பாசிசம் தோன்றுவதற்கான அடித்தளம் எது ?

பாசிசம் குறித்த விளக்க உரைகள் பாகம்_6

பச்சோந்தியைப் போன்று தோற்றமளிக்கக் கூடியது பாசிச தத்துவத்தை விட வேறெதுவும் இருக்க முடியாது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 6

பாசிச சித்தாந்தம் என்ற மற்றொரு பிரச்சினையை நாம் இப்பொழுது காண்போம். இப்போராட்டத்தில் அது எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது?

இந்தச் சித்தாந்தத்தை நாம் ஆய்வு செய்யும்பொழுது நாம் காண்பதென்ன? அனைத்தையும் காண்கிறோம். அது, ஒரு கதம்பக் கூட்டு. ஒரு வெறித்தனமான தேசியவாதத் தத்துவம் என்பது அனைத்து இடங்களிலும் அனைத்துப் பாசிச இயக்கங்களுக்கும் ஒரு பொதுவான அம்சமாகும். இத்தாலியைக் குறித்து மிக அதிகமாகப் பேச வேண்டிய தேவை இல்லை. இந்த அம்சம் ஜெர்மனியில் இதைவிட பலமானது. ஏனென்றால், ஜெர்மனி யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட நாடு. மேலும் அங்கு தேசியவாத அம்சம் மக்களைத் திரட்டுவதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளது என்பதாகும்.

இந்த அம்சம் ஒருபுறமிருக்க, இதர மூலங்களிலிருந்து பெறப்பட்ட ஏராளமான கூறுகளும் உள்ளன. இத்தகைய மூலங்களுக்கு உதாரணமாகச் சொல்வதென்றால் சமூக ஜனநாயகத்தைக் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக வர்க்கக் கூட்டு என்ற கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டுள்ள கூட்டாண்மைத் தத்துவமானது பாசிசம் கண்டுபிடித்ததல்ல. மாறாக அது சமூக ஜனநாயகம் கண்டுபிடித்ததாகும். ஆனால், சமூக ஜனநாயகத்திலிருந்து வராத வேறு அம்சங்களும் இன்னும் அங்கே உள்ளன.

உதாரணத்திற்குச் சொல்வதென்றால் முதலாளித்துவக் கண்ணோட்டத்தைக் கூறலாம். இது அனைத்து பாசிசங்களுக்கும் பொதுவானதல்ல. ஆனால், இத்தாலிய, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு பாசிசங்களில் இது காணப்படக்கூடியது. இந்தக் கண்ணோட்டத்தின்படி ஏகாதிபத்தியமானது சிதைந்து விட்டது. அது முற்றிலும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். அதே நேரத்தில் உண்மையான முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது ஆரம்ப காலகட்டத்தைச் சேர்ந்தது. எனவே ஆரம்ப கட்டத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இந்தப் பொதுக் கருத்தை நீங்கள் பல ஜனநாயக நீரோட்டங்களில் காணமுடியும். உதாரணமாக கியுஸ்டிஸியா இலிபர்டா5 எனும் இயக்கத்தில் இதைக் காணலாம். இது சமூக-ஜனநாயக தத்துவமல்ல; மாறாக, சோசலிசத்தை நோக்கி வேகமாகச் செல்லும் உலகை, பழைய நிலைக்கே திருப்பிவிட நினைக்கும் குட்டி பூர்ஷுவாக்களின் முயற்சியை வெளிப்படுத்தும் சாகசவாத தத்துவமாகும்.

இத்தாலியிலும் ஜெர்மனியிலும் பாசிச சித்தாந்தத்தில் புதிய கோட்பாடுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இத்தாலியில் முதலாளித்துவத்தின் ஸ்தாபன வடிவத்தைப் பின்பற்றி அந்த முதலாளித்துவத்திற்கு அப்பாலும் செல்வது பற்றி பேசப்பட்டு வருகிறது. இங்கு சமூக-ஜனநாயக அம்சம் மீண்டும் தலைதூக்குகிறது. ஆனால் அவையும் (திட்டமிடுதல் போன்றவை) கம்யூனிசத்திலிருந்து திருடப்பட்டதேயாகும்.

பாசிச தத்துவமானது பல்வேறு கதம்பக் கூறுகளைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தச் சித்தாந்தம் எந்த நோக்கத்திற்காகச் செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள இது உதவுகிறது. மேலும் உழைக்கும் வெகுஜனப் பகுதியினர் மீது சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான போராட்டத்தில் பலதரப்பட்ட கோஷ்டிகளை இணைப்பதற்கும், இதன்பொருட்டு ஒரு பரந்த இயக்கத்தை உருவாக்குவதற்கும் இது பயன்படுகிறது. பாசிச சித்தாந்தம் இத்தகைய சக்திகளை ஒன்றாகப் பிணைப்பதற்கான ஒரு கருவியாக அமைந்துள்ளது.

இந்தச் சித்தாந்தத்தின் ஒரு பகுதி – தேசியவாதப் பகுதி – நேரடியாகவே பூர்ஷுவா வர்க்கத்துக்குத் தொண்டு செய்கிறது; மற்றொரு பகுதி ஒரு பிணைப்பாகச் செயல்படுகிறது.

பச்சோந்தியைப் போன்று தோற்றமளிக்கக் கூடியது பாசிச தத்துவத்தை விட வேறெதுவும் இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைக் கூறி பாசிசம் எய்த விரும்பும் குறிக்கோள்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் பாசிச சித்தாந்தத்தை மதிப்பிடாதீர்கள்.

பாசிச சித்தாந்தம் மிக உறுதியான, முழுமையான, ஒரே சீரான சித்தாந்தம் என்று கருதும் போக்கிற்கெதிராக உங்களை எச்சரிக்கிறேன். பச்சோந்தியைப் போன்று தோற்றமளிக்கக் கூடியது பாசிச தத்துவத்தை விட வேறெதுவும் இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைக் கூறி பாசிசம் எய்த விரும்பும் குறிக்கோள்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் பாசிச சித்தாந்தத்தை மதிப்பிடாதீர்கள்.

பாசிசத்தின் அடிப்படையான கொள்கை வழி உக்கிரமான, வெறித்தனமான தேசியவாதமும் சமூக ஜனநாயகத்துடன் ஒத்த தன்மை கொண்டிருப்பதுமாகும், ஏன் இந்த ஒத்த தன்மை? ஏனென்றால் சமூக – ஜனநாயக சித்தாந்தமும் கூட ஒரு குட்டி பூர்ஷுவா சித்தாந்தமாகும். அதாவது குட்டி பூர்ஷுவா உள்ளடக்கம் இவ்விரு தத்துவங்களுக்கும் பொதுவானது. ஆனால், இந்த ஒத்த தன்மை என்பது பல்வேறு நாடுகளில் பல்வேறு சமயங்களில், பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

அடுத்த பாடத்திற்கான அடிப்படை வேலையை நாம் விரைவாகச் செய்வோம். இத்தாலியில் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் பிரச்சினை தோன்றியது? அந்தப் பிற்போக்கு இயக்கம் எவ்வாறு உருவாக்கப்பட்டது? இதுதான் நமது அடுத்த பாடத்திற்கான கருப்பொருள்.

ஆரம்ப கட்டத்திற்கு மீண்டும் செல்வோம். ஒருபுறத்தில் புரட்சிகர நெருக்கடி அங்கே இருந்தது. பூர்ஷுவா வர்க்கத்தினரால் பழைய முறைகளில் ஆள இயலவில்லை. பொதுவான அதிருப்தியும், தொழிலாளி வர்க்கத்தின் தாக்குதலும், அரசியல் வேலை நிறுத்தங்கள், பொது வேலை நிறுத்தங்கள் போன்றவையும் சேர்ந்து ஓர் இக்கட்டான நிலைமை நிலவிற்று. சுருக்கமாகச் சொன்னால் யுத்த பிற்கால காலகட்டத்தில், ஆழமான புரட்சிகர நெருக்கடியில் நாம் இருந்தோம்.

ஒரு விஷயம் குறிப்பாக தெளிவாகத் தெரிந்தது. இத்தாலிய ஆளும் வர்க்கம் பழைய கொள்கையை, அதாவது 1912-ம் ஆண்டு வரை கடைப்பிடிக்கப்பட்ட கியோலிட்டியினுடைய “சீர்திருத்தவாதக்” 6 கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது சாத்தியமற்றதாகி விட்டது. சீர்திருத்தவாதிகள் அதிகாரத்திலிருந்ததால் இது சீர்திருத்தவாதக் கொள்கையாகி விடவில்லை. மாறாக, நாடாளுமன்ற ஆட்சி என்ற பெயரால் முதலாளித்துவ சர்வாதிகாரத்தைத் தொடர்ந்து வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டு சில குழுக்களுக்குச் சலுகைகள் அளிக்கும் கொள்கையாகவே அது இருந்தது.

இந்தக் கொள்கை யுத்தத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் நிலைத்திருக்கவில்லை. ஏனென்றால் தொழிலாளிகள் மற்றும் விவசாய மக்கள் பகுதியினர் அதற்கெதிராக கிளர்ந்தெழுந்தனர்.

யுத்தப் பிற்காலத்தில் இரண்டு பிரதான நிகழ்ச்சிப் போக்குகள் கவனத்திற்குரியவையாகும். ஒன்று, இத்தாலிய சோசலிஸ்டுக் கட்சியின் மாபெரும் வளர்ச்சியை இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிடலாம். இக்கட்சியில் இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் இருந்தனர். பத்து இலட்சக்கணக்கான வாக்காளர்கள் இவர்களுக்கு ஆதரவாக இருந்தனர்; இரண்டு, விவசாயிகளிடையே மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தது; ஆனால், அவர்கள் பிளவுபட்டு பல்வேறு கட்சிகளில் இணைந்திருந்தனர். பாப்புலர் கட்சி7 விவசாயிகள் கட்சியாகும். அதே நேரத்தில் விவசாயிகளின் இயக்கங்களையும், தெற்கில் நிலம் கைப்பற்றப்பட்டது போன்றவற்றையும் நாம் காண்கிறோம்.

தொழிலாளிகளும் விவசாயிகளும் தாக்குதலைத் தொடங்குகிறார்கள். அவர்களுடைய அணி உருவெடுக்க ஆரம்பிக்கிறது. தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஒன்றுபட்ட தாக்குதலை யுத்தத்திற்குப் பிந்தைய இத்தாலியில் மிக முன்னேறிய வடிவங்களில் காண முடியும். நாடாளுமன்ற ஆட்சி வடிவங்களின் முடிவுக்கு அது கட்டியங் கூறுகிறது.

பூர்ஷுவா வர்க்கத்தினர் நாடாளுமன்ற முறையை ஒழித்துக்கட்ட வேண்டியிருந்தது. அதிருப்தி என்பது தொழிலாளிகளிடம் மட்டுமல்ல, குட்டி பூர்ஷுவா பகுதியினரிடமும் பரவியிருந்தது. குட்டி பூர்ஷுவா முன்னாள் ராணுவத்தினர்கள் மற்றும் இதரர்களின் இயக்கங்கள் உருவெடுத்தன. பூர்ஷுவா வர்க்கத்தினரும் குட்டி பூர்ஷுவா பகுதியினரும் நடப்பிலுள்ள அரசாங்கத்தை இனியும் சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை: அவர்கள் அதை மாற்ற விரும்பினர்.

இத்தகைய அடித்தளத்திலிருந்துதான் பாசிசம் உதயமாகி எழுகிறது.

அடிக்குறிப்புகள் :

5. கியூஸ்டிஷியா லிபர்டா, கார்லோ ரோசெல்லி, எமிலியோ லுஸ்ஸு, ரிக்கார்டோ பயவர் ஆகியோராலும் மத்தியதர வர்க்க அறிவாளிகளாலும் 1929-ல் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு பாசிச- எதிர்ப்பு இயக்கம்: மதசார்பின்மை, தன்னார்வ சேவை குடியரசு தன்மை, தீவிரவாதம் முதலியவை இவ்வியக்கத்தின் கோட்பாடுகள். அதன் வேலைத்திட்டம் குடியரசு தன்மை கொண்ட அரசாங்கம், பிராந்திய தன்னாட்சி, அதிகாரவர்க்க அமைப்பில் சீர்திருத்தம், கலப்பு பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. 1942-ல் இயக்கத்தின் மையக்குழு செயல்கட்சியை அமைத்தது. பாசிசத்திற்கும் நாசிசத்துக்கும் எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கை ஆற்றியபின் அது தன்னை 1947-ல் கலைத்துக் கொண்டது.

6. கியோவான்னி சியோலிட்டி (1842-1928) 1892-93, 1906-09, 1911-14, 1920-21 ஆண்டுகளில் பிரதம மந்திரியாக இருந்தார். இந்த நூற்றாண்டு துவக்கத்திற்குப்பின் இத்தாலிய அரசியலில் மிகப் பிரபலமான புள்ளியாக இருந்தார். அல்குனி டெமி டெல்லா குயிஸ்டியோனி என்ற முற்றுப்பெறாத தமது கட்டுரையில் கிராம்ஸி கியோலிட்டியின் முன்னேற்றத்தைப் பற்றியும் அவரது உள்நாட்டுக் கொள்கையின் அடிப்படை பற்றியும் மிகத் தெளிவான, துல்லியமான பரிசீலனையை அளித்துள்ளார்.

ரத்தக்களறியான 1890-1900 ஆண்டுகளுக்குப் பின், முற்றிலும் ஒதுங்கி நிற்கும், முற்றிலும் பலாத்காரம், முற்றிலும் சர்வாதிகாரம் – இவற்றை பூர்ஷுவாக்கள் கைவிடவேண்டியிருந்தது. தெற்கேயுள்ள விவசாயிகளும் வடக்கேயுள்ள தொழிலாளிகளும் ஒரே சமயத்தில் – ஒன்றிணைந்து செயல்படாவிடினும் – கலகத்தில் எழுந்தனர்; புதிய நூற்றாண்டில் ஆளும் வர்க்கம் புதிய கொள்கையை துவக்கியது – அதாவது, வர்க்க கூட்டணிகள், வர்க்க அரசியல் அணி, பூர்ஷுவா ஜனநாயகம், அது இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்: கிராமப்புற ஜனநாயகமா – அதாவது தெற்கத்திய விவசாயிகளுடன் கூட்டணியா அல்லது சுதந்திரமான வியாபாரம், வயது வந்தோருக்கு வாக்குரிமை, நிர்வாகம் கீழ்மட்டத்திற்கு அதிகாரம் வழங்குதல், உற்பத்திச் சரக்குகளுக்கு குறைந்த விலைகள் ஆகியவையா? அல்லது வயது வந்தோர் வாக்குரிமை இல்லாமல் ஒரு முதலாளித்துவ – விவசாயி அணி, சுங்கவரி பாதுகாப்பு, மையப்படுத்தப்பட்ட அரசு (விவசாயிகள் மீது, குறிப்பாகத் தெற்கிலும் தீவுகளிலும் உள்ளவர்கள் மீது, பூர்ஷுவா ஆட்சியின் வெளிப்பாடு) ஊதியம், தொழிலாளர் உரிமைகள் பற்றிய சீர்திருத்தவாதக் கொள்கை. அது இரண்டாவது தீர்வைத் தேர்ந்தெடுத்தது. பூர்ஷுவாக்களின் ஆட்சியை கியோலிட்டி உருவகப்படுத்தினார். அன்டோனியோ கிராம்ஸி, ஸ்கிரிட்டி பாலிடிசி (எடிப்போரி ரீயுனிட்டி, ரோம், 1967)

1919 அக்டோபர் 19-ம் தேதி டிரோனேரோவில் கியோலிட்டி ஆற்றிய உரை இத்தாலியின் யுத்தபிற்கால நெருக்கடியை தீர்ப்பதற்கான மிக முற்போக்கான பூர்ஷுவாத் திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. கியோலிட்டி யுத்தத்தில் இத்தாலி தலையிட்டதை விமர்சித்தார். 1914-15 ஆண்டுகளில் அவர் எடுத்த நடுநிலைமை கொள்கையை நினைவுபடுத்தினார் (கியோலிட்டியை “ஒரு தோல்வி மனப்பான்மை கொண்ட தேசத்துரோகி” என்ற தேசியவாதிகளின் குற்றச்சாட்டை பற்றி டோக்ளியாட்டி அப்பொழுது குறிப்பிட்டது) யுத்தப் பிரகடனம் செய்ய அரசருக்கும் மந்திரி சபைக்கும் உள்ள உரிமையை எடுத்துவிட்டு அந்த உரிமையை நாடாளுமன்றத்துக்கு வழங்க, கார்ல் ஆல்பர்டின் அரசியல் சட்டத்தின் 5-வது ஷரத்தை திருத்த வேண்டுமென்று கூறினார். படிப்படியான வருமானவரி, சொத்துரிமை வரி திட்டத்தைக் கொண்டு வருவதாகவும் நிறுவனங்களின் பங்குகள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார். நீர் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு அரசின் தலையீடு சாத்தியம் என்று தனியார் தொழில்களைப் பயமுறுத்தினார். வெளிநாட்டு வர்த்தகத்தின் மீது அரசின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை முன்வைத்தார். அரசின் அடித்தளத்தை விரிவுபடுத்தி லிபரல் ஜனநாயகக் கட்டுக்கோப்பிற்குள் பூர்ஷுவாக்களின் பொருளாதார அரசியல் அதிகாரத்தை பாதுகாக்கும் திட்டத்திற்கு டிரோனேரோவின் அவரது உரை உருக்கொடுக்கிறது. இதன்மூலம் புரட்சிகர இயக்கத்தின் முன்னேற்றத்தை கூர்மழுங்கச் செய்ய முடியும் என்று கருதினார். எனினும் 1920-ல், மீண்டும் கியோலிட்டி பிரதம மந்திரியாக இருந்தபோது, நிலைமை ஏற்கெனவே மாறியிருந்தது. வளர்ந்து வரும் பாசிஸ்டு இயக்கம், புரட்சிகர இயக்கத்திற்கு மட்டுமின்றி அவர் பாதுகாக்க விரும்பிய லிபரல் அரசுக்கும் ஒரு ஆபத்தை ஏற்படுத்தியதை இந்த வயது முதிர்ந்த ராஜ தந்திரியால் கண்டு கொள்ள முடியவில்லை. தொழிலாளர் இயக்கத்திற்கு எதிர்சக்தியாக ஸ்குவாட்ரிஸ்மோவை பயன்படுத்த கியோலிட்டி முயன்றார். 1921 தேர்தலில் அவர் அமைத்த தேர்தல் கூட்டணியில் பாசிஸ்டுகளைச் சேர்த்துக் கொண்டதன் மூலம் அவர்களுக்கு நாடாளுமன்றத்தின் கதவுகளைத் திறந்து விட்டார்.

7. பாப்புலர் கட்சி இன்றைய கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் முன்னோடியான இது வாட்டிகனுடைய தீவிர ஆதரவுடன் ஸ்தாபிக்கப்பட்டது. 1919-லும் 1921-லும் நடந்த தேர்தல்களில் அது இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக ஆயிற்று. விவசாயிகளிடையே ஒரு வெகுஜன தளத்தை வளர்த்துக் கொண்டு, ஒருபுறம் தாராளத் தன்மைக்கும் மறுபுறம் சோஷலிசத்துக்கும் கத்தோலிக்கப் பிரதிபலிப்பாக பாப்புலரிசம் தோன்றியது. புத்தத்திற்கு பின் சோஷலிஸ்டு முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவதற்காக தோன்றிய பழமை விரும்பும் இக்கட்சி பரம்பரையான தாராளக் கொள்கையைக் கொண்ட அரசுக்கு அதன் எதிர்ப்பில் நடைமுறையில் “சீர்குலைவு” சக்தியாக இருந்தது, அதன் தலைவர் லியூகி ஒரு பாசிச- எதிர்ப்பாளராக இருந்தும், வாட்டிகனின் நிர்ப்பந்தம் காரணமாக ஆட்சியைப் பற்றி ஓர் ஐயப்பாடான நிலையை கட்சி எடுத்தது. மாட்டியோட்டி நெருக்கடிக்குபின் 1925-26-ல் மற்ற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து இதுவும் நசுக்கப்பட்டது.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.