“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம் -8.

1930 களில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார மந்தம், முதலாளித்துவத்தின் தோல்வி ஆகியவற்றிலிருந்து பிறந்தது பாசிசம். வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனி மற்றும் இத்தாலியில் பாசிசம் மற்றும் நாசிசம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கம்யூனிஸ்ட்களையும், சமூக - ஜனநாயக சக்திகளையும், கம்யூனிச ஆதரவாளர்களையும் நர வேட்டையாடியது.

அந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பணியை வரையறுத்து மூன்றாம் அகிலத்தின் 7-வது காங்கிரசில் தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் ஆற்றிய உரை ஐக்கிய முன்னணி தந்திரம் என்று வெளியிடப்பட்டு ஏறக்குறைய 90 ஆண்டுகள் ஆகிறது. பாசிசத்திற்கு எதிராக பரந்துபட்ட உழைக்கும் மக்களை ஒரே அணியின் கீழ் திரட்டுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி வேலை செய்ய வேண்டும் என்று முன் வைத்ததோடு, குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வேலை செய்வதை வலியுறுத்தினார் டிமிட்ரோவ்.

இதன் அடிப்படையில் விவசாயிகளை திரட்டுவதற்கு தேவையான விவசாய அமைப்பை கலைத்து விட்டு செயல்பட்ட முந்தைய தலைமையின் விவசாய புரட்சியை கைவிட்ட போக்கை கண்டித்து மீண்டும் விவசாயிகள் அமைப்பை செயல்பட வைத்துள்ளது மக்கள் அதிகாரத்தின் தோழமை அமைப்புகள். ஆனால் விவசாயிகள் மத்தியில் வேலை செய்வதையே கைவிட்டு விட்ட வினவு மற்றும் செங்கனல் தலைமை புதிய ஜனநாயக புரட்சி என்று திட்டத்தை முன் வைப்பதாக அணிகளை ஏய்ப்பதுடன் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வேலை செய்வதை முன் நிபந்தனையாக கொண்டு செயல்படுவதையும் செயல்பாட்டில் மறுத்து வருகிறார்கள்.

அதே சமயத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் பாசிசத்தை எதிர்த்து போராடுவதற்கு தோழர் டிமிட்ரோவ் முன் வைத்த ஐக்கிய முன்னணி தந்திரத்தை அப்படியே காப்பி&பேஸ்ட் செய்து இந்தியாவில் ஐக்கிய முன்னணி கட்டுவதற்கு முயற்சிப்பதாக கதையளக்கின்றனர். ஆனால் அதிலும் ஊன்றி நிற்காமல் பாசிசம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் ஐக்கிய முன்னணி, இல்லையேல் மக்கள் முன்னணி என்று சதிராடுகின்றனர். இந்தியாவில் தற்போது ஜனநாயக ஆட்சி அதாவது போலி ஜனநாயக ஆட்சிதான் நிலவுகிறது பாசிச ஆட்சி இல்லை என்பதை போன்ற ஒரு பொய்யான பிம்பத்தை கட்டமைக்கின்றனர். இந்த வகையில் திருத்தல்வாதிகள், நவீன, அதிநவீன திருத்தல்வாதிகளைப் போலவே பாசிசத்தை பற்றி குறை மதிப்பீடு செய்து வாதம் புரிகின்றனர்.

மூன்றாம் அகிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வழிகாட்டிய தோழர் டிமிட்ரோவ் அந்தந்த நாட்டு தன்மைகளுக்கு தகுந்தவாறு பாசிசம் உருவெடுக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார். அதற்கேற்ப அந்தந்த நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐக்கிய முன்னணி தந்திரத்தை பருண்மையாக எவ்வாறு அமுல்படுத்துவது என்பது பற்றி சொந்த முறையில் முயற்சிப்பதுதான் மார்க்சிய லெனினிய அறிவியலாகும்.

”பாசிசத்தின் வளர்ச்சியும், பாசிச சர்வாதிகாரமும் பல்வேறு நாடுகளில் பலவேறுபட்ட வடிவங்களில் வந்திருக்கின்றன. அந்தந்த நாட்டு வரலாறு, சமுதாயம், பொருளாதாரம் ஆகிய நிலைமைகளுக்குத் தக்கபடி தேசிய தனித்தன்மைகளுக்கும் குறிப்பிட்ட நாட்டின் சர்வதேச ஸ்தாபனத்தைப் பொறுத்துப் பாசிசம் உருவமெடுக்கிறது.”

(ஐக்கியமுன்னணி தந்திரம்- டிமிட்ரோவ், பக்: 5,6)

ஆனால் இதுபோன்று ’மண்டையை குடைக்கின்ற’ வேலைகளை புறக்கணிக்கின்ற வினவு மற்றும் செங்கனல் தலைமை தேர்தலுக்கு வெளியில் பாசிசத்தை வீழ்த்துவது என்று ஒரே வழிமுறை மட்டும்தான் உள்ளது என்று அகநிலை விருப்பத்தின் அடிப்படையில் புரிந்து வைத்துள்ளனர். இந்தியா போன்ற அரைக் காலனிய நாடுகளில் பாசிச சர்வாதிகாரம் இதுவரை நேரடியாக அமலுக்கு வராத சூழலில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐக்கிய முன்னணி கட்டுவதைப் பற்றிய அனுபவமோ, மக்கள் முன்னணி கட்டுவதை பற்றிய அனுபவமோ இல்லை என்பதை உணர மறுக்கிறார்கள்.

பாசிசத்தை எதிர்த்து குறைந்தபட்சம் செயல்படக்கூடிய ஆளும் வ்ர்க்கத்தின் ஒரு பிரிவினர் மற்றும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளை ஓரணியில் திரட்டுவதை விடுத்து ஐக்கியம் மற்றும் போராட்டம் ஆகிய இரண்டு முனைகளில், தான்தோன்றித்தனமாக போராட்டம் என்பதை மட்டுமே முன்னணியாக வைத்து செயல்படுகின்றனர். இது போன்ற கத்துக்குட்டி நடவடிக்கைகளையே ’புரட்சிகர நடவடிக்கை’ என்று அணிகளுக்கும், மக்களுக்கும் முன்வைத்து ஏய்த்தும் வருகின்றனர்.

ஆனால் டிமிட்ரோவ் இதற்கு நேர் மாறாக வழிகாட்டி உள்ளார். குறிப்பாக காலனி மற்றும் அரைக் காலனி நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டுவதை நோக்கி பயணப்பட வேண்டும் என்று முன் வைத்துள்ளார். அந்த வழிமுறையை கைக்கொண்டு தற்போது ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் புதிய இடைக்கட்டமான மறுகாலனியாக்கம், அதற்கு பொருத்தமான எதிர்ப்பு தன்மை கொண்ட மக்கள் முன்னணியை கட்டுமாறு நம்மைக் கோருகிறது.

”காலனி, அரைக் காலனி நாடுகளில் கம்யூனிஸ்டுகளுக்கு முன்புள்ள முக்கியமான கடமைப்பாடு, ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணியை ஸ்தாபிப்பதற்கு வேலை செய்வதில் அடங்கியிருக்கிறது. இதற்காக தேசிய விடுதலை இயக்கத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய சுரண்டுதலை எதிர்த்தும், கொடூரமான அடிமைப்படுத்துதலை எதிர்த்தும், ஏகாதிபத்தியவாதிகளை விரட்டி அடிப்பதற்கு, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், மிக விரிவான மக்கள் பகுதிகளை ஈர்க்க வேண்டியது அவசியமாகும். தேசிய சீர்திருத்தவாதிகளின் தலைமையில் உள்ள வெகுஜன ஏகாதிபத்திய இயக்கங்களில் ஊக்கமுடன் பங்கு கொள்வதும், ஒரு திட்டவட்டமான ஏகாதிபத்திய எதிர்ப்பு வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தேசியப் புரட்சி ஸ்தாபனங்களும் தேசிய சீர்திருத்தவாத ஸ்தாபனங்களும் கொண்ட ஒரு கூட்டு செயல்பாட்டைக் கொண்டு வருவதற்கு முயற்சித்துப் பாடுபடுவதும் அவசியம்”.

(ஐக்கியமுன்னணி தந்திரம்- டிமிட்ரோவ், பக்: 235)

2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட மீளமுடியாத பொருளாதார நெருக்கடியை பற்றியும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய மறுகாலனியாக்கத்தின் தன்மை, பாசிச அபாயம் ஆகியவற்றை பற்றி 2010 ஆம் ஆண்டு எமது அமைப்பு இவ்வாறு வரையறை செய்து செயல்பாட்டை முன்னெடுத்துச் சென்றோம். அந்த நிகழ்ச்சிப்போக்கு தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் - பாஜக இந்திய ஒன்றியத்தின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு பல மடங்கு பலத்துடன் நாட்டு மக்களின் மீது பாசிச தாக்குதலை தொடுத்து வருகிறது.

”ஏற்கெனவே பார்ப்பன இந்து தேசியத்தாலும், ஏகாதிபத்தியங்களாலும் அரசியல், பொருளாதார உரிமைகள் பறிக்கப்பட்டு, பண்பாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களும் ஒடுக்கப்படுவதை மறுகாலனியாக்கமும், பார்ப்பன பாசிசமும் மேலும் தீவிரமாக்கியிருக்கின்றன. ஒற்றை இந்து தேசிய அடையாளத்தின் கீழ் எல்லா தேசிய இனங்களையும் கரைத்துவிட வேண்டுமென்று பார்ப்பன பாசிசம் முயல்கிறது. மறுகாலனியாக்கமோ தேசிய இனங்களின் அரசியல்-பொருளாதார உரிமைகளைப் பறிப்பது மட்டுமின்றி, அவற்றின் பண்பாடுகள், மரபுகள் ஆகிய அனைத்தையும் இல்லாதொழிக்கின்றது. எனவே, நாடு முழுவதுமுள்ள இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கும், சந்தையைக் கைப்பற்றுவதற்கும் தடையாக உள்ள தேசிய இனப் போராட்டங்களையும், மக்களின் தேசிய உணர்வுகளையும் நசுக்குவதில் ஆளும் வர்க்கம் முன்னைவிட அதிகமுனைப்பு காட்டுகிறது.’

( உள்நாட்டு நிலைமை II. அரசியல் நிலைமை: மா.அ.க வெளியீடு. பக்கம்: 91)

இத்தகைய சூழலில் பாசிசத்தை வீழ்த்துவதற்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இன்ன பிற வர்க்கங்களை உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியை கட்டி செயல்படும் போது அதற்கு இணையாக மேலிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு செயல் தந்திரத்தின் அடிப்படையில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை கட்டி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அதாவது ஜனநாயக கூட்டரசு ஒன்றை அமைப்பதற்கு போராடுகிறோம்.

இதற்கு இடையில் வருகின்ற தேர்தல்களை பொறுத்தவரை தேர்தல் சமயத்தில் பங்கேற்பு மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றை முன்வைத்து அரசியல் கட்சிகளையும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிர்பந்தம் கொடுப்பதற்கு வேலை செய்து வருகிறோம். இது பற்றியும் எமது ஆவணங்களின் அடிப்படையில் தான் எமது நடைமுறை உள்ளது. அது பற்றி கீழே பதிவிடுகிறோம்.

”ஆனால், பருண்மையான நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களுக்கேற்ப போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் அவற்றின் சேர்க்கைகளில் ஒரு குறிப்பிட்ட முழுத்தொகுதியாகவோ பகுதியாகவோ மாறுதலடைகின்றன. சட்டபூர்வமானதும் சட்டவிரோதமானதும், வெளிப்படையானதும் இரகசியமானதும், அரசியல் போராட்டங்களும் ஆயுதப்போராட்டங்களும், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு - அதாவது, போராட்டங்களின் நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களுக்கேற்ப வடிவங்களில் மாறுதல்களைச் சீக்கிரமாகச் செய்வதற்கு பாட்டாளி வர்க்கக்கட்சி எப்பொழுதும் தயாராக இருக்கவேண்டுமென்பது ஒரு பொது விதியாகும்.

திரிபுவாதிகளும் நவீன திரிபுவாதிகளும் ஆயுதப் போராட்டத்துக்கோ, சட்டவிரோதமாகப் போரிடவோ, நிர்ப்பந்தம் ஏற்பட்டால்கூட இரகசிய அமைப்புகளாக மாறவோ எவ்விதத் தயாரிப்புமின்றி, நிரந்தரமாகவே சட்டபூர்வமாகவும் வெளிப்படையாகவும் இயங்குவதற்கும், அம்மாதிரியான போராட்ட மற்றும் அமைப்பு வடிவங்களை மட்டுமே கொண்டுள்ளனர். இடது சந்தர்ப்பவாதிகளோ பரந்துபட்ட மக்களுடன் தொடர்ந்து நெருக்கமான ஐக்கியமின்றி, அதற்காக எல்லா சட்டபூர்வமான, வெளிப்படையான வாய்ப்புகளையும் பயன்படுத்தத்தவறி, சதிக்குழுக்களாக கட்சி இயங்க வேண்டுமென்கின்றனர். இவ்விரு தவறுகளுமே பருண்மையான நிலைமைகளுக்கேற்ப செயல்தந்திரங்களை வடிக்கத் தவறுவதிலிருந்து தொடங்குகின்றன”.

(இந்திய புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவ பாதையும்- மா.அ.க பக்கம்: 262)

இவை அனைத்தையும் எமது அரசியல் செயல் தந்திர வழியில் நின்று, அரசியல் நடத்தை வழியை சரியாக கையாளுகிறோம். இவற்றை புரிந்து கொள்ள திராணியில்லாததால் எமது அமைப்பின் மீது அவதூறுகளையும், மருதையனிஸ்டுகள், மருதையபாக்டீரியாக்கள் என்று உளறிக் கொண்டு இருக்கின்றனர் வினவு மற்றும் செங்கனல் தலைமை.

தொடரும்.

 


Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.