்படுத்தி இத்தகைய பல வண்ண திருத்தல்வாத, சந்தர்ப்பவாத போலி இடதுசாரிகள் தலைமையில் அணி திரண்டு உள்ள பல்வேறு உழைக்கும் மக்களை சரியான திசை வழிக்கு கொண்டு வருவதற்கு உதவுகின்ற வகையில் தோழர் டிமிட்ரோவ் எழுதிய ஐக்கிய முன்னணி தந்திரம் எனும் நூலில் முக்கியமான பகுதிகளை தொடர்ச்சியாக வெளியிட உள்ளோம்.

பாசிசத்தை எதிர்த்த சித்தாந்த போராட்டத்திற்கு இந்த நூல் ஒரு வாளாக பயன்படும் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வினை செய்,

ஆசிரியர் குழு.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.