“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_7

சென்ற மாதம் நாங்கள் எழுத துவங்கிய ‘ஓட்டு பொறுக்கிகளும்’, ‘வெடிகுண்டு புரட்சியாளர்களும்’ என்ற தொடரை கடந்த 10 நாட்களுக்கு மேலாக பல்வேறு அமைப்பு வேலைகள் காரணமாக தொடர இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றைய அரசியல் சூழல் கருதியும், மார்க்சிய லெனினிய இயக்கத்தில் தோன்றியுள்ள பல்வேறு திருத்தல்வாத போக்குகள், அதிநவீன திருத்தலாக போக்குகள், அரசியல் சித்தாந்தமற்ற தற்குறிகளின் உளறல்கள், லும்பன் கும்பலின் பிதற்றல்கள் போன்ற போக்குகள் காரணமாக மாற்று குழுவினர்கள் மீது வசைபாடல்கள், அவதூறுகளை கிளப்புவது போன்ற நிலைமையை சித்தாந்த ரீதியாக எதிர்கொள்வதற்கு இந்த தொடர் குறிப்பிட்ட அளவிற்கு பங்களிப்பு செலுத்தியுள்ளது என்று கருதுகிறோம்.

வினவு மற்றும் செங்கனல் ஆகிய இரண்டு பிரிவினரின் இத்தகைய போக்குகளுக்கு அடிப்படை என்னவென்றால் அரசியல் செயல்தந்திர வழியில் மக்களை திரட்டுவது, அதன் நீட்சியாக ஆயுதப் போராட்டத்திற்கு உயர்த்துவது என்ற மக்கள் திரள் வழியை புறக்கணித்து செயல்படுவதுதான். அதற்கு மாறாக தனது அதிரடி சாகச வழிமுறை அல்லது ’வெடிகுண்டு புரட்சி’ தத்துவத்தின் மூலம்  புதிய ஜனநாயக புரட்சி நடத்தப் போவதாக அறிவித்துக் கொண்டுள்ளனர்.

தேர்தல் புறக்கணிப்பு அல்லது பங்கேற்பு என்ற அம்சத்தை மட்டும் கணக்கில் கொண்டு அதனை கோட்பாட்டு மட்டத்திற்கு உயர்த்தி சொந்த முறையில் வியாக்கியானங்களை எழுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது அவதூறுகளை வாரி இறைக்கின்றனர். இவர்களும் இவர்களை நம்பி சூனிய வெளியில் பயணிக்கின்ற எஞ்சியுள்ள நேர்மையான ஒரு சில அணிகளுக்கும் புரிகின்ற வகையில் எமது ஆவணங்களில் செயல் தந்திரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளை இங்கே அறியத் தருகிறோம்.

ரசிய கம்யூனிஸ்டுகளின் அரசியல் போர்தந்திரமும், செயல்தந்திரமும்.

”அரசியல் போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரத்தின் வரம்புகளும் அவர்களுடைய பயன்பாட்டுக் களமும். பாட்டாளிவர்க்க இயக்கத்திற்கு, புறநிலை, அகநிலை என்று இரண்டு பக்கங்கள் இருக்கின்றன என்பது உண்மையானால், பிறகு போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரத்தின் செயற்களம் சந்தேகத்துக்கிடமின்றி, இயக்கத்தின் அகநிலைப் பக்கத்துடன் கட்டுப்படுத்தப்படுகிறது. 

பாட்டாளி வர்க்கத்தின் விருப்பத்தையும், அதன் கட்சியின் விருப்பத்தையும் சாராமல், அதற்கு வெளியேயும் அதனைச் சுற்றியும் சுதந்திரமாக நிகழக் கூடிய வளர்ச்சியின் நிகழ்ச்சிப்போக்குகள், இறுதிப் பகுப்பாய்வில் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கக் கூடிய நிகழ்ச்சிப் போக்குகள், அதன் புறநிலைப் பக்கத்தில் அடங்கியிருக்கின்றன.

புறநிலை நிகழ்ச்சிப் போக்குகள் குறித்த பாட்டாளி வர்க்கத்தின் உணர்வு நிலையின் பிரதிபலிப்பாகப் பாட்டாளி வர்க்கத்திற்குள் நடக்கும் நிகழ்ச்சிப் போக்குகளை உந்தித்தள்ளக் கூடிய அல்லது குன்றச் செய்கிற, ஆனால் அவற்றைத் தீர்மானிக்காத நிகழ்ச்சிப் போக்குகள், அகநிலைப் பக்கத்தில் அடங்கியிருக்கின்றன.

"புறநிலையில் உள்ளவை என்பவை, பாட்டாளி வர்க்கத்திற்கு வெளியிலும் அதைச் சுற்றியும் நிகழும் வளர்ச்சிப் போக்குகளை உள்ளடக்கியதாகும். இவை பாட்டாளி வர்க்க இயக்கத்தின் மற்றும் அதன் கட்சியில் சுயவிருப்பத்துக்கு அப்பால் சுயேச்சையாக இயங்குபவை. இறுதியாகக் கவனிக்கையில், இவை சமுதாயம் முழுவதன் வளர்ச்சியைத் தீர்மானிப்பவை.” 

அதாவது தேசிய-சர்வதேசிய அரசியல் பொருளாதார மாறுதல்கள், இந்தியாவின் அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு அதில் ஏற்படும் மாறுதல்கள், இந்த ஆட்சி அமைப்பின் சிதைவு, அரசியல் பொருளாதார நெருக்கடிகள், புரட்சிகர வர்க்கங்களில் தன்னெழுச்சியான போராட்டங்கள், வர்க்கங்களுக்கிடையிலான தன்னெழுச்சியான மோதல்கள் இவையும் இன்ன பிறவும் நமது நாட்டின் புறநிலைக்கூறுகளில் அடங்கும்.

"அகநிலையாக உள்ளவை என்பவை, புறநிலையாக உள்ள நிகழ்ச்சிப்போக்கு பாட்டாளிவர்க்கத்தின் உணர்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளாகும். அகநிலை உணர்வானது, புறநிலையான நிகழ்ச்சிப் போக்கை முடுக்கவோ அல்லது மட்டுப்படுத்த முடியும். ஆனால் தீர்மானிக்க முடியாது."

அதாவது, குறிப்பிட்ட இலக்கை நோக்கிய பாட்டாளி  வர்க்கத்தின் வேலைத்திட்டம், ஆணைகள், கொள்கை போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரங்களால் வழி நடத்தப்படும் அரசியல் போராட்டங்கள், ஆயுதப்போராட்டங்கள் - இவையும் பிறவும் அடங்கிய இயக்கமாகும்”.

(இந்திய புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவ பாதையும்- மா.அ.க பக்கம்: 29)

இதுதான் செயல்தந்திர அரசியல் வழியாகும். நாடு தழுவிய கட்சி அமைப்பு ஒன்று இன்னமும் முழுமையாக கட்டியமைக்கப்படாத சூழலில், அகநிலை சக்திகளை பற்றி மிகை மதிப்பீடு செய்து கொள்வது ஒன்று குறுங்குழுவாதத்தில் முடியும் அல்லது அனைவரையும் விட தான் மேலானவர்கள் என்ற தன்னகங்காரப் போக்கிற்கே வழி வகுக்கும்.

இவை அனைத்தும் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதை வினவு மற்றும் செங்கனல் தலைமை மட்டுமின்றி, அதில் உள்ள ஒன்றிரண்டு மூத்த தோழர்களும் அறிவார்கள். இருந்தும் மனம் அறிந்து ’போகாத ஊருக்கு இல்லாத வழியை’ முன்வைத்து அணிகளை ஏய்த்துக் கொண்டுள்ளனர்.

தனது சித்தாந்த ஓட்டாண்டி தனத்தை மறைத்துக் கொள்வதற்கு வினவு கும்பலின் செய்தி தொடர்பாளர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு அவ்வப்போது பாஜக கைக்கூலி சமூக வலைதளங்களில் ஊடாடும் திருவாளர் மருது என்பவர் எமது அமைப்புகளில் இருந்து விலகிய தோழர் மருதையன் மீது பல்வேறு அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார். அது அவரது பிரச்சனை என்பது மட்டுமல்ல, எமது அமைப்புகளையும் இணைத்து சேற்றை வாரி இறைப்பதால் அதற்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டியுள்ளது. 

2019 செப்டம்பர் மாதத்தில் அமைப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்த போது அதனை ஏற்காத வினவு மற்றும் செங்கனல் ஆகியவற்றை தற்போது கைப்பற்றியுள்ள அப்போதைய தலைமை, மீண்டும் செயல்பட வாருங்கள் என்று நைச்சியமாக பேசிக்கொண்டு, அவரை வெளியேற்ற கொல்லைப்புற வழியில் பல்வேறு சதித்தனங்களை செய்தது. அதனை எதிர்த்து 2020 பிப்ரவரியில் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவித்து வெளியேறிய தோழர் மருதையன் மீது பல்வேறு அவதூறுகளையும், தாக்குதல்களையும் தொடுத்து வருகின்றனர்.

மருதையன் ஒரு பார்ப்பனர் அவர் கட்சியை உடைத்து விட்டார் என்று பிரச்சாரம் செய்து ஒரு கும்பலை தனக்கு பின்னால் சேர்த்துக் கொண்ட இவர்கள் அரசியல் ரீதியாக அணிகளை தக்க வைக்க முடியாமல், தொடர்ந்து மருதையன் மீது ஏதாவது தாக்குதலை தொடுத்து தனது அணிகளை தக்க வைக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய கேடான முயற்சிகள் நீண்ட காலம் செல்லுபடியாகாது.

 மற்றொருபுறம்,“தேர்தல் அரசியலின் மூலமாக மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றி முற்றான பாசிச சர்வாதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு எத்தனிக்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை எதிர்த்து வாக்களியுங்கள்” என்று மக்கள் அதிகாரம் மக்களுக்கு அறைகூவல் விடுப்பதையே சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம் என்று உளறுகின்றார் இந்த அரசியல் தற்குறிகள்.

காங்கிரசு தேர்தல் அரசியலில் பங்கெடுப்பதற்கும், பாசிச பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அரசியலில் பங்கெடுப்பதற்கும் எந்த அரசியல் வேறுபாடும் இல்லை என்ற அரசியல் தற்குறித்தனத்திலிருந்து பிறக்கிறது இவர்களின் புறக்கணிப்பு அரசியல். தற்போது நிலவுகின்ற அரசு, அரசாங்கம் இரண்டும் முழுமையாக பாசிசமயமாகி உள்ள சூழலில் மக்கள் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளை தேர்தலின்  மூலமாகவே நிலைநாட்ட முடியும் என்று புரிந்து கொண்டுள்ளனர் அவ்வாறு புரிந்து கொண்ட மக்களுக்கு “ஆர்எஸ்எஸ் பாஜகவை எதிர்த்து வாக்களியுங்கள்” என்பதை வைத்து தேர்தல் அரசியலில் குதித்து விட்டனர் என்று திரித்துப் புரட்டுகின்றனர்.

தேர்தலில் மூலமாக மட்டுமே பாசிசத்தை வீழ்த்தி விட முடியும்  என்று மக்கள் அதிகாரம் அமைப்பு நம்புவதாக கோயபல்ஸ் பாணியில் அவர்களே உரை எழுதி அதற்கு பதில் அளிக்கின்றனர்.

இத்தகைய அவதூறுகள், பாசிச எதிர்ப்பு  வாய்ச்சவடால்கள் ஒருபோதும் மக்களை காப்பாற்றாது…

தொடரும்…

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.