மார்ச் 8 - உலக மகளிர் தினம்: நமது கடமை என்ன?

இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. மார்ச் 8 மகளிர் தினத்தின் போது பெண்களின் உரிமைகளைப் பற்றி வாய் கிழிய பேசுவதும், அன்றைய தினத்தின் போது பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை போல நாடகமாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது இந்திய சமூக அமைப்பு.



சென்ற நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் நிலை என்ன?

நாட்டின் பெரும்பான்மை மதம் என்று அறிவித்துக் கொள்ளும் பார்ப்பன (இந்து) மதத்தில், பார்ப்பனக் குடும்பங்களில் பிறந்த பெண்கள் துவங்கி உழைக்கும் பெண்கள் வரை கல்வியறிவு மறுக்கப்பட்டவர்களாகவும், வீட்டிற்குள் ஆண்களுக்கு சம்பளம் இல்லாத பணியாளாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டனர். இதையே பெண்கள் தாயாக, தாதியாக, தாசியாக இருப்பதே பெருமை என்று போதிக்கப்பட்டது.

ஆரம்பக் கல்வியிலேயே அப்பா பேப்பர் படிக்கிறார், அம்மா வீட்டு வேலைகளை செய்கிறாள், அண்ணன் விளையாடுகிறான், அக்கா துணி துவைக்கின்றாள் என்று பாடத்திட்டமாக போதிக்கப்படுகிறது. ஆண்-பெண் சமத்துவம், பெண்களுக்கு அனைத்திலும் முன்னுரிமை, சம வேலைக்கு சம ஊதியம், பாலின பாகுபாடு கூடாது போன்ற முழக்கங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்று வரை இதில் போதிய முன்னேற்றம் இல்லை.

பெண்களை சமமாக மதிப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க மதங்களின் அடக்குமுறைகளுக்கும், ஆணாதிக்க வக்கிரங்களுக்கும், பாலியல் ரீதியிலான வெறித்தனங்களுக்கும் பலியாகின்றவர்கள் பெண்கள்தான். கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொள்ளும் உரிமை, அரசியலில் ஈடுபடும் உரிமை மற்றும் வாய்ப்பு போன்றவை அனைத்தும் பெண்களுக்கு திட்டமிட்டே ஒழித்துக் கட்டப்படுகிறது.

திருமணம் ஆவதற்கு முன்பு குறைந்தபட்சம் பெற்றோர்கள் அரவணைப்பில் கிடைக்கின்ற ஒரு சில அம்சங்களும் கூட திருமணத்திற்கு பிறகு பெரும்பான்மையான பெண்களுக்கு கிடைப்பதில்லை. தான் விரும்பிய இணையரை தேர்வு செய்து கொள்ளும் உரிமை கூட பெண்களுக்கு கிடையாது.

பெற்றோர் பார்த்து முடிக்கின்ற திருமணங்கள் தான் வெற்றி பெறுகிறது. தானாக தேடிக் கொண்ட இணை ஏற்பு தோல்வியடைகிறது என்ற பொது புத்தி சமூகத்தில் நிலவுகிறது.

தெருவில் ஓடி விளையாடும் சிறுமி முதல் படிக்க, வேலை பார்க்க, பொது நிகழ்வுகளுக்கு செல்கின்ற பெண்கள் வரை அனைவரின் மீதும் சமூகத்தின் பெரும்பான்மையினர் ஆணாதிக்க வக்கிர கண்ணோட்டத்துடன் அணுகுகின்ற கொடுமையும் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக பாலியல் ரீதியிலான சீண்டல்கள் முதல் வன்கொடுமைகள் வரை அனைத்தும் பெண்களின் மீது கொடூரமாக ஏவப்படுகிறது. சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி சேனல்கள், சினிமாக்களில் பெண்களை வெறும் கவர்ச்சி பொருளாகவும், அழகு பதுமைகளாகவும் காட்டுகின்ற இழிநிலையும் தொடர்கிறது.

ஏகாதிபத்திய முதலாளித்துவ கலாச்சாரத்தின் இன்னொரு இழிவான நிலைமை முதலாளிகள் தயாரிக்கின்ற அனைத்து பண்டங்களுக்கும் விளம்பர மாடல்களாக பெண்கள் பயன்படுத்தப்படுவது.


இத்தகைய சூழலில் நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? 


தெருவில் தொடங்கி பள்ளி, கல்லூரிகள், பணியிடங்கள் வரை அனைத்திலும் நம் மீது ஏவப்படும் வக்கிரங்களுக்கு எதிராக திருப்பி தாக்குதல் தொடுக்காமல் இதனை ஒன்றும் செய்துவிட முடியாது.

போலீசு, அரசு அதிகாரிகள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என்ற மிகப் பெரும் பட்டாளம் மார்ச் 8 தேதியின் போது மட்டும் பெண்ணுரிமைக்காக கூச்சல் போடுகிறார்களே ஒழிய, அன்றாடம் நமது வாழ்வில் எதிர்கொள்கின்ற பல்வேறு சிக்கல்களுக்கு இவர்களிடம் எந்த தீர்வும் கிடையாது.

எனவே யாரையும் நம்பி நாம் ஏமாந்து கொண்டிருக்கத் தேவையில்லை. நம்மை நாமே ஒரு அமைப்பாக மாற்றிக் கொள்வோம். பெண்கள் ஒரு அமைப்பாக திரள்கிறார்கள் என்றால் அலறுகின்ற ஆணாதிக்க கழிசடைகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம். 

தனிநபராக இருந்தாலும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், வக்கிரத்தனங்களுக்கு எதிராகவும், பெண்கள் மீது திணிக்கப்படுகின்ற மதரீதியிலான கட்டுப்பாடுகள், அடக்குமுறைகள் ஆகிய அனைத்தையும் எதிர்த்து போராடுவதற்கு துணிச்சலை வளர்த்துக் கொள்வோம்.

கையில் தற்காப்புக்கு தேவையான ஆயுதங்களை எப்போதும் வைத்திருப்போம். பாலின ரீதியாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் கடுமையான வேலைகளை செய்வதில் ஆண்களை விட அதிக திறனை கொண்டிருப்பவர்கள் பெண்கள்தான் என்பதை உணர்வோம். 

நம்முடைய பலவீனம் என்பது அடங்கிப் போவதும், கற்பு, அடக்கம், அச்சம், மடம், நாணம் போன்ற ஆணாதிக்க சமூக விழுமியங்களுக்குள் புதைந்து கிடப்பதுதான்.

இன்றைய இந்திய சூழலில் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பு பெண்களை காட்டுமிராண்டி சமூகத்தில் அடக்கி வைத்ததைப் போல, சமைத்து போடுவது, துணி துவைப்பது, பெண்டாள்வது போன்ற வேலைகளுக்கு மட்டும் ‘படைக்கப்பட்டவர்களைப்’ போல பார்ப்பன (இந்து) மதநீதி, அதாவது மனுதர்மம் பெண்களை அடிமைகளாக வாழ பழக்குகிறது. 

இதனை நியாயப்படுத்துகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக போன்ற அமைப்புகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு வெறித்தனமானத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.

மேற்கண்ட அனைத்தையும் நேர்கோட்டு பாதையில் சிந்தித்து நமக்கான புதிய பாதையை தேர்வு செய்து கொள்வோம். வழக்கமான மார்ச் 8 மகளிர் தின கொண்டாட்டங்களை போல இல்லாமல் புதிய வழிமுறைகளை கண்டறிவதற்கு தயாராவோம்.

•கனிமொழி.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.