மோடி ஆட்சி: நிழல் தரா வாய்ப் பந்தல்.

 நன்றி, மார்க்சிஸ்ட் ரீடர்

தாமஸ் ஐசக்

தமிழில்: க.சுவாமிநாதன்

மோடி ஆட்சியின் 10 ஆண்டுகள் பற்றி பா.ஜ.க செய்யும் பிரச்சாரமும், நமது பதில்களும் இங்கு தரப்பட்டுள்ளது.

பிரச்சாரம் – 1

2029இல் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக வளர உள்ளது. இதோ “மொத்த உள்நாட்டு உற்பத்தி” (GDP – Gross Domestic Product) வளர்ச்சியில் இந்தியாவின் ரேங்க்


2014 – 10

2015 – 7

2019 – 6

2022 – 5 (பிரிட்டனை முந்தி)

2027 – 4 (ஜெர்மனியை விஞ்சும்)

2029 – 3 (ஜப்பானை விஞ்சும்)


பதில்


1) ஜி.டி.பி. என்ற அளவுகோல் மட்டும் உண்மை நிலையை பிரதிபலிப்பது அல்ல. அதை மட்டும் முன்னிறுத்தி வளர்ச்சி பற்றி பேசுவது பொய்ச் சித்திரம் ஆகும்.

வாதத்திற்காக ஜி.டி.பி யை அளவுகோலை எடுத்துக் கொண்டால்கூட உலகின் 3வது பொருளாதாரம் என்ற ரேங்க்கை எட்டும்போதும் இந்தியா ஒரு குறை வளர்ச்சி கொண்ட நடுத்தர வருமான நாடாகவே இருக்கும். காரணம், * உலக ஜி.டி.பி யில் இந்தியாவின் பங்கு 5 சதவீதம் மட்டுமே. 2027இல் இந்தியாவின் ஜி.டி.பி. அமெரிக்க ஜி.டி.பியில் ⅙ பங்குதான் இருக்கும். சீனாவின் ஜி.டி.பியில் ⅕ பங்குதான் இருக்கும்.


2) மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது சரியான அளவுகோல் அல்ல. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தின் பிற அளவுகோல்களில் பிரதிபலிக்க வேண்டாமா?


உலக நாடுகளின் தனி நபர் சராசரி வருமானத்தில் இந்தியாவின் ரேங்க் 142.

இந்தியாவின் தனி நபர் சராசரி வருமானம் 2600 டாலர். அமெரிக்காவின் தனி நபர் சராசரி வருமானம் 83000 டாலர். ஓ.இ.சி.டி (OECD – Organisation for Economic Cooperation and Development) என்கிற அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 38 நாடுகளின் தனி நபர் சராசரி வருமானம் 54000 டாலர்.

3) உலகக் குறியீடுகளில் அதள பாதாள ரேங்க். மோடி வரும் போதும் – இன்றும்…


ஐ.நா. மனித வள குறியீடு: 2014இல் உலக நாடுகளில் 130வது இடம். 2023இல் 132வது இடம்.

ஐ.நா. மகிழ்ச்சி குறியீடு: 2015இல் உலக நாடுகளில் 117வது இடம். 2023இல் 136வது இடம்.

நீடித்த வளர்ச்சி குறியீடு: 2016இல் உலக நாடுகளில் 110வது இடம். 2023 இல் 121வது இடம்.

உலக உணவுக் கொள்கை கழகத்தின் உலக பசி குறியீடு: 2014இல் 76 நாடுகளில் 55வது இடம். 2023இல் 121 நாடுகளில் 107வது இடம்.

குழந்தை வளர்ச்சி குறியீடு (“Save Child UK”): 2017இல் 116வது இடம். 2023இல் 118வது இடம்.

“புளூம்பெர்க்” உடல் நல குறியீடு: 2015இல் 103வது இடம். 2019இல் 120வது இடம்.

உலக பொருளாதார அமைப்பின் மனித மூலதன குறியீடு: 2013இல் 122 நாடுகளில் 78வது இடம். 2017இல் 130 நாடுகளில் 103வது இடம்.

“லீகாட்டும்” வள குறியீடு: 2015இல் 99வது இடம். 2023இல் 103வது இடம்.

உலக வங்கியின் மனித மூலதன குறியீடு: 2018இல் 115வது இடம். 2020இல் 116வது இடம்.

உலக வங்கியின் ஊடக சுதந்திரம் குறியீடு: 2014இல் 140வது இடம். 2023இல் 150வது இடம்.

ஏற்றத் தாழ்வுகளை குறைக்கும் கடப்பாடு: 2023இல் 123வது இடம்.

பெண்கள் பாதுகாப்பு குறியீடு: 2017இல் 131வது இடம். 2023இல் 148வது இடம்.

உலக பொருளாதார அமைப்பின் உலக பாலின இடைவெளி குறியீடு: 2014இல் 114வது இடம். 2023இல் 135வது இடம்.

தாமஸ் ராய்ட்டர்ஸ் “பெண்களுக்கு மிக அபாயகரமான நாடு” குறியீடு: 2011இல் 4வது இடம். 2018இல் 1வது இடம்.

இப்படி எல்லா குறியீடுகளும் மோடி அரசின் தோல்விகளை காட்டுகிற சுட்டு விரல்களாக இருக்கும் போது மோடி அரசோ ஜி.டி.பி தொகையை மட்டும் காண்பித்து “தம்ஸ் அப்” செய்கிறது.


ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கான அளவுகோலாக ஜி.டி.பி மட்டும் இருக்க முடியாது என்பது எளிய பொருளாதார உண்மை. பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் அதன் பிரதிபலிப்பு இருந்தால் மட்டுமே, அது உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். நவீன தாராளமயப் பொருளாதார பாதை என்பது மூலதன நலன்களை மையமாக கொண்டது என்பதும், ஏற்றத்தாழ்வுகளை மென்மேலும் அதிகரிப்பது என்பதும், 30 ஆண்டு இந்திய அனுபவம். கடந்த 10 ஆண்டுகளில் நவீன தாராளமயம், மூர்க்கத்தனமாக மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே இத்தனை குறியீடுகளில் சரிவு.


பிரச்சாரம் – 2

ஏழைகளின் எண்ணிக்கை மோடி ஆட்சியில் குறைந்துள்ளது. 25 கோடி பேர் வறுமையை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.


பதில்


ஏழைகள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றால் வேலை வாய்ப்பு அதிகரித்திருக்க வேண்டும். பண வீக்கம் கட்டுக்குள் இருந்திருக்க வேண்டும். உண்மை ஊதியம் உயர்ந்திருக்க வேண்டும். தனி நபர் சராசரி உணவு தானிய நுகர்வு அதிகரித்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு சத்துணவு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் என்ன நிலைமை? இருந்தாலும் எப்படி மோடி அரசு வறுமையை குறைத்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது? இதோ பதில்கள்.


பாதிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌரவமான வேலை இல்லை. 90 சதவீதமான தொழிலாளர்கள் அணி சாரா தொழில்களில் எந்த வித சமூக பாதுகாப்பும் இல்லாமல் பணியாற்றுகிறார்கள்.

உழைப்பாளர் பங்கேற்பு விகிதம் (Labour Participation Rate): இது வேலை வாய்ப்பை அல்லது வேலையின்மையை வெளிப்படுத்தும் அளவுகோல் ஆகும்.

இதோ உழைப்பாளர் பங்கேற்பு விகிதம் எப்படி ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வந்துள்ளது & வேலையின்மை எப்படி அதிகரிக்கிறது, அதிக அளவிலேயே நீடிக்கிறது என்ற விவரம்.


ஆண்டு – உழைப்பாளர் பங்கேற்பு விகிதம் -வேலையின்மை

2016 -17 46.2 7.4

2017 -18 43.7 4.7

2018 -19 42.9 6.3

2019 -20 42.7 7.6

2020 -21 40.0 8.8

2021 -22 40.1 7.7

2022 -23 39.5 7.6


பண வீக்கம் சாதாரண மக்களின் பாக்கெட்டுகளை பதம் பார்த்தது என்பதற்கு உதாரணம் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு.

2014 மே மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 101 டாலர். அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 71.41. டீசல் விலை லிட்டருக்கு ரூ 55.49.

2023 இல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 74 டாலர். இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 96.72. டீசல் விலை லிட்டருக்கு ரூ 89.62.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் 25 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலை 35 சதவீதம் உயர்வு. டீசல் விலை 62 சதவீதம்.

எதிர்த்திசையில் எகிறி இருப்பது எப்படி? காரணம் சர்வதேச சந்தை விலைக் குறைப்பை மக்களுக்கு மடை மாற்றம் செய்வதற்கு பதிலாக அரசின் வரி திரட்டலில் வாய்க்காலுக்கு திருப்பி விட்டுள்ளது.

2014இல் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது போடப்பட்ட வரி ரூ 9.48, ஒரு லிட்டர் டீசல் மீது ரூ 3.56. ஆனால் 2020 இல் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது போடப்பட்ட வரி ரூ 32.89, ஒரு லிட்டர் டீசல் மீது ரூ 31.82 ஆக உயர்ந்தது. பெட்ரோல் மீது 3.5 மடங்கு. அதாவது 350 சதவீதம். டீசல் மீது 9.5 மடங்கு அதாவது 950 சதவீதம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனில், அவை எல்லா சரக்குகள் மீதும் பிரதிபலிக்கும். குறிப்பாக, உணவுப் பொருள்கள் மீது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த காலத்தில் உணவுப் பொருள் பண வீக்கம் 43 சதவீதம் முதல் 56 சதவீதம் வரை இருந்திருக்கிறது. பண வீக்கத்திற்குள் உள்ளார்ந்த வர்க்க பாரபட்சம் உண்டு. உணவுப் பொருள் பண வீக்கம் எனில், அது எளிய மக்களையே அதிகம் தாக்கும். காரணம், அவர்களின் செலவினத்தில் பெரும் பகுதியை ஆக்ரமிப்பதாக உணவுப் பொருள்கள் இருக்கும் என்பதே. உணவுப் பொருள் பண வீக்கத்திற்கு விவசாய உற்பத்தியில் ஒப்பீட்டு அடிப்படையிலான தேக்கம், அரசு கொள்முதலில் குறைபாடு போன்ற காரணங்களும் முக்கியமானவை.

வறுமை ஒழிப்பை பற்றி அரசாங்கம் தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் வேளையில், உண்மை ஊதியத்தில் பெரும் தேக்கம் நிலவுகிறது. விவசாய வருமானம் இரட்டிப்பாகும் என்ற அரசின் முழக்கம், முனகலாகக் கூட கேட்பதில்லை. நகர்ப்புற உழைப்பாளிகளின் நிலைமையும் அதுவே.

2015இல் ஒரு விவசாயத் தொழிலாளியின் உண்மை ஊதியம் ரூ 225 எனில் 2022இல் ரூ 240 மட்டுமே.

2015இல் ஒரு கட்டுமானத் தொழிலாளியின் உண்மை ஊதியம் ரூ 275 எனில் 2022இல் ரூ 280 மட்டுமே.

2015இல் ஒரு விவசாயமல்லா கிராமத்து தொழிலாளியின் உண்மை ஊதியம் ரூ 234 எனில் 2022இல் ரூ 245 மட்டுமே.

தனி நபர் உணவு தானிய நுகர்வு (Per Capita grain availability) 1991இல் 186.2 கிலோ. 2016இல் 177.9 கிலோ.

ஆனாலும் வறுமை குறைந்து விட்டது என்று ஒன்றிய அரசு மார் தட்டுவது எதன் அடிப்படையில்? வறுமையின் அளவு குறையவில்லை. வறுமைக்கான அளவுகோல் மாற்றப்பட்டு விட்டது. அவ்வளவுதான்.

பொருளாதார நிபுணர் உத்சா பட்நாயக் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. வறுமைக்கு ஏற்கெனவே இருந்த அளவுகோல்களை வைத்து மதிப்பிட்டால், வறுமை குறையவில்லை என்பது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டு விடும். குழந்தைகளுக்கு சத்துணவின்மை (Malnutrition) அதிகரித்திருக்கவில்லையா? பெண்கள் மத்தியில் இரத்த சோகை அதிகரிக்கவில்லையா? வயதுக்கு ஏற்ற உயரம் இல்லா குழந்தைகளின் (Stunting) எண்ணிக்கை எவ்வளவு? வயதுக்கு ஏற்ற எடை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை (Under weight) எவ்வளவு? உயரத்திற்கு ஏற்ற எடை இல்லா குழந்தைகள் (Wasting) எவ்வளவு? இதற்கெல்லாம் என்ன பதில் இல்லாததால் அளவுகோல்களையே மாற்றி விட்டார்கள். அவர்கள் புதிதாக இணைத்துள்ள வங்கிக் கணக்கு, கழிப்பறை, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியன பற்றியெல்லாம் கூட கேள்விக்குள்ளாகும் மதிப்பீடுகள் உள்ளன.

தொடரும்....

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.