“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம் 6.

கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டுவது, அதன் மூலமாக பாசிசத்தை எதிர்த்து போராடுகின்ற புரட்சிகர ஜனநாயக சக்திகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் ஆகிய அனைவரையும் ஒன்றிணைத்து ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்று முன்வைத்து செயல்படுகிறோம்.


ஜனநாயக கூட்டரசு நிறுவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே 2024 நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. இந்த சூழலில் தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவோம் என்று அரசியல் முன்முயற்சியுடன் செயல்படுவதை புரிந்து கொள்ள திராணியில்லாத வினவு மற்றும் செங்கனல் தலைமை கிளிப்பிள்ளைகளைப் போல சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள்.


கார்ப்பரேட் காவி பாசிசத்தின் அனைத்து விதமான அடக்குமுறைகளையும் பற்றி அவர்கள் விளக்குவதை எங்காவது நாங்கள் மறுக்கின்றோமா அல்லது இப்படி நிலைமை இல்லை என்று முன்வைக்கின்றோமா என்றால் அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் தற்போது உடனடிக் கடமையாக தேர்தலை பற்றி முடிவு எடுப்பதற்கு சமூக சூழ்நிலையும், மக்களது மனநிலையும் கோருகிறது எனும்போது அதை கணக்கில் எடுத்துக் கொண்டு தேர்தலை போராட்ட வடிவமாக பயன்படுத்துவோம் என்று முன் வைக்கிறோம்.


...மார்க்சிய-லெனினிய போதனைகளாகிய, படு பிற்போக்கானவை உட்பட எல்லாப் போராட்ட வடிவங்களையும் கற்றுத் தேர்ந்து பிரயோகிக்க வேண்டும் என்கிற முறையில் நாடாளுமன்ற அமைப்பு வடிவத்தையும் நாடாளுமன்ற போராட்ட வடிவத்தையும் கோட்பாடு ரீதியில் எல்லா மார்க்சிய-லெனினியவாதிகளும் ஏற்றுத்தான் தீர வேண்டும். இச்சகாப்தத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் காலாவதியாகிப்போய்விட்ட வடிவங்களாக இருந்தாலும், பரந்துபட்ட மக்களுக்கு இன்னும் காலாவதியாகாத எல்லா வடிவங்களையும் பயன்படுத்தத் தான் வேண்டும் என்பது கோட்பாடு ரீதியில் சரியானதே. ஆனால் கோட்பாடு ரீதியில் சரியான ஒன்றைக்கூட, செயல் தந்திரத்திற்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஏற்ப மட்டுமே பயன்படுத்த முடியும்.


(இந்திய புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவ பாதையும்- மா.அ.க பக்கம்: 271)


தேர்தல் பற்றி எமது செயல்தந்திரம் குறித்த ஆவணத்தின் வழிகாட்டுதல் படியே முடிவெடுத்து செயல்படுகிறோம். ஆனால் செயல்தந்திர அரசியல் வழி மீது நம்பிக்கைய்ற்ற வினவு கும்பலோ ட்ராஸ்ட்கியவாத, இடது சந்தர்ப்பவாத கண்ணோட்டத்தில் படிப்படியாக மக்களை அரசியல் படுத்தி முன்னேற்றுவது என்ற வழிமுறைகளை நிராகரிக்கின்றது.


மாறாக தனது அகநிலை விருப்பத்தின் அடிப்படையில் செயல்தந்திரம் போல ஒன்றை முன்வைத்து அணிகளை ஏய்ப்பது மட்டுமின்றி, மக்களையும் ஏய்க்கிறது வினவு தலைமை.  தேர்தல் பற்றி அவர்களே கேள்வி எழுப்பி அவர்களே எழுதிய பதில் கீழே உள்ளது.


”நாங்கள் தேர்தலில் நிற்கிறோமா, புறக்கணிக்கிறோமா என்பது எங்களது கொள்கை சார்ந்த விசயம். அதற்கும் நாங்கள் முன்வைக்கும் மக்கள் கோரிக்கைகளுக்கும் தொடர்பில்லை. ஒரு கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமானால், அந்த கோரிக்கையை எந்த அளவிற்கு மக்கள் வலியுறுத்துகிறார்கள், அதில் எந்த அளவிற்கு மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் முடிவு செய்யப்படும்.


“வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம்” இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!


கவனியுங்கள் செயல்தந்திர அரசியல் வழியில் தேர்தலை பயன்படுத்துவது குறித்து முடிவெடுப்பது அவர்களுக்கு உவப்பாக இல்லை. ஆனால் தேர்தல் காலகட்டத்தில் நமது அரசியலை பரவலாக மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்பதைக்கூட அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ளாமல் தனது முழக்கங்களை முன்வைத்து செயல்படுகின்றனர். 


சென்ற தேர்தல் வரை தேர்தல் புறக்கணிப்பு என்று வெளிப்படையாக பேசி வந்த இவர்கள் தற்போது தேர்தல் புறக்கணிப்பு அல்லது பங்கேற்பு என்பது பிரச்சனை இல்லை. பாஜகவை வீழ்த்துவதற்கு போராட வேண்டும் அதற்கு திமுகவை கடுமையாக விமர்சித்து தயார்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.


அதற்குத் தோதாக “வேண்டாம் பிஜேபி, வேண்டும் ஜனநாயகம்” என்று முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்கின்றனர். அதிலும் ஊன்றி நிற்காமல் பகுதி அளவில் தோன்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு வேண்டாம் பிஜேபி என்பதை விட்டுவிட்டு வேண்டாம் கிரானைட் வேண்டும் ஜனநாயகம் என்றெல்லாம் மனம் போன போக்கில் முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்து புரட்சிகர பணியாற்றி விட்டதாக சுயதிருப்தி அடைகின்றனர். இந்த லட்சணத்தில் புரட்சிகர் அமைப்புகளுக்கு ’வாத்தியார்’ பாணியில் வகுப்பெடுக்க கிளம்பியுள்ளனர்.


“கர்நாடகத்தின் தேர்தல் வெற்றிகள், “மோடி என்ற பிம்பம், இந்துத்துவ அரசியல், இந்திய தேசியவாதம்” ஆகிய பா.ஜ.க.வின் அஸ்திரங்கள் பசுவளைய மாநிலங்களில் வேண்டுமானல் செல்லுபடியாகலாம், தென்னிந்தியாவில் செல்லுபடியாகாது என்பதை மட்டுமின்றி, வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதரப் பிரச்சினைகள் நாளுக்கு முற்றிவருவதையும் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல உழைக்கும் மக்கள் புழுங்கிவருவதையும் சேர்த்தே காட்டுகின்றன.


தேர்தலுக்காக இதுபோன்ற கவர்ச்சிவாத வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அள்ளி வீசினாலும், தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை கைவிடாத காங்கிரஸ், நடைமுறையில் அதை அமலாக்குவது குதிரைக் கொம்பே. பேருக்காக சிலவற்றை அமலாக்கினாலும், வேறு பல துறைகளில் தீவிர மறுகாலனியாக்கத்தை அமல்படுத்தவே முற்படும். கொதித்துக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் அப்போது காங்கிரஸுக்கு எதிராக திரளுவதும், அதை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்வதும் நிச்சயம்.


இன்னொருபக்கம், தான் ஆட்சியில் இருந்ததைவிட இனிமேல்தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தனது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை தீவிரப்படுத்தும், மென்மையான இந்துத்துவப் போக்கைக் கடைபிடிக்கும் காங்கிரஸ், ‘இந்துக்களின் மனது புண்படாமல்’ அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதும் கேள்விக்குறி!


மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் இந்துத்துவ பாசிசத்தையும் வீழ்த்தும் பாதை தேர்தலுக்கு வெளியே வர்க்கப் போராட்டக்களத்திலும் மக்கள் எழுச்சியை உருவாக்குவதிலும் உள்ளது. கர்நாடக உழைக்கும் மக்களை அதை நோக்கி வழிநடத்திச் செல்ல வேண்டியது புரட்சிகர சக்திகளின் பொறுப்பாகும்”என்று புரட்சிகர சக்திகளுக்கு வகுப்பு நடத்துகிறது வினவு கும்பல்.


மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மக்கள் திரள் அமைப்புகளை உருவாக்கிய காலம் முதல் செயல்தந்திர அரசியலின் கீழ் பல்வேறு போராட்டங்களை நடத்தி கட்சிக்கு வெளியில் உள்ள லட்சக்கணக்கான மக்களை அரசியல் படுத்துகின்ற மார்க்சிய-லெனினிய அரசியலை அமல்படுத்தி வருகிறோம்..


அதன் மீது நம்பிக்கையற்ற, செயல்தந்திர அரசியல் வழியையே ‘அல்லேலுயா பஜனை’ என்று இழிவு படுத்திய இவர்கள் செயல்தந்திர அரசியலும் இன்றி, ’இடது’ சந்தர்ப்பவாதிகளை போல நேரடியாக பகுதி பிரச்சனைகளை எடுத்து போராடுவது, அதில் போர்க்குணமிக்க முறையில் முன் நின்று செயல்படுவது, அதன் மூலம் மக்களை திரட்டுவது என்ற வழிமுறையில் இறங்கியுள்ளனர்..


மார்க்சிய லெனினிய அரசியலுக்கு விரோதமாக இதுபோன்ற போர்க்குணமிக்க பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னாள் மக்கள் யுத்த குழு மற்றும் தற்போதைய மாவோயிஸ்டுகள் தனது செயல்பாடுகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருவதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அதே திசையில் மேலும், மேலும் தீவிரமாக செயல்படுவதை போன்று தான் செயல்பட போவதாக இவர்கள் வாய்ச்சவடால் அடிக்கின்றனர்.


ஆனால் அணிகள் மட்டுமின்றி தலைமையே அதற்கு தயார் இல்லாத போது இதுபோன்ற இடது சந்தர்ப்பவாத வழியிலான அதிரடி புரட்சி அல்லது கீழிருந்து எழுச்சியின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவது போன்ற ‘வெடிகுண்டு’ புரட்சி நடவடிக்கைகள் அனைத்தும் புஸ்வானமானது. கடைசியில் பாஜக பினாமிகளான சவுக்கு, ரெட் பிளிக்ஸ் ஜெரால்டு, ஆதன் தமிழ் ராசவேல், மே-17 திருமுருகன் போன்ற சக்திகளுட்ன் ’புலியை’ விரட்ட கிளம்பியுள்ளனர்.


இவர்களின் சித்தாந்த ஓட்டாண்டித்தனமும், அரசியல் சித்தாந்தமற்ற லும்பன் போக்குகள் மூலமாக சொந்த அணிகளையும் குழப்பி மக்கள் அதிகாரத்தின் பெயரையும் கொச்சைப்படுத்தி வருவது தொடர்கிறது என்றாலும், என்னதான் இவர்கள் ’விளக்கெண்ணையை தடவிக் கொண்டு கடல் மணலில் உருண்டாலும்’ 200, 300 பேருக்கு மேல் திரட்ட முடியாமல் மேலும் சுருங்கி வருகின்றனர். ஒன்றுபட்ட அமைப்பின் ஊடகமான வினவு இணையதளத்தை கைப்பற்றி வைத்துக் கொண்டு அதில் அவ்வப்போது சிவப்பு சாயம் பூசிய சொற்றொடர்களை அள்ளி வீசி வருவதால் இவர்களின் மீது இன்னமும் சில நம்பிக்கை கொண்டு பின்னால் சென்று செயல்பட்டு வருகின்றனர்.


தொடரும்...


Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.