குடிப்பொறுக்கிகள் - ஒரு விளக்கம்.(ஜெயமோகனின் மேதாவித் தனத்திற்கு செருப்படி)

மஞ்சும்மல் பாய்ஸ் குறித்து ஜெ.மோ எழுதியதியிருப்பதை  நிறைய பேர் பகிர்கிறார்கள். பெரும்பாலானோர் எதிர்மறையாகவே எழுதுகின்றனர்.



இப்படம் குறித்து எழுதும்போது ஜெ.மோ,  குடிப்பொறுக்கிகள் என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார்.  எழுத்தாளர்கள் மனிதர்கள் மீது வாஞ்சையுடையவர்களாக இருக்க வேண்டும். இவ்வளவு கடுமையான சொற்பதம் தேவையில்லை. 

குறிப்பாக மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை முன்வைத்து 'குடிப்பொறுக்கிகள்' என்கிற பதத்தை ஜெ.மோ ஏன் பயன்படுத்துகிறார்? 

மஞ்சும்மெல்  எர்ணாகுளத்துக்கு அருகில் உள்ள பகுதி. அங்கமாலி டைரிஸ் படத்தை சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அங்கமாலியும் எர்ணாகுளம் அருகில் உள்ள பகுதிதான். இப்பகுதிகள் நமது வட சென்னையை ஒத்தவை. 

இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை மக்கள். ஒவ்வொரு நிலத்தில் வாழ்பர்களுக்கும் ஒவ்வொரு இயல்புகள். இதைப் பேசுவதுதான் நம் திணைக் கோட்பாடு. அந்த திணைக்கோட்பாடு இன்று உலகளாவிய கலை இலக்கியக் கோட்பாட்டுகளுடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது. 

மனிதப் பண்பாடு என்பது இடம், காலம், சூழல் என்னும் பௌதீக அடிப்படையில் ஒன்றிணைந்து செயலாற்றுவது. ஒரு பனுவலில் முதல்பொருள், உரிப்பொருள், ஒன்றோடன்று இயைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. இதன்வழிதான் ஒவ்வொரு நிலத்தின் பண்பாடும்,  பிற பண்பாடுகளோடு ஒத்திசைவையும் வேற்றுமையையும் பேணுகின்றன. இங்கே பனுவல் என்று குறிப்பிடுவது சினிமாவையும் சேர்த்தும்தான். 

இவ்வாறு, மனிதர்களது நாகரீகமும், பண்பாடும், இயல்பும் அவர்கள் வாழும் பிரதேசங்களின் தன்மையிலிருந்தே உருவாகிறது. காவிரிக் கரையிலிருந்து தோன்றிய கதைகளும், தாமிரபரணி கரைகளில் செழித்த கதைகளும், மீனவக் குப்பங்களில் வளர்ந்த கதைகளும், திருநங்கைகளது கூடாரங்களில் எழுந்த கதைகளும் ஒரே மொழியை, ஒரே முடிவை , ஒரே நீதியை, கொண்டிருக்க முடியாது. அப்படிதான் அங்கமாலி டைரிஸ் , மஞ்சும்மல் பாய்ஸ் படங்களையும் அணுகவேண்டும். 

இவர்களைத்தான் ஜெ.மோ குடிப்பொறுக்கி என்கிறார். குடிக்காதவர்களில் பொறுக்கிகள் இல்லையா? 

அடிப்படையில் ஜெ.மோ வுக்கு குடி பிரச்சனையில்லை. அவரைப் பொறுத்த அளவில் ஐந்து நட்சத்திர விடுதிகளில் குடிக்கும் மேன்மக்கள் பொறுக்கிகளாக மாட்டார்கள். அங்கமாலி, மஞ்சும்மல் இளைஞர்கள்தாம் குடிப்பொறுக்கிகள்.

சோம பானம், சுரா பானம் குடித்தவர்களை ஜெ.மோ குடிப்பொறுக்கிகள் என்பாரா? 

சூழலை நாசம் செய்து சிவராத்திரி கொண்டாடும் ஜக்கியை, ஜெ.மோ பொறுக்கி என்பாரா? 

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை தயாரித்திருப்பவர் சௌபீன் ஸாஹிர். இவர் ஓர் இசுலாமியர். இந்த ஒவ்வாமையும் சிலருக்கு இருப்பதைப் பார்க்க முடிகிறது.

மஞ்சும்மல்காரர்கள் பொறுக்கிகளாக இருந்துவிட்டுப் போகட்டும். இத்தகைய பொறுக்கிள்தாம் தம் உயிரைப் பணயம் வைத்து, சக மனிதரைக் காப்பாற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

கரிகாலன்.

எழுத்தாளர்,

சமூக செயற்பாட்டாளர்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.