“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-9.



மார்க்சியம் என்பது அறிவியல் கலைக்களஞ்சியங்களின் தொகுப்பு அல்ல. அரசியல் பொருளாதார, பண்பாட்டு நிகழ்ச்சி போக்குகளை சமூக விஞ்ஞான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து  பருண்மையான சூழலில் பருண்மையான அமல்படுத்துகின்ற உயர்ந்த அறிவியலாகும்.

இந்த அறிவியல் கண்ணோட்டத்தில் வரலாற்றின் நிகழ்ச்சி போக்குகளில் சரியான பாதையை வகுத்துக் கொண்டு இடது, வலது சந்தர்ப்பவாத திசைவிலகல்கள் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மார்க்சிய லெனினிய அமைப்புகளின் மீது சந்தர்ப்பவாதிகள் தாக்குதலையை தொடுப்பது புதியது அல்ல.

மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தை புரிந்து கொண்டு, அதன் சாராம்சத்தை கிரகித்துக் கொண்டு அதன் ஒளியில் ஒவ்வொரு நாட்டிலுள்ள அரசியல். பொருளாதார, பண்பாட்டு நிகழ்ச்சி போக்குகளை அவதானித்து புரட்சியை முன்னெடுத்துச் செல்வது அவசியமாகின்றது.

அவ்வாறு முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளில் முக்கியமானது அரசியல் மற்றும் இராணுவ போர்த் தந்திரம், செயல் தந்திர்ம் வகுத்து செயல்படுகின்ற விஞ்ஞானம் ஆகும். இந்த விஞ்ஞான கண்ணோட்டத்தை அடியோடு மறுக்கின்ற வினவு தலைமை மார்க்சியத்திற்கு நேர் எதிரான அதிரடி சாகச வழிமுறைகளை முன்வைக்கின்றது என்பதை ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளோம்.

அந்த சாகச வழிமுறைகளுடன், தற்போது டிராட்ஸ்கியவாத அணுகுமுறையும் சேர்ந்து கொண்டுள்ளதால் அதற்கேற்ப தனது வேலை திட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்படுகின்றனர். இந்த டிராட்ஸ்கியவாத அணுகுமுறையானது தோல்வியடைந்த வழிமுறையாகும்.

 இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு தத்துவார்த்த ரீதியாக வழிகாட்டிய ஆண்டன் பாலசிங்கம் போன்றவர்கள் முன்வைத்த இந்த டிராட்ஸ்கியவாத அணுகுமுறையை கடைபிடித்ததால் விடுதலைப் புலிகளுக்கு  ஏற்பட்ட பின்னடைவு மற்றும் தோல்வி ஆகியவை கண்ணெதிரிலே இரத்த சாட்சியமாக உள்ளது.

பாசிச அபாய காலகட்டத்தில் ஐக்கிய முன்னணி அமைப்பதை பற்றி புரிந்து கொள்ளாத இடது சந்தர்ப்பவாத கண்ணோட்டமுடைய வினவு மற்றும் செங்கனல் தலைமை ஏறக்குறைய அணிகளை பலி கொடுக்க தயாராகிக் கொண்டுள்ளது என்பது மட்டுமின்றி, அப்படிப்பட்ட வழிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களை வாய் வழி அவதூறுகள் முதல் மருதையனிஸ்டுகள் என நக்கல், நையாண்டி செய்வது என்பதையே தனது ’புரட்சிப்பணியாக’ கருதிக் கொண்டு பயணித்துக் கொண்டுள்ளனர்.

செயல்தந்திர அரசியலின் பரிமாணத்தையும், வீச்சையும் உணராத இந்த அரசியல் தற்குறிகள், “மேலும், அடிப்படை உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் முக்கியமானவை அல்ல, அரசியலைப் பிரச்சாரமாக எடுத்துச் செல்வதுதான் முக்கியமானவை என்று முன்னெடுத்துச் செல்லப்பட்ட செயல்தந்திர அரங்கின் செயல்பாடுகள் காரணமாக, அடித்தள உழைக்கும் வர்க்கத்துடன் ஐக்கியமும் நெருக்கமும் குறைந்துவரத் தொடங்கியது.”என்ற கண்டுபிடிப்பை முன் வைத்தனர்.
 
(நவீன அராஜகவாதிகளின் பிளீன அறிக்கை, 09-01-2021, வினவு) .

அவர்களின் சிந்தனைக்கு உரைக்கின்ற வகையில் போர்த் தந்திரம் மற்றும் செயல் தந்திரம் பற்றி மார்க்சிய-லெனினியம் முன் வைத்துள்ள அறிவியல் பூர்வமான வழிமுறைகளை மீண்டும் வலியுறுத்துகிறோம். இது அவர்களை சரி செய்து விட முடியும் என்ற நம்பிக்கையில் அல்ல!
அவர்களை நம்பி தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தோழர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

லெனினியத்தின் அடிப்படையான மூன்று செயல்தந்திரக் கோட்பாடுகள் - ஸ்டாலின் 

லெனினியத்திற்குக் குறிப்பான செயல்தந்திரக் கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்காமல் சீனாவில் புரட்சியின் சரியான தலைமை என்பது இருக்க முடியாது; அல்லது பொதுவுடைமை அகிலத்தின் வழியினைச் சோதித்துப் பார்ப்பது முடியாது. நான், அத்தகைய லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கீழ்கண்டவையாகக் கருதுகிறேன்;

அ) ஒரு நாட்டைச்சார்ந்த தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு கம்யூனிஸ்டு அகிலம் வழிகாட்டும் நெறிமுறைகளை வரையறுத்துக் கொடுக்கும் போது, ஒவ்வொரு தனித் தனி நாட்டின், குறிப்பான மற்றும் தனித்த விசேச அம்சங்களைத் தவறாது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆ)ஒவ்வொரு நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும், பாட்டாளி வர்க்கத்துக்கு நண்பர்களை - அது தற்காலிக நிலையற்ற நம்பகமற்றதாக இருக்குமேயானாலும் கூட வெல்வதற்கான மிகச்சிறிய சந்தர்ப்பத்தையும் கூட ஊசலாட்டமிக்க, தவறாது பயன்படுத்திகொள்ள வேண்டும்.

இ) மக்கள் பெருந்திரளின் அரசியல் கல்விக்குப் பிரச்சாரமும் கிளர்ச்சியும் மட்டும் போதாது மக்களுடைய சொந்த அரசியல் அனுபவத்தையே அது கோருகின்றது என்ற உண்மைக்குத் தவறாமல் உரிய மதிப்பு கொடுக்கப்பட வேண்டும்.

தொழிலாளி வர்க்கத்தின் நெகிழ்வுத் தன்மை உடைய நேரத்தில் நன்கு ஆராய்ந்து வந்தடைந்த கொள்கை, அதனுடைய எதிரியின் முகாமில் உள்ள பிளவுகளையும் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளும் திறன் மக்கள் பெருந்திரளின் நண்பர்களாக இருக்கக் கூடிய தொழிலாளர் வர்க்கக் கட்சியின் புரட்சிகரமான பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் கட்டுப்படுத்தாத தொழிலாளர் வர்க்கத்தையும் உழைக்கும் மக்கள் பெருந்திரளையும் அமைப்பாக்கும் கட்சியின் வேலையினைக் கட்டுப்படுத்தாத நண்பர்களை - அவர்கள் ஊசலாட்டமுள்ளவர்களாகவும் நிலையற்றவர்களாகவும் இருப்பார்களேயானாலும் கூட, கண்டுபிடிக்கும் திறன், இவை தான் வேறு எதனையும் விட திறன் மிக்க எதிரியை அழிப்பதற்குத் தேவையாக உள்ளது. 

மூன்றாவது செயல்தந்திர கோட்பாடு முழக்கங்களின் மாற்றங்கள் மற்றும் அத்தகைய மாற்றத்தின் முறைகள், வரிசை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. இது கட்சிக்கான முழக்கத்தை எங்ஙனம் மக்களுக்கான முழக்கமாக மாற்றுவது என்ற வினாவுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.மேலும், இது மக்களை எப்படி, எந்த வழிவகைகளில் புரட்சிகர நிலைக்குக் கொண்டுவருவது, இதன்மூலம் அவர்கள் தாங்களாகவே, தங்களது சொந்த அரசியல் அனுபவத்தின் மூலமாக, கட்சி முழக்கத்தின் சரியான தன்மையை உணர்ந்து கொள்ளலாம் என்பதுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.

ஆனால், முன்னேறிய குழுவான கட்சியானது 1917 ஏப்ரலில் மில்யுகோவ்-கெரன்ஸ்கி அரசாங்கத்தைத் தூக்கியெறிவது தவிர்க்க முடியாதது என்பதை, தானே முன்னதாகவே உணர்ந்திருந்தது என்பது நல்லசெய்தியாக இருந்தது. ஆனால், முன்வந்து அந்த அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து சோவியத் அரசாங்கத்தை நிர்மாணிப்பது என்ற முழக்கத்தை அன்றைய முழக்கமாக முன்வைப்பதற்கு, இது கட்சியின் அத்தகைய நிலைமட்டும் போதுமானதாக இல்லை.

”அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கே” என்ற விதியினை உடனடி எதிர்காலத்தைக்காண தொலை நோக்கு நிலையிலிருந்து, இன்றைய முழக்கமாக, உடனடிச் செயலுக்கான முழக்கமாக மாற்றுவதற்கு, மற்றுமொரு தீர்மானகரமான கூறு தேவைப்பட்டது. அதாவது மக்கள் இந்த முழக்கத்தின் சரியான தன்மையை தாங்களாகவே உணர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். இதைச் செயலூக்கமுள்ளதாகச் செய்ய, ஏதாவது ஒரு வழியில் கட்சிக்கு உதவவேண்டும். உடனடி எதிர்காலத்தின் தொலைநோக்கு நிலையிலான விதிக்கும், இன்றைய கட்டத்தின் முழக்கமான விதிக்கும் கறாரான வேறுபாடு வரையப்பட வேண்டும்.

...முழக்கத்தின் மாற்றம், மக்கள் பெருந்திரளைப் புதிய புரட்சிகர நிலைக்குக் கொண்டுவரும் வழிகள் மற்றும் உத்திகள் கட்சியின் கொள்கை, செயற்பாடுகள் மற்றும் சரியான தருணத்தில் ஒரு முழக்கத்தை மற்றொரு முழக்கத்தால் இடம் பெயரச் செய்தல் ஆகியவற்றின் மூலம் பெருந்திரளான உழைக்கும் மக்களை, தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் கட்சிப்பாதையின் சரியான தன்மையை அங்கீகரிக்க உதவுதல் இவைதான், லெனினியத்தின் மூன்றாவது செயல்தந்திரக் கோட்பாட்டினுடைய கோரிக்கைகளாகும். 

    ( லெனினிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் –ஸ்டாலின்.)

அதேபோன்று அரசியல், ஆயுதப் போராட்டங்களுக்கு இடையில் உள்ள உறவு, அரசியல் கட்சிகளுடன் பாட்டாளி வர்க்க கட்சிக்கு உள்ள உறவு, போர்தந்திர ரீதியிலான ஐக்கிய முன்னணி மற்றும் செயல்தந்திர ரீதியிலான ஐக்கிய முன்னணி ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் போன்றவற்றைப் பற்றியும் எமது ஆவணங்களில் உள்ளவற்றையும் சுட்டிக்காட்டுகிறோம்.

சமரச சக்திகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதற்கு பிரதானமான வழிமுறையாக கூட்டு நடவடிக்கைகளை முன்வைத்து செயல்படுவதும், அதில் கூர்மையான முழக்கங்களை முன்வைத்து அரசியலை முன்னெடுத்துச் செல்லும் போக்கில், சமரச சக்திகளின் பின்னே திரண்டுள்ள அணிகளை புரட்சிகர அமைப்பின் அரசியலை ஏற்கச் செய்வதும் என்ற நடைமுறையைப் பற்றியும் முன் வைக்கின்றோம்.

 “ஆளும் வர்க்கக் கட்சிகள் தவிர மற்றெல்லாக் கட்சிகளையும் சமரசக் கட்சிகளாகவே கருதி புரட்சியின் பிரதான தாக்குதல் திசைவழியில் அரசியல் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது மட்டுமே, அதன் வளர்ச்சிப் போக்கிலேயும் மேலும் அடிப்படை முரண்பாடுகள் கூர்மையடைவதிலேயும் தான் இந்த அரசியல் கட்சிகள் உண்மைச் சொரூபத்தில் வெளிப்படுவதும் ஒரு முனைப்படுவதும் நடந்தேறும். அதுவரை ஆளும் வர்க்கக் கட்சிகள் தவிர, பிறகட்சிகளுடன் பருண்மையான நிலைமைகளுக்கேற்ப குறிப்பிட்ட தருணத்தில் வகுக்கப்படும் செயல்தந்திரத்தின் அரசியல் நடத்தை வழியை செயல்படுத்துவதற்கான கூட்டுநடவடிக்கைகளே இருக்கும். 

 கூட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலமாகத் தான் பிரதானதாக்குதல் திசைவழி இருக்கும். கூட்டு நடவடிக்கைகளுக்காக அமைக்கும் போராட்ட அமைப்புகளை புதிய ஜனநாயக ஐக்கிய முன்னணியுடன் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. கூட்டு நடவடிக்கைகளிலும் அதற்கான ஸ்தாபனங்களிலும் ஒற்றுமையும் போராட்டமும், சுதந்திரமும் முன் முயற்சியும் என்ற கொள்கையை பாட்டாளி வர்க்கக்கட்சி வழுவாது பற்றி நிற்கவேண்டும். இவ்வாறு செயல்படுவதன் மூலமாகத் தான் பிரதான தாக்குதல் திசைவழி பிறழாது, எதிரிக்கு எதிரான பிரதான தாக்குதல் அதிக பட்சம் பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.

(இந்திய புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவ பாதையும்- மா.அ.க பக்கம்: 180)

தொடரும்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.