“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-5.

கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்குவதையும், பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி ஒன்றை உருவாக்குவதையும் எமது திட்ட வகைப்பட்ட செயல் தந்திரத்தின் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம்.


அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ இந்தியாவில்  ஜனநாயக புரட்சி நடைபெறாத சூழலில், புதிய ஜனநாயக புரட்சிக்கு மக்களை அணி திரட்டி போராடிக் கொண்டிருக்கும் போதே பாசிச அபாயம் தோன்றியுள்ள தற்போதைய புதிய நிலைமைக்கு பொருத்தமாக பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி மூலம் மேலிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு செயல் தந்திரத்தை பிரயோகிக்கின்றோம்.


அதனால்தான் முதலாளித்துவ நாடுகளில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு என்று முன்வைப்பதை போல நாங்கள் முன் வைக்காமல், காலனிய அரைக்காலனிய, மறுகாலனிய நாடுகளுக்கு பொருத்தமான ஜனநாயக கூட்டரசு என்பதை மாற்று அரசமைப்பாக முன்வைக்கின்றோம். சீனாவில் கூட்டரசாங்கத்தின் மூலம் தோழர் மாசேதுங் முன் வைத்த வழிமுறையையும், நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் முன்வைத்த கூட்டரசாங்கத்தையும் வழிகாட்டும் முன்னோடியாக கொண்டு செயல்படுகிறோம்.


இது போன்ற எதையும் புரிந்து கொள்ள திராணியில்லாத வினவு மற்றும் செங்கனல் தலைமை, தாங்களே நிறைவேற்றிய பாசிச எதிர்ப்பு செயல் திட்டத்தை கூட அமல்படுத்தாமல் சந்தர்ப்பவாதமாக செயல்படுகின்றனர். செயல்தந்திரம் குறித்து ஆசான் லெனின் போதனை என்ன?


தற்போதைய அரசியல் குழ்நிலையைப் பற்றி ஓர்மதிப்பீடு, நமது காலத்திய வெறுப்பூட்டக் கூடிய பிரச்சினைகள் பற்றிய தெளிவான பதிலுரைகள் அளித்தல், இவை இரண்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஓர் செயல்தந்திர வழி இன்றி. நாம் தத்துவவாதிகளைக் கொண்டவர்களாக இருப்போமேயன்றி, ஓர் இயங்குகின்ற அரசியல் முழுமையாக நமது கட்சி இருக்க முடியாது.

(லெ. தே. நூல் தொகுதி 17 பக்கம் 278) 


தோழர் லெனின் முன் வைக்கும் செயல் தந்திர அறிவியலை புரிந்துகொள்ள தற்போது இந்தியாவின் நிலமையை பருண்மையாக புரிந்துக் கொள்ள வேண்டும். பாசிச அபாயத்தை புரிந்து கொள்வதற்கு முன்பாக பாசிசம் ஏன் தோன்றுகிறது என்பதை பற்றி மார்க்சிய விளக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


முதலாளித்துவ உற்பத்தியானது ஏகபோகம் மற்றும் மூலதன ஏற்றுமதி செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவது போன்ற அடிப்படைகளைக் கொண்டு ஏகாதிபத்தியமாக பரிணமித்த பிறகு பல நாடுகளை காலனி, அரைக்காலனி, நவீன காலனி ஆகிய வடிவங்களில் ஒடுக்குமுறை செலுத்துகிறது. இத்தகைய காலனியாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு ஏகாதிபத்திய முதலாளித்துவம் ஜனநாயக வழிமுறைகளை எப்போதும் கையாள்வதில்லை மாறாக பாசிச ஒடுக்கு முறையின் மூலம் இந்த காலனியாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு முயற்சி செய்கிறது.


ஏகாதிபத்திய சுண்டலையே பாசிசம் என்று புரிந்து கொள்வது தவறாகும்.

வரம்புக்கு உட்பட்ட அளவில் முதலாளித்துவ ஜனநாயகம் தன்னை ஒரு ’நீதிமானாக’ காட்டிக் கொள்வதற்கு முயற்சி செய்கிறது. ஆனால் நிதி மூலதனத்தின் நெருக்கடிக்கு உட்பட்டு தனது முகமூடியை கலைந்து கொண்டு ஜனநாயகத்தை தூக்கி எறிந்து பாசிசத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருகிறது. இத்தகைய பாசிச அடக்கு முறையை புரிந்து கொள்வதற்கு திறன் இல்லாத அல்லது பாசிசத்தை பற்றி குறைத்து மதிப்பிடுவதன் மூலமாக பாசிஸ்டுகளை வளர விடுகிறார்கள் திருத்தல்வாதக் கம்யூனிஸ்டுகள்.


பாசிசம் எங்கும் எப்போதும் கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சிக்கும் கம்யூனிஸ்டுகள் உருவாக்க எண்ணுகின்ற சோசலிச அல்லது புதிய ஜனநாயக சமூகத்தை தடுத்து நிறுத்துவதற்காக பழைய வகையிலேயே நாடுகளை அடக்கி ஒடுக்குகின்ற வழிமுறைகளை கையாள்வதற்கு முயற்சி செய்கிறது.


ஆனால் பாசிசத்தை பற்றி புரிந்து கொள்ள வேண்டிய திருத்தல்வாதக் கம்யூனிஸ்டுகள் அது ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்வது பாசிசம் காலனி, அரைக்காலனி நாடுகளில் வராது முதலாளித்துவ நாடுகளில்தான் பாசிசம் தோன்றும் என்று தப்பாக புரிந்து கொள்வது அல்லது பாசிசம் என்று வரையறுக்காமல் எதேச்சதிகாரம் முதலாளித்துவத்தின் கோரத்தாக்குதல் என்று சுருக்கமாக புரிந்து கொள்வது போன்றவற்றின் காரணமாகவே பாசிசம் வளர்வதற்கு சாதகமான சூழல் உருவாகிறது.


இந்தியாவைப் பொறுத்தவரை எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டபோது இந்திரா காந்தி அதிகார வர்க்கத்தின் மூலமாக பாசிசத்தை திணித்தார். அதற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராடியதன் காரணமாக எமர்ஜென்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் அது அரசியல், பொருளாதார, கலாச்சார வாழ்க்கையில் பல்வேறு தாக்குதல்களை தாக்கங்களை ஏற்படுத்தி உழைக்கும் மக்களுக்கு சொல்லணா துயரத்தை ஏற்படுத்தியது.


அதன் பிறகு நிதி மூலதனம் தேசங்கடந்த தொழிற்கழகங்களாகவும் பன்னாட்டு நிறுவனங்களாகவும் இந்தியாவை சூறையாடுவதற்கு மறுகாலனியாக்க கொள்கையை திணித்தது. இத்தகைய மறுகாலனியாக்கம் தற்போது தீவிர தன்மையை அடைந்துள்ளது. இந்த தீவிரத் தன்மைக்கு பொருத்தமான அரசியல் ஒடுக்குமுறை வடிவமாக கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. இதுதான் இந்தியாவின் பருண்மையான சூழலாகும்.


இத்தகைய சூழலில் முரண்பாடுகளை கையாள்வது குறித்து தோழர் மாசேதுங் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.


"எதிரியின் உள் முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு தற்காலிக துணை சக்திகளை வென்றெடுப்பது பற்றிய பிரச்சினைகளில், அந்த முரண்பாடுகளை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்று அவர்களைப் பிளவுபடுத்தி, நம்மோடு ஒத்துழைக்கக்கூடிய அந்த முகாமில் இருக்கும் சக்திகளோடு அல்லது இன்னும் நமது பிரதான எதிரியாக மாறாதவர்களோடு இணைந்து ஒரு தற்காலிகக் கூட்டை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும், நம்மோடு ஒத்துழைக்க விரும்பும் கூட்டாளிகளுக்கு அவசியமான சலுகைகளைத் தந்து நம்மோடு இணைந்து பொது நடவடிக்கையில் பங்கு கொள்ள அவர்களைத் தூண்டுவதும், பிறகு அவர்களை நமது செல்வாக்கின் கீழ் கொண்டுவந்து அவர்களைப் பின்பற்றும் மக்களை வென்றெடுக்க வேண்டியதும் அவசியம்.'' (மாவோ, கட்சி வரலாற்றில் சில பிரச்சினைகள் பற்றிய தீர்மானம், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், பக்.341)


இந்த அடிப்படையில்தான் தற்போதைய பாசிச அபாய சூழ்நிலையில் மறுகாலனியாக்கத்தை ஆதரித்தாலும், பாசிசத்தை எதிர்த்து போராடுகின்ற ஆளும் வர்க்கத்தின் பிரிவுடன் இணைந்து பாசிசத்திற்கு எதிராக ஐக்கிய முன்னணி அமைப்பதை பற்றி நாங்கள் முன்வைத்து செயல்படுகின்றோம். இந்த கண்ணோட்டத்திலேயே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அணுகுகின்றோம். ஆளும் வர்க்க கட்சியாகவும், ஒட்டுமொத்த இந்திய மக்களின் எதிரியாகவும் உள்ள பாஜகவுடன் இணை வைத்து இப்படிப்பட்ட கட்சிகளை அணுகுவது தற்கொலை பாதையாகும் என்றும் நாங்கள் கருதுகிறோம்.


ஆனால் கோட்பாட்டு ரீதியாக ஒரு முடிவையும் நடைமுறை ரீதியாக அதற்கு எதிரான செயல்பாட்டை கொண்டுள்ளது வினவு மற்றும் செங்கனல் தலைமை. பாசிசத்தை முறியடித்த பிறகு மீண்டும் போலி ஜனநாயக அரசு கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதைத்தான் தனது நிலைப்பாடாக ஆவணங்களில் முன்வைத்துள்ளனர் ஆனால் இதனை மறுக்கும் விதமாக மாநாடுகளில் தீர்மானங்களை போட்டு அணிகளை ஏய்க்கின்றனர்.


“ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிச கும்பலின் இந்த பாசிசப் போக்கைப் புரிந்து கொள்ளாமலும், புரிந்தாலும் தங்களது சந்தர்ப்பவாதக் கொள்கைகள் காரணமாக மறைத்துக் கொண்டும், எதிர்க்கட்சிகள் தேர்தல் கூட்டணிகளை அமைத்து 2024 தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. மற்றொருபுறம், தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை மோடி-அமித்ஷா கும்பல் பாணியிலேயே நடைமுறைப்படுத்தவும் செய்கின்றன; பாசிசம் அரங்கேறுவதற்கான ஊற்றுமூலமாகவும், முக்கிய காரணமாகவும் உள்ள இன்றைய போலி ஜனநாயக அரசியலமைப்பு முறையைக் கட்டிக்காத்து, அதனை பாசிச மோடி – அமித்ஷா கும்பலின் பிடியிலிருந்து மீட்கப் போவதாகவும் கூறுகின்றன.


போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் வழியாகவும் மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாகவும்தான் இந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் வளர்ந்து, இன்று அரியணை ஏறும் நிலையை அடைந்துள்ளது. இச்சூழலில், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசத்தை எதிர்க்கும் கட்சிகள், அமைப்புகள் மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து நிறுத்தவும், கார்ப்பரேட் ஆதிக்கத்தை முறியடிக்கவும், உழைக்கும் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும் “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை” அமைக்கும் நோக்கத்தில் தற்போதே ஒன்றிணைந்து போராடுவது மிக அவசியமாகும். 


உழைக்கும் மக்களின் பாசிச எதிர்ப்பு எழுச்சியில் உருவாகும் புதியதொரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசானது, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி, அதனைச் செயல்படுத்தும் அதிகாரத்தை மக்களுக்கே அளிப்பதன் மூலமாகத்தான் தற்போதைய ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிக்கவும் பாசிச கும்பல்கள் வேறு வடிவங்களில் மீண்டும் தலைதூக்காமல் தடுக்கவும் முடியும்” என்று வினவு கும்பல் பொதுக்குழுவில் முடிவு செய்கிறது”.


தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளைப் பற்றி பக்கம் பக்கமாக விமர்சித்துக் கொண்டே சாதாரண தெருமுனை கூட்டங்கள் கூட தனியாக நடத்துவதற்கு திராணியற்ற இவர்கள் ’பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைக்க ஒன்றிணைந்து போராடுவோம்’ என்று கூறுவது ரெட்டை நாக்கு அணுகுமுறையாகும். 


இவை அனைத்திற்கும் அடிப்படை போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் பற்றிய மார்க்சிய லெனினியம் போதிக்கும் அறிவியல் பார்வையற்ற, அரசியல் சித்தாந்தமற்ற, லும்பன் கும்பலை போல செயல்படுவதுதான் என்பதை உறுதி படக் கூற முடியும்.


Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.