“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-10.

“கிராமங்களில் அடித்தளத்தை கட்டுவது, கிராமப்புறங்களில் இருந்து முற்றுகையைத் தொடங்கி நகரங்களை சுற்றி வளைப்பது. இறுதியில் நகரங்களை கைப்பற்றுவது என்பதே சீனப் புரட்சியில் எங்களது அனுபவமாகும். எமது இந்த அனுபவம் முற்றாக உங்கள் நாடுகளுக்கு பொருந்துமா என்பது ஐயமே. எனினும் எமது அனுபவங்கள் உங்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தக் கூடும். எமது அனுபவங்களை அப்படியே நகலெடுத்து உங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தயவு செய்து நினைக்காதீர்கள். ஒரு நாட்டின் அனுபவம் மற்றொரு நாட்டிற்கு அப்படியே பொருந்தும் என்பது தவறு. உங்கள் நாடுகளின் தனிப்பட்ட தன்மைகள், சூழ்நிலைகளுக்கு ஏற்பவே மார்க்சிய லெனினிய கோட்பாட்டை அங்கே பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற சரியான நிலைப்பாட்டை நீங்களும் பின்பற்ற வேண்டும்”.  தோழர் மாசேதுங். 


தோழர் மாசேதுங் வலியுறுத்தியபடி ஒவ்வொரு நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைமைகளை உள்ளடக்கிய உற்பத்திமுறையைப் பற்றி ஆய்வு செய்வது மட்டுமின்றி குறிப்பிட்ட தருணத்தில் நாட்டையும், மக்களையும் பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சி போக்குகளை அவதானித்து செயல் தந்திரமாக முன்வைத்து செயல்பட வேண்டும்.


அந்த செயல் தந்திர அரசியல் வழியில் முழக்கங்களை தீர்மானிப்பது, போராட்ட வடிவங்களை தீர்மானிப்பது, அமைப்புகளை கட்டுவது போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது தான் செயல் தந்திர அரசியல் வழியாகும்.


2008 ஏகாதிபத்திய முதலாளித்துவம் மீள முடியாத, மீண்டு எழவே முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பிறகு உலகம் முழுவதும் வலதுசாரி அபாயம் என்று கூறக்கூடிய பாசிசபாயம் தொடர்ச்சியான நிகழ்ச்சி போக்காக உருவெடுத்துள்ளது.


சொல்லிக் கொள்ளக்கூடிய ஜனநாயகம், அது போலியான ஜனநாயகமாக இருந்தாலும் சரி; இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் தனி நபர் சர்வாதிகாரமாக இருந்தாலும் சரி; அவை அனைத்தும் தனது பழைய ஜனநாயக பசப்பல்களை உதறியெறிந்து விட்டு அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டி வருகிறது.


ஏகாதிபத்திய நிதி மூலதனம் இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள காலனி, அரைக்காலனி, நவீன காலனிய நாடுகளை முற்றிலுமாக சுரண்டி, உறிஞ்சி கொழுப்பதற்கு பொருத்தமான வடிவமாக மறுகாலனியாக்கம் என்ற வடிவத்தை கடைபிடிக்கின்றது. இந்த மறுகாலனியாக்கத்தின் தீவிரத் தன்மையே நமது நாட்டில் கார்ப்பரேட் காவி பாசிசமாக உருவெடுத்துள்ளது. இதை எதிர்த்து போராடுவதற்கு அனைத்து வகையான போராட்ட வடிவங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.  


பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜக நாடாளுமன்றத்தின் மூலமாக மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி தனது கார்ப்பரேட் காவி பாசிச அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு எதிராக தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துகிறோம் என்பதுதான் எமது நிலைப்பாடு. இது இன்றைய எமது நாட்டின் பருண்மையான சூழலுக்கு ஏற்ப பருண்மையாக நாங்கள் எடுத்துள்ள முடிவாகும். 


வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் அதாவது 1930 களின் தோன்றிய பாசிசத்திற்கும் தற்போதைய சூழலில் உருவாகியிருக்கும் நவீன பாசிசத்திற்கு இடையில் வேறுபாடு உள்ளது என்பதும், இதற்கு இசைவாக அந்தந்த நாட்டு நிலைமைக்கு பொருத்தமாக போராட்ட வடிவங்களை தீர்மானிக்க வேண்டும் என்பதிலிருந்து தான் தேர்தலையும் போராட்ட வடிவமாக பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். இது ஏற்கனவே எமது அரசியல் கோட்பாட்டு முடிவுகளில் இருந்து விலகிய முடிவு அல்ல என்பதையும் கடந்த தொடர்களில் உறுதி செய்துள்ளோம்.


தொடர்ந்து எமது அமைப்புகளின் மீது அவதூறுகளை பேசி வரும் போலி புரட்சியாளர்கள் மற்றும் அதிரவீன திருத்தலவாதிகளுக்கு பதில் கூறும் வகையிலும், இதன் வழியாக பொது வெளியில் அரசியல், சித்தாந்த போராட்டத்தை நடத்த உதவிய அவர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்கி கொள்கிறோம்.


”2024 தேர்தல்; வேண்டாம் மோடி, வேண்டும் ஜனநாயகம்” என்கிறது வினவு. எந்த வழிமுறையில் மோடியை வேண்டாம் என புறக்கணிப்பது, ஜனநாயகம் என்றால் போலி ஜனநாயகமா? இல்லை புதிய ஜனநாயகமா என்பதைப் பற்றி எந்த சுவற்றிலும் எழுதிவைக்க வில்லை. இதையே சற்று தீவிரப்படுத்தி, “வேண்டும் புதிய ஜனநாயகப் புரட்சி” என்கிறது செங்கனல். அந்தப் புரட்சி 2024 தேர்தலுக்குள்ளாகவா அல்லது தேர்தலுக்குப் பிறகா என சொல்ல முடியாது என்கிறார்கள்.


 எந்த ஒரு பொருளும் தொடக்க நிலையிலிருந்து ஒரே பாய்ச்சலில் இலக்கை அடைவதில்லை. பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் தன் இலக்கை அடைகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் முற்போக்குத் தன்மை கொண்ட சீர்திருத்தங்களைப் பயன்படுத்திக் கொண்டுதான். சின்ன சின்ன சமரசங்களை செய்து கொண்டுதான் தனது இலக்கை நிறைவு செய்கிறது.  பாட்டாளி வர்க்கப் புரட்சியும் அப்படித்தான். 


ரஷ்யா மற்றும் சீனாவில்  புரட்சியை வென்றடைவதற்கான நிகழ்ச்சி நிரலில் போது புறநிலையில் ஏற்பட்ட பல்வேறு இடைக் கட்டங்களில். ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கே உரிய முற்போக்கு சக்திகளை, வர்க்கங்களைப் பயன்படுத்திக் கொண்டு ரஷ்யாவில் இடைக்கால அரசாங்கமும், சீனாவில் கூட்டரசாங்கமும் அமைத்து கட்டங்கட்டமாகக் கடந்த பிறகே பொது திட்டத்தை. அதாவது, சோசலிசப் புரட்சியை செய்து முடித்திருக்கிறார்கள்.


இதனைத் தான் நாங்கள் புரட்சி என்பது பிரச்சாரம், கிளர்ச்சி, செயல், ஆணை என்று கட்டம் கட்டமாக முன்னேறுகிறது என்ற புரிதலுடன் செயல்பட்டு வருகிறோம். இந்த புரிதல் பற்றி தோழர் ஜார்ஜ் தாம்சன், ”வலது சந்தர்ப்பவாதம் வரலாற்றில் புரட்சி என்பதை நிராகரிக்கின்றது: இடது சந்தர்ப்பவாதமோ புரட்சி கட்டங்கட்டமாக வளரும் என்ற கோட்பாட்டை மறுக்கிறது” என்று வரையறுத்துள்ளார்.


இந்தியாவில் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆயுதப் போராட்ட வழிமுறையை முன்வைத்து செயல்படும் மாவோயிஸ்டுகள் எமது அமைப்பின் மீது ’கட்ட புரட்சி கோட்பாடு’ பேசுகின்றவர்கள் என்ற அவதூறை பல ஆண்டுகளாக முன்வைத்து வருகின்றனர்.


நாங்களும் அவர்களிடம் இதற்கு மாற்றாக நீங்கள் ஒரே கட்டமாக புரட்சியை நடத்துவதில் நாங்கள் தடையாக இல்லையே என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிலாக அளித்துள்ளோம். அதேபோலத்தான் தற்போது ’காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த’ இவர்கள் எந்த வழிமுறையை மேற்கொண்டாலும் நாங்கள் ஒன்றும் தடையாக இல்லையே? இருந்த போதிலும் எமது அமைப்புகளை தொடர்ந்து அவதூறு செய்வதன் மூலம் தனக்கு கிடைத்துள்ள சிலரை தக்க வைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர் என்பதை தாண்டி இவர்களின் நாக்கிலும், நடையிலும் வேறு எந்த உண்மையையும் இல்லை.


இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சிக்குச் செல்லும் திசை வழியில் ஓர் இடைக்கட்டமாக கார்ப்பரேட் – காவி பாசிசம் தோன்றி இருக்கிறது.  அதை அரசியல் அரங்கிலிருந்து வீழ்த்துவதற்கு பாசிசத்தால் அடக்கி ஒடுக்கப்படும் முதலாளித்துவத்தின் ஒரு பிரிவினரை கொண்டு மேலிருந்து ஐக்கிய முன்னணி அமைத்து ஜனநாயகக் கூட்டரசு அமைக்கப்பட வேண்டும். அதற்குத் துணையாக பல்வேறு வர்க்கங்களை உள்ளடக்கி கீழிருந்து  மக்கள் முன்னணி கட்டி எழுப்பப்பட்ட வேண்டும் என்பதை நாங்கள் முன்வைத்துள்ளோம். வெறுமனே பாசிசத்தை வீழ்த்துவோம் என கூறாமல். குறைந்தபட்ச செயல்திட்டத்தை முன்வைத்துள்ளோம். 


”தாக்குதலுக்கு உடனடியாக அறைகூவல் விடுப்பதை நிராகரிப்பது: “எதிரியின் கோட்டையைச் சரியான முறையில் முற்றுகையிடுமாறு” கோருவது; அல்லது, வேறுவிதமாகச் சொன்னால், ஒரு நிரந்தரமான படையைத் திரட்டுவதிலும் ஒழுங்கமைப்பதிலும் அணியமைப்பதிலும் முயற்சிகள் அனைத்தையும் செலுத்தக் கோருவது இதுவே நம் “திட்ட வழிப்பட்ட செயல்தந்திரம்.” என்கிறார் தோழர் ஸ்டாலின். இந்த புரிதலில் தற்போது புதிய ஜனநாயகப் புரட்சிக்கு இடைக் கட்டமாக ஜனநாயக கூட்டரசு என்பதை முன் வைக்கிறோம். பாசிச சூழலில் திட்டவகைப்பட்ட செயல்தந்திரம் வகுத்து செயல்படுகிறோம்.


பாசிசத்தை அரசியல் அரங்கிலிருந்தும் சமூக அடித்தளத்திலிருந்தும் முற்றும் முழுதாக அழிக்க வேண்டும் என்றால். தேர்தலை ஒரு போராட்ட வழிமுறையாக பயன்படுத்தி அரசியல் அரங்கில் இருந்து பாசிசத்தை அகற்ற வேண்டும். பாசிசத்தின் நிதி ஆதாரங்கள், அதன் கட்டுமானங்கள் என அனைத்தையும் ஒழித்தாக வேண்டும். அதற்கு, ஐக்கிய முன்னணியின் மூலம் அமைக்கப்படும் ஜனநாயகக் கூட்டரசின் வழியாக அரசியல் நிர்ணய சபை தேர்தல் நடத்தி புதிய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும். 


அம்பானி, அதானி உள்ளிட்ட தேசங்கடந்த தரகு அதிகாரவர்க்கங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட வேண்டும். அவர்களுடன் அரசு போட்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும். ஆதீனங்களின் சொத்துக்களை நிலமற்றவர்களுக்கு வினியோகிக்கப்பட வேண்டும். சாதி, மத, இனவெறி கட்சிகளை தடை செய்யப்பட வேண்டும் என இன்னும் ஏராளமான முழக்கங்களை நிபந்தனையாக முன்வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்து நிர்பந்திக்கிறோம். இந்த அடிப்படையிலேயே INDIA கூட்டணியை நாங்கள் ஆதரிக்கிறோம்.  


தொடரும்.




Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.