‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற முக்கியமான தேர்தல் என்று நாங்கள் கருதுகிறோம். இதற்காக கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துகின்ற செயல்தந்திர அரசியலின் கீழ் தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவோம் என்று முடிவெடுத்துள்ளோம். 

இதன் காரணமாகவே புதிய ஜனநாயக புரட்சியை கைவிட்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தேர்தல் அரசியலில் கரைந்து விட்டோம். ஓட்டு பொறுக்கிகள் அரசியலில் இறங்கி விட்டோம் என்று அவதூறு பரப்புகிறார்கள் எமது அமைப்பிலிருந்து ஓடிப்போன வினவு மற்றும் செங்கனல் கும்பல்.

எண்பதுகளில் உருவாக்கப்பட்ட எமது அரசியல் கோட்பாட்டு முடிவுகளில் இருந்து நாங்கள் விலகி விடவில்லை. போர்தந்திர இலக்கிற்கு குறிப்பிட்ட தருணத்தில் வகுக்கப்படும் செயல்தந்திரங்கள் சேவை செய்ய வேண்டும் என்பதிலும், குறிப்பிட்ட தருணத்தில் அரசியல் நடத்தை வழி போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரம் ஆகிய இரண்டினாலும் வழிநடத்தப்பட வேண்டும் என்கின்ற கோட்பாட்டு முடிவுகளிலும் எமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

முதலாளித்துவ வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி பாதை என்ற புரட்சிகர வடிவத்திலும் காலனிய, அரைக்காலனிய நாடுகளில் புதிய ஜனநாயக புரட்சி என்ற புரட்சிகர வடிவத்திலும் எமக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. தற்போதைய கார்ப்பரேட் காவி பாசிச அபாய சூழலில் புதிய ஜனநாயக புரட்சிக்கு இடைக்கட்டமாக தோன்றியுள்ள, உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு பாசிசத்தை வீழ்த்துவதற்கான பரந்த ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டுவது என்ற முடிவுடன் செயல்படுகிறோம்.

 அத்தகைய ஐக்கிய முன்னணிக்கு குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை முன்வைத்து தேர்தல் அரசியலில் பங்கெடுத்துள்ள கட்சிகள் மற்றும் புரட்சிகர இயக்கங்கள் ஆகியவற்றுடன் விவாதித்து வருகின்றோம்.

அதற்குப் பொருத்தமாக தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துகின்றோம்.

தேர்தலுக்கு வெளியில் மக்கள் முன்னணியின் மூலம் பாசிஸ்டுகளை களத்தில் வீழ்த்த வேண்டும் என்றும் முடிவெடுத்து செயல்படுகிறோம்.

இவை அனைத்தையும் ஆவணங்களாகவே நாங்கள் வெளியிட்டுள்ளோம். மக்கள் அதிகாரத்தின் கொள்கை அறிக்கையிலும் தெளிவுபடுத்தி உள்ளோம் என்ற போதிலும் அரைகுறையாக தமிழைப் படித்த தற்குறி ஒருவன் நகரத்தில் ஓட்டல் கடைக்கு சென்றபோது, “சாப்பா டுபோ டப்ப டும்” என்று படித்ததைப் போல எமது நிலைப்பாடுகளை தனித்தனியாக படித்து திரித்து புரட்டுகிறார்கள்.

இவர்களின் இத்தகைய திருத்தல்வாத போக்கிற்கு அடிப்படையான “வெடிகுண்டு புரட்சி” தத்துவத்தை பற்றி பரந்தப்பட்ட மக்கள் அதாவது பாசிசத்தினால் நேருக்கு நேர் பாதிப்படைந்துள்ள மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்ப்பன இந்து மத வெறியால் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பஞ்சம சாதிகள், பழங்குடி மக்கள், இழிவுபடுத்தப்படும் சூத்திர சாதிகள், வர்க்கவாழ்க்கையில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவர்கள் துவங்கி தேசிய முதலாளிகள், தரகு முதலாளிகளில் ஒரு பிரிவினர் வரை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.

என்றலும் இவர்களது செயல்பாடுகள் அனைத்தும் கட்டங்கட்டமாக புரட்சியே முன்னேற்றுவது என்ற புரட்சிகர இயங்கியலுக்கு மாற்றாக அதிரடி புரட்சி, நிரந்தரப் புரட்சி அல்லது வெடிகுண்டு புரட்சி என்ற டிராட்ஸ்கியவாத அடிப்படையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“நாட்டில் பெருமளவில் உள்ள விவசாயிகளை இணைத்துக் கொண்டு பாட்டாளிவர்க்க தலைமையில் அமைக்கப்படும் தொழிலாளர் அரசாங்கம் உள்ள நாட்டில். பாட்டாளி வர்க்க முன்னணி படைக்கும், விவசாய மக்களுக்கும் கடும் மோதல், முரண்பாடுகள் ஏற்படும். ஆதலால் உலக பாட்டாளி வர்க்க புரட்சித்தளத்தில் மட்டுமே தனது முரண்பாடுகளுக்குத் தீர்வுகாண முயலும் ஓர் அதிகாரமே பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்” என்றார் ட்ராட்ஸ்கி. கடைந்தெடுத்த கம்யூனிச விரோதியான ட்ராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை இந்தியாவிற்குள் நடைமுறைப்படுத்த வீறு கொண்டு எழுந்துள்ளனர் ‘சிவப்பு போர்வையில்’ உலவும் வினவு மற்றும் செங்கனல் கும்பல்.. 



“நிரந்தரப் புரட்சி தத்துவத்தில், ஜாரிசத்தை தூக்கியெறிவதில் இருந்து எழும் அரச அதிகாரத்தின் வர்க்க இயல்பு தொடர்பாகவும் பின்தங்கிய ரஷ்யாவில் ஜனநாயக புரட்சி பிரச்சினைக்கும் லெனினின் சூத்திரப்படுத்தலில் தெளிவற்றதாகப் பண்பிடப்பட்டதல்லாத ஒரு துணிவான தீர்வினை ட்ராட்ஸ்கி அளித்தார். அப்புரட்சி ஜனநாயகப் பணிகளை தீர்ப்பதுடன் மட்டுப்படுத்தப்படாது என்றும் அது ஒரு சோசலிசத் தன்மையை பெற்றுவிடும் என்றும் தொழிலாளர் வர்க்கம் அரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய சர்வாதிகாரத்தை ஸ்தாபித்துக் கொள்ளும் என்றும் ட்ராட்ஸ்கி கணித்தார். முதலாளித்துவ முறையின் சர்வதேச வளர்ச்சியை பொறுத்துத்தான் வரவிருக்கும் ரஷ்ய புரட்சியின் சமூக இயக்கவியல் இருக்கும் என்ற அடிப்படையில் ட்ராட்ஸ்கி தன்னுடைய பகுப்பாய்வைக் கொண்டிருந்தார். ரஷ்ய புரட்சியின் தன்மை, பணிகள், விளைவுகள் இறுதிப் பகுப்பாய்வில் தேசிய நிலைமைகள் என்பதற்கு பதிலாக சர்வதேச நிலைமையினால் நிர்ணயிக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார். ரஷ்ய மக்களை எதிர்கொண்ட உடனடிப்பணிகள் ஒரு பூர்சுவா ஜனநாயக தன்மையை கொண்டிருந்தாலும் ஜாரிச சர்வாதிகாரத்தை தூக்கி எறிதல், கிராமப்பகுதிகளில் இருக்கும் நிலப்பிரபுத்துவ உறவுகளின் எச்ச சொச்சங்களை இல்லாதொழித்தல் போன்ற இப்பணிகள் தேசிய முதலாளித்துவத்தின் அரசியல் தலைமையின் கீழோ அல்லது ஒரு பூர்ஷ்வா ஜனநாயகக் குடியரசின் கட்டமைப்புக்குள்ளாகவோ அடையப்படமுடியாது என்றும் கூறினார். உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பரந்த மாறுதல்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கம் மகத்தான சமூக சக்தியாக வெளிவருதல் இவையெல்லாம் ஜனநாயக புரட்சியானது 19ம் நூற்றாண்டை விடவும் 20ம் நூற்றாண்டில் மாறுபட்ட வகையில் அபிவிருத்தியடையும் என்று அர்த்தப்படுத்தின. ரஷ்ய முதலாளித்துவம் உலக முதலாளித்துவ அமைப்புடன் இணைக்கப்பட்டு விட்டிருந்தது. அது பலவீனமானதாகவும் ஏகாதிபத்தியத்தை சார்ந்திருந்ததாகவும் இருந்தது. எனவே ஜனநாயகப் பணிகள், விவசாய வெகுஜனங்களின் ஆதரவுடன் தொழிலாளர் வர்க்கத்தால் தலைமையேற்று நடத்தப்படும் ஒரு புரட்சியின் மூலமே நனவாக முடியும். இருப்பினும், அதிகாரத்தை எடுத்துக் கொண்ட பின், தொழிலாளர் வர்க்கம் ஜனநாயகப் பணிகளுக்குள் தன்னை வரையறைக்குட்படுத்திக் கொள்ள முடியாது; அது ஒரு சோசலிச குணநலன் கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும். தவிரவும், ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியானது தன்னை ஒரு தேசிய கட்டமைப்புக்குள் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அப்புரட்சியின் உயிர் பிழைப்பு புரட்சியை வளர்ச்சிடைந்த முதலாளித்துவ நாடுகளிலும், இறுதியாக உலகம் முழுமைக்கும், விஸ்த்தரிப்பதிலேயே தங்கியுள்ளது. இந்த விளைவிற்கான உள்ளார்ந்த சாத்தியம் உலக முதலாளித்துவ அமைப்பின் உண்மையான அபிவிருத்தியில் இருக்கிறது” என்று 1905 ல் கம்யூனிச துரோகி ட்ராட்ஸ்கி எழுதினார்:


ட்ராட்ஸ்கி சொன்னதைக் கொஞ்சம் மாற்றி இந்தியாவில் நிரந்தரப் புரட்சியை உருவாக்க வேண்டுமென்றால். அதற்கு பாசிசத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு வரும் முதலாளித்துவக் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். நமது சொந்தத் தத்துவத்தின் கீழ், அதாவது பாட்டாளி வர்க்கத்தின் கீழே மக்கள் முன்னணியைக் கட்டி எழுப்பி. உழைக்கும் மக்களை அணி திரட்டிக் காவிப் பாசிஸ்ட்டுகளை தெருவில் ஓட விட்டு அடித்து வீழ்த்தி, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு (யாரையாவது இணைத்துக் கொண்டு குடியரசு அமைப்பதா அல்லது இவர்கள் மட்டுமே அமைக்கப் போகிறார்களா என புரியவில்லை) ஒன்றை அமைப்பது அமைப்பது என சென்னையில் மையம் கொண்டுள்ள வினவு தரப்பினர் முன்வைக்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தின் பென்னாகரம் பகுதியை முற்றுகையிட்டுள்ள செங்கனல் தரப்பினரோ கம்யூனிஸ்டுகளுடன் மட்டுமே ஐக்கிய முன்னணியை கட்டி (பெட் ரோமாஸ் லைட்டேதான் வேணுமாம்) நேரடியாக புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவது என முன்வைக்கின்றனர்.  

இதெல்லாம் எப்போது நடக்கும் எனக் கேட்டால். நாங்கள் முன்வைத்திருக்கும் தீர்விற்கு மக்கள் எல்லோரும் வந்து விட்டால் சாத்தியம்தான் தோழர் என்கிறார்கள். 2024 தேர்தலுக்குள் மக்கள் வந்து விடுவார்களா தோழர் எனக் கேட்டால் அதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், “எனக்கு வாக்களித்தால் மதுக்கடைகளை மூடுவேன் (நாங்கள் சொல்வதைக் கேட்டால் பாசிசத்திடமிருந்து உங்களை காப்பாற்றுவோம்) இல்லையென்றால் நீங்கள் செத்து சீரழிவதைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை” என டாக்டர் அன்புமணியும், ஆக்டர் சீமானும் பேசுவதைப் போலவே இருக்கிறது. 

“நாங்கள் சொல்வதை மக்கள் கேட்டால் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது அல்லது பாசிசம் இன்னும் அதிகாரத்துக்கு வரவில்லை, பாசிச அரசாங்கம்தான் உள்ளது. அனைத்தும் பாசிசமயமாகவில்லை என்றெல்லாம் புறநிலை எதார்த்தத்திற்கு புறம்பாக முழுக்க அகநிலைவாத கண்ணோட்டத்தில் பாசிசத்தை பற்றி பிரச்சாரம் செய்வது மட்டுமின்றி, மார்க்சிய- லெனினியத்தை பருண்மையாக அமல்படுத்த திராணியின்றி உள்ளனர்.

மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவதற்காக நாங்கள் புரட்சி நடத்தத் தயாராக இருக்கிறோம். அதை எந்த வகையான முரண்பாடும் இல்லாமல், எந்த வகையான சிக்கலும் இல்லாமல் ஒரு முழு நிறைவான பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை உருவாக்கி உங்களிடத்தில் கொடுப்போம்” என ட்ராட்ஸ்கி வழியில் வினவும், செங்கனலும் உறுதிப்பூண்டு வேலை செய்வதாகவேத் தெரிகிறது.

ட்ராட்ஸ்கி, பிற்போக்கு வர்க்கங்களையும் அதில் ஒரு பிரிவாக இருக்கும் முற்போக்கு தன்மை கொண்டவர்களையும் இணைத்துக் கொள்ளாமல். அதாவது, முரண்பாடுகளே இல்லாத பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனும் அகநிலைவாத விருப்பத்தின் அடிப்படையில். பாட்டாளி வர்க்கம் தனது சொந்தக் காலில் நின்று புரட்சி நடத்துவதுதான் நிரந்தரப் புரட்சி என்று சொன்னதற்கும், வினவு மற்றும் செங்கனல் தரப்பினர் சொல்வதற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.  

உலகப் புரட்சி வரும்வரை ரஷ்ய மக்களைக் காத்திருக்கச் சொன்னார் கம்யூனிச துரோகி ட்ராட்ஸ்கி. ஒரிஜினல் கம்யூனிஸ்ட்டுகளாகிய எங்கள் தலைமையில் உழைக்கும் மக்கள் அணிதிரண்டு. RSS BJP -க்கு எதிராகத் தெருச்சண்டைப் போடும் வரை,(அதாவது தேர்தல் அரசியலுக்கு வெளியில் களத்தில் மட்டுமே பாசிசத்தை முறியடிக்க முடியும் என்ற வாதம்) இந்திய மக்களை காத்திருக்கச் சொல்கிறது வினவு. கம்யூனிஸ்டுகளுக்கிடையில் (கடந்த காலத்தில் போலிக் கம்யூனிஸ்டுகளாக தெரிந்தவர்கள் தற்போது நல்ல கம்யூனிஸ்டுகளாக தெரிகிறார்கள்) மட்டுமே ஐக்கிய முன்னணி கட்டி புதிய ஜனநாயகப் புரட்சி நடத்தும் வரையில் பாசிஸ்டுகளிடமிருந்து இந்திய மக்களை பத்திரமாக இருக்கச் சொல்கிறது செங்கணல்.

மோடித் தலைமையிலான பாசிச பாஜக, புலனாய்வுத் துறைகளை கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவதற்கான வேலைத் திட்டத்தில் இறங்கியுள்ள சூழலில். பாசிசத்தால் ஒடுக்கப்படும் கட்சிகள் கார்ப்பரேட்டுகளுக்கான கட்சி என்றாலும், தங்களுக்கு வர்க்க எதிரியாக இருப்பவர்கள் என்றாலும் அவர்களுக்கு இருக்க வேண்டிய ஜனநாயக உரிமைகளுக்காகவும், அவர்களின் துன்ப துயரங்களுக்கு எதிராகவும் வினவும், செங்கனலும் வாரத்திற்கு மூன்று நான்கு கட்டுரைகளை எழுதுகிறது. வருடத்திற்கு இரண்டு மூன்று ஆர்ப்பாட்டங்கள், அரங்குக் கூட்டங்கள் நடத்துகிறது. அதில் போலி ஜனநாயக கட்சிகளில் உள்ளவர்களையும் அழைத்து பேசவைக்கின்றனர். பாசிச அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் எதிர் கட்சிகளுக்காக அவர்கள் பரிதாபப்படுகிறார்கள். அவர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். ஆனால் பாசிசத்தை அரசியல் அரங்கிலிருந்து அகற்றும் தேர்தல் அரசியல் போராட்டத்தில் மட்டும் அவர்களோடு இணைந்து செயல்பட மாட்டார்கள். 

2024 ஆம் ஆண்டில் மீண்டும் பாசிசம் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால். அப்போதும் அவர்களால் பாதிக்கப்படும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக கட்டுரைகள் எழுதுவார்கள். ஆர்ப்பாட்டங்கள், அரங்குக் கூட்டங்கள் நடத்துவார்கள். பாதிக்கப்படும் கட்சியினரை பேச வைப்பார்கள். ஆனாலும் அவர்களோடு இணைந்து செயல்பட மாட்டார்கள். 

இவர்கள், முரண்பாடுகளற்ற நிரந்தரப் புரட்சியை முன்வைக்கும் டிராஸ்கியைப் போன்று. தங்களின் அகநிலை விருப்பத்தின் அடிப்படையிலிருந்து பாசிச கட்சியையும், போலி ஜனநாயகக் கட்சிகளையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து எதிர்க்கிறார்கள். ஆனால் புறநிலையில் பாசிசக் கட்சிக்கு எதிராகவும், போலி ஜனநாயக கட்சிகளுக்கு ஆதரவாகவும் நின்று குரல் கொடுக்கிறார்கள். அவர்களை இணைத்துக் கொண்டு கூட்டங்களும் நடத்துகிறார்கள். மம்தா ஒரு பாசிஸ்ட் என்கிறார்கள் (நாங்களும்தான்). ஆனால், மெஹூ மொய்த்ரா கைதை கண்டிக்கிறார்கள். திமுக கார்ப்பரேட் கட்சி என்கிறார்கள் (நாங்களும்தான்). ஆனால் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை தவறு என்கிறார்கள். உண்மையிலேயே இவர்களின் முடிவின்படி இவர்கள் என்ன பேச வேண்டும் என்றால். உழைக்கும் மக்களே! பாசிசக் கட்சிக்கும் போலி ஜனநாயக கட்சிகளுக்கும் கொள்ளையடிப்பதில் நடக்கும் சண்டையில் நமக்கென்ன வேலை. வாருங்கள் அனைத்து ஓட்டுப் பொறுக்கிகளையும் அடித்து விரட்டுவோம் என்றுதானே பேச வேண்டும். ஆனால் இவர்கள் அப்படியும் இல்லை, இப்படியும் இல்லை.

- தொடரும்

Comments

Popular posts from this blog

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.