“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம் 3.


தானே நிறைவேற்றிய ஆவணங்களை தூக்கி எறிந்து விட்டு ‘இடது சந்தர்ப்பவாத’ கண்ணோட்டத்தில் ‘அதிரடி புரட்சிக்கு’ தயாராகியுள்ள வினவு தலைமை. ஆவணங்களை தனது சூடேறிய மண்டையின் மூலமாக திரித்து புரட்டுவது தொடர்கதையாகி வருகிறது.


சமீபத்தில் இந்தியாவின் பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய The battle to save India என்ற கட்டுரையை மணிவேல் என்பவர் மொழிபெயர்த்து எழுதியபோது தனது சொந்த சரக்குகளை இணைத்து அருந்ததிராய் கூறியது போல கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.


“இந்த நாட்டை தங்களது அயராத உழைப்பால் உருவாக்கி வளப்படுத்தி பாதுகாத்து வரும் உழைக்கும் மக்களுக்கு, ஒரு கொடூரமான உலகத்தை பரிசளிக்க காத்திருக்கிறது பாசிச பாஜக – ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன மதவெறி கும்பல். அதை எதிர்கொண்டு மக்களை பாதுகாப்பதற்கான தெம்பும் திராணியும் இந்தியாவிலிருக்கும் எந்த ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகளுக்கும் இல்லை!


அப்படியென்றால் பாசிச சக்திகளை வேரறுக்க என்னதான் வழி? ஜெர்மனியின் நாஜி படைகள் உலகமெங்கும் வெற்றி வாகைசூடி நாடுகளை அடிமைப்படுத்தி சூறையாடிய வேளையில் ஹிட்லருக்கான முதல் மரண அடி ரஷ்யாவின் சின்னஞ்சிறு கிராமத்தில் தொடங்கியது. அங்கிருந்து பின்வாங்கி ஓடத்துவங்கிய ஹிட்லர் சொந்த நாட்டில் அவனது இரகசிய அறையில் தற்கொலை செய்துகொள்ளும் வரை நிற்கவில்லை. பாசிசத்தால் ஆட்படுத்தப்பட்ட நாடுகளை விடுதலை செய்தது ஸ்டாலினின் செஞ்சேனை!


அந்த மகத்தான சாதனையை படைத்தது மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனைகளால் வார்க்கப்பட்டு பாட்டாளி வர்க்கத் தலைமையிலான உழைக்கும் மக்களின் ஆட்சியை நடத்திவந்த மாபெரும் ஸ்டாலினின் சாதனை ஆகும். உலகம் முழுதும் மார்க்சிய சிந்தனைகளின் தாக்கம் உழைக்கும் மக்களின் துன்ப துயரங்களுக்கு தீர்வு காணும் வழிகளை காட்டுகிறது.


பாசிச பாஜக, ஆர்.எஸ்.எஸ், பார்ப்பன மதவெறி கும்பலின் சித்தாந்தத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் தூர்த்தி எடுத்து தூர எறியும் ஆற்றல் மார்க்சிய – லெனினிய –மாசேதுங் சிந்தனைகளுக்கு மட்டுமே உண்டு. அந்த சித்தாந்தத்தால் உருவாக்கப்படும் பாட்டாளி வர்க்க தலைமையிலான உழைக்கும் மக்களின் படைதான் பாசிச கும்பலுக்கு சரியான பதிலடி கொடுக்கும்!. அதற்காக சாதி, மதம், இனம், மொழி கடந்து ஒரு வர்க்கமாக, உழைக்கும் மக்கள் பாட்டாளி வர்க்கத் தலைமையில் அணிவகுக்க வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளது. ஏற்கனவே நக்சல்பாரி எழுச்சியும், தெலுங்கானா புரட்சியும் நமக்கு அளப்பரிய பாடத்தையும் அனுபவத்தையும் தந்துள்ளது.


ஏற்கனவே, மிகவும் தாமதமாகிவிட்டது. நாம் ஒவ்வொருவரும் ஒரே வர்க்கமாக வேறுபாடுகளை களைந்து கொண்டு வீதியலிறங்கி பாசிச சக்திகளுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது. இருட்டை களையும், பாசிசத்தை எரித்து சாம்பலாக்கும் நெருப்பு நம் ஒவ்வொருவர் வீட்டு வாசலில் உள்ளது. கையில் ஏந்தி நமது எதிர்காலத்தை, நமது எதிர்கால சந்ததியினருக்கான இந்தியாவை படைக்கபோகிறோமா? இல்லையா? அது நம் கையில்தான் உள்ளது.”



மூலக்கட்டுரை : The Battle to Save India – Arundhati Roy.    -. மணிவேல்.

ஆங்கிலத்தில் வந்த கட்டுரையை தனது வசதிக்கு ஏற்ப ஓட்டு பொறுக்கிகள், நக்சல்பாரி எழுச்சி, தெலுங்கானா புரட்சி என்றெல்லாம் இணைத்து எழுதியதைப் போலதான் தனது ஆவணங்களில் எழுதியவற்றை மறுத்து, ‘ஊர் மெச்சிக்கொள்ள வேண்டும்’ என்று திரித்துப் புரட்டுகிறார்கள்.


இந்தியாவில் பாசிச அபாயம் தோன்றுகிறது என்பதை பற்றி எண்பதுகளில் நாங்கள் முன்வைத்த போது நக்சல்பரி அரசியலில் ஊன்றி நின்றிருந்தாலும், போர் தந்திரம் மற்றும் செயல் தந்திரம் பற்றிய அறிவியல் பூர்வமான கண்ணோட்டம் இல்லாத மக்கள் யுத்தக் குழு, “பாசிசமாவது, பாயாசமாவது” என்று கேலி செய்தனர்.


அதன் பிறகு பாசிசத்தினால் ஏற்படுகின்ற விளைவுகளை பற்றி புரிந்து கொண்டவுடன் இந்தியா போன்ற அரைக்காலனி நாடுகளிலும் பாசிச அபாயம் உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.


அதுபோலவே ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் ஒன்று குவிப்பு மற்றும் அபரிமிதமான வளர்ச்சியானது உலகளாவிய ஆதிக்கத்தை நிலை நாட்டுவதிலும் செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவதிலும் புதிய வடிவத்தில் சுரண்டலை மேற்கொள்கிறது என்பதை 90களில் காலனி, அரைக்காலனி, நவீன காலனி போன்ற வடிவங்களுடன் மறுகாலனி என்பதையும் புதிய வடிவமாக கடைபிடிக்கிறது என்று முன்வைத்தவுடன் இந்தியா விடுதலை பெற்று விட்டதா இப்போதுதான் மீண்டும் காலனியாகிறதா? என்று அரசியல் அரைவேக்காட்டுத்தனமான கேள்விகளை எழுப்பினர் மக்கள் யுத்தம் (போல்சவிக்) குழுவினர்.


ஆனால் மறுகாலனியாக்கத்தின் விளைவுகளால் ஏற்படக்கூடிய அரசியல், பொருளாதார, பண்பாட்டு சிக்கல்களையும், பாதிப்புகளையும் பக்கம் பக்கமாக விளக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதனை கோட்பாட்டு ரீதியாக மறுகாலனியாக்கம் என்று வரையறுத்த போது மக்கள் யுத்தம் (போல்சவிக்) போலவே மார்க்சிய லெனினிய குழுக்களில் பலர் ஏற்றுக் கொள்ள வில்லை. 


இந்தியாவில் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் சுரண்டல் மறுகாலனியாக்கமாக வெளிப்படுகிறது என்பதையும், அத்தகைய உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இயற்கை வளங்களை சூறையாடுவதற்கும், பொதுத்துறை நிறுவனங்களை விழுங்குவதற்கும், விவசாயத்தை தனது பிடிக்குள் கொண்டு செல்வதற்கும் முயற்சி செய்கிறது.     2008 மீள முடியாத உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு உலகை கட்டுப்படுத்துவதற்கும், சூறையாடுவதற்கும், பழைய சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறைகளை கடைப்பிடிக்க முடியாது என்ற நிலைக்கு ஏகாதிபத்திய நிதி மூலதனம் தள்ளப்பட்டுள்ளது. 


இந்த மறுகாலனியாக்கத்தின் தீவிர தன்மையையே கார்ப்பரேட் பாசிசம் என்று வரையறுத்து முன் வைக்கிறோம். அந்த கார்ப்பரேட் பாசிசத்திற்கு இந்தியாவில் உள்ள பிற்போக்கு சக்திகளான, சாதி- தீண்டாமை, வர்ணாசிரம கொள்கைகளை உள்ளடக்கிய காவி பாசிசம் அதாவது பார்ப்பன பாசிசம் துணை போகின்றது. இரண்டும் ஒன்றிணைந்த வீரிய ஒட்டுரக ஹைபிரிட் பாசிசமாக வெளிப்படுகிறது என்று வரையறுத்து அதன் அடிப்படையில் தற்போது செயல்பட்டு வருகிறோம். 


கார்ப்பரேட் காவி பாசிச அபாயத்தையும், தற்போது பாசிசம் ஆட்சியதிகாரத்தில் உள்ளது என்று வரையறுத்து செயல்படுவதை பல மார்க்சிய லெனினிய குழுக்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள இடது, வலது கம்யூனிஸ்டுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. 


இது ஏறக்குறைய முதல் உலகப்போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றி வளர்ந்த பாசிச அபாயத்தை பற்றி பல்வேறு நாடுகளில் இருந்த கம்யூனிச இயக்கங்கள் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டதன் விளைவாக பாசிசத்திற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தனர் என்பதைப் போன்ற ஒரு சூழ்நிலை இந்தியாவில் நிலவுகிறது.


அந்த வரிசையில் வினவு மற்றும் செங்கனல் தலைமை பாசிசம் ஆட்சி அதிகாரத்திற்கு வரவில்லை என்று சொந்த அணிகளையும், வெகுஜன மக்களையும் ஏய்ப்பதால்தான், தாங்களே நிறைவேற்றிய ஆவணத்திற்கு எதிராக, ஐக்கிய முன்னணி கட்டுவதையோ, செயல் தந்திர அரசியல் அடிப்படையில் தேர்தலைப் போராட்ட வடிவமாக பயன்படுத்துவதையோ புறக்கணித்து ‘வெடிகுண்டு புரட்சியை’  முன்வைக்கின்றனர்.


தொடரும்.




Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.