கசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு! | தோழர் ஸ்டாலின்

யார் யாரெல்லாம் உண்மையில் ஆழமான கட்சி எதிர்ப்பாளர்களோ அத்தகையவர்கள்தான் கட்சி உறுப்பினர்களை சரிவரக் கையாளாமல் எதிர்நிலைக்குத் தள்ளுகிறார்கள்.

நன்றி: வினவு (இனையதளம்)

விவாதங்களுக்கு பதில் உரை.

பாகம் – 4

7 இறுதியாக, மேலும் ஒரு பிரச்சினை. கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்களின் தவிர்க்க முடியாத நேரும் விதியைப் பற்றியது. கட்சியிலிருந்து உறுப்பினர்களை வெளியேற்றும் பிரச்சினை பற்றிய அல்லது கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் சேர்த்துக்கொள்வது பற்றிய நமது தோழர்கள் சிலரின் வழக்கமான, இதயமற்ற, அதிகார வர்க்க மனப்பான்மை பற்றிய பிரச்சினைகளை நான் மனதில் கொண்டுள்ளேன். இதில் முக்கியமான விசயமே நமது தலைவர்களில் சிலர் மக்கள் தொடர்பாக, கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக, தொழிலாளர்கள் தொடர்பாக அக்கறையற்று இருக்கிறார்கள் என்பதுதான். இதைவிட அதிகமாக அவர்கள் கட்சி உறுப்பினர்களை ஆய்வு செய்வதில்லை. அவர்கள் எத்தகைய விருப்பங்களைக் கொண்டிருக்கிறார்கள், எவ்வாறு அவர்கள் வளர்ச்சி பெறுகிறார்கள் என்பதை இவர்கள் தெரிந்து கொள்வதில்லை. பொதுவாக இவர்கள் தொழிலாளர்களைப் பற்றி அறிந்துகொள்வதில்லை. அதனால்தான் கட்சி உறுப்பினர்களுக்கான மற்றும் கட்சி ஊழியர்களுக்கான தனிப்பட்ட அணுகுமுறை இவர்களிடம் இல்லை.

மேலும் தனிப்பட்ட அணுகுமுறை இல்லாத காரணத்தால் கட்சி உறுப்பினர்களையும், கட்சி ஊழியர்களையும் மதிப்பிடுவதில் வழக்கமாக அவர்கள் வெறும் தற்செயலான வழிமுறைகளில் செயல்படுகிறார்கள். ஒன்று, அவர்களை எந்த ஒரு அளவுகோலும் இன்றி ஒட்டுமொத்தமாக பாராட்டுவது அல்லது அவர்களை ஒட்டுமொத்தமாகவும், எந்த அளவுகோலும் இன்றி முழுக்கமுழுக்கப் பழி கூறுவது, கட்சியிலிருந்து ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான உறுப்பினர்களை வெளியேற்றுவது ஆகியவற்றை மேற்கொள்கிறார்கள். இத்தகைய தலைவர்கள் பொதுவாக அலகுகளைப் பற்றி கவலைப்படாமல், கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாமல், அவர்களது கதியைப் பற்றி கவலைப்படாமல் பத்தாயிரக்கணக்கானவர்களைப் பற்றி சிந்திக்க முயற்சிக்கிறார்கள். கட்சியிலிருந்து ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுவதை ஒரு ‘வெறும் அற்பம்’ எனக்கருதி, நமது கட்சியில் இருபது இலட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள், பத்தாயிரக்கணக்கானவர்களை வெளியேற்றுவது கட்சியின் நிலையைப் பாதிக்காது என்ற சிந்தனையுடன் தங்களுக்குத் தாங்களே ஆறுதலடைந்து கொள்கிறார்கள். ஆனால், யார் எல்லாம் உண்மையில் ஆழமான கட்சி எதிர்ப்பாளர்களோ அத்தகையவர்கள்தான் கட்சி உறுப்பினர்களிடம் இத்தகைய அணுகுமுறையைக் கொண்டிருப்பார்கள்.

மக்கள் மீதான, கட்சி உறுப்பினர்கள் மீதான, மற்றும் கட்சி ஊழியர்கள் மீதான இந்த இதயமற்ற போக்கின் விளைவாக, கட்சியின் ஒரு பிரிவினரிடையே செயற்கையாக அதிருப்தியும், கசப்புணர்வும் உருவாக்கப்படுகின்றன. மேலும் டிராட்ஸ்கிய இரட்டை வேடதாரிகள் இத்தகைய கசப்புணர்வு கொண்ட தோழர்களிடம் தந்திரமாகத் தூண்டில்களை வீசுகிறார்கள். அவர்களை டிராட்ஸ்கிய சீர்குலைவு சேற்றுக்குள் திறமையாக ஆழ்த்திவிடுகிறார்கள்.

அவர்கள் சொல்வதில் இருந்து எடுத்துக் கொண்டாலும் கூட டிராட்ஸ்கியர்கள் நமது கட்சிக்குள் தங்களை ஒரு பெரும் சக்தியாக ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை. நமது கட்சியில் 1927இல் நடைபெற்ற கடைசி விவாதத்தை நினைவு கூருங்கள். அதுதான் கட்சியின் உண்மையான வாக்கெடுப்பு. கட்சியின் மொத்த 8,54,000 உறுப்பினர்களில் 7,30,000 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றார்கள். இவர்களில் 7,24,000 கட்சி உறுப்பினர்கள் டிராட்ஸ்கியர்களுக்கு எதிராக, போல்ஷ்விக்குகளுக்கு, கட்சியின் மத்தியக்குழுவுக்கு வாக்களித்தார்கள். அப்போது கட்சியின் 4,000 உறுப்பினர்கள், அதாவது அரை சதவீதம் டிராட்ஸ்கியர்களுக்கு வாக்களித்தார்கள். 2,600 கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பதிலிருந்து விலகி நின்றார்கள். 1,23,000 கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஏனென்றால், அவர்கள் தொலைவில் இருந்தார்கள், அல்லது இரவு நேரப் பிரிவில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். டிராட்ஸ்கியர்களுக்கு வாக்களித்த 4,000 பேரோடு வாக்களிப்பிலிருந்து விலகி நின்றவர்களை – அவர்களும்கூட டிராட்ஸ்கியர்களின் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்ற அனுமானத்தில் – சேர்த்தால், 6,000 ஆகிறது. இத்துடன் வாக்களிப்பில் பங்குபெற வாய்ப்பற்ற 1,23,000 கட்சி உறுப்பினர்களில் உள்ளபடியே அரை சதவீதம் என்பதைத்தான் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை 5 சதவீதம் என்ற கணக்கில் எடுத்துக்கொண்டு, அவர்கள் டிராட்ஸ்கியர்களுக்கு வாக்களிப்பதாகக் கொண்டால், மேலும் ஏறத்தாழ 6,000 கட்சி உறுப்பினர்கள். அதாவது மொத்தம் 12,000 கட்சி உறுப்பினர்கள் ஏதோ ஒரு வகையில் டிராட்ஸ்கியத்திடம் அனுதாபம் கொண்டவர்கள் ஆவார்கள். இதுதான் டிராட்ஸ்கிய மனிதர்களின் ஒட்டுமொத்த வலிமை ஆகும். இதனோடு சேர்க்க வேண்டிய அம்சம், இவர்களில் பலர் டிராட்ஸ்கியத்தின் மீது கொண்ட பிரமைகளிலிருந்து விடுபட்டு அதைவிட்டு நீங்கிவிட்டார்கள் என்பதாகும்.

மேலும், டிராட்ஸ்கிய சக்திகளின் முக்கியத்துவமற்ற தன்மை பற்றிய ஒரு கருத்துருவை நீங்கள் பெறுவீர்கள். இதற்கு அப்பாலும் இந்த ட்ராட்ஸ்கிய சீர்குலைவாளர்கள் நமது கட்சியைச் சுற்றி சில காத்திருப்புப் படைகளை வைத்திருக்கிறார்கள் என்றால், அது கட்சியிலிருந்து உறுப்பினர்களை வெளியேற்றுவது, மீண்டும் சேர்ப்பது என்ற பிரச்சினையில் நமது தோழர்களின் தவறான கொள்கைகளால்தான். கட்சியில் தனிப்பட்ட உறுப்பினர்களின் கதி பற்றிய , தனிப்பட்ட தொழிலாளர்கள் பற்றிய நமது தோழர்களின் இதயமற்ற நடத்தைகள் ஏராளமான அதிருப்தி கொண்ட மக்களை செயற்கையாக உருவாக்கியது. இவ்வாறு டிராட்ஸ்கியர்களுடைய காத்திருப்புப் படைகளை உருவாக்கியது. ”செயலூக்கம் அற்ற’ என்று அழைக்கப்படும் காரணத்துக்காக மக்களில் பெரும்பங்கினர் வெளியேற்றப்பட்டார்கள்.

‘செயல் ஊக்க மற்ற’ என்றால் என்ன? கட்சியின் ஓர் உறுப்பினர் கட்சித்திட்டத்தில் முழுமையாகத் தேர்ச்சி பெறாதவராக இருந்தால், அவர் ‘செயலூக்கம் அற்றவர்’ என்று கருதப்பட்டு வெளியேற்றுதலுக்கு உள்ளாக்கப்படுகிறார். ஆனால் இது தவறு தோழர்களே. நமது கட்சியின் விதிகளுக்கு ஒரு கறாரான ஆசிரியரைப்போல நீங்கள் விளக்கம் அளிக்கக் கூடாது. கட்சித்திட்டத்தில் முழுவதும் தேர்ச்சிபெற வேண்டுமானால் ஒருவர் பலமுறை முயன்று கோட்பாட்டு ரீதியாகப் பயிற்றுவிக்கப்பட்ட மார்க்சியவாதியாக, உண்மையான மார்க்சியவாதியாக இருக்க வேண்டும். நமது கட்சித் திட்டத்தில் முழுவதும் தேர்ச்சிபெற்ற, உண்மையான கோட்பாட்டு பயிற்சி பெற்ற மற்றும் பரிசோதிக்கப்பட்ட, உண்மையான மார்க்சியவாதிகளாக ஆனவர்களாக நமது கட்சி உறுப்பினர்களில் பலர் உள்ளார்களா என்பது எனக்குத் தெரியாது. இந்தப் பாதையின் வழியை மேலும் நாம் தொடர வேண்டுமானால், அறிவுத்துறையினரையும், கற்றறிந்த மக்களையும் மட்டுமே கட்சியில் விட்டுவைத்திருப்போம். இத்தகைய ஒரு கட்சி யாருக்குத் தேவை? லெனினுடைய, ஒரு கட்சி உறுப்பினர் என்பதை விளக்கும் முற்றிலும் பலமுறை முயன்று சோதிக்கப்பட்ட விதிமுறை நம்மிடம் உள்ளது. இந்த விதிமுறையின்படி கட்சி உறுப்பினர் என்பவர், யார் கட்சியின் திட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்களோ, கட்சியின் கட்டணத்தை செலுத்துகிறார்களோ, அதன் அமைப்பு ஒன்றில் வேலை செய்கிறார்களோ, அவர்கள்தான். தயவு செய்து கவனியுங்கள்: லெனினின் விதிமுறை, திட்டத்தை முற்றிலும் கற்றுத் தேர்ச்சி அடைவதைப் பற்றி பேசவில்லை. ஆனால், கட்சித்திட்டத்தை ஏற்றுக்கொள்வதைப் பற்றி பேசுகிறது. இவை இரண்டும் மிகவும் வித்தியாசமான அம்சங்கள். இங்கு லெனின் கூறியது சரிதான் என்றும், யார் திட்டத்தில் முற்றிலுமான தேர்ச்சி பெறவேண்டும் என்று சோம்பேறித்தனமாக அரட்டையடிக்கிறார்களோ அவர்கள் நமது கட்சித்தோழர்கள் அல்ல என்றும் நிரூபிக்கவேண்டியது தேவையற்றது. அது கட்டாயம் தெளிவாகியிருக்க வேண்டும்.

எந்தத் தோழர்கள் திட்டத்தில் முழுவதுமாக தேர்ச்சி பெற்றுள்ளார்களோ, தத்துவார்த்த ரீதியாகப் பயிற்சி பெற்றவர்கள் யாரோ, அவர்கள் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக வரமுடியும் என்ற அனுமானத்திலிருந்து கட்சி நடைபோடத் தொடங்கி இருந்தால், அது ஆயிரக்கணக்கான கட்சி வகுப்புகளையும், நூற்றுக் கணக்கான கட்சிப் பள்ளிகளையும் உருவாக்கியிருக்காது. அங்கு கட்சி உறுப்பினர்களுக்கு மார்க்சியம் கற்றுத் தரப்படுகிறது. அங்கே அவர்கள் நமது கட்சித்திட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக உதவி அளிக்கப்படுகிறது. நமது கட்சி அத்தகைய பள்ளிகளையும், வகுப்புகளையும் கட்சி உறுப்பினர்களுக்காக அமைக்கிறது. ஏனென்றால், நமது கட்சி உறுப்பினர்கள் இன்னும் கட்சித் திட்டத்தில் முழுமையான தேர்ச்சி பெறவில்லை, இன்னும் கோட்பாட்டு ரீதியாகப் பயிற்சிபெற்ற மார்க்சியவாதிகள் ஆகவில்லை என கட்சி அறிந்திருக்கிறது என்பது மிகவும் தெளிவாகிறது.

இதன் விளைவாக, கட்சி உறுப்பினர் பிரச்சினை பற்றிய நமது கொள்கையையும், கட்சியிலிருந்து வெளியேற்றுவது பற்றியும் திருத்தி அமைப்பதற்காக, ‘செயலூக்கமற்ற’ என்ற பிரச்சினைக்கான தற்போதைய முட்டாள்தனமான விளக்கத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

ஆனால் இந்தத் தளத்தில் இன்னொரு தவறும் இருக்கிறது. நமது தோழர்கள் இந்த இரண்டு உச்ச நிலைகளுக்கும் இடையே உள்ள எந்த அர்த்தத்தையும் அறிந்து கொள்ளவில்லை என்பதுதான் அது. ஒரு தொழிலாளி, ஒரு கட்சி உறுப்பினர் கட்சிக் கூட்டங்களுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டுமுறையோ தாமதமாக வருவதும், அல்லது கட்சி உறுப்பினர் நிலுவையை செலுத்தத் தவறுவதும் அவர் மீது தாக்குதல் தொடுக்க, கட்சிக்கு வெளியே தூக்கியெறியப்படப் போதுமானதாக இருக்கிறது. எந்த அளவுக்கு அவர் குற்றம் சாட்டப்பட வேண்டும்? அவர் ஏன் கூட்டங்களுக்கு வரத்தவறினார்? அவர் தனது நிலுவையைச் செலுத்தாததற்குக் காரணம் என்ன? இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள எந்த ஆர்வமும் காட்டப்படுவதில்லை. இந்தப் பிரச்சினைகளின் மீதான அதிகாரவர்க்க அணுகுமுறையானது நேர்மறையாக பார்த்தால் இதுவரை நிகழ்ந்திராத ஒன்றாக வெளிப்பட்டு உள்ளது.

அற்புதமான, திறமைமிக்க தொழிலாளர்கள், அற்புதமான ஸ்டகநோவியர்கள் தாங்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு இந்த இதயமற்ற கொள்கை முடிவுதான் துல்லியமான காரணம் என்பதைப் புரிந்து கொள்வது கடினமானதல்ல. ஒரேயடியில் அவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றாமல், அவர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு முன், அவர்களுக்கு எச்சரிக்கை தருவது சாத்தியமற்றதா? அல்லது அதற்கு எந்த விளைவும் இல்லை என்றால், அவர்களைக் கடிந்துரைப்பதும், கண்டிப்பதும் சாத்தியமற்றதா? அதுவும்கூட எந்த விளைவையும் ஏற்படுத்தாவிட்டால், அவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு சோதித்து அறியும் நிலையில் வைத்திருப்பது அல்லது உச்சகட்ட நடவடிக்கையாக அவர்களை தேர்வு நிலை உறுப்பினர் நிலைக்குத் தரம் குறைப்பதும் சாத்தியமற்றதா? உண்மையில் அது சாத்தியம்தான். ஆனால் இது மக்கள் மீதான, கட்சி உறுப்பினர்கள் மீதான, கட்சி உறுப்பினர் கதியின் மீதான அனுசரணையைக் கோருகிறது. மேலும் இதில்தான் நமது தோழர்களில் சிலர் பின்தங்கியிருக்கிறார்கள்.

இந்த வெட்கக்கேடான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம், சரியான நேரம் இதுதான் தோழர்களே. (கைதட்டல்கள்)

பிராவ்தா

1 ஏப்ரல் 1937.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.