டிராக்டர் வழித்தட (Route) குழப்பங்களுக்கு காவல்துறையே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு


குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் காவல்துறையினர் தான் மிருகத்தனமாக செயல்பட்டதாகவும் வன்முறையைத் தூண்டியதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் விவசாயிகள் வன்முறையில் ஈடுபட விரும்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினர். காவல்துறையினர் மிக மோசமான முறையில் திட்டமிட்டு, சில டிராக்டர்களைக் கடந்து செல்ல அனுமதித்ததாகவும், பின்னர் பல இடங்களில் மற்றவர்களை நிறுத்தி, குழப்பத்தையும் கோபத்தையும் உருவாக்கியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.


உத்தர்காண்ட் மாநிலத்தில் இருந்து வந்திருந்த விவசாயிகள் குழு ஒன்று, ஒரு திட்டமிடாத பாதையில் மத்திய டெல்லியை நோக்கி நகர்ந்தது. அவர்கள் முன்னால் இருந்த டிராக்டர்களை மட்டுமே பின்பற்றி சென்றதாகக் கூறினர். அவர்கள் முன்னால் சென்ற டிராக்டர்கள் தான் தடுப்புகளை அகற்றிச் சென்றுள்ளனர்.

தாங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து தெரியாமல் அவர்கள் இருந்துள்ளனர். மற்றவர்களைப் பின்பற்றி செல்வதை மட்டும் செய்துள்ளனர். விவசாயிகள் யாரும் வன்முறையைத் திட்டமிடவில்லை. ஒரு சில இளைஞர்கள்
மட்டும் மத்திய டெல்லியை நோக்கி செல்வதில் ஆர்வமாக இருந்தனர்.

விவசாயிகளைப் பின்னுக்குத் தள்ள காவல்துறை முயற்சித்ததும் காவல்துறையின் லத்தி சார்ஜ்-ம் தான் வன்முறை நடக்கக் காரணமாக இருந்தது என குர்மீத் சிங் என்ற வயதான விவசாயி கூறினார்.

அகில இந்திய கிசான் மஜ்தூர் சபாவின் பொதுச் செயலாளர் ஆஷிஷ் மிட்டல் மாலை நேரத்தில் காசிப்பூர் முகாமுக்குத் திரும்பிய பின்னர் தி டெலிகிராப் –பிடம் கூறிய போது: “விவசாயிகள் டெல்லிக்குள் வராமல் பார்த்துக் கொள்ள காவல்துறை ஏன் உறுதியாக இருந்தது? இந்த வழியைத் தீர்மானிக்கும் போது பெரும்பான்மையான தொழிற்சங்கங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை, அவர்கள் கொடுத்த வழி பெரும்பாலும் டெல்லியின் புறநகரில் இருந்தது. குடியரசு தின அணிவகுப்புக்கு இடையூறு விளைவிப்பதில்லை என்று உறுதியளித்த விவசாயிகளுக்கு இது மிகப்பெரிய அவமரியாதை. நாட்டின் தலைநகரம் விவசாயிகளுக்கு சொந்தமில்லையா? கார்ப்பரேட்டுகள் டெல்லிக்குள் நுழைவதை எப்போதாவது நிறுத்தியுள்ளார்களா? ” என கேள்வியெழுப்பினார்.

சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் மிகவும் அதிக எண்ணிக்கையிலான மக்களும் டிராக்டர்களும் குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் நுழைய முற்பட்டது ஏன் என கேட்டதற்கு மிட்டல் கூறிய பதில் இதுதான்: “அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த சட்டங்களால் துன்பப்படுகிறார்கள் என்பதை தேசம் அறிய வேண்டாமா? இதை உணர்த்தவே டிராக்டர்கள் இந்தியாவின் தொலைதூர மூலைகளிலிருந்து எல்லாம் டெல்லியின் எல்லைகளுக்கு வந்துள்ளன. இன்று கோபமாக இருப்பவர்கள் 60 நாட்களாக சாலைகளில் அமர்ந்து பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த மக்களின் வலியை உணர முடியவில்லையா? இதுவரை 162 விவசாயிகள் மரணம் அடைந்தது குறித்து பிரதமர் ஒரு வார்த்தை உச்சரித்திருக்கிறாரா?” என்றார்.

விவசாயிகள் சங்கத்தின் தலைவரான அவர் வன்முறை குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
“விவசாயிகளுக்கு ஏதேனும் உள்நோக்கம் இருந்தால், அவர்கள் ஏன் பேரணிக்குப் பின்னர் திரும்பி வந்தார்கள்? தடுப்புகளை அகற்றுவது தான் வன்முறையா? கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுவதும் லத்தி சார்ஜ் செய்வதும் வன்முறை இல்லையா? "காவல்துறையினர் கார்கள் மற்றும் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைப்பதை நாங்கள் நேரடியாக கண்டோம். கீழே விழுந்த விவசாயிகள் மீது அவர்கள் தடுப்புகளைத் தூக்கி வீசினர். இரண்டு விவசாயிகள் இறந்துவிட்ட நிலையில், விவசாயிகள் பலர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு மாதங்களாக விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய அனுமதிக்காத அரசு ஒரு அடையாளப் போராட்டமாக குடியரசு தினத்தன்று பேரணி நடத்தவிடாமல் அவர்களைத் தடுக்க போலீசு படையை ஏவிவிட்டுள்ளது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது.

வன்முறை நடந்ததற்காக விவசாயிகளான எங்களை சாடும் ஊடகங்கள் ஜனநாயகத்தின் சாராம்சத்தை ஆராய வேண்டும்” என்றார்.

நன்றி : சஞ்சய் ஜா, தி டெலிகிராப்
மொழிபெயர்ப்பு : நதியா

முகநூலில்... 01/02/2021

Comments

Popular posts from this blog

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!