அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடும் கம்யூனிஸ்டுகள்!

"அதிகாரத்துவம் என்பது தாராளவாதம், தனிநபர் வாதம், கட்டளை வாதம்,  வழமை வாதம், மையமில்லா வாதம், துறை வாதம், குழுவாதம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையதாகும்" என்கிறார் தோழர் மாவோ.

அரசியல் சித்தாந்த ரீதியாக ஓட்டாண்டித்தனத்தில் மூழ்கி போகும் தலைமை, தனது தலைமையை தக்க வைக்க கையில் எடுத்துக் கொள்கின்ற அதிகாரத்திற்கு  மறுபெயர் மேற்கண்ட அம்சங்களில் கண்டிப்பாக வெளிப்படுகிறது. இத்தகைய "அதிகாரத்துவம் என்பது நமது தலைமை உறுப்புகளை பெரிதும் தாக்கக்கூடிய ஒரு அரசியல் நோய்" என்கிறார் தோழர் மாவோ.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவர் ஜனநாயக மத்தியத்துவ விழுமியங்களுக்கு கட்டுப்படாமல், தான்தோன்றித்தனமாக தன்னுடைய விருப்பத்தை அமல்படுத்துவது என்பது அதிகாரத்துவத்தின் துலக்கமான வெளிப்பாடுதான்.

ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாக பிளவுபடாத , வலது, இடது சந்தர்ப்பவாத போக்குகளுக்கு  ஆட்படாத எமது அமைப்பிற்குள் 2020 ஆம் ஆண்டு இத்தகைய அதிகாரத்துவ போக்கு அமைப்பை பிளவு படுத்தியது.

கார்ப்பரேட் காவி பாசிசம் நாடு முழுவதும் மிகப்பெரும் அபாயமாக, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிராக தாக்குதலை தொடுத்து வருகின்ற இந்த நேரத்தில் அமைப்பை பிளவுபடுத்தி ஆளும் வர்க்க சேவையில் இறங்கியது தலைமை. இறுதியில் அது தனி நபர்களை பாதுகாத்துக் கொள்கின்ற கேடான, இழிவான முதலாளித்துவ நடைமுறைக்கு இட்டுச் சென்றது.

எனவே மிகப் பெரும் விலை கொடுத்து அதிகாரத்துவத்தை முறியடித்த எம்மை போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து அத்தகைய போக்குகள் திரும்பவும் தோன்றாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது. 

அதற்கு சித்தாந்த அடித்தளத்தில் ஊன்றி நிற்க வேண்டும் என்பதற்காக இந்த வெளியீட்டை சிறு, சிறு பாகங்களாக வெளியிடுகிறோம்.

இந்த நூல் சிறு கட்டுரையாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தோன்றுகின்ற அனைத்து வகையான அருவருப்பான போக்குகளையும் சுட்டிக்காட்டுகிறது.

அதிகாரத்துவத்துக்கு எதிராகப் போராடுவோம்!

மே 29 1963

(மத்தியக் கமிட்டிக்கும் அரசு நிர்வாகக் குழுவுக்கும் நேரடியாகக் கீழே இயங்கும் துறைகளைச் சேர்ந்த முன்னணி ஊழியர்களின் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து எடுக்கப்பட்டது)

அதிகாரத்துவம் என்பது நமது தலைமை உறுப்புகளைப் பெரிதும் தாக்கக்கூடிய ஒரு அரசியல் நோய் .

அதிகாரத்துவம் என்பது சீனாவை இவ்வளவு காலம் ஆண்ட சுரண்டும் வர்க்கங்கள் விட்டுச் சென்றுள்ள பாரம் பரியம். சீனா பன்னெடுங்காலமாக நிலப்பிரபுத்துவ சமுதாயமாக இருந்தது. சென்ற நூற்றாண்டில் அது ஓர் அரைக்காலனிய – அரை நிலப்பிரபுத்துவ சமுதாயமாக நீடித்தது. இதுவே நம் நாட்டில் அதிகாரத்துவத்தின் ஆழ்ந்த தாக்கம் நிலவக் காரணமாக உள்ளது.

அதிகாரத்துவம் என்பது தாராளவாதம், தனிநபர்வாதம், சுட்டளைவாதம், வழமைவாதம், மையமில்லா வாதம்,துறைவாதம், குழுவாதம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையதாகும். எனவே அதிகாரத்துவத்துக்கு எதிரான நமது போராட்டம், இவ்வனைத்துப் போக்குகளுக்கும் எதிரானதாகவே இருக்க முடியும். நிச்சயமாக, வேறு சில விரும்பத்தகாத போக்குகளும் நீடிக்கின்றன என்பது உண்மைதான். இருப்பினும் நான் குறிப்பிட்டுள்ள ஏழு வகையான போக்குகளும் ஆதிக்கம் செலுத்தும் முதன்மையான போக்குகளாக உள்ளன.

அதிகாரத்துவம் பல வகைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அதிகார வர்க்கத்தினரை வகைப்படுத்தி, ஒவ்வொன்றையும் விளக்க முயல்கிறேன்.


1. தம்மைச் சுற்றியும் தம்முடைய நிர்வாகத்தின் கீழுள்ள துறைகளிலும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மிக அற்பமாகவே அறிந்துள்ள அதிகார வர்க்கத் தினர். இவ்வகை அதிகாரிகள் யதார்த்த நிலைமைகளிலிருந்து விலகிச் சென்றவர்கள்: மக்களுடன் தொடர்பற்றுப் போனவர்கள். இவர்கள் சமூக ஆய்வுகள் விசாரணைகள் நடத்துவதோ, கட்சிக் கொள்கைகளைச் செயல்படுத்த பருண்மையான முயற்சிகள் எடுப்பதோ, தம்முடன் பணியாற்றும் சக தோழர்களுடன் அரசியல்- சித்தாந்த வேலைகளில் ஈடுபடுவதோ கிடையாது. இத்தகையோர் உத்தரவுகள் இடும்போது தவிர்க்கவியலாமல் அது அரசுக்கும் மக்களுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கின்றன. இவர்கள் தலைமை, மக்கள் திரள்- இரண்டிலிருந்தும் தொடர் பற்றுப்போன அதிகாரி வகையினர்.


கட்சியின் பாதையும் கொள்கைகளும் எவ்வளவு சரியானதாக இருந்தபோதிலும், அவற்றை நடைமுறைப்படுத்தும் பணி அதிகாரிகளால் தடைபடுமானால், கட்சி விரைவிலேயே மக்களிடமிருந்து தனிமைப்பட்டு விடும். அதனால்தான் இவ்வகைப்பட்ட அதிகாரத்துவத்தை இப்பட்டியலில் நான் முதன்மையாக வைக்கிறேன். இதற்கு எதிராக – அனைத்து முன்னணி ஊழியர்களும் குறிப்பாக மேல்மட்டத்தின்றும் விழிப்புடன் இருக்க வேண்டும்.


2. மூர்க்கம் மற்றும் தன்னைப் பற்றி மிகை மதிப்பீடு கொண்ட அதிகார வகையினர். பிரச்சினைகளில் ஒரு தரப்பான, அகவயமான அணுகுமுறையை இவர்கள் கையாளுகின்றனர். விஷயங்களைப் பொறுப்பின்றிக் கையாளுவது, வெற்று அரசியல் அரட்டைகளில் ஈடுபடுவது, நடைமுறை விஷயங்களுக்கு எவ்வித அக்கறையும் காட்டாமல் இருப்பது, அறிவுரைகளுக்குக் காதுகொடாமல் இருப்பது, தன் மனம்போன போக்கில் முடிவுகள் எடுப்பது, மெய்யான சூழ்நிலைகளைப் பற்றி முற்றாக யோசிக்காமல் கட்டளையிடுவது என இவர்கள் உள்ளனர். மற்றவர்களைக் கட்டாயப்படுத்துவது, குருட்டுத்தனமாகக் கட்டளையிடுவது ஆகியவற்றை வழமையாகக் கொண்டுள்ள அதிகாரிகள் இந்த வகையினராவர்.


தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஒருவர் தற்பெருமையுற்று யாரும் அவரை அணுகமுடியாதவராய் மாறி விட்டால், தன்னை எல்லோருக்கும் மேலானவராக எண்ணிக் கொண்டு எல்லாம் எனக்குத் தெரியும் என்றால். அது அவருடைய வேலைப் பாணியிலும் வெளிப்பட்டால், அது மிகவும் ஆபத்தானதாகும். இந்த வகை அதிகாரிகள் நடைமுறை விஷயங்களுக்கு அக்கறை காட்டமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தங்களை பரிசுத்தமான அரசியல் மேற்பார்வையாளராக எண்ணிக் கொள்கின்றனர். பிறர் கூறும் கருத்துக்கள் எதையும் கேட்கவோ பரிசீலிக்கவோ அவர்களுக்குப் பொறுமை இருப்பதில்லை. அவர்கள் அவற்றை மிக அற்பமாகக் கருதுகிறார்கள். இதன் விளைவாக அவர்கள் அடிக்கடி ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், தன் மனம் போன போக்கில் முடிவெடுப்பவர்களாகவும், நியாயப்படுத்தமுடியாத கட்டளைகள் இடுபவர்களாகவும் இருக்கின்றனர்.


3.சில அதிகாரிகள் ஆண்டு முழுவதும் காலையிலிருந்து இரவு வரை எல்லா வகையான வேலைகளிலும் ஓய் வின்றி கடுமையாகப் பாடுபடுகின்றனர். ஆனால் அவர்கள் தாங்கள் கையாளுகின்ற விவகாரங்களைப் பரிசீலிப்பதோ, தங்களின்கீழ் பணிபுரியும் ஊழியர்களின் குறை-நிறைகளை அறிந்திருப்பதோ இல்லை. அவர்கள் தங்களது சொற்பொழிவுகளுக்கு முன்தயாரிப்பு செய்வதோ, தங்களது வேலைகளைத் திட்டமிட்டுக் கொள்வதோ கிடையாது. மேலும், நடைமுறை வேலைகளுக்குப் பொருத்தமான கொள்கைகளைப் பயில்வதோ, மக்களைச் சார்ந்து இருப்பதன் அவசியத்தை உணர்வதோ கிடையாது. இதன்விளைவாக அவர்கள் தனியே இருளில் வேலை செய்பவர்களாகவும், செயலுக்கான சரியான பாதையை அறிய முடியாதவர்களாகவும் ஆகிவிடுகின்றனர். இத்தகைய அதிகாரவகையினர் குழம்பிய தலையோடு, திசைவழி தெரியாமல், வழமைவாதம் எனும் நோய்க்கு இரையாகி விடுகின்றனர்.


வேலை மிகுதியுள்ள, கடினமாக உழைக்கும் அதிகாரி என்று சிலர் தங்களை அறிவித்துக் கொள்வதை நாம் அடிக்கடி கேட்கிறோம். இது, அவரது அதிகாரத்துவம் ஏற்கத் தக்கதுதான் என்று உணர்த்துவதுபோல் இருக்கிறது. ஆனால் நான் இதையும் நிராகரிக்க வேண்டும் என்று கருதுகிறேன். ஓய்வின்றியும் அதிக வேலைகளாலும் களைப்படைந்து. சில நேரங்களில் குழம்பி தங்கள் நிலை மறந்த மேல்மட்ட - கீழ்மட்ட ஊழியர்கள்மீது நாம் கடுமையாக இருக்கக்கூடாது என்பது சரியானதுதான். ஆனால், ஒரு தலைமைத் தோழர் வழமையான வேலைகளில் தான் புதைந்து போனதாக சாக்கு சொல்வதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?

தொடரும்….

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.