“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.

வினவு தலைமையின் அதிரடி ஆட்டங்களை கடுமையாக விமர்சித்து தனியே புத்தகம் ஒன்றை போட்டுவிட்டு வெளியேறிய செங்கனல் என்ற முகநூல் பக்கத்தை நடத்தி வரும் ஒரு சிறு கும்பல், 2024 தேர்தல் வரை தான் தோழர் ராஜு தலைமையிலான மக்கள் அதிகாரம் இருக்கும் அதன் பிறகு அது காணாமல் போய்விடும் என்று ’அருள்வாக்கு’ ஒன்றை கூறியுள்ளது. இதற்காக முன்னர் ம,க,இ,க, மையக்கலைக்குழுவில் செயல்பட்ட ஒருவர் தலைமையில் சில மாவட்டங்களில் சுற்றி வந்து மருதையனுடன் எமது அமைப்பை இணைத்து அவதூறுகளையும், தனது அரசியல் அரைவேக்காட்டுத்தன முடிவுகளையும் முன்வைத்து திரிந்து கொண்டுள்ளது. 


நக்சல்பாரி கட்சியின் அடிப்படை நிலைப்பாடுகளில் இருந்து தாக்குப் பிடிக்க முடியாமல் விலகிப் போன இந்த கும்பல், நீண்டகால மக்கள் யுத்த பாதை என்ற புரட்சிகர பாதையை கைவிட்டு விட்டது மட்டுமின்றி, இந்தியாவில் விவசாய உற்பத்தி முதலாளித்துவமயமாகிவிட்டது என்று ’ஆய்வு செய்து’ கண்டுபிடித்துள்ளது.

”இன்றைய நிலைமையில் அரை நிலப்பிரபுத்துவம் என்ற வரையறை எந்த அளவிற்கு நமது நாட்டு நிலைமைகளுக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதை ஆராய்வது என்பது புரட்சியின் கட்டத்தை தீர்மானிப்பதற்கு கேந்திரமாகும். அவ்வாறு ஆய்வு செய்தபோது இந்திய விவசாய உற்பத்தியில் முதலாளித்துவ உற்பத்தி முறையே மேலோங்கி இருப்பதாக முடிவுக்கு வந்துள்ளோம். (அழுத்தம் அவர்கள்) குறிப்பாக பிரஷ்யன் ஜங்கர் பாணியில் முதலாளித்துவ மாற்றம் நடைபெறாமல், வேறொரு குறிப்பான வகையில் முதலாளித்துவ மாற்றம் நடைபெற்றதாக பார்க்கிறோம்.

1980 களின் நிலைமையின்படி இந்திய நாடானது தரகு அதிகார வர்க்கத் தன்மையுடைய முதலாளி உற்பத்தி முறையை மேலாதிக்கத்திலும், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை மிகுநிலையிலும் கொண்ட நாடாக இருந்தது; இதன் பொருள் தேசிய வருமானத்திலோ, இந்திய மக்களின் உழைப்புத் துறை கட்டுமானத்திலோ முதலாளித்துவ உற்பத்தி முறை பிரதானமாக அதிகமான மிகு நிலை பெற்றிருக்கிறது என்பதல்ல; மாறாக நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையே தேசிய வருமானத்திலும் (40%-க்கும் மேல்) உழைப்புத் துறை கட்டுமானங்களிலும் (70%-க்கும் மேல்) அதிகமானதாக< பிரதானமானதாக மிகு நிலை பெற்றிருந்தது என்பதாகும். இதன் அடிப்படையில் தான் இந்தியாவை அரை நிலப்பிரபுத்துவ நாடாக வரையறுத்தோம்.

அதாவது இந்திய விவசாய உற்பத்தி என்பது நிலப்பிரபுத்துவ தலைகள் பெரும்பாலும் இல்லாத, முதலாளித்துவ சந்தையுடன் இணைக்கப்பட்ட சுதந்திர விவசாயிகளின் உற்பத்தியை மையமாகக் கொண்டது எனும் வகையில் முதலாளித்துவ உற்பத்தி முறை வகைப்பட்டதாக மாறியுள்ளது என்று கருதுகிறோம். ஆக 1970களில் இருந்த நிலப்பிரபுகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடு மறைந்து, இன்றைய இந்திய விவசாயத்தில் வர்க்க முரண்பாடு என்பது பல தரப்பட்ட விவசாய வர்க்கங்களுக்கும் (சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கும்) தரகு முதலாளிகள், ஏகாதிபத்திய முதலாளிகளுக்குமான முரண்பாடு பிரதானமானதாக மாறிவிட்டது என்று கருதுகிறோம்.

(-பக்கம் 23,25. இந்திய விவசாயத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றிய குறிப்புகள். செங்கனல் வெளியீடு)

ஏற்றத்தாழ்வான வளர்ச்சி கொண்ட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றி பருண்மையான முறையில் ஆய்வு செய்வதற்கு பொருத்தமான பேரியல் தரவுகள் (macro economics) கிடைக்கவில்லை என்பதுதான் மார்க்சிய லெனினிய அமைப்புகளின் சிக்கலாகும்.

இந்தியாவின் விவசாய பொருளாதாரத்தை ஆய்வு செய்வதாக கிளம்பிய செங்கனல் அமைப்பின் குட்டி முதலாளித்துவ ஆய்வாளர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்த மாற்றங்களை முன்வைத்து இந்திய விவசாயம் முதலாளித்துவமயமாகிவிட்டது என்று முன் வைத்துள்ளனர்.

விவசாயிகளின் விவசாயப் புரட்சி என்ற புதிய ஜனநாயக புரட்சியை கைவிட்டு முதலாளித்துவ நாடுகளுக்கு பொருத்தமான சோசலிச புரட்சி அல்லது வேறு ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொண்டுள்ள இந்த கும்பல், புதிய ஜனநாயக புரட்சி, நக்சல்பரி பாதை, தேர்தல் புறக்கணிப்பு என்றெல்லாம் பேசுவது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமாகும்.

’கேட்பவர்கள் கேனையார்களாக இருந்தால் எருமை மாடு ஏவுகணை ஓட்டுகிறது’ என்று புதிய புரட்டு செய்து வரும் இவர்கள் தர்மபுரியில் திருவாளர் முத்துக்குமார் என்பவரை செய்தி தொடர்பாளராக கொண்டு செயல்படும் சிறு பிரிவினர். தம்மைத் தவிர அனைவரும் போலிகள் என்றும், பிராடுகள் என்றும் பல்வேறு அடைமொழிகளில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி மடியில் ‘வெடிகுண்டை’ கட்டிக்கொண்டு புரட்சி நடத்துவதற்கு கிளம்பியுள்ளனர்.

இந்த பிரிவினர் தூக்கி பிடிக்கும் காலம் சென்ற தோழர் அன்பழகன் என்ற கணேசன் தன் வாழ்நாள் முழுவதும் புரட்சிகர அமைப்பிற்காக அர்ப்பணிப்பு தியாகத்துடன் செயல்பட்ட போதிலும், இறுதி பத்து ஆண்டுகளில் சித்தாந்த ரீதியாக தனது ஓட்டாண்டித்தனத்தை நிரூபித்துக் கொண்டார்.

2014 முதல் இந்தியாவை ஆர்எஸ்எஸ்-பாஜக சட்டபூர்வமான வழிமுறைகளில் அதாவது நாடாளுமன்ற ஜனநாயகத்தை பயன்படுத்தி கைப்பற்றிக் கொண்ட போதிலும், அதற்கு முகம் கொடுக்காமல் அல்லது அதை எதிர்த்து முறியடிப்பதற்கான அரசியல் செயல்தந்திரத்தை வகுக்காமல் வேறொரு திசையில் அமைப்பைக் கொண்டு சென்றார்.

அவரை தனது சித்தாந்த வழிகாட்டியாக கொண்டு செயல்படுவதாக கூறிக் கொள்ளும் தர்மபுரி கும்பல், செயல் தந்திர அரசியல் வழியை கடைபிடிப்பதாக கூறிக் கொண்டாலும் 90களில் முன் வைத்த மறுகாலனியாக்க எதிர்ப்பு என்பதை தான் தனது நடைமுறையில் அமல்படுத்துகின்றனர். பாசிசம் ஆட்சிக்கு வரவில்லை என்றே அணிகளை ஏய்க்கின்றனர். இன்றைய சூழலுக்கு பொருத்தமான அரசியல் சித்தாந்த முடிவெடுப்பதற்கு திராணியற்ற இவ்ர்கள் தேர்தல் பங்கெடுப்பு பற்றி கீழ்க் கண்டவாறு எழுதுகின்றனர்.

”பாசிசம் இன்று ஏறித் தாக்கி வரும் நிலையில், நீங்கள் பழைய பாணியில் தேர்தல் புறக்கணிப்பு என்று கூறுவது பொருத்தமற்றது தானே, அந்த வகையில் தேர்தலையும் ஒரு களமாக பயன்படுத்த வேண்டும் என்று மருதையன் தரப்பினர் கூறுவது சரிதானே என்று கூட சிலர் கேட்கலாம். செயல் தந்திரத்தின் கீழ் பல்வேறு போராட்ட வடிவங்களில் தேர்தலும் ஒரு போராட்ட வடிவம் என்ற பொதுக் கோட்பாட்டை எந்த மார்க்சியவாதியும் மறுக்கப் போவதில்லை; ஆனால் மருதையன் கும்பலோ இந்த பொதுக் கோட்பாட்டுக்குள் வசதியாக புகுந்துக் கொண்டு திமுகவின் பிரச்சார பீரங்கிகளாக மாறியுள்ளதை மூடி மறைக்கிறார்கள்; புரட்சிகர வேடம் போட்டு திரிகிறார்கள் என்பதே உண்மை.

(-பாசிசத்தை எதிர்க்க வேண்டுமா திமுக காங்கிரஸிடம் சரண் அடையுங்கள் ஓடுகாலி மருதையனின் திண்ணை உபதேசம் பக்கம் 22.)

 தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவோம் என்று முன்வைத்து நாங்கள் செயல்படுவதாலேயே, தேர்தல் புறக்கணிப்பை நிரந்தரமாக கைவிட்டுவிட்டோம்; திமுகவிடம் நாங்கள் சரணடைந்து விட்டோம் என்று அண்டப்புளுகை அவிழ்த்து விடுவது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் குறிப்பிட்ட செயல் தந்திர காலகட்டத்தில் ஆளும் வர்க்க கட்சிகளுடன் எவ்வாறு உறவு மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி எமது ஆவணங்களில் கீழ்க்கண்டவாறு வழிகாட்டப்பட்டுள்ளது.

 “ஆளும் வர்க்கக் கட்சிகள் தவிர மற்றெல்லாக் கட்சிகளையும் சமரசக் கட்சிகளாகவே கருதி புரட்சியின் பிரதான தாக்குதல் திசைவழியில் அரசியல் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது மட்டுமே, அதன் வளர்ச்சிப் போக்கிலேயும் மேலும் அடிப்படை முரண்பாடுகள் கூர்மையடைவதிலேயும் தான் இந்த அரசியல் கட்சிகள் உண்மைச் சொரூபத்தில் வெளிப்படுவதும் ஒரு முனைப்படுவதும் நடந்தேறும். 

 அதுவரை ஆளும் வர்க்கக் கட்சிகள் தவிர, பிறகட்சிகளுடன் பருண்மையான நிலைமைகளுக்கேற்ப குறிப்பிட்ட தருணத்தில் வகுக்கப்படும் செயல்தந்திரத்தின் அரசியல் நடத்தை வழியை செயல்படுத்துவதற்கான கூட்டுநடவடிக்கைகளே இருக்கும். கூட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலமாகத் தான் பிரதானதாக்குதல் திசைவழி இருக்கும். கூட்டு நடவடிக்கைகளுக்காக அமைக்கும் போராட்ட அமைப்புகளை புதிய ஜனநாயக ஐக்கிய முன்னணியுடன் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. கூட்டு நடவடிக்கைகளிலும் அதற்கான ஸ்தாபனங்களிலும் ஒற்றுமையும் போராட்டமும், சுதந்திரமும் முன் முயற்சியும் என்ற கொள்கையை பாட்டாளி வர்க்கக்கட்சி வழுவாது பற்றி நிற்கவேண்டும். இவ்வாறு செயல்படுவதன் மூலமாகத் தான் பிரதான தாக்குதல் திசைவழி பிறழாது, எதிரிக்கு எதிரான பிரதான தாக்குதல் அதிக பட்சம் பலனளிக்கக் கூடியதாக இருக்கும்”.

 போர்த்தந்திர கட்டம் முழுவதற்கும் சக்திகளின் இந்த பொது ஒதுக்கீடு பொருந்தும் எனினும், புரட்சியின் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சக்திகளைப் பருண்மையாக ஒதுக்குவது போர்த்தந்திரம், செயல்தந்திரம் - இரண்டாலும் தீர்மானிக்கப்படுகிறது. ஜனநாயகப் புரட்சிக் கட்டத்திலேயே பாசிச ஆட்சி வந்தால், பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி என்ற அமைப்பைக் கட்டி செயல்தந்திர ரீதியில் போரிடுவோம். அப்போது பாசிச எதிர்ப்பில் நிற்கும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரோடும் கூட சேர்ந்து போராடுவோம். அதாவது, சக்திகளை பொதுவாக ஒதுக்கீடு செய்யும் திட்டம் போர்த்தந்திர ரீதியிலான ஐக்கிய முன்னணிக்கான சக்திகளின் சேர்க்கையைக் குறிக்கிறது. குறிப்பிட்ட சமயத்தில் அமைக்கப்படும் ஐக்கிய முன்னணியின் சேர்க்கை, போர்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் இரண்டாலும் தீர்மானிக்கப்படுகிறது.”

(இந்திய புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவ பாதையும்- மா.அ.க பக்கம்: 169, 180)

ஏற்கனவே எமது அமைப்பு தீர்மானித்துள்ள அரசியல் நிலைப்பாடுகளின் மீதும் நம்பிக்கை இன்றி, தானே வகுத்துக் கொண்ட நிலைப்பாடுகளிலும் ஊன்றி நிற்காமல் ட்ராட்ஸ்கியவாத, குட்டி முதலாளித்துவ வகைப்பட்ட செயல்தந்திரம் ஒன்றை அமல்படுத்துவதன் மூலம் ’திடீர் புரட்சி’ அல்லது ’வெடிகுண்டு புரட்சிக்கு’ தாங்கள் தயாராக இருப்பதாக அணிகளிடமும், வெகுஜன மக்களிடமும் கதயளக்கிறார்கள் செங்கனல் கும்பல்.

 தொடரும்

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.