கார்ப்பரேட்டுகளின் பிடியில் ஜனநாயகம்!

பாசிச பாஜக அரசு  கொண்டு வந்த தேர்தல் நிதி பத்திரங்கள் எனும் பெயரில் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குபவர் பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் திட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதுடன் நாட்டில் கறுப்பு பண பரிவர்தனையை பாதுகாக்கும் எனவும்,தேர்தல் பத்திரம் என்பதே அரசியல் சாசனத்துக்கு எதிரானது இதற்காக தேர்தல் பத்திரங்களுக்காக நிறுவன சட்டங்களில் ( Company act) திருத்தம் கொண்டு வந்தது சட்டவிரோதமானது எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி  தீர்ப்பு வழங்கியது.


தேர்தல் நிதி பத்திரங்கள் என்பது சட்டபூர்வ கொள்ளை என்பதால்,

உச்சநீதிமன்றம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை மார்ச் -06க்குள் தெரிவிக்க வேண்டும் என தனது தீர்ப்பில் கூறியுள்ளது.


ஆனால் 02 நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில்  தேர்தல் ஆணையத்திற்கு தகவல்களை அளிக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்குமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா  கேட்டுக் கொண்டுள்ளது.இது எதிர்பார்த்த ஒன்றுதான்.தேதியை கவனியுங்கள் ஜூன் 30. அதற்குள் தேர்தல் முடிந்துவிடும்.அதாவது, எஸ்பிஐ மூலம் உச்சநீதி மன்றத்திற்கு விபூதி அடித்துள்ளது பாசிச பாஜக. 


ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் கேட்பதற்கு ஸ்டேட் வங்கி கூறும் காரணங்கள் மிக அற்பமானவை.1) பத்திரங்கள் குறித்த விவரங்கள் ரகசிய மொழியில் எழுதப்பட்டு இரண்டு பாதுகாப்பான இடங்களில் தனித்தனியாக வைக்கப்பட்டிருக்கின்றன. நன்கொடையாளரின் விவரங்களை ரகசியமாக வைத்திருக்கும் பொருட்டு மையப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்கள் இல்லை என்றும்,


2) மொத்தம் 29 கிளைகளில் 44,434 ஆவணங்களை திரட்டி ஒப்பு நோக்கி மொழியாக்கம் செய்து விவரங்களை இறுதி செய்ய ஏராளமான உழைப்பும் அவகாசமும் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளது.


முழுக்கவும் கணினி மயமாக்கப்பட்ட வங்கித் துறையில் எந்தவொரு புள்ளி விவரமும் சில நிமிடங்களில் கிடைக்கும். ஸ்டேட் வங்கி நிர்வாகம் சொல்வது பொய். மையப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்கள் இல்லை என்றால் 44,434 என்கிற எண் எங்கிருந்து கிடைத்தது? உண்மையாக இருந்தாலும் கூட முழு விவரங்களையும் திரட்ட இரண்டு நாட்களுக்கு மேல் ஆகாது என்பதே உண்மை.


நன்கொடையாளர்களின் தகவல்களைத் தெரிவிக்க எஸ்பிஐ, மூலம் அற்பதனமான காரணங்களைக் கூறி தேர்தலுக்குப் பிறகு வரை கால அவகாசம் கேட்பது என்பதே தேர்தலுக்கு முன்பு பாசிச பாஜகவின் உண்மையான ஊழல் முகத்தை மக்களுக்கு தெரியாமல் மறைக்கும் முயற்சியே.இந்த திருட்டுதனத்திற்கு பாசிச பாஜகவிற்கு SBI துணை நிற்கிறது 


விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் வரை ஸ்டேட் வங்கி சேர்மன் தினேஷ்குமார் கரா நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தால் ஒரே நாளில் விவரங்கள் கிடைக்கும்.


ஏற்கனவே,தேர்தல் நிதி பத்திர திட்டம் அறிவிக்கப்பட்ட போது

ரிசர்வ் வங்கியும் தேர்தல் ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்தன.


குறிப்பாக,ரிசர்வ் வங்கி தேர்தல் நிதி பத்திர திட்டத்தை அமுல்படுத்த கூடாது என்பதற்கு இரண்டு முக்கிய ஆட்சேபனைகளை தெரிவித்தது.முதலாவதாக,

தேர்தல் நிதி பத்திரம் வாங்க அரசியல் கட்சிகள் இதற்கென சிறப்பு வங்கி கணக்கை கண்டிப்பாக SBI வங்கியில் தொடங்க வேண்டும். அப்போதுதான் யார் நன்கொடை அளிக்கிறார்கள் என்ற விபரத்தை தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு இல்லாமல்

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள் பற்றிய அறிக்கையை யாருக்கும் தராமல் மறைப்பது என்பது அரசியல் கட்சிகளின் அரசியல் நிதியின் வெளிப்படைத்தன்மை அம்சத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் தேர்தல் நிதி பத்திரங்கள் கொடுப்பவர் - வாங்குபவர் பெயர் ஏதும் இல்லாமல் அநாமதேயமாக இருந்ததால், இது நாணயமாக  மாறும் வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு நாணயமாக மாறினால் இந்தியாவின் பணத்தின் மீதான நம்பிக்கையைக் குலைத்துவிடும் எனவும் RBI எச்சரித்தது.


இரண்டாவது ஆட்சேபனையாக 

தேர்தல் நிதி பத்திரம் வாங்குபவர் அரசியல் கட்சிக்கு உண்மையான பங்களிப்பாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் ஒருவர் நிதி பத்திரத்தை வாங்கி, அதன்  ஆரம்ப மதிப்பிற்கு அல்லது அதற்கும் அதிகமாகவோ, வெளிநாட்டு அரசாங்கம் உட்பட எந்தவொரு நிறுவனத்திற்கும் விற்றால், அந்த நிறுவனம் அதை ஒரு தரப்பினருக்கு பரிசாக அளிக்கும் இது பண மோசடி சட்ட விதிகளில் குழப்பத்தை ஏற்படுத்தும்.


மேலும் தேர்தல் நிதி பத்திரங்களை Bearer bond (தாங்கி பத்திரம்)பாத்திரமாக பயன்படுத்துவதும், இதனை

செல் நிறுவனங்களைக் கொண்டு பயன்படுத்துவதன் மூலம் தவறாகப்  பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதால்

தேர்தல் நிதி பத்திரங்கள் நேரடி வடிவத்தில் விற்காமல் டிஜிட்டல் வடிவத்தில் (டிமேட்) விற்க வேண்டும் இல்லையெனில் இது பணமோசடி சட்டத்தையும் பாதிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி எச்சரித்தது.


மேற்கண்ட இரண்டு எச்சரிக்கைகளையும் பாசிச மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. மாறாக ரிசர்வ் வங்கியின் சட்டத்தை மாற்றியது. இதனை கண்டித்து அப்போதைய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜீத் பட்டேல் தனது கடிதத்தில் "இப்போது ரிசர்வ் வங்கி சட்டம் திருத்தப்பட்டுள்ளது, அரசாங்கம் குறைந்தபட்சம் தேர்தல் நிதி பத்திரங்கள் வழங்க ரிசர்வ் வங்கி தவிரவேறு எந்த நிறுவனத்தையும் அங்கீகரிக்கக்கூடாது" என எழுதினார்.ஆனால் ஒன்றிய அரசு தேர்தல் நிதி பத்திரங்களை வழங்குவதற்கான அங்கீகாரத்தை  ரிசர்வ் வங்கிக்கு தராமல் SBI தந்தது.இதனால் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ஒன்றிய அரசுடன் தொடர்சியாக முரண்பட்டு பதவியை ராஜினமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் ஆணையம் இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் மூன்று ஆட்சேபனைகளை எழுப்பியது.முதலாவதாக தனிப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் கிடைக்காது; இரண்டாவதாக வருமான வரிச் சட்டத்திற்கும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கும் இந்த மசோதா விற்கும் இடையே முரண்பாடு உருவாகும் மூன்றாவதாக அரசியல் கட்சிகள் அவர்கள் பெற்ற தேர்தல் நிதி பத்திரங்களின் மதிப்பு வாரியான விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும்.தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆட்சேபனைகளையும் கழிவறை காகிதங்களாக தூக்கி எறிந்து விட்டது.


மறுபுறம்,இந்தத் திட்டத்தை செயல்படுத்த பல சட்டத்திருத்தங்களை செய்தது பாசிச பாஜக. குறிப்பாக, அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நிறுவனங்களிடம் தேர்தல் நிதி பெறக்கூடாது என்பதே சட்டம். ஆனால் பாசிச பாஜக வெளிநாட்டு நிறுவனங்களிடம் தேர்தல் நிதி பெறுவதற்காக வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தில் (Foreign Contribution Regulation Act, 2010 ) திருத்தம் செய்து வெளிநாட்டு நிறுவனங்களும் தேர்தல் நிதி அளிக்கலாம் என்று மாற்றியது.


அதேபோல், நிறுவனங்கள் சட்டத்தில்  (Companies Act, 2013), ஒரு நிறுவனம் நன்கொடையாக தரும் தேர்தல் நிதி அதன் லாபத்தில் இருந்து அதிகபட்சமாக 7.5  சதவிகிதம் தரலாம் என இருந்த சட்டத்தை மாற்றி, யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் தேர்தல் நிதியாக அளிக்கலாம் என  திருத்தம் செய்து கார்ப்பரேட் கொள்ளையில் தனது பங்கை தேர்தல் நிதி பத்திரங்களாக பெற்று ஊழலை சட்டபூர்வமாக மாற்றியது.


அதுமட்டுமின்றி, வருமானவரிச் சட்ட விதியின் அடிப்படையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கு வரும் நன்கொடைகள் பற்றிய கணக்கை வருமானவரித் துறையிடமும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி  அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை நிதி ரூபாய் 20,000- த்திற்கும் மேல் இருந்தால் அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்திடமும் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டத்தையும் மாற்றியது.அதாவது, தேர்தல் நிதிப்பத்திரத்தின் மூலம்  கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களையும் விவரங்களையும் யாரிடமும் தெரிவிக்க தேவையில்லை என சட்டத்தை திருத்தி தேர்தல் நிதி கணக்குகளை மறைத்து முதலாளிகளின் கணக்கில் வராத கருப்பு பணத்தையும் தேர்தல் நிதி கணக்காக மாற்றும் நிலையை உருவாக்கியது.


இத்திட்டம் அமுல்படுத்தப்பட்ட 06 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கோடி கோடியாக பணம் பெற்ற பாஜக கட்சியின் சொத்து பல மடங்கு உயர்ந்து விட்டது.2018 முதல் 2023 வரை  06 ஆண்டுகளில்ஏழு தேசியக் கட்சிகளும் 24 பிராந்தியக் கட்சிகளும் உட்பட 31 கட்சிகள் இதுவரை 30 கட்டங்களாக  ரூ.16,518 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான பத்திரங்கள் ஏற்கெனவே பணமாக்கப்பட்டுள்ளன.இதன்படி தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டு நன்கொடையாகப் பெற்ற தொகை மொத்தம் ரூ. 12695 கோடிகள். இதில் பாஜக பெற்றது மட்டும் 6574 கோடி. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் சுமார் 52 சதவீதத்தை பாஜக மட்டுமே பெற்றுள்ளது.


தேர்தல் நிதி பத்திரம் மட்டுமின்றி பல வழிகளில்  கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவிற்கு அள்ளி கொடுத்ததன் விளைவாக, 2016-17 மற்றும் 2021-22 நிதியாண்டுகளின் இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் நன்கொடையாக ரூ.10,122 கோடிகளைப் பெற்றுள்ளது. 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கு இடையில், பிஜேபியின் வருமானம் 23.15 சதவீதம் அதாவது ரூ.443.724 கோடி அதிகரித்துள்ளது.2021-22 நிதியாண்டில் ரூ.1917.12 கோடியாக இருந்த வருமானம் 2022-2023 நிதியாண்டில் ரூ.2360.844 கோடியாக அதிகரித்துள்ளது.இதன் மூலம் சுமார் 6,489.724 சொத்துக்களுடன் இந்தியாவின் அதிக சொத்துக்கள் கொண்ட கட்சிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது பாசிச பாஜக.


மேற்கண்ட தொகைகள் அனைத்தும் பொது வெளியில் தெரிந்த புள்ளிவிவரங்களே. தெரியாமல் எவ்வளவு தொகை கார்ப்பரேட் நிறுவனங்களிடம்  பெற்றுள்ளது என்பது பாஜகவிற்கும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக உள்ளது.


எலும்பு துண்டை கவ்விக்கொண்டு வாலாட்டும் நாயைப் போல கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கோடி கோடியாக பணங்களை பெற்றுள்ள பாசிச பாஜக  தனக்கு எலும்பு துண்டு போட்டு கார்ப்பரேட் எஜமானனுக்கு விசுவாசத்தைக் காட்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, வரிச்சலுகை மற்றும் சொத்து வரி குறைத்தது,பல லட்சம் கோடி வாராக்கடனாக தள்ளுபடி செய்தது, நாட்டின் சொத்துக்களான கனிம வளங்களை மலைகளை காடுகளை கொள்ளை இட தாராள அனுமதி அளித்தது அதற்காக சட்ட திருத்தங்களை செய்தது, மக்களின் கடும் உழைப்பால் உருவான பொதுத்துறை நிறுவனங்களையும் அதன் சொத்துக்களையும் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்வது என தனது பத்தாண்டு கால ஆட்சியில் கார்ப்பரேட் சேவையை தனது உயிர் மூச்சாக செய்து கார்ப்பரேட் முதலாளிகளை கொழுக்க வைத்து உலகின் பெரும் பணக்காரர்களாக உயர்த்தி உள்ளது பாசிச பாஜக.அதாவது, கார்ப்பரேட் முதலாளிகள் இந்தியாவின் சொத்துக்களை - வளங்களை கொள்ளையடிக்க சட்டபூர்வமாக வழிவகை செய்வதும்,அவ்வாறு கொள்ளையடித்த பணத்தில் தனது பங்கை சட்டபூர்வமாக பெற்றுக்கொள்ள கொண்டு வரப்பட்டதே பாசிச மோடி அரசின் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்.

பாசிச பாஜக - கார்ப்பரேட் -எஸ்பிஐ கூட்டுக் களவாணி தனத்தை அம்பலப்படுத்த வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை.


ஆகவே, கார்ப்பரேட்டுகள் இடம் பல்லாயிரம் கோடி தேர்தல் நிதி பத்திரத்தின் மூலம் நிதியைப் பெற்று மாபெரும் ஊழல் செய்துள்ள பாசிச பாஜகவை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்க தடை செய்ய கோரியும் தேர்தல் நிதி பத்திர தரவுகளை உடனே பொதுவெளியில் வெளியிட மறுக்கும்- ஊழலுக்கு துணை போகும் எஸ்பிஐ அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய கோரியும்,

உடனடியாக மாவட்ட எஸ்.பி.ஐ வங்கி அலுவலகங்களை தொழிலாளர்கள் விவசாயிகள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், சிறு குறு தொழில் முனைவர்கள் ஒன்றிணைந்து முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.