”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

"கருவாட்டை மடியில் கட்டிய பாப்பாத்தி” திருதிரு என்று விழித்துக் கொண்டிருப்பது போல, ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு மாற்றாக ’வெடிகுண்டு அரசியலை’ மடியில் சுமந்திருக்கும் வினவு மற்றும் செங்கனல் தலைமை, செயல்தந்திர அரசியல் வழியை நிராகரிக்கின்ற வகையில் செயல்பட்டுக் கொண்டே தனது அரசியல் சந்தர்ப்பவாதத்தை அணிகளிடமிருந்தும், வெகுஜன மக்களிடமிருந்தும் மறைத்து இரட்டை வேடம் போடுகின்றனர்.


தாங்கள் ஒன்றாக இருந்த போது கூடி பேசி நிறைவேற்றிய, பாசிசம் குறித்த அவர்களது ஆவணங்களை தூக்கி மூலையில் போட்டுவிட்டு, ’இடது சந்தர்ப்பவாத’ வழிமுறையில் செயல்பட்டு வருகின்றனர். சிவப்பு சட்டை போட்டுக் கொள்வதன் மூலமும், மார்க்சிய சொல்லாடல்களை அங்கங்கே தூவிக்கொண்டு போவதன் மூலமும் தனது அணிகளை ஏய்த்து விடலாம் எனக் கனவு காண்கின்றனர்.

எமது அமைப்புகளில் இருந்து வெளியேறி தனியாக ஒரு கூட்டத்தை நடத்தி அவர்கள் நிறைவேற்றிய ஆவணத்தில் இருந்து கீழ்க்கண்ட பகுதிகளை இங்கே தருகின்றோம்.

”பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி என்பது மேலிருந்து கட்டப்படும் ஒன்று; புரட்சியின் எதிரிகள் ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவினர் ஆகியோருடன் சேர்ந்து வைக்கப்படும் முன்னணி. பாட்டாளி வர்க்க கட்சி கீழிருந்து கட்டும் பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டணி என்பது பாட்டாளி வர்க்கம் தனது நட்பு வர்க்கங்களை இணைத்துக் கொண்டு பாசிசத்திற்கு எதிராக கட்டும் முன்னணியாகும்.

தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கிய முன்னணி என்பது பாட்டாளி வர்க்கம் தனது அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கி கட்டும் முன்னணியாகும். பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி என்பது ஆளும் வர்க்கங்களிலேயே ஒரு பிரிவினருடன் சேர்ந்து கட்டப்படும் ஐக்கிய முன்னணியாகும்.

இந்த முன்னணி பாசிசத்தை முறியடிக்க ஓர் அரசியல், பொருளாதார திட்டத்தை முன்வைக்கும்; பாசிசத்தை முறியடித்த பின் கட்டியமைக்கப்படும் அரசியல், பொருளாதார அரசியல் திட்டமாக இதுவே இருக்கும். அந்த அரசின் வர்க்க குணாம்சம் பாட்டாளி வர்க்க சர்வாதிகார சித்தாந்தத்தின் அடிப்படையிலான புதிய ஜனநாயக அல்லது சோசலிச அரசாக இருக்காது.

 ஏற்கனவே சொன்ன முதலாளித்துவ ஜனநாயக குடியரசு வடிவங்களில் ஒன்றாகவே இருக்க முடியும்.

ஆனால் பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசில் பாசிச எதிர்ப்பு ஆளும் வர்க்கப் பிரிவினர் மற்றும் பாட்டாளி வர்க்கமும், பிற உழைக்கும் வர்க்கங்களும் பங்கேற்கும் முதலாளித்துவ ஜனநாயக சர்வாதிகார அரசு வடிவமாக இருக்கும் என்பது ஒரு முன்னேற்றபடியாகும் என்பதை பார்க்க வேண்டும்.

முதலாளித்துவ ஜனநாயக குடியரசு வடிவமாக இருப்பினும் குறிப்பிட்ட நாட்டின் அந்த நிலவும் பருண்மையான அரசியல், பொருளாதார நிலைமைகள், சர்வதேச நிலைமை, தூக்கியெறியப்பட்ட பாசிச அரசின் கொள்கைகள், அதன் செயல்பாடு ஆகியவற்றின் அனுபவத்திலிருந்தும் முன் வைக்கப்படும் பல ஆக்கபூர்வமான புதிய ஜனநாயக அம்சங்கள் பழைய ஜனநாயகத்தின் தவறுகள், மோசமான செயல்பாடுகள், சட்டமீறல்கள், அதிகார துஷ்பிரயோகம், ஊழல், லஞ்சம், கலாச்சார சீரழிவுகள், மக்களின் ஜனநாயக மனநிலை, சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், சிக்கல்கள், நெருக்கடிகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இவற்றை ஒழிக்கும் வகையிலான அரசியல், பொருளாதார, கலாச்சார கொள்கைகள் திட்டங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கும். இருக்க முடியும். இந்த பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை நிலையான, தனியான இடைக்கால கட்டமாக பார்க்கக்கூடாது, போர்த்தந்திர திட்டத்தை நோக்கிய பாதையில் இந்த அரசு ஒரு இடைமாறுதல் கட்டமாக பார்க்க வேண்டும். -காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்.-பக்கம் 323

  புதிய ஜனநாயக புரட்சியை முன் வைத்து செயல்பட்டு இருந்தாலும் பாசிச அபாயம் முன்னிலைக்கு வந்து மைய அரசியல் கண்ணியாக மாறும் அளவிற்கு சூழ்நிலையில் மாற்றம் வந்தால் பாசிச சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் புதிய செயல் தந்திரம் வைத்து செயல்படுவதுதான் சரியான மார்க்சிய லெனினிய நிலைப்பாடு. ஏனென்றால் கட்டமைப்பு நெருக்கடி ஏற்பட்டிருந்தாலும், இன்னமும் முதலாளித்துவ ஜனநாயக சர்வாதிகார வடிவமே நீடிக்கின்றது; அது எந்த அளவிற்கு சிதைந்து இருந்தாலும், எந்த அளவிற்கு கேலிக்கூத்தாக ஆக்கப்பட்டிருந்தாலும், இந்த வடிவமே நீடிக்கிறது. எனவே ஏற்கனவே விவாதித்த அடிப்படையில் ஐக்கிய முன்னணி கட்டி செயல்படலாம். - மேற்படி நூல் பக்கம்-328

இப்படி நாம் சொல்கிற போது கட்டமைப்பு நெருக்கடியின் விளைவாக எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளுமே பிழைப்புவாத, மறுகாலனியாக்க அடிமைக் கட்சிகளாகவும், புதிய தரகு முதலாளிகளாகவும் உள்ளனர். இவர்களிடையே குறிப்பிட்ட கொள்கை, கோட்பாடு வேறுபாடுகள் எதுவும் கிடையாது என நாம் தன்மைபடுத்தி உள்ளோம். காவி கார்ப்பரேட் புதிய பாசிசத்தை எதிர்த்து இப்படிப்பட்ட சக்திகளுடன் ஒரு ஐக்கிய முன்னணி கட்டுவது சந்தர்ப்பவாத சகதிக்குள் விழுவதாகும். இவர்களுக்கும் தேர்தல் பதவி ஆசை வந்துவிட்டது. என மக்களே நம்மை காறித்துப்புவார்கள் என்று பலர் கருதலாம்.

2014 இல் மோடி அமித்ஷா பார்ப்பன கார்ப்பரேட் பாசிச கும்பல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இன்றைய மறுகாலனியாக்க பிழைப்புவாத கட்சிகள்தான் ஒன்றிய, மாநில அரசு அதிகாரங்களில் இருந்து கொண்டு மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்தினர்; கட்டமைப்பு நெருக்கடி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஏற்பட்டு விட்டது என்று சொல்ல முடியாது ஏனென்றால் கட்டமைப்பு நெருக்கடிக்குள் இந்த சமூக கட்டமைப்பு வீழ்வது ஓர் நிகழ்ச்சி போக்கின் விளைவாக ஏற்படுகிறது.

நமது நாட்டில் கட்டமைப்பு நெருக்கடிக்கான நிகழ்ச்சி போக்கு 2013-15 ஆம் ஆண்டுகளில் இறுதி வளர்ச்சி அல்லது தன்மை ரீதியாக மாற்றம் பெற்றது; அரசியல் கட்சிகளின் தன்மை பிழைப்புவாத கட்சிகளாக மாற்றம் பெற்றதும் அப்போதுதான் நடந்தேறியது.

 எனினும் இவர்கள் எவரும் பாரதிய ஜனதா கட்சியைப் போல, பார்ப்பன பாசிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் அல்ல. இவர்களின் எந்த ஆட்சியும் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவ முயலவில்லை. மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்தினார்கள்; மறுகாலனியாக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்; புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்தார்கள்; இதன் பொருட்டு ஆணையங்கள், கவுன்சில்கள் போன்ற கார்ப்பரேட் பாசிசத்திற்கு உரிய சில நிறுவனங்களை நிறுவினார்கள்; சில கருப்பு சட்டங்களை போட்டு மக்களின் வாழ்வாதாரங்களை பறித்து அகதிகள் ஆக்கினார்கள்; கொடிய அடக்குமுறைகளை ஏவி விட்டனர் என்றாலும் தேர்தல் ஜனநாயக சர்வாதிகார வடிவத்தை மாற்றி பாசிச பயங்கரவாத ஆட்சி முறையை அவர்கள் கொண்டு வரவில்லை.

எவ்வளவு சீரழிந்து இருந்தாலும், இந்த கட்டமைப்பு கெட்டுப் போயிருந்தாலும், நிலவுகின்ற ஜனநாயகத்தின் கல்லீரலே பாதிப்புக்கு ஆளாகி இருந்தாலும், நிலவுகின்ற அரசியல் சட்டம், நீதிமன்றங்கள், பிற அதிகார நிறுவனங்கள், நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், தேர்தல் ஆகியவற்றின் மீது ஆகப்பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதாவது இன்னும் புதிய ஜனநாயக புரட்சிக்கு தயாராகாத நிலையிலும் முதலாளித்துவ ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டும் உள்ளனர்.

காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடித்து விட்டு நிறுவப்படும் ஆட்சி முறை முதலாளித்துவ ஜனநாயக அரசு வடிவமாக முன் வைப்பதில் தப்பில்லை என்று பார்க்க வேண்டும். மக்களின் இந்த உளவியலை நாம் கணக்கில் எடுக்காமல் ஐக்கிய முன்னணி கட்ட தவறுவது குறுங்குழுவாதமாகும்; மக்களின் மீது அவநம்பிக்கை கொள்வதாகும்; அதாவது பரந்தபட்ட புரட்சிகர மக்களும் தமது சொந்த அனுபவத்தின் மூலம் தவிர்க்க முடியாமல் இந்த அரசு நீடிக்க முடியாது, நீடிக்கக்கூடாது தூக்கி எறிய வேண்டும் என்பதை உணர்த்த கூடிய செயல் தந்திரங்களை வகுத்து செயல்படுத்த வேண்டிய நமது கடமையை கருதியே செயல்பட வேண்டும்.

எனவே இந்த மறுகாலனியாக்க பிழைப்புவாத கட்சிகளை ஐக்கிய முன்னணியில் சேர்த்துக் கொள்வது அவசியம் முதலாளித்துவ ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கட்சியினர் போராட முன் வருவார்கள் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது இந்த கட்சிகள் எவ்வளவு உறுதியாக நிற்கும் என்று சொல்ல முடியாது, ஊசலாடுபவர்களாக, நம்பிக்கை துரோகம் செய்பவர்களாக கூட இருப்பவர்கள் தான். எனினும் ஐக்கிய முன்னணி என்றாலே இப்படிப்பட்ட சக்திகளையும் வைத்து கட்டப்படுவது தான். - மேற்படி நூல் பக்கம்-330

இவ்வாறு ஒன்றாக கூடி முடிவெடுத்த பின்னர் ஆவணத்தின் பெயரை வைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் இதில் உள்ள அரசியலை கடைபிடிப்பதில் உள்ள சந்தர்ப்பவாத போக்குகள் ஆகியவற்றை முன்வைத்து இரண்டாக பிளவு பட்டனர்.

என்ற போதிலும் மேற்கண்ட மேற்கோள்களில் இருந்து அவர்கள் கூற வருவது என்ன? இந்தியா போன்ற அரைக்காலனிய நாடுகளில் பாசிசம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டால் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டுவதை பிரதானமான வேலை திட்டமாக கொண்டு செயல்பட வேண்டும் என்பதும், அப்போது ஆளும் வர்க்கத்தில் ஒரு பிரிவினருடன் கூட்டு சேர்ந்து முதலாளித்துவ ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதும் தானே?.

ஆனால் தற்போது நடைமுறையில் இதனை மறுக்கிறார்களா அல்லது இந்தியாவில் இன்னமும் பாசிச ஆட்சி வரவில்லை மாறாக முதலாளித்துவ ஜனநாயக வகைப்பட்ட ஆட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்று கருதுகிறார்களா என்றால் இரண்டும்தான் என்று அணிகளை ஏய்க்கின்றனர்.

 தொடரும்.



Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.